1. கஸ்தூரியும் குவாரன்டைனும் (சிசீ6)
#ganeshamarkalam
வாசல்ல அவன் விசிரிட்டு போன இளைச்சுப் போன பேப்பரை எடுத்துண்டு ஊஞ்சலில் உக்காரரேன்.
ஒண்டே இன்டர்னேஷணல் மேட்சை தொடர்ந்து ஒரு மண்டலமா ஆடிண்டு ரன் ரேட், ஸ்கோர் எல்லாம் விதவிதமா போட்டு அலசி எல்லா டீமும் தோத்துண்டிருக்கான்னு சொல்ராப்போல் கொரோனா விஷயங்களை 10பக்கத்துக்கு ரெப்பி. சகிக்கலைன்னாலும் படிச்சுடணும்னு எடுத்துண்டு உக்காரலை, “ஜக்ஸ், நான் வாக்கிங்க் போயிட்டு வரேன், உதயா போன் செஞ்சா, கூட வரா”ன்னு சொல்லிண்டே கஸ்தூரி. தலையை முடிஞ்சிண்டு செருப்பை மாட்டிக்கரா.
“மாஸ்க் போட்டுக்கலை?” ‘எல்லாம் எனக்குத் தெரியும்.” இடுப்பில் சொருகிண்ட கர்சீப்பை. என்னுது, பெரீசா இருக்கும் ஜென்ட்ஸ் டைப். ஆனா புடவைக்கு மேட்சிங்கா பீரோலேந்து எடுத்திருக்கா. “ரெம்ப தூரம் போவேண்டாம் கேட்டியா? இப்ப மணி 6. வெளிச்சம் வந்துடுத்து. போலீஸ் ரோந்து வருவா, பிடிச்சிண்டு போயிடுவா.” சொல்ரச்சேயே பிடிச்சிண்டு போப்பிடாதான்னு ஒரு ஆசையும் கூடவே வந்தது. “நான் வரத்துக்குள் காய் நறுக்கி வைங்கோ.”
உதயா பத்தி சொல்லியே ஆணம். 8ஆம் தள்ளி. அவள் வாக்கிங்க் போவதை விட தலை தெறிக்க ஓடினாத் தேவலைன்னு தோண வைக்கும் சரீரம். ஆனா ஸ்லோமொஷணில் நடந்து போவா. ரேஷணில் என்ன போடரான்னு தெருப்பூரா தகவல் அவள்தான் தருவள். அவளோட வாக்கிங்க் போனா பல தகவல்கள் கிடைக்கும். அதுக்குத்தான் கஸ்தூரி அவளை அப்பப்போ தாஜா செஞ்சு கூடப் போவள். ஃபார் எக்ஸாம்பிள் எதுத்தாத்து சந்தானத்தோட மூணாவது மாட்டுப்பொண் எந்த காரணத்துக்காக தனிக்குடுத்தனம் போனாள்கிர விவரம் உதயா சொல்லித்தான் தெரியும். இவளொட சேர்ந்து 5 கிமீ வாக்கிங்க் போவதும் ஆத்து வரான்டாவில் 1 வாரம் சவமா கிடப்பதும் ஒரே அளவு கேலோரியத்தான் எரிக்கும். ஆனா வரச்சே ஜ்யூஸி காஸிப்போட வரலாம்.
ஆனா அன்னைக்கு நடந்ததே வேற. ToI 3ஆம் பக்கம் அப்பத்தான் வரேன் வாசல்ல பெல். இவளா இத்தனை சீக்கிரம் திரும்பிட்டானு எழுந்து பாத்தா, சமையல்கார மாமி. எதுத்தாப்புலே நாலு விடு தள்ளி இருக்கா. போரப்போ வரப்போ என்னைப் பாத்து சிரிப்பா. இன்னைக்கு இவள் ஆத்தில் இல்லைன்னு தெரிஞ்சுண்டு காலிங்பெல் அடிச்சு சிரிச்சு காட்டிட்டுப் போலாம்னு காலங்கார்த்தாலேயே வந்தாளோ? ‘என்ன மாமி’ன்னு கேக்கலாம்னு வாயத் தொறக்கலை “இங்கே என்ன நடந்திண்டிருக்கு நீங்க உள்ளே என்ன பண்ரேள்? சீக்கிரம் வாங்கோ”. கேட்டத் தொறந்திண்டு போனா தெருக்கோடீலே சின்னதா கூட்டம். சோஷியல் டிஸ்டென்சிங்க் வேண்டாம்னு சொல்லிட்டாளா என்ன! “என்ன ஆச்சு மாமி?” சிரிச்சிண்டே “நீங்களே போய் பாருங்கோ!”
இன்னைத்து சிரிப்பில் ஆசையும் மோகமும் கம்மியாவும் கிண்டலும் கேலியும் தூக்கலா தெரியவே, பனியனோட நடந்து போரேன். நான் வரதைப் பாத்துட்டு என்னவோ தெரியலை கூட்டம் மரியாதையா விலகி வழி விட்டது. அப்புரம்தான் ஏன் அந்த மரியாதை, நாம எப்படி சட்டுன்னு பிராபல்யமாப் போனம்னு புரிஞ்சது.
தரையில் ஒருத்தன் கிடக்கான். அவனண்டை இன்னொருத்தன் முட்டி போட்டுண்டு கையைக் கூப்பிண்டு. தள்ளி ஒரு பைக். அதுகிட்டே உதயா. என் கஸ்தூரி எங்கேன்னு பாத்தா என் கர்ச்சீப்பை முகத்தில் முடிஞ்சிண்டு கீழே கிடப்பவனை ரெண்டு துவம்ஸ்ம் செய்யரா. “ஏண்டி, என்னாச்சு?” “பைக்கில் போயிண்டே என் செயினை பிடிச்சு இழுக்கப் பாத்தானுவ. சட்டுன்னு உக்காந்துண்டேன், இவனும் கீழே விழ வசமா மாட்டிண்டா. ரெண்டு விட்டேன். போலீஸுக்கு சொல்லியிருக்கு. வரட்டும். அவாளும் ரெண்டு மொத்தட்டும்”.
போலீஸ் வந்தது, இவாளைப் பிடிச்சிண்டு போச்சு. அங்கேயே வச்சு விவரம் கேட்டு FIR போடுவோம்னு ஜீப்பில் இழுத்துண்டு போக எல்லாம் நடந்தது. அன்னைக்கு என் கஸ்தூரிகிட்டே அத்தனை தெகிரியமான்னு ஆச்சர்யம். எங்கேயோ படிச்சாளாம். கைப்பையையோ, செயினையோ யாராவது பறிக்கராப்போல் பட்டதுன்னா அப்படியே அதே இடத்தில் உக்காந்துடணுமாம். கை நழுவும், இல்லை இழுக்கரவன் அதை எதிர்பாக்காததுனாலே பிடிச்சிண்டே இருந்தா நிச்சயம் விழுந்துடுவான், அப்புரம் மொத்தி எடுக்கலாம்னு. சமயோசிதமா பாத்ததை செயலில் காட்டி. எல்லாரையும் விட அதிர்ச்சியில் அன்னைக்கு உதயா. வாக்கிங்குக்கு கூட்டிண்டு போனது ஒரு ஜேம்ஸ்பாண்டுன்னு புரிஞ்சிருக்கும். இனிமேல் கூப்பிடுவாளா?
நாங்க ஆத்துக்கு வந்தோம். ரோட்டில் யாருமில்லைன்னாலும் நாங்க நடந்து வரச்ச்சே பல்வேறு ஜன்னல்லேந்தெல்லாம் பொறாமையும் பாராட்டுக்களும் சரிசமமா கிடைப்பது தத்ரூபமா ஃபீல் ஆச்சு. இந்த கொரோனா வார்டில் பணியில் இருந்த நர்ஸ் (கஸ்தூரி) துப்புரவு தொழிலாளி (நான்) பலநாள் கழிச்சு வரச்சே எல்லாரும் கைதட்டி வரவேற்பது போல் வீடியோ பாத்தோமே, அதை சவுண்ட் இல்லாம பாக்கராப்போல்.
‘கொரோனா எல்லாரையும் எல்லாவிதத்லேயும் பாதிச்சுட்டது வாஸ்தவம். இப்போதைக்கு போவேனான்னு படுத்தி எடுக்க, எல்லாரையும் ஆத்துக்குள்ளேயே அஞாதவாசம் செய்ய வச்சு. வெளீலே வந்தா துரியோதனின் உளவாளி மாதிரி இந்த வைரஸ் காத்திண்டிருந்து பிடிக்க. கஸ்தூரிக்கும் அவள் சகஜ நிலமையில் என்னெல்லாம் ஜாலியா செய்வளோ அதையெல்லாம் செய்ய முடியாதபடி இப்படி ஒரு கஷ்டமான நிலமை. பொழுது போலை. என்னன்னு செய்ய?
என்னை அப்பப்போ படுத்தி எடுப்பள். கூடமாட ஒத்தாசை சென்ய்ய நான் தயார். ஆனா எது பண்ணினாலும் நொட்டு சொல்லிண்டு. அன்னைக்கு “கொடு நான் பாத்திரம் தேய்க்கரேன்”னு செஞ்சு தந்தேன். சாப்பிட உக்காரரச்சே “இதோ பாருங்கோ நீங்க தேய்ச்சு கழுவின தட்டில் ஓரமா இன்னும் சபீனா பவுடர். சரியாப் போலை. இப்படியா தேய்ப்பா? இதுகூட உங்களுக்கு யாரும் சொல்லித் தரலையோ!” அது சரி! வேட்டாத்துக்கு அனுப்பரத்துக்கு மின்னாடி எங்கம்மா இதெல்லாம் சொல்லித் தந்திருக்கணுமோ? யார் கண்டா இப்படி ஒரு பத்துத் தேய்க்கர நிலமை தன் புள்ளைக்கு வரும்னு அவளுக்கு தெரியலை. “கீரையை இன்னும் நன்னா பொடிப் பொடியா நறுக்கணும்”. இதுக்கு மேல் நறுக்கினா மசிய வைக்கவே வேண்டாம். பாத்திரம் தேய்க்க துப்பில்லைன்னுட்டு “துணிய நானே தோய்ச்சுப் போடுவேன், ஒழுங்கா உணத்தியாவது மடிச்சு வைங்கோ. கெஞ்சிக் கேட்டுக்கரேன்”. செஞ்சேன். அன்னைக்கு 4 புடவை. ஊரடங்கில் இத்தனை புடவை மாத்திக்கணுமா? உணத்தரச்சே கொடி அறுந்து விழ ரெண்டில் மண் ஒட்டிண்டு. பாக்காம திரும்பக் கட்டி உணத்தியாச்சு. எடுத்து மடிக்கரச்சே தள்ளி நின்னு சூபர்வைஸ் செஞ்சவள் இதை பாத்துட்டா. ஒரு ஆட்டம் ஆடினா பாருங்கோ.
அன்னைக்கு ராத்திரி வெறும் மோர் சாதமும் நார்த்தங்காயும்தான்னுட்டா. “நீங்களே போட்டுண்டு சாப்பிடுங்கோ நான் ந்யூஸ் பாக்கணும்.” உக்காந்திண்டா. எதுத்தாப்போல் 2 பாத்திரம். எல்லாத்துலேயும் வெள்ளையா. ஒண்ணில் கரண்டி போட்டா மிதந்தது. இட்லீக்கு அரைச்சு வச்சிருக்கான்னு புரிஞ்சது. அடுத்தது நன்னா வெளுப்பா. மோர்னு எடுத்து குத்திண்டப்புரம்தான் பால் உறைகுத்தினதுன்னு புரிஞ்சது. சூடு ஆறட்டும்னு மூடியப் பாதி நகத்தி வச்சிருக்கா, அது தானே முழுசா மூடிக்க, மோர்னு நான் நினைச்சது ஒரு தப்பா? “என்ன சாப்டாச்சா?” கேட்டுண்டே சோபாவுலேந்து திரும்பினவள் நான் தொறந்து வச்சு எடுத்து ஊத்திண்டு பிசைஞ்சுக்கர பாத்திரத்தை பாத்துட்டு “அச்சச்சோ”ன்னு எழுந்து வந்ததை நீங்க பாத்திருக்கணும்! ஏதோ மாபாதகம் செஞ்சுட்டம், அன்னைக்கு செயின் ஸ்னேச்சரை மிதிச்சாபோல் நமக்கும் நடக்கப் போரதுன்னு தோணிடுத்து.
அப்படி ஆலை, ஆனா நன்னா திட்டு விழுந்தது. எனக்கும் என் அம்மாவுக்கும். கடைசீலே மோர் பாத்திரத்தை ஃப்ரிட்ஜ்லேந்து எடுத்துக் காட்டி இதுகூட தெரியலைன்னு. ஏதோ சாப்டேன், எழுந்திண்டேன்னு வச்சுக்கணும். கல்யாணத்தன்னைக்கு பாலுஞ்சாதம் சாப்ட நியாபகம். உறை குத்தினது வயித்துக்குள் போய் என்னெல்லாம் செய்யுமோன்னு. அதுனால் ஜலதோஷம், ஜுரம் அடிச்சா கொண்டு போய் பெரியாஸ்பத்ரீலே வச்சுடுவான். அங்கே கொரோனா பாதிச்சவாளுக்கு கொடுக்கும் டயட் பத்தி எங்கேயோ படிச்சது உடனே ஞாபகம் வரவே ஒரு 14நாள் சொகுசா இருந்துட்டு வரலாம்னு தோணிப் போச்சு. வாய் விட்டு சொல்லலை.
இவள் எத்தனை தப்பு செஞ்சிருக்கா? சொல்லிக் காட்டினா இன்னும் 2 மண்டலம் லாக்டவுன் சுவாரஸ்யமா பொழுது போகும்! சரி, ஒண்ணு ரெண்டு எடுத்து விடரேன்.
அன்னைக்கு லாக்டவுன் வெர்ஷன் 1 நடந்திண்டிருந்தது. அதிக நாள் இப்படி உக்காந்திருக்க மாட்டம் அரசாங்கம் எல்லாத்தையும் சட்டுபுட்டுன்னு தீத்துட்டு ரெண்டே வாரத்தில் ப்ளேன் விட ஆரம்பிக்கும்னு நினைச்ச காலம். ஆத்தில் நிறைய சாமான் செகரிச்சு வச்சுக்கலை. அதான் வாசலில் வரதேன்னு. நான்தான் ரியடர்ட் ஆச்சே! போன 8 வருஷமா ஆத்துலேயே இருந்தது, இவளுக்கும் சரி எனக்கும் சரி ரெண்டு பேரும் அதே முகத்தை பாத்துண்டே வளைய வருவது பழகிப் போயிட்டது.
ஒருநா சும்மா இல்லாம “உங்களுக்கு சுய்யம் பிடிக்குமா, பண்ணித் தரட்டுமா?” “அப்படீன்னா என்ன?” சித்தே யோசிச்சுட்டு “சுய்யம்னா சுய்யம்”. “அது தெரியறது, என்னனு சொல்லு”. சுய்யம்னு ஆரம்பிச்சது அவள். விளக்கம் தந்தேயாணம். “குழிப்பணியாரம் மாதிரீ”. அதுக்காக சரவணா ஸ்டோரில் 3 பணியார தட்டு வாங்கினது ஞாபகம் வந்தது. “எதுக்குடி 3?” ஒண்ணு நமக்கு, சொச்சம் பொண்களுக்கு வரச்சே கொடுப்பேன்”. இவள் குழிப்பணியாரம் பண்ணி என்னை திங்க வைக்கரச்சே அதே டயத்தில் என் மாப்பிள்ளைகளும் அவாவாத்தில் இதையே மென்னு முழுங்கணுமாம்! வாட்ஸப் ஃபேமிலி க்ரூப்பில் பட பரிமாற்றம் நடக்கும்.
சாப்டவாளுக்குத்தான் அதை படமாவும் பாக்கரது எத்தனை சங்கடமான விஷயம்னு புரியும். இப்படி வர படங்கள் சனியன் போனில் காலரீலே சேவ் ஆகிக்கும். அப்புரம் எதையோ தேடரச்சே எதுக்கே வந்து குமட்டும். இன்னைக்கு சுய்யமாம். பாப்பம். மத்தியானம் 3 மணி, அந்த வட்டமான பல்லாங்குழியை எடுத்து அலம்பி எண்ணை தடவி அடுப்பில் ஏத்தியாச்சு. “ப்ரிட்ஜிலேந்து மாவு பாத்திரத்தை எடுத்து கொடுங்கோ!” உத்தரவு போடரா. பாத்திரம் சின்னதா இருக்கப்போவே எனக்கு சந்தேகம். நமக்கென்ன சுய்யம் செய்யப் போரவாளுக்கு தெரியாதான்னு எடுத்துத் தரேன். இவளுக்கு கண் பார்வை சித்தே திகுடுதத்தம். வயசாகிடுத்தோனோ! கண்ணாடி வச்சிருக்கா. ஸ்பெக்மேக்கர்ஸ் போய் 5600க்கு ஃப்ரேமோட டெஸ்ட் செஞ்சு வாங்கித் தந்திருக்கேன். போட்டுண்டா வயசைக் கூட்டிக் காமிக்கரதுன்னு தூர வச்சுட்டு சுய்யம் செஞ்சாரது.
வெந்ததும் பல்லாங்குழீலேந்து எடுத்து தட்டில் வைக்கலாம்னு பாத்தா வழிஞ்சு குழீலேயே திரும்ப போயிடரதே! அப்புரமா தெரிஞ்சது கெட்டித்தயிரை எடுத்து எண்ணைக் குழியில் ஊத்தி வேக வச்சிருக்கான்னு. ஆத்தில் மாவே இல்லைங்கரதை மறந்துட்டா. ஓசைப் படாம எல்லாத்தையும் எடுத்து வச்சிட்டு “இன்னைக்கு காபி மட்டும்தான் ஆத்தில் சும்மா உக்காந்திண்டு பேப்பர் படிக்கரவாளுக்கு எண்ணைப் பண்டம் ஆகாது”. ஒளிஞ்சிருந்து நான் பாத்துட்டதை சொன்னா திட்டக் கிளம்புவள். இத்தன வருஷ தாம்பத்தியத்தில் நான் கத்துக்காத படிப்பினைகளா! அதில் எப்போ வாய மூடிண்டு இருக்கணும் என்பது முதன்மையான படிப்பினை.
நேத்து தயிர்னு நினைச்சு உறைகுத்தின பாலை வீணடிச்சதுனால் இன்னைக்கு “கலத்துக்கு மோர் இல்லை, சித்தே போய் வாங்கிண்டு வரமுடியுமா?” கேக்கரா. அத்தனை அழகான முழிய வச்சிண்டு சிரிச்சிண்டே கிட்டக்கே வந்து நின்னிண்டு நுணி விரலால் மார்பில் தொட்டு கேக்கரச்சே மாட்டேன்னு எப்படி? செய்வம்னு சட்டையை மாட்டிக்கரேன். “அப்படியே கடலை மாவும் வாழைக்காய் கிடெச்சா ரெண்டு, பச்சப்பச்சையா காய் கிடெச்சா அதுவும், ரெண்டு திருமலா பால் பாக்கெட்டும்.” உள்ளேந்தே கூப்பாடு. ஒவ்வொண்ணுக்கும் சரீன்னு சொல்லாம, லிஸ்ட் முடிச்சாச்சுன்னு ஊர்ஜிதப்படுத்திண்டு “சரீ”ன்னு முட்டுச்சந்து நாராயணாத்துக்கு கேக்கரா மாதிரி கத்ரேன்.
கேட்டைத் தொறக்கலை பின்னாடியே ஓடிவரா கஸ்தூரி. “சித்தே நில்லுங்கோ”. “ஏண்டி, நீயே போரியா?” “உங்க மாஸ்க் நன்னாயில்லை”. அது சரி. இங்கே தெருக்கோடி போய் திரும்பினா மளிகைக்கடை எந்த மாஸ்க்கா இருந்தா என்ன? காதுவச்ச நீல மாஸ்கை நீட்டி “இதை மாட்டிண்டு போங்கோ, அந்த கர்சீப்பை கழட்டி என்னண்டை தாங்கோ”. “ஏன் அதுக்கென்ன?”
“அதை அப்படி கட்டிண்டா செயின் ஸ்னேச்சர் மாதிரி இருக்கு. யாராவது உங்களை மொத்தப்போரா”. என்ன ஒரு கரிசனம்! ஆத்துக்காரரை யாரும் மொத்திடப் பிடாதாம். மொத்தரதுன்னா அவதான் செய்வளாம்!
No comments:
Post a Comment