Thursday, March 11, 2021

புலவர் பித்தன் (1 of 2)

 76. புலவர் பித்தன் (1 of 2) (சிசீ6) #ganeshamarkalam

முதல் தடவை பட்டினப் பிரவேசம். மலைத்துத்தான் போகிரேன். என்ன ஒரு அழகு! காவிரிப் பூம்பட்டினத்தை பற்றி கேள்விப் பட்டிருந்தும் நேரில் பார்த்ததும் என் கற்பனைக்கு எட்டாத பட்டினமா அது இருப்பது ஆச்சர்யத்தை தந்தது. இதுவரை எப்படி வராமல் போகினம் என்று அங்கலாய்ப்பு. வந்து விட்டோம், இங்கேயே தங்கிவிட என்ன செய்தாகணுமோ அதை செய்யலாம் என்ற வைராக்கியமும் வந்து சேர்ந்து கொண்டது.

இப்பொழுது தஞ்சையம்பதி முக்கியமான நகரமாக ஆகிவிட்டாலும், பண்டைய சோழ மன்னர்கள் இதை ஏன் தலைநகரமாக வைத்திருந்தார்கள் என்பதுக்கு துறைமுகமே சாக்ஷி. காவிரியாற்றின் கழிமுகத்தை அண்டி கட்டப்பட்ட துறைமுகத்தில் மிகப் பெரீய கப்பல்கள் தங்களது பாய்மரத்தை மடித்துக் கொள்ளாமலே நுழைந்து வந்து பொருட்களை இறக்கி வணிகம் செய்து கொண்டு இங்கே வாங்கியவற்றை ஏற்றிக்கொண்டு போக ஏதுவா. அப்போது இருந்த 4 துறைமுகங்களில் அதிக பயன்பாட்டில் இருந்தது இதுவே. இதை புகார் என்றும் மற்றவற்றை கொற்கை, எயிர்பட்டினம் மற்றும் நீர்ப்பெயற்று என்று அழைத்தனர்.

துறைமுகத்திற்கு நேரே ஊருக்குள் இருக்கும் பெரும் பகுதிக்கும் வணிக தலங்களுக்கும் போக ஏதுவா கட்டப்பட்ட இரண்டு நெடுஞ்சாலைகளிலேயும் இருபுறமும் கடைகள். கடல் வழியே வந்த சவாரிக் குதிரைகள், வண்டியில் வந்த மிளகு மூட்டைகள், வடமலையில் பிறந்த மணிக்கற்கள், மேற்கு மலையில் பிறந்த சந்தனம், அகில், தென்கடல் முத்து, கீழைக்கடல் பவளம், கங்கை, காவிரி-வெளி விளைச்சல்கள், ஈழத்து உணவு காழகத்து ஆக்கம் முதலான பண்டங்கள் தெருக்களில் மண்டிக் கிடந்தன. இவைகளினூடே என் கையில் வைத்திருந்த பையை வழிப் பயணத்தில் பாதுகாப்புக்கு எடுத்து வந்த சவுக்கங்கழியின் முனையில் கட்டி தேடிவந்த விலாசத்தை கேட்டவண்ணம் நடந்து செல்வது கடினமாயிற்று. தெருவில் அத்துணை கூட்டம். பாக்க வந்தவரை பார்த்து ஆகவேண்டியதை செய்துகொண்டு பிறகு இந்தூரில் தங்கிக்கொள்ள இடம் பார்க்கலாம் என்ற எண்ணம்.

4 நாட்களுக்கு மின்பு சிதம்பரத்தில் கிளம்பினது. எப்படியாவது பொருளீட்டிக் கொண்டு வந்து விடுகிரேன் என தாயிடம் வாக்குத் தந்துள்ளேன். இங்கேயே தங்குவதென்றால் அவரையும் அழைத்து வருவேன். தில்லை அம்பலவானரை விட்டுப் பிரிய சம்மதிப்பாரா? புகாரில் பொன்னும் பொருளும் குமிந்து கிடக்கலாம்தான். ஆத்ம திருப்தி கிட்டுமா என்பாள். அவரை பேசி சம்மதிக்க வைப்பது கடினம். மேலும் விரைவில் எனக்கு திருமணம் செய்து அழகு பாக்க ஆசை. தனியே வாழத் துணிந்தவனை ஏமாற்றி கையிலமுக்கி வசியப் படுத்திவிடும் பெண்களை கண்டு தூர நில்லென அவர் தந்த அறிவுரை தெருக்கோடிவரை கேட்டுக்கொண்டேதான் நடையை எடுத்து வைத்தேன்.

நீ யார்? ஏன் காவிரிப் பட்டினத்துக்கு வந்தாய்? யாரைப் பாக்க? என்ன செய்ய? அறிய ஆவல் மிகும். சொல்லி விடுகிரேன். கதையை நகர்த்துவதற்கும் ஏதுவாகுமே.

நான் ஒரு புலவன். ஸ்ரீராமன் என் பெயர். ஆயகலை பல இருந்தும், கைமுனைந்து செய்ய பல தொழில் திறமை இருந்தும், கற்ற வாள்வித்தை மறக்கவில்லயெனிலும் தமிழ்மேல் ஆழ்ந்த பற்றெனை கவிபுனய நிர்பந்தித்தது என சொல்லலாம். ஈசனும் என் அருமை தாயும் இதுவே உன் மார்க்கமெனில் செல் அவ்வழியே என வழிகாட்டினர். காவிரிப் பட்டினத்தில் 5வருடங்களாக தமிழ்சங்கம் நிலவுவதாகவும், மதுரைக்கு இணையாக, ஏன் போட்டியாக இன்னும் பரிமளிக்க புதுப் புலவர்கள் தேவை எனவும் கேள்விப்பட்டு கிளம்பி வந்தேன். இங்கு பணியாற்றி என்ன பொருள் ஈட்டமுடியும், குடும்பம் என ஒன்று உருவானால், அதையும் என் தாயாரையும் வசதியாக வைத்து காப்பாற்ற போதுமானது கிடைக்குமா என அளவளாவிப் போகவும்.

நான் சந்திக்க வேண்டியவர் கடைத் தெருக்களுக்கு அப்பால் மருவூர்பாக்கத்தில் இருக்கவே அதற்கு வழி கேட்டு நடந்தவாறு. அப்போதுதான் அந்த மங்கையை கண்டேன்.

தெருவே அவளுக்கென சோழ மன்னரெழுதி வைத்ததுபோல் ஒரு நடை. எதிரே வருபவர் வழிவிட்டு அகலவில்லையெனில் அவர்களுக்கே பிரத்தியேகமான ஒரு முறைப்பு. இத்துணை அழகான கண்களுக்குள் இவ்வளவு அலட்சியம் வந்து குடிகொள்ளுமாவென பார்ப்பவர் விலகி வழிவிட, வீறுநடை தொடருகின்றது. எதிர் சாரியில் வருவதனால் என்னை அவள் பாதிக்கவில்லையென கூறலாம். ஆயினும் இந்தப் பக்கமும் பார்த்து, தன் சீலையின் நுணிப்பகுதியை அவ்வப்போது வாயில் வைத்து கடித்து விரைவாக அதை சுத்திக் காமித்து, பார் எனை, என் அழகை மிஞ்ச எவரும் உளரோவென சவால் விடுமாறு அவர் செய்கை அமைந்தது. “என்ன மேகலை, இன்றைக்கு ஏன் தாமதம்?” என்பக்கக் கடை ஒன்றிலிருந்து ஒரு முதியவர் அவளைப் பாத்துக் கேட்க, இவளும் குறுக்கே போகும் வண்டிகளையும் சுமைதாங்கிகளையும் பொருட்படுத்தாமல் கூப்பிட்டவரை நோக்கி ஒய்யாரமா வர, நாமும் சற்று நின்று என்னதான் நடக்குமென அறிய நின்றேன். நீண்ட பிரயாணமும் காலில் மின்பே குத்திட்ட முள்ளும் இப்போது சற்றே நடைய தாமதப்படுத்தினதும் ஒரு காரணம்.

தெருவைக் கடந்து வந்தவள் முதலில் என்னைத்தான் பார்க்கிராள். “என்ன ஊருக்குப் புதியவரா?” இவளுக்கெப்படி? முகத்தில் பட்டவர்த்தனமா தெரிகிறதோ? பொய்ப் பெசிப் பழகாத புலவன், தன் கவிதையில் மட்டுமே போய் புனைபவன், அத்தனை அழகும் நளினமும் பொருந்தியவளிடம் மறைப்பானேன்! “ஆமாம்”. “ஜாக்கிரதை! புகாரில் பெண்கள் வீசும் வலைதனில் வீழ்ந்து சின்னாபின்னப் படுவாய்!” சொல்லி விட்டுப் போனாள், தன்னில் சிறிது என்னில் புதைத்துவிட்டு.

மருவூர்பாக்கத்தில் குங்குமப்பூ நாச்சியார் தெரு வந்தாயிற்று. தேடிவந்த பழந்திரையர் வீட்டு முன்பாக நின்றதுமே உள்ளிருந்து ஒரு பெரியவர் வரவே என்னைப் பார்த்து விட்டு “தங்களுக்கு யார் வேண்டும்?” சொல்கிறேன் என்னை அறிமுகப்படுத்தி அவர் பெயரைச் சொல்லி. “அப்படியா, தாங்கள் வருவீரென செய்தி கிடைத்ததே. வாருங்கள்.” திண்ணையில் அமரச் செய்துவிட்டு தானும் அமர, “தாங்கள் எங்கேயோ கிளம்ப எதிரில் வந்துள்ளேன், அவசர வேலையிருந்தால் நாம் பிறகு பெசலாமே!” “அப்படியோன்றுமில்லை. சொல்லுங்கள்.”

விவரங்கள் சொன்னேன். “பாடல் புனைவேன். அதுக்கு சன்மானம் கிடைக்கவும் எம்பாடல் இவ்வுலகில் ஒலிக்க உதவுபவதாக ஒரு வேலையில் அமர ஆசைப்பட்டு நெடுந் தூரம் வந்துள்ளேன். இந்தூர் தமிழ் சங்கத்தில் உங்கள் செல்வாக்கை அறிவேன். தஞ்சை பெரியகோவிலைச் சார்ந்த பல்கலை அரங்கில் சேக்கிழார் என் தந்தையின் நண்பர் உங்களை பார்த்து என்ன செய்யலாமென தெரிந்து கொள்ளக் கூறினார்”. “எழுதிய பாடல்கள் உளவோ? நான் படிக்கலாமா?” துணிப் பையை பிரித்து அதனுள் இருந்த ஓலைகளில் சிலதை தேர்ந்தெடுத்து அவரிடம் நீட்ட அதில் மூழ்கினார் பழந்திரையர்

படித்துக்கொண்டே “ஆஹா,” “அபாரம்”, “நல்லது” என்று விமர்சனமும். இக்காலத்தில் உண்மை தமிழ்ப் புலமைக்கு நல்ல விமர்சனம் கிடைப்பது அரிது. போட்டியும் பொறாமையும் கோப தாபங்களா வெளிப்படும் புலவர்கள் கூடும் இடத்தில். நாம் சொல்வதை பிடித்துக்கொண்டு மற்றவரும் இயற்றி புகழ் தேடிக் கொள்ளும் பொல்லாத உலகம். இருந்தாலும் தமிழ் வளர்க்கும் சங்கத்தில் நல்ல படைப்புக்கு ஆதரவு நல்குவாரென நம்பிக்கையுடன் என்னைப்போல் கிளம்பி வருவர். நல்லதோர் ஆசான் கிடைத்து விட்டால் சங்கமென்ன, அரசவைக்குள்ளும் பிரவேசிக்க முடியும். ஆனால் அதெல்லாம் வெகுதூரம்! இவ்வளவு பாராட்டினவர் எவ்வளவு உதவுவரோ?

முகத்தை நிமிர்த்தியவர் ஓலைகளை நீட்டி “ஸ்ரீராமரே, இதெல்லாம் சரி, இப்பொழுது சட்டென ஒரு கவிதை 10 வரிக்குள் நீவீர் வந்த வழியில் கண்டதை விவரிப்பது போல் புனைந்து காட்ட முடியுமா? அப்போதுதான் தாங்கள் புலமை பெற்றவரென்பதுவும், பாண்டித்யம் உண்டெனவும் நானறிய முடியும். கொண்டு வந்தது வேறொருவர் இயற்றியதாகக் கூட இருக்கலாமே?” சற்றே வருத்தம் ஏற்பட்டாலும் “சந்தேகம் ஞாயமானதுதான். சொல்கிரேன், வாய்ப்பளித்தமைக்கு நன்றி.” அவர் கேட்க தொண்டையையும் எனக்கும் மட்டும் கேக்கும்படி என் சிறு மூளையையும் கனைத்துக் கொண்டு கவிதை சொல்ல ஆரம்பிக்கரேன்.

“உயிர்மெய் எழுத்தென, எழிலுறையும் தமிழ்மொழி

உடன் கொண்டு இவ்வூரில் புகலடைய வந்தயெனை

சிற்றிடையும் வேய்தோளும் அழகில்லை அதனிடையே

சிறப்புடைய பூந்தளிர் விம்மிய தேகம்தான் அழகு அதற்கு

நிகர் காண், காண்பித்தால் இவ்வூரில் நுழையலாம் இல்லையெனில்

நிகரில்லா இன்நங்கையை படைத் தருளிய

அத்திருவடியை செவ்வடியாய் வரித்து வந்த இடத்துக்கே

அவசரமாய் போய்விடு சிதம்பரத்தானே, வழி

மறப்பதற்குள் காவிரிப்பட்டினம்வாழ் நங்கையிவள் நானறிந்த

மங்கையற்கு அரசியென உங்கூரில் போய் பாடிக்கொள்”

கேட்டதும் கையொலி எழுப்பி அக மகிழ்ந்தார் பழந்திரையர். “யார் அந்த மங்கை உன்னை ஊரில் நுழைய தடை போட்டது? மேகலையோ? அவளைப் பார்த்தாயோ வரும் வழியில்?” “ஆம்! உங்களுக்கு அவரைத் தெரியுமா?” “யாருக்குத்தான் தெரியாது! வந்தவுடன் உன்னையும் வம்பிழுத்தாளோ?” “அப்படி இல்லை, என்னை அங்காடித் தெருவில் பார்த்துவிட்டு அசலூரானென சரியாக கணித்தாள். அவளழகு இன்னும் கண் முன்னால். தாங்கள் கவியியற்ற சொன்னவுடன் அவர் உருவமே வந்தென் பாட்டில் புகுந்தது”. “ஆமாம் சிலர் புலமைக்கு வித்தாக, சொற்களுக்கு துடும்பாக செயல் படக்கூடிய அழகு பொருந்தியவர்களாய் இருப்பார்கள். பூம்பட்டினத்தில் அவளைப்போல் இன்னும் பலரை நீ எதிர்கொள்வாய், உன் மனதை பூட்டிவை, திருடி விடுவார்கள்!”

உள்ளிருந்து பருக நீர் மோரும் உண்ண பொங்கலும் வரவே அதில் கவனம் சென்றது. சிதம்பரம் பத்தியும் அங்கு இவ்வருடம் நடக்கப்போகும் ஆடல் போட்டிகளைப் பற்றியும் பேசிய பழந்தரையர், “இவ்வூரில் எங்கு தங்குவதாக உத்தேசம்?” “இன்னும் முடிவாகவில்லை. தமிழ்ச் சங்கத்தில் இடம் கிடைத்தவுடன் ஊதியத்துக்கு தகுந்தார்ப் போல் சத்திரம் பார்க்க வேண்டும்”. “இன்றைக்கு என் இல்லத்தில் தங்கி இளைப்பாற்றிக் கொள்ளுங்கள். சங்கத்தில் இடம் கிடைப்பதுக்கு இன்னொன்றும் வேண்டியுளது. முக்கியம்”. “என்ன செய்யவேண்டும் கூறுங்கள்! எதுவானாலும்”.

“இவ்வூரில் பழம்பெரும் புலவர் ஒருவர் இருக்கிரார். பெயர் செங்கண்ணனார். பலரும் அவரை பித்தன் என்றே அழைப்பர். உம்மை விட 20 அகவை முதியவர். பேரறிஞர். தமிழ்ச்சொல் வித்தகர். இப்போது நீர் எழுதிய பாட்டை எட்டு விதமாய் மாத்திப் புனையக்கூடிய வல்லமை படைத்தவர். அவரை நாளை சென்று பார்த்து வரவும். அறிமுக ஓலை தருகிரேன். கொண்டு செல்லும். அவருக்கு உன் கவிதை பிடித்திருந்தால் சங்கமே உனதாகும் ஆச்சர்யம் நடக்கும்”.

“மிகவும் கடினமான தேர்வு நடத்துவாரோ?” “இல்லை. ஆனால் உன் புலமை எந்தளவு என்பதை உனக்குப் புரிய வைத்து விடுவர். அடுத்து என்ன செய்யலாமென உமக்கு தெளிவு பிறக்கும்”. சரியென அன்றைய பொழுதை அங்கேயே மருவூர்பாக்கத்தில் கழிப்பதென முடிவெடுத்து இடம் கொடுத்து உணவும் அளித்த அன்பருக்கு நன்றி சொல்லி அமர்ந்தேன். பொழுது சாயுமுன் துறைமுகப் பக்கம் போய் வந்தாலென கிளம்பிப் போக எங்கு தேடினும் என் பாட்டின் நாயகியை காணவில்லை. வயதுப் பெண் அந்த வேளையில் மாலுமிகளும், சேனையாட்களும், கூலி வேலை செய்பவர்களும் நடமாடும் இடத்தில் எப்படி? எதிர்பார்த்து வந்ததென் தவறென உணர்ந்து அப்பொழிதில் தெரியும் பாய்மரங்களையும் வெகுதூரத்தில் தள்ளி நின்ற கப்பல்களையும் பார்த்த வண்ணம் வீடு திரும்பினேன்

நாளை அதிகாலை செங்கண்ணனார் என்ன சொல்வரோ? எம்புலமை இன்னும் எத்தனை சோதனைக்கு உள்ளாகுமோவென யோசித்த வண்ணம் கண்ணயர்ந்தேன். மேகலை என்னைப் பார்த்து நையாண்டி செய்கிராள். பறந்துவரும் பரிகளை பின்விட்டு முன்னோடிவரும் அப்பாவைதன் அழகு பல கவிதைக்கு கருவாக கனவிலும் விரிந்ததே! (நாளை நிறைவடையும்)

No comments:

Post a Comment