Thursday, March 11, 2021

பழைய வேஷ்டி

 33. பழைய வேஷ்டி (சிசீ6) #ganeshamarkalam

எங்கூருக்கு வந்தேள்னா ரெண்டு பெருமாள சேவிக்கலாம். ‘எங்கே உங்கூர்? சொல்லுங்கோ உடனே வரேன்’பேள். ரூட்டே போட்டுக் காண்பிப்பேன்.

சென்னைலேந்து செங்கல்பட்டு. பைபாஸில் வந்தா பாலாத்துப் பாலம் வரும். பாடாவதி பசங்க பல வருஷமா டோல் இன்னும் வாங்கிண்டு. கட்சிக்காரன் பொழைக்கணும்னு எல்லா கட்சியும் மாத்தி மாத்தி டெண்டெர் எடுத்துண்டு. பாலம் கட்டின சிலவை எப்பவோ எடுத்தாச்சு. இவிங்க பெராசைதான் இன்னும் அடங்கலை. எதுக்கு சொல்ரேன்னா இங்கே நின்னு தாண்டி வர நேரமாகும். தாண்டினா மாமண்டூர். இன்னும் சித்தே பாத்துண்டே வந்தா வலது கைப் பக்கம் பெரீய ரோடு திரும்பும். அதைப் பிடிச்சேள்னா நேர எங்கூர்தான். உத்திரமேரூர்.

வழீலே வயக்காட்டை துடெச்சு கட்டம் போட்டு பாக்கலாம். வித்தும் விக்காமலும். ஹைவேலேந்து திரும்பினேளே அங்கேந்து 15கிமீ. கோவில் கோபுரம் தென்படும். அது சுந்தரவரதராஜ பெருமாள் கோவில். அங்கேதான் நான் இருக்கேன். ஆனா வரப்பவே இன்னும் பழசாப் போன வைகுண்ட பெருமாள் கோவில் தாண்டித்தான் வந்திருப்பேள். சின்னது. கண்ணில் தென்படாது. யாரும் போரதில்லை. மார்கெட் போனா இங்கே வாங்க, நல்லா மலிவாத் தரேன்னு கூப்பிடுவாளே அப்படி வரதராஜர் கோவில் கோபுரம் கூப்பிடும். இதைத் தவிற கைலாசநாதர் கோவிலும், பாலசுப்ரமணியனுக்கும் ஒண்ணுன்னும் இருக்கு. ஊரைத் தாண்டினா உத்திரமேரூர் ஏரி. அப்பரம் தென்னாங்கூர் வரும்

கோவில்லே என்ன செய்யரேனு கேப்பேள். கோவிலை சுத்த பத்தமா வச்சுக்க வேண்டியது என் பொறுப்பு. அர்ச்சகா 2பேர், நானும். என் பேர் நாராயணன். எங்கங்கேயோ அல்லாடின பிராம்ணணுக்கு இப்படி ஒரு உத்யோகம். ஏதோ கொடுப்பா. வாங்கிப்பேன். பக்கத்துலே ஒரு ரூம் குட்டுத்தனம். சமையலெல்லாம் இல்லை. கோவில் பிரஸாதமும் அன்னதானமுமே போதும்னு. 10ஆவது வரை படிச்சிருக்கேன். மேலே படிக்க வசதியில்லை, வேற வேலையும் தேடிக்கலை. செட் ஆகிடுத்து. வயசு 55.

ஆடி மாசம் பவித்ரோத்ஸவம் ரெம்ப பிரஸித்தி. மின்னப்போல் கூட்டமில்லைன்னாலும் பெருமாளுக்கு செய்ய வேண்டியதை செய்ய அக்கம் பக்கத்துலேந்து வருவா. ஓரளவுக்கு பணம் சேரும். கோவில் ஊழியர்களுக்கு போனஸ் கிடைக்கும். 500ரூ. போன நாலு வருஷமா கிடெச்சதை ட்ரங்கு பொட்டீலே அடீலே வச்சிருக்கன். உடனே பொட்டி நிறைய துணிமணி அடெச்சு மூடமுடியாம இருக்குன்னு நினைச்சுக்கப் பிடாது. 3 வேஷ்டீ, ஒரு சட்டை, பனியன், ரெண்டு மலையாளம் துண்டு. வேஷ்டீலே ஒண்ணு கிழிசல். ரெண்டுதான் கணக்கெடுத்துக்கணும். ஒண்ணு எப்பவும் இடுப்பில் வியர்வையில் நனையும். ஒண்ணு கொடியில் துவச்சுப் போட்ட ஈரம் காயும்.

நான் ஏழைன்னு ஒரு நிமிஷம்கூட நினைச்சு கவலைப் பட்டதில்லை. தனியா இருக்கேன்னு வருந்துவேன். இன்னும் 10 சமாளிச்சுடலாம். மேலும் பொழச்சுக் கிடந்தா உடம்புக்குன்னு வந்து, கவனிப்பாரத்து படுக்கையில் கிடக்காம வரதராஜர் அழைச்சிண்டுடுவார்னு நம்பிக்கை. நான் செய்யரதும் கைங்கர்யம்தானே?

இன்னைக்கும் கார்த்தாலே 7 மணிக்கு வந்தாச்சு. அப்பத்தான் கோவில் தொறப்பா. 8க்குத்தான் தரிசனம். யாரும் ஃபெஸ்டிவல் இல்லைன்னா அதுக்கு மின்னாடி வந்து நிக்க மாட்டா. அர்ச்சகர் வரச்சே நாந்தான் நிப்பேன். 12 வரைக்கும்னு பேர். கூட்டம் இல்லைன்னா நடைய சாத்தி பூட்டிண்டு போயிடுவர் சக்ரபாணி மாமா. மாமான்னதும் வயசானவர்னு நினைக்கேண்டாம். அப்படிக் கூப்பிட்டாத்தான் கோவிச்சுக்காம திரும்பிப் பாக்கரர்.

ஏழாம் நூற்றாண்டில் கட்டின கோவில். தரை ஒழுங்கா இருக்காது. நிறைய இடத்தில் கல் தூக்கிண்டு. பாத்து நடக்கணும். சுத்தம் செய்யரவாளுக்கும் கஷ்டம். ஆங்காங்கே விளக்கேத்தி எண்ணை பிசுக்கு. மேல் நிலைக்கு ஏறிப்போக வழி. அங்கே இன்னும் மூணு பெருமாள் இருக்கா. மொதத்தடவை வரவாளுக்கு தெரியாது. மாமா சொல்லுவர். பாத்துட்டு போங்கோன்னு. நா இருந்தேன்னா “நாணா, இவாளுக்கு மத்த மூணு வரதரையும் எப்படிப் போய் சேவிக்கணும்னு காமிச்சுக் கொடு.”. மூலவர் சுந்தர வரதர். இவரைத் தவிர அச்சுத வரதர், அனிருத்த வரதர் அப்பரம் கல்யாண வரதர்னு மூணு பெருமாள். விமானத்துக்குள் படி ஏறிப்போணம். அப்பரம் வராஹர், வைகுண்டப் பெருமாளும் உண்டு. கோவிலுக்கு வெளீலேயே புஷ்கரணி. அதுபாட்டுக்கு அது. யாரும் சீண்டரதில்லை.

எல்லா இடங்களையும் தினம் சுத்தம் செய்யரதுன்னா ஒரு ஆள் போதாது. 4 நாளில் எல்லாத்தையும் கவர் பண்ராப் போல் வச்சிண்டிருக்கேன். விசேஷம்னா ரெண்டு பொம்மனாட்டிகள் சேர்ந்துப்பா. அவாளை மேய்க்கர வேலையும் என்னுது.

நீங்க குனிஞ்சு நிமிர்ந்து கல்லுத் தரைய பெருக்கி இருக்கேளோ? செஞ்சு பாத்தா தெரியும். பெண்டு கழண்டுடும். அதே சமயத்தில் மனசில் சொல்லொண்ணா தன்னடக்கம் ஆழமா குடிகொண்டுக்கும். அதுவும் கோவிலுக்குன்னு செய்யரச்சே, நாம எடுத்துண்ட காரியத்துக்கு உண்மையா சேவகம் செஞ்சோம்னா அதில் கிடைக்கும் நிறைவே தனி. 

அன்னைக்கு கதவத் தொறக்க அர்ச்சகர் கூடவே தர்மகர்த்தாவும். உத்ஸவம் வரதே! தயார் நிலை பெசலாம்னு வந்தாராம். “இன்னும் சிலரும் 8 மணிக்கு வருவா, நீயும் இருடா நாணா, உன் அபிப்ராயமும் தேவை! இந்த வருஷம் நன்கொடை தரேன்னு வந்திருக்கர் ஒருத்தர், அவாத்துலேந்தும் வருவா. அவா சிலது விருப்பப் படரா. நன்னா பண்ணிடணு”. சொன்னாப் போல் வந்து நின்னது இன்னொவா. மதுரைலேந்து வராளாம். ஒரு மாமா, என்னொத்த வயசு, நல்ல உசரம், சிவப்பா, பட்டுடுத்திண்டு, கூடவே 30 வயசில் பையன், அவன் ஆத்துக்காரி. எல்லாருக்கும் பின்னாடி பட்டுப் புடவை தழையத் தழைய கட்டிண்டு இறங்கரா ஒரு மாமி.

30 வருஷமாச்சு. இருந்தாலும் அதுக்கு மின்னாடி 8வருஷப் பழக்கமோன்னோ சட்டுன்னு எனக்கு யார்னு புரிஞ்சதே! அனந்தவல்லி.

என் ஆனந்தீன்னு சொல்லிண்டு திரிஞ்சேன். இப்போ சட்டுன்னு தூண் பின்னாடி மறைஞ்சுக்கத்தான் தோணித்து.

ரெண்டு பேரும் செங்கல்பட்டில் இருந்தம். எங்கப்பா சின்ன வயசுலேயே எங்கே போனர்னு தெரியாம போய்ட்டர். அம்மாதான் வளர்த்தா. இருந்த வீடு எங்களோடதா இருந்ததால் வாடகை அப்பரம் நிலத்துலேந்து வந்த விளைச்சல் வச்சு படிக்க வச்சா. எனக்குத்தான் ஏறலை. அம்மாக்கு உடம்பு படுத்தும். அது இதுன்னு வைத்தியச் சிலவில் வீடு அடமானம் ஆகி கரைஞ்சும் போச்சு. படிக்கலைன்னு இதையும் அதையும் செய்யப் போக ஆனந்தி கிடெச்சா. ஒரு பிடிமானமா வந்து சேர்ந்தான்னு சொல்லலாம். எங்க தெருவுக்கு பின்னாடித் தெரு. நல்ல வைஷ்னவக் குடும்பம். விழுந்து விழுந்து காதலிச்சம்னு அடிச்சுச் சொல்வேன்.

என் நிலமை நன்னா தெரிஞ்சு, அப்பன் ஓடிப் போயிட்டானு புரிஞ்சிண்டு சமயம் வரப்போ ஆத்தில் சொல்லி ஒத்துக்க வைக்கரேன்னா. ரெண்டு பேரும் சைக்கிள் ஓட்டுவம். சனி ஞாயிறுன்னா எடுத்துண்டு எங்கேயாவது போயிடரது. சைக்கிளில் லாங்க், வழீலே காதலிச்சுண்டே போன ஜோடி நாங்களாத்தான் இருப்பம். சிலவு கம்மி. காத்தடிக்க 2 ரூவாய், வழீலே இளநீர், நொங்கு, இல்லை கடலைமிட்டாய், வாழைப்பழம். திருக்கழுக்குன்றம், இந்தண்டை உத்திரமேரூர் அப்படீன்னு வந்துடுவம். மத்தியானம் 3 மணிக்கு கிளம்பி திரும்ப 7ஆகிடும். யாரும் ஒண்ணும் சொல்லலை. புளியமரத்தடீலே உக்காந்திண்டா கைய ஆசையாப் பிடிப்பள். அப்பெல்லாம் வாகனங்கள் இப்பவோ அப்பவோன்னு. தோளில் சாஞ்சிண்டு அந்த சுகத்தை அசைபோட்டுண்டே ஒரு கண்ணை ரோட்மேலே வச்சுப்பள்.

“கைக் காசுக்கே திகுடுதத்தோம். உன்னை கல்யாணம் செஞ்சுண்டு என்னத்தைன்னு காப்பாத்த?” “நான் வேலையில் சேர்ந்துக்கரேன், உனக்கொண்ணும் அதில் பிர்ச்சனை இல்லையே?” “அதெப்படி? கொஞ்சநா வேணா ஓகே, நிரந்தரமா?” “நீ ஆத்தைப் பாத்துக்கோ. நான் சம்பாதிக்கரேன். புதுசா வாழ்ந்து காட்டுவம்”. கேக்க நன்னாத்தான் இருந்தது. நடைமுறைக்கு? அம்மாகிட்டே சொன்னா தோலை உரிச்சுப்புடுவா. 24 வயசாச்சேன்னு கூட பாக்க மாட்டா. இருந்தாலும் சொன்னேன். “அதெல்லாம் நமக்கு சரி வராதுடா.” ஹீனமாப்போன குரலில் சொல்லி புள்ளையோட ஆசை நிறைவேறாமப் போகப் போவதை நினைச்சு கண்ணீர் விட்டா.

ஒருநா “ஆத்தில் வரன் பாக்கராடா, நாம ஏதாவது செஞ்சுக்கணும்டா.” ஆனந்தி இப்படி சொன்னப்போ இதே கோவிலில்தான் இருந்தம். “ஓடிப் போய் கல்யாணம் செஞ்சுக்கலாம்னு சொல்ரியா?” “அது செய்யலாம், வேற ஏதாவது செஞ்சு உன்னோட மனைவி ஆகிட்டேன்னு அப்பாகிட்டே சொல்லிடலாம். வேற வழியில்லாம பண்ணி வச்சுடுவா”. அதெப்படி? தாலி கட்டாம என்னத்தைன்னு செஞ்சு இவளை மனைவியாக்கிப்பது? இந்த வடிகட்டின முட்டாளுக்குத் தெரியலை. “நாளைக்கு சாயங்காலம் உங்காத்துக்கு வரேன். மாடிக்கு போய் மேட்டரை முடிச்சுடலாம்”. பக்குன்னுது. இவள் செஞ்சாலும் செய்வள். வந்தா நாமதான் இவளை நல்வழிப்படுத்தி திருப்பி அனுப்பணும்.

அவள் வரலை, எதுவும் நடந்துடலை. கதை படிக்கரவா பதட்டப் படேண்டாம். ஒரு வாரத்தில் அவாத்தில் அவளுக்கு நிச்சயம் செஞ்சு அடுத்த மாசம் கல்யாணமும் பண்ணிட்டா. பையன் மதுரை. நல்ல படிப்பு. வெளிநாடெல்லாம் போவர்னும் ஆனந்தவல்லி அதிர்ஷ்டக்காரீன்னும் எங்கடவா பெசிண்டா. அம்மா மட்டும் ஒரு ரிக்ஷா வச்சுண்டு போய் அட்டெண்ட் செஞ்சுட்டு வந்தா. அந்த மாப்பிள்ளைய் இப்பத்தான் பாக்கரேன்.

எத்தனை நினைவுகள்? 30 வருஷத்துக்கு மிந்தயது உறைஞ்சுபோன படம்போல் கலர்கலரா கண் மின்னாடி. நாளடைவில் கஷ்டப் பட்டு மறந்துபோன விஷயங்கள் திரும்ப எதுக்காப்போல் இப்போ வந்து நிக்கரப்போ வேதனைப் படும் மனசுக்கு என்னன்னு சொல்லி தேத்திக்க? என் ஆனந்தி கிட்டே இப்ப சொல்ல வேண்டிய அவள் அவசியம் கேக்க வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கு, என் மின்னாடி உக்காந்து கேக்கவாப் போரா? என்னைப் பாத்ததும் அவளுக்கு அடையாளமா தெரியப் போரது? நடந்துட்டதுக்கு யாரை தோஷிக்க, யாரை காரணம்னு சொல்ல? என் வறுமையையா, அவாத்து மனுஷாளையா? அத்தனை இழைஞ்சவள் கடைசீலே ஒண்ணுமே எதுத்து பேசாம ஆத்தில் சொன்னவனுக்கு கழுத்த நீட்டிட்ட அவளை குத்தம் சொல்லலாமா? இல்லை நிச்சயம் ஆச்சுன்னு தெரிஞ்சதும் போய் சண்டை பிடிக்காம விட்டுக் கொடுத்துட்ட என்னை குத்தம் சொல்லலாமா? சொல்லித்தான் என்னாப் போரது? என்னத்தைன்னு சாதிக்கப் போரம்?

எனக்கும் ஒரு நல்லது நடந்து என் வாழ்க்கை ஒரு தினுசா பூர்ணமாகியிருந்தா எதுத்தாப்போல் போய் நிக்கலாம். நின்னு நான் தோக்கலை, நானும் நன்னாத்தான் இருக்கேன்னு அவ பாக்கரப்போ மார் தட்டிண்டு. வரதராஜர் ஒத்துழைக்கலை. ஏமாத்திட்டர்.

இன்னைக்கு பெறுக்கித் தொடைக்கர வேலை முடிஞ்சது. கிளம்பிடலாம் ஆனா இருக்கச் சொன்னாளே! எல்லாரும் மேடையில் ஜமுக்காளம் போட்டு உக்காந்துண்டு என்னையும் கிட்டக்க கூப்டரா. 5 லக்ஷம் நன்கொடை தராளாம். இன்னும் வேணும்னாலும். கோபுரம் பெயின்டிங்க், தள வரிசை சரிபண்ரது, புதுசா எலெக்ட்ரிகல் இழுத்து புது விளக்கு எல்லாம். அப்பரம் ஆடி உத்சவச் சிலவும். ஒரு கார்பஸ் க்ரியேட் செஞ்சு ரெகுலரா பூஜைக்கு வரும்படி வராப்போல் செய்யப் போவதாயும். எல்லாம் சொல்லிட்டு “இவர்தான் நாராயணன். இங்கே சகல காரியங்களையும் பாத்துக்கரர்.” அறிமுகம். பெருமையா இருந்தது. நிமுந்து பாத்த ஆனந்திக்கு என்னை தெரிஞ்சதா இல்லையா? அவ முகத்தை பாத்தப்போ புரிஞ்சிக்க முடியலை.

ஆத்துக்கு வரேன். கொடீலே பழைய வேஷ்டி காய்ஞ்சிண்டிருக்கு. ட்ரங்கு பெட்டிய தொறந்து அடீலேந்து ஒரு 500ரூபாய் தாள எடுத்துக்கரேன். பழசு கட்டிண்டது போதும். புதுசு வாங்கிக்கணும். சட்டையும். 

உத்ஸவத்துக்கு ஆனந்தவல்லி வருவா. போட்டுண்டு மின்னாடி போய் நிக்கணும்.

No comments:

Post a Comment