Thursday, March 11, 2021

டேக்ஸி டிரைவர்

 75. டேக்ஸி டிரைவர் (சிசீ6) #ganeshamarkalam

சொந்தக் கார். ஓலாவில் ரெஜிஸ்டர் பண்ணி வரிசையா கஸ்டமர்ஸ். புதுக் கார். இஎம்ஐ கட்டணும். நல்ல மையிலேஜ் தரும். டீஸல். பெட்ரோல் ரேட்டும் டீஸலும் கிட்ட வந்துடிச்சு. 10மணிநேரம் ஓட்டினா சிலவு போக் வேலூரில் மனைவி, ஸ்கூலுக்குப் போகும் பெண் குழந்தைக்கும் போதும். ஒரு வருஷம் போனா மெயின்டனன்ஸ் வரும். அப்போ? இப்பத்தைக்கு வண்டி ஓடுது.

சிலநாட்கள் நிறைய புக்கிங்க். அப்பப்போ டல்லடிக்கும். டூர் பேசினா கொஞ்சம் கையில் தங்கும். காஞ்சீபுரம், பாண்டிச்சேரீன்னா ட்ரைவர் பேட்டா வாங்க முடியாது. வெளியூர்னா அதையும் பில்லில் சேர்க்கலாம். “உனக்கும் சாப்பாடு கொடுப்பம், பேடாவ சேக்காதேன்னு பேரம் பெசரவங்க வருவாய்ங்க. ஓலா ரேட் கம்மி. “கேஷ் பேய்மென்ட்டா?” கேட்ருவேன். ஓலா மணீன்னா வாரத்துக்கு ஒருக்கா பேய்மென்ட். அதுவரைக்கும் டீசல் சிலவு என்னுது. தொழிலில் நெளிவு சுளிவு கத்துக்க நாளாச்சு. இப்ப செட்டில்னு வச்சுக்கிடலாம். மாசம் ஒருக்கா வேலூர் போவேன். காரை எதுநாச்சியும் கராஜில் விட்டுபுட்டு. பஸ்ஸில். பொண்ணு சண்டை பிடிக்கும். காரெடுத்துகிட்டு வான்னு. சமாளிக்கோணும்.

விதவிதமா சவாரீங்க. ரக ரகமா! ஒண்ணைப்போல் ஒண்ணில்லை. ஏத்தினமா, கொண்டு தடங்கலில்லாம சேர்த்தோமா, காசை வாங்கினமான்னு இருப்பேன். சிலபேர் பேச்சுக் கொடுப்பாங்க. சிலர் அவுங்களுக்குள்ளேயே பேசிப்பாக. சிலர் ஏறிட்டு போனில் சதா சர்வ காலமும். சிலது தூங்கிடும். போகிர இடம் சேர்ந்ததும் எளுப்பிவிட்டு காசு கேக்கணும்.

அன்னைக்கு புதங்கிளமை. வேலூரிக்கு போய் 2 மாசமாச்சு. வீட்டு வாடகை போனமாசம் கட்டலை. போனா வீட்டுக்காரவுக பிடிச்சுப்பாக. பொண்ணுக்கு பொறந்தநா வருது. மச்சினன் கல்யாணம் ஃபிக்ஸ் ஆகியிருக்கு. என் சைடில் சீர் செய்யோணும், மிஸஸ் ஒரே அக்கா. அவ கவுரதையும் காப்பாத்தணும். அதான் காசு சேர்த்துகிட்டு அப்பிரவு போய்க்கலாம்னு. கல்யாணம் முடிஞ்ச கையோட அப்பாவுக்கு வைத்தியம் பாக்கணும். அம்மாவும் அப்பாவும் கிராமத்தில். வந்தவாசிகிட்டே. “வேலூரில் ஏன் புள்ளய படிக்க வைக்குதே?” கேக்கலாம். வந்தவாசீலே இங்களீஷ் ஸ்கூலில்லை. சென்னையில் நிறைய காசு கேக்குதாக. வேலூர் பொஞ்சாதி ஊர். அவுங்க மனுசங்க பாத்துகிடிதாக. தம்பி அங்கேதான் வேலை செய்யராப்புலே. டிங்கெரிங்க் ஷாப் நடத்திகிட்டு. அவங்களை அண்டி வேண்டாம்னு தனியா வாடகைக்கு வச்சிட்டேன். ரெண்டு தெரு தள்ளீ ஸ்கூலு.

அம்புட்டு சிலவு ஒண்ணு பின்னாடி ஒண்ணு வந்திட்டே இருக்கு. ஒண்ணாப்பு படிக்கிரா. வருஷம் பொறந்தா யூனிஃபாரம், ஷூ, கழுத்தில் கட்ட டைன்னு 3000 எடுத்து வைக்கணும். ஃபீஸ் 45000. ஆரம்பத்தில் புஸ்தகம் நாங்க தந்துடுவம்னுட்டு இப்ப காசு கேக்குதாக. ஒருமாசம் ஊருக்குப் போகாம வண்டி ஓட்டினா போயிட்டு வர சிலவு 800 மிச்சம். போலைன்னா ஒண்ணும் வாங்கிட்டு போவேண்டாம். இங்கே 3 நா சவாரி கிடைக்கும். டேக்ஸி டிரைவர் கையில் என்ன தங்கும்ரீங்க? 300ரூ ட்ரிப்புக்கு 50. நாள்பூரா ஓடிட்டே இருந்தா 400. டீசல் போக. வண்டிலே வேலைன்னு வந்திச்சுன்னா எல்லாம் காலி. சொந்த வண்டீக்கு நான்தே பொறுப்பு.

சவாரி போரப்ப இப்படி சிந்தனை ஓடும். முகத்தில் தெரியும் விசனம் ரியர் வ்யூவில் தெரிஞ்சிடாம சமாளிப்பேன். சிரிச்சுப் பெசிகிட்டு சவாரி வந்தா நம்ப கஷ்டம் மறையும். கொஞ்சநேரமாவது. அம்புட்டுதே.

2நாளா பிஸி. நல்ல தூக்கமில்லை. சீக்கிரம் முடிச்சிட்டு 9மணிக்கு படுத்திடணும். அப்பப்ப ரெஸ்ட் இல்லைன்னா வண்டி ஓட்ரப்போ சாய்ச்சிடும். எங்கேயாவது மோதி உயிர்ச் சேதம், வண்டிச் சேதம் ஆச்சுன்னா? பம்பரில் டென்ட் விளுந்தா 3000 கேக்கரான் சரிசெய்ய. அதுக்கு 1 மாசம் பூரா உளைக்கணும். இப்ப மணி 7ஆகிச்சு. ஒரு சவாரி கிடச்சா போலாம். எங்கே போவமோ அங்கிட்டே ஓரமா வச்சு தூங்கிக்கிடலாம். போனை ஆஃப் செஞ்சுட்டலாம்.

இப்ப நின்னிட்டிருப்பது கிண்டி ராஜ் பவன் எதுக்காப்போல் சைதாப்பேட்டை கோர்ட்டாண்ட. அகலமான ரோடு. லைட் போட்டிருக்காக. உக்காந்துகிட்டெ இருந்தது முட்டிகிட்டு போணம் போல் வந்திச்சு. தெருவோரம் பீச்ச முடியாது, கோர்ட்டுக்குள் டாய்லெட் இருக்கு. வண்டிய பூட்டிட்டு பின்னாப்புலே 150 மீட்டர் தள்ளி இருந்த கோர்ட் கட்டிடத்துக்கு வந்தேன். செக்யூரிடி போய்க்குங்கன்னு வழிவிட்டான். சக மனுசங்க கஷ்டம் புரிஞ்சுகிட்டு.

திரும்ப வந்தா வண்டிகிட்டே ரெண்டுபேர் நின்னு என்னவோ செய்யராப்போல். வேகமா வரேன். பாத்ததும் நகந்து போயிட. ட்ரைவர் சீட் கண்ணாடி இறக்கியிருக்கு. ஏத்திட்டு பூட்டினமா இல்லை இப்படியே டோரை லாக் செஞ்சமா? இவனுவ தில்லுமுல்லு செஞ்சாய்ங்களா? வண்டீலே எல்லாம் நல்லாத்தான் இருக்கு. திரும்ப உக்காந்துகிடிதேன். அப்பத்தான் போன் சிணுங்குது. சவாரி புக் ஆகியிருக்கு. கோட்டூர்புரம் பிகப். ட்ராப் மஹாபலிபுரம் போர வளீலே கோவளம் கிட்ட தாஜ் ஹோட்டல். சரித்தான், ஏத்துகிட்டு போனா அங்கிட்டே கடற்கரையில் தூங்கிட்டு காலேலே வந்துக்கலாம். ஓகே பண்ணிட்டு கிளம்பரேன்.

அண்ணா லைப்ரரி வாசல்ல நிக்குது பொண். ஜீன்ஸ் டிஷெர்ட். 38-40 இருக்கும். நல்ல அளகு. அந்த வயசில் எப்படி இருந்தா ஜோரா இருக்குமோ அப்படி. பெரீசா ஸ்யூட் கேஸ். சக்கரம் வச்சது. டிக்கீலே போட்டுட்டு பின் சீட்டில் உக்காந்தாச்சு. வண்டிய கிளப்புதேன். 4356 நம்பர் சொல்ரப்போ குரல் இனிமையா. அப்பத்தான் முகம் பாக்குதேன் கண் கலங்கி, சோகமா தெரிஞ்சிச்சு. பாவம், என்ன கவலையோ?

வண்டீ ECRல் சர்ருன்னு. திருவான்மியூர் தாண்டினதும் ட்ரேஃபிக் அதிகம் இல்லை. ஷோளிங்கநல்லூர் ஜங்க்ஷண் தாண்டினதும் யாரும் தென்படலை. உத்தண்டி கிட்டே “குடிக்க தண்ணீ இருக்கா?” கேக்குது. “முன்சீட்டு பின் பையில் பிஸ்லேரி சின்ன பாட்டில் சீலோட இருக்கும் எடுத்துக்கம்மா. டாஜ் ஹோட்டலில் தங்கப் போரீங்களா?” “தெரியலை. அங்கே போய்த்தான் முடிவு செய்யணும்”. “ஹோட்டலை விட்டா வனாந்தரமான இடம். திரும்பிப் போக வண்டி கிடைக்காதே! கோவளமெல்லாம் பொம்பளைங்க 7மணிக்கு மேல் தனியா போவாங்களா?” கேக்கரேன். லெசா விசும்பி விசும்பி அளுது. வண்டியக் கிளப்பி டோல் கடந்து வேகமா போரப்போ பின்னாடிலெந்து குரல்.

“எனக்கொரு உதவி செய்வீங்களா?” “என்ன சொல்லுங்க”. “ஓரமா வண்டிய நிறுத்திட்டு சொல்வதை கவனமா கேளுங்க”. செய்யரேன். என்ன கேப்பாங்க? “நான் சொல்வதை செஞ்சா நிறைய பணம் கிடைக்கும். நீங்க நினைச்சுக் கூட பாக்காத அளவுக்கு பணம்”. லெசா ஆசை வந்துச்சு. பணம்தானே வேணும். அதுக்குத்தானே இத்தனை லோலுப்படுவம். “சொல்லுங்க”. “இப்ப எங்கே இருக்கம்?” “MGM தாண்டி முத்துக்காடு கிட்டே”. “இடப்பக்கம் கடலா?” “ஆமாம்”. “என்னை இந்த இடத்துலே யாருக்கும் தெரியாம அழைச்சிட்டுப் போய் கொன்னு போட்ருங்க. வாழப் பிடிக்கலை. ஸ்யூசைட் செஞ்சுக்க தெகிரியமில்லை”. பக்குன்னுது. என்ன உளர்ராங்க இவுங்க? என்ன பிர்ச்சனை?

கணவன் கைவிட்டுட்டானா? இவள் நடத்தையில் சந்தேகப்படரானா? குழந்தை இல்லையா? பணம் தரேங்கிரா! பணம் இருக்கப்போ ஏன் சாகணும்? நிறைய பணம் இருந்தா கணவனையே தொறத்திட்டு நல்லா வாளலாமே? தீராத வியாதியோ? “என்ன பிர்ச்சனை உங்களுக்கு? ஏன் இப்படி பேசரீங்க?” “அதெல்லாம் உனக்கெதுக்கு. என்னைப் பார், உன்னை நம்பி வெளிப்படையா உதவி கேட்டுட்டேன். செய்வியா மாட்டியா? உனக்கு பணம் தேவை, எனக்கு வாழ்க்கைய இங்கே, இப்போதே முடிச்சுக்கணும்”. “இப்படி எல்லாம் செஞ்சு பணம் சம்பாதிக்க ஆசை இல்லைம்மா. வாங்க உங்களை இறக்கி விட்டுப் போரேன். நீங்களா போய் கடலில் விளுந்துக்கங்க”. “உனக்கு 5கோடி கிடைக்காது!”

5 கோடியா? ரெம்பப் பணமாச்சே. எங்க வூட்டில் இன்னும் 30 தலைமுறை போனாலும் இம்புட்டு முடியாது. திரும்பிப் பாக்கரேன். போட்ருந்த டீஷெர்ட்டை கழட்டிட்டு உக்காந்திருக்கு, ஏன் இப்படி? இவமேல் ஆசை வந்து சொன்னத செய்வேன்னா? டீ ஷெர்டை திருப்பி உள்ளே வேளீயேன்னு மாட்டிக்கரா. இப்ப வேற கலர். சரிதான் சாகரத்துக்கு இந்தக் கலர் பொருத்தமோ? கழட்டி மாட்டின டயத்தில் இவள் போல் ஒருத்தி தனியா ஏன் சுத்தணும், ஆயிரம் பேர் லைன் கட்டிண்டு வாள்க்கைத் தர முன்வருவாங்களே! இதுவோ சாகத் துடிச்சிகிட்டு! விளையாட்டா என்ன? கண்டு பிடிச்சுசலாம். “5 கோடி எங்கே? காமி?” “டிக்கீலே பொட்டி வச்சியே கனக்கலை? அதில் இருக்கு. வேணும்னா போய்ப் பாரு”. சாவி தரா. வண்டிலேந்து இறங்கி பின்னாடி போய் டிக்கிய அப்பரம் பொட்டீய தொறந்து பாக்கரேன்.

2000ரூ கட்டு. நீட்டா அடுக்கி வச்சிருக்கு. 5 கோடிக்கு 250 கட்டு வேணுமே? இருக்கும் போலத்தான். அழகா தனித் தனியா 2லக்ஷக் கட்டு ப்ளாஸ்டிக் சுத்தி. ஒண்ணை பிரிச்சு பாத்தா எல்லாம் நோட்டுத்தான். ஏமாத்து இல்லை. ரெண்டு அடுக்கு கீழே போய் உன்னொண்ண பிரிக்கரேன். காசுதான். இப்படியே பொட்டிய எடுத்துட்டு ஓடிட்டா? டிக்கிலெ இருந்த ஜேக் கம்பி, இரும்பு, நுணீலே வளஞ்சு, எதுக்கும் இருக்கட்டும்னு எடுத்துகிட்டு வந்து மின் சீட்டில் உக்காந்தாச்சு. “ஆமாம் சொன்னபடி பணம் இருக்கு. ஆனால், நான் ஏன்?”

“உனக்கு பணத்தேவைன்னு புரிஞ்சது. அதுக்குத்தான். எனக்கு மரணம் தேவை. பணத்தை உனக்கு தந்து புண்யம் தேடிக்கலாம்னு”. “சாகாம இதை வச்சுகிட்டு சந்தோசமா வாளலாமே. பாதி இருந்தாக் கூட போதுமே! ஆளுக்கு பப்பாதி வச்சுக்கலாம், நீங்களும் உயிரொட புண்யத்தொட”. “அதெல்லாம் தேவையில்லை, என்னை கொன்னு போடு. இப்பவே. இருட்டா ஏகாந்தமா இருக்கு. போட்டுட்டு மண்ணில் சரிச்சு விட்டூட்டு காரை எடுத்துகிட்டு போயிட்டே இரு. பணம் உன்னுது. சீக்கிரம் முடிவு செய், இல்லை வேற ஆளைப் பாத்துகரேன்”.

என்ன செய்யன்னு புரியலை. அடிச்சு மயக்கப் படுத்திட்டு பணத்தோட ஓடிட்டா? கார் டீடெயில்ஸ் ஓலா ரிக்கார்டில். கொன்னப்பரம் பாடி கிடெச்சாலும் என்னைத்தேன் போலீஸ் தேடி வரும். “சாவாரிய என்னடா செஞ்சாய்?” பொட்டிய கொடுத்துடு ஜெயில், அப்பரம் தூக்கில். “அதெல்லாம் முடியாது, உங்க பணம், நீங்க! ட்ராப் போகவேண்டிய இடத்துக்கு போயிடலாம்”. “5 கோடிய வச்சு என்னெல்லாம் செய்யலாம்! யோசிச்சயா? 1 கோடிக்கு 10 கார் வாங்கி ஓட்டலாம், டேக்ஸி கம்பேனியவே நடத்தலாம். 1 கோடி குழந்தைங்க படிப்புக்கு. 70 லக்ஷத்தில் பெரீய வீடு. வயசானவங்க இருந்தா மருத்துவச் சிலவு. மிச்சம் பேங்கில் போட்டா வர வட்டீலே சுகமா ஜீவனம் செய்யலாம். நீ செய்ய வேண்டியது ஒண்ணுதான் என்னை கழுத்தை நெரிச்சோ மணலில் அமுக்கியோ கொன்னு பாடிய மறைச்சிட்டா ஆச்சு”.

எழுந்துக்கரேன், கையில் அந்த ராடோட, இறங்கி வந்து பின்சீட் கதவை தொறந்து, “இறங்கிவா, சவுக்குத்தோப்பை தாண்டினா கடற்கரைதான், ஒரு பய இருக்க மாட்டான். கொன்னு போட்டுடரேன்”.

அவள் கையப் பிடிச்சு இளுக்க சாலையில் எங்கிட்டிருந்தோ வேகமா வந்த கார் என் கார் கிட்டே நிறுத்தி அதுலேந்து ரெண்டு பேர் ஓடி வராய்ங்க. “நில்லுங்க. ஒருத்தன் கையில் ஹேண்டிகேம், என்னையும் என் முகத்தையும் படம் பிடிச்சிட்டே நிக்க, கூட வந்தவன் அந்தப் போண் கைய என்னிடமிருந்து விடுவிச்சு. “கங்க்ராட்ஸ்! இதுவரைக்கும் நீங்க பெசிட்டிருந்தது, பின்னாடி டிக்கீ தொறந்து பணம் பாத்தது எல்லாம் ரிக்கார்ட் ஆயிடுச்சு. அங்கே பார் ரியர் வ்யூ மிரர் மேலே ஒரு கேமரா, பின்னாடி விண்ட்ஸ்க்ரீனில் ஒரு கேமரா. நீ பாத்ரூம் போனப்பொ வச்சிட்டம்”.

"இது டிவி ரியேலிடி ஷோவுக்காக படம் பிடிச்சம். தத்ரூமபா வந்திருக்கு. உன் முயற்சிக்கு 1000ரூனு ரெண்டு 500ரூபாத் தாள நீட்ட, அந்த பெண் தன் கையில் என் கையப் பிடிச்சு குலுக்கரா. அவள் சிரிப்பும் என் முகத்தில் வழிந்த ஏமாத்தமும் அதிர்ச்சியும் அவிங்க காமராவுக்குள் புகுந்து கொண்டது. 5 கோடின்னு நினைச்சவனுக்கு 2 ஐநூறே மிஞ்சினது நெஞ்சில் வலிச்சது. காசு கிடைக்காததை விட நேர்மையா வாள்ந்திட்டிருந்த சாதாரன டேக்ஸி டிரைவரை சபலப் படுத்தி கெடுத்திட்டது தலைக்குள் உர்ருன்னு.

இடதுகையில் இருந்த இரும்பை வலது கையில் மாத்திப் பிடிச்சு ஓங்கி அதை அவள் தலைப் போட்டில் படுமாறு இறக்கினேன். “சடார்”னு அந்த அடியில் அவள் மண்டை பிளந்து முழு உடம்பும் தரையில் சரிய, தள்ளி நின்ன ரெண்டு பேரும் “ஐயோ”ன்னு கத்தின சத்தம் சவுக்குக் காட்டுக்குள் நுளைஞ்சு எதிரொலிக்காம அங்கிட்டிந்து வீசின கடற்காத்தில் கறைந்து அவளைப்போல் திரும்பிவராமப் போச்சு

No comments:

Post a Comment