Thursday, March 11, 2021

ஞானம்

 32. ஞானம் (சிசீ6) #ganeshamarkalam

படபடன்னு ஃபோனில் படங்கள் வந்து விழரது. டிங் டிங்குன்னு நோடிஃபிகேஷன் காதுக்கு ஹிதமா. யாராவது குட்மார்னிங்க் அனுப்பியிருந்தா இன்னி பூரா மூட் அவுட் ஆகிடும். நல்ல வேளை அப்படி ஆலை.

பேரன்தான் மயிலாப்பூர்லேந்து பாடம் அனுப்பிச்சிருக்கான். சோஷியல் ஸ்டடீஸ். “கௌதம புத்தர்” லெஸன் #6. பாடம், படங்களொட சம்மரி, கொஸ்சீன்ஸ் எல்லாம் புஸ்தகத்லேந்து 6 பக்கம் படம் எடுத்து. சொல்லித் தரணும். 10 மணிக்கு கூப்பிடுவான். ‘திங்கட்கிழமை ஸ்கூலுக்கு வரத்துக்குள் படிச்சிண்டு வா’ன்னு புதுப் பாடத்தை சொல்லிடுவா. தாத்தா பாட்டீன்னு ஆத்தில் இருப்பா அவாகிட்டே கத்துக்கட்டும்னு. ஸ்கூளுக்கு போனதும் டெஸ்ட் வச்சுடலாமோன்னோ! சரியா பதில் எழுதாத குழந்தைகளுக்கு ஹோம்வொர்க். டீச்சர் சம்பளத்தில் பாதி எனக்குத் தந்தாகணும். பேரனண்டை எப்படி சொல்ல?

பிரமிப்பா இருக்கு. இன்னும் கௌதம புத்தரை விடலை. புஸ்தகம் போடரவாள பிடிச்சு கேக்கணும். புத்தர் தெரிஞ்சுக்க வேண்டியதுதான் ஆனா தெரிஞ்சிண்டு என்ன பண்ண? இப்பவே அட்லஸ் எடுத்து வச்சிண்டு யூஎஸ்இல் கொலரேடோ, கேன்யான்னு என்னத்தையோ பாக்கரான். நம்மூர் மீனாக்ஷி அம்மன் கோவில்னா போரடிக்கரதாம். நம் நாட்டு பாரம்பர்யம் கத்துக்கலைனா பாஸ்போர்ட் இல்லைன்னுடணும். எவனுக்கும் தரப் பிடாது.

சொன்னாப்போல் 10க்கு கூப்டான். “தாத்தா படிக்கலாமா?” குழந்தையே படிக்கணும்னு வரப்போ பிகு செஞ்சுக்கப் பிடாது. அப்பரம் பிடிக்க முடியாது. “அவன் கூப்பிட்டப்போ சொல்லித் தர வேண்டியதுதானே!” பொண் திட்டுவள். பேரனோட பாட்டி அடுத்த ரூம்லேந்து என்ன செய்யப் போரேன்னு உன்னிப்பா. “வாடா செல்லம்!” சமுத்தா ஆரம்பிக்கரேன்.

“புஸ்தகத்தை ஓரமா வச்சுடு. தாத்தா சொல்ரத கேளு!” புத்தரைப் பத்தி எனக்குத் தெரிஞ்சதை கதைபோல் சொல்லிண்டே போரேன். நான் மொதல்ல இவரைப் பத்தி படிச்சது 6ஆவது பாட புஸ்தகத்துலேதான். சண்டை அது இதுன்னு அலைஞ்சிண்டிருந்தவர், அடுத்த மிகப்பெரீய ராஜாவா வருவர்னா, எல்லாரும் கஷ்டப்படரதைப் பாத்துட்டு துறவரம் பூண்டுட்டார். பலபேர் பலவிதமா இவரோட இளமைக் காலத்தை எழுதியிருக்கா. ராஜா இல்லை, தன்வந்தர்னும். அப்பரம் புத்தமதம் தோன்றியதையும் இப்ப கௌதம புத்தரை கடவுளா வணங்கும் பல நாடுகளையும் சொல்லிட்டு போபால் கிட்டே நான் பாத்த சாஞ்சியையும் அதில் புத்தரொட ரெலிக்ஸ் இருப்பதையும், வாரனாஸி கிட்டே சாரநாத் தூண் பாத்ததையும், போதிகயாவில் மரம் சொல்லி முடிச்சேன்

அப்பப்போ “உம்” கொட்டரானான்னு பாத்துக்கணும். “போனை வச்சுட்டு எங்கேயாவது போயிடுவன், நீதான் பாத்து கவனமா பாடம் எடுக்கணும்.” பொண் சொல்லியிருக்கா.

“புஸ்தகத்தில் வேறன்னமோ போட்டிருக்கு?” கேக்கரான். “இல்லைடா! நான் சொன்னது டீடெயில் ஸ்டோரி, அதை சுறுக்கி போட்டிருப்பா. இப்ப கையில் எடுத்து வச்சுக்கோ அதைப் படிப்பம்”. அதில் புத்தர் பொறந்தார், வாழ்ந்தார், சின்ன வயசுலேயே தான் செய்யரது சரியில்லைன்னு கிளம்பினார், துறவரம் பூண்டார், புத்த மதத்தை பரப்பினார்னு முடிஞ்சிடுத்து. ஒரு இடத்தில் ரினன்சியேஷன் வரது. “எது என்ன தாத்தா?” பொறுமையா அவனுக்கு புரியரா மாதிரி “எல்லாத்தையும் விட்டூட்டு போரது”. “அப்படீன்னா?” “அப்படித்தான்னு வச்சுக்கோ! குறுக்கு கேள்வி கேக்காதே”. 

இன்னொரு இடத்தில் புத்தருக்கு போதிமரத்துக்கு அடீலே என்லைட்டென்மென்ட் கிடச்சதுன்னு. போதிமரம்னா ஆலமரம்னு எங்கேயோ படிச்சதையும் சொல்லியாச்சு. நேரில் பாத்தப்போ ஆலமரமா தெரியலை. விழுது காணலை அது ஒரு அரசு ஆல் அத்தி வகை. பீப்பல்னு வச்சுக்கலாம். சித்தே விவரம் சொன்னதும் இவன் பாடனி கிளாஸ் எடுப்பான் போலேருக்குன்னு “என்லைட்டன்மென்ட்னா என்ன தாத்தா?” “ஞானம்னு அர்த்தம்”. “ஞானம்னா?” வசம்மா மாட்டிண்டுட்டேனோ. “நாளைக்கு ஸ்கூலில் இருக்கச்சே டீச்சரை கேளு”. சம்பளம் வாங்கிக்கராளோன்னோ!

உண்மையிலேயே புத்தருக்கு என்ன வந்ததுன்னு எங்கேயும் தெளிவா சொல்லப் படலை. ஏதோ ஒண்ணு நமெக்கெல்லாம் வராதது. 49 நாட்கள் தவமிருந்திருக்கர். விஸ்வாமித்திரர், வசிஷ்டரெல்லாம் 1000 வருஷம் தவமிருந்ததா தெரியும். வெறும் 49 நாட்களில்? அப்படின்னா அந்த மரம் ரெம்ப விசேஷமோ? பாப்பம், டீச்சர் நல்ல விளக்கமா சொல்லிட்டா அதையே நாமளும் பிடிச்சுக்கலாம். இல்லைன்னா விஷய ஞானம் இருப்பவா யாரையாவது கேட்டுத் தெரிஞ்சுக்க வேண்டியதுதான். பேராண்டி இனிமேல் இதே பாடத்தோட என்னண்டை வரமாட்டான். அவன் சுபாவம் அப்படி. முடிச்சுட்ட பாடத்தை திரும்ப பாக்க மாட்டான். இவன்தான் கடைசீ பேரன். இன்னொரு பேரனோ பேத்தியோ பொறந்து வந்து கௌதம புத்தர் பாடத்தொட என்னை மடக்க வாய்ப்பில்லை.

இப்படியே ரெண்டுநா ஓடிப்போச்சு. சும்மா இல்லாம இவனை புதன்கிழமை ஸ்கூல்லேந்து வந்ததும் கூப்டு கேக்கரேன். “என்னடா புத்தரைப் பத்தி படிச்சமே, டீச்சர் அந்த பாடம் எடுத்தாளா, நான் கேக்கச் சொன்னதை கேட்டியா?” “ஆமாம் தாத்தா, கேட்டேன், ‘ஹி காட் நாலட்ஜ், அன்டெர்ஸ்டூட் குட் அண்ட் பேட் திங்க்ஸ்” அப்படீன்னா. திரும்ப கேட்டேன். பேச்ச மாத்தினா.” சரிதான்! டீச்சருக்கும் தெரியலை. பேரன்ட்ஸ் மீட்டுக்கு போரப்போ மடக்கிடலாம்னு பொண் கிட்டே இந்த வாட்டி நான் போரேண்டீன்னா அவள் “க்ரேண்ட் பேரன்ட்ஸ் இப்ப விடரதில்லை.”

கிமூ 4ஆம் நூற்றாண்டில் அவதரித்தவரைப் பத்தி இன்னும் பலது நாம புரிஞ்சுக்கலை. இந்தியாவுலதான் எத்தனை அற்புதங்கள்! இதெல்லாம் புரிஞ்சுக்காம பேரன் வெளிநாடு போவதா? புரிஞ்சிண்டா இங்கேயே இருக்கலாம்னு நினைக்க வாய்ப்பு உண்டே! எல்லா பிராம்ணாவாத்து குழந்தைகளும் இப்படி அம்மா அப்பாவ தவிக்க விட்டூட்டு போரதுக்கு நம்ப பாட புஸ்தகங்களும் டீச்சரும் ஒருவகையில் காரணமோ? அப்படின்னு தெரிஞ்சுண்டும் அதைப் பத்தி ஒண்ணுமே செய்யாத தாத்தாக்களும்தான் காரணம். நாமளாவது பொறுப்பா எத்தையாவது செஞ்சாகணும். முக்கியமா அந்த என்லைட்டென்மென்ட்னா என்னன்னு தெளிவா புரிஞ்சிண்டு பேரனுக்கு சொல்லித் தந்துடணும்.

திங்கட்கிழமை கிளம்பிட்டேன் கன்னிமரா லைப்ரெரீக்கு. ஏன் நெட்டில் தேடப்பிடாதான்னு கேக்கலாம். லைப்ரெரீலேந்து பொடி நடையாப் போனா 1கிமீட்டரில் மத்ஸ்யா ஹோட்டல். அதில் ஸ்ப்ரிங்க்ரோல் தோசை சாப்பிடணும்னு ஆசை. அதுக்குத்தான். நான் இப்படி சில விஷயங்களை தேடிப் பிடிச்சு ருசி பாத்துடரது. நன்னா இருந்தா பேரனையும் பாட்டியையும் அழைச்சிண்டு போலாமேங்கிர நல்லெண்ணம்தான்.

லைப்ரெரீலே புத்தர் பத்தின வீடியோ பாத்துட்டு, நேஷணல் ஜியாக்ரஃபியில் அவரைப் பத்தி ஆதென்டிக்கா போட்டிருப்பதை படிக்கரச்சேதான் அவரைப் பாத்தேன். கட்டயா, குட்டையா, கண்ணாடி மாட்டிண்டு எதுத்தாப்போல் வந்து உக்காந்துக்கரர். கழுத்தில் காவித் துண்டு. அவர் கையில் தாமியென் கோவ்ன் எழுதின “பௌத்தம் ஒரு அறிமுகம்”, அப்பரம் மயிலை வெங்கடசாமியின் “கௌதம புத்தர்.” பாவம் அவரும் பேரனுக்கு பாடம் எடுக்க தயார் செஞ்சுக்கராரோ? இல்லைன்னா எதுக்கு? எனக்கு கையில் வச்சிண்டிருந்ததில் நாட்டம் போச்சு. தேடிவந்த கேள்விக்கு விடை கிடெச்ச பாடில்லை. இவரை கேட்டா?

“கேன்டீனுக்கு போய் ஒரு டீ சாப்படலாமா?” லைப்ரெரி ஆச்சே! மொள்ள கேக்கரேன். “ஏன், எதுக்கு டீ?” “உங்களுக்கு புத்தரைப் பத்தி தெரிஞ்சிருக்குமோன்னும் சிலது உங்களண்டை பெசணும்.” சரீன்னு எழுந்துக்கரார். நன்னா பிரியமா பழகினார். பேர் குருப்ரஸாத். வலசரவாக்கமாம். நிறைய மத சம்பந்தமான விஷயங்களை படிப்பராம். நேரம் கிடைக்கரச்சே லைப்ரெரீ. “உங்களுக்கு என்ன கேக்கணும்?”

“புத்தர் தனக்கு வாய்ச்ச வாழ்க்கை வேண்டாம் துன்பங்கள் நிறைந்ததுன்னு தவம் செய்யப்போய் போதி மரத்துக்கடீலே என்லைட்டென்மென்ட் கிடச்சதுன்னு சொல்ரா. அப்படி என்னதான் கிடெச்சது? அதை தெளிவா எங்கேயும் யாரும் சொல்லலை. நீங்க என்னன்னு விளக்கிச் சொல்ல முடியுமா?” சித்தே ஆச்சர்யமா பாத்தவர், டீக் கப்பை கீழே வச்சுட்டர். என் கண்களையே கூர்ந்து பாத்தர். அவர் கூர்மையான பார்வைய எதிர்கொள்ள முடியாம குனிஞ்சுக்கரேன். “சொல்ரேன். மின்னேயும் ஒருத்தர் கேட்ட ஞாபகம். பலர் புரிஞ்சுட்டதா நினைச்சு கேட்டுத் தெரிஞ்சுக்கரதில்லை. எனக்கு என் குருநாதர் சொன்னர். அதையே உங்களுக்கும் சொல்ரேன்.”

“சித்தார்த்தரை வெளியுலகம் தெரியாம அவர் அப்பா பாத்துண்டராம். ஒருநா சொல்லாம வெளீல வந்தவருக்கு மூப்பும், பிணியும், இறப்பும் பார்க்க நேர்ந்தது. பிறப்புக்கும் இறப்புக்கும் இடையே இத்தனை இருக்கே இன்னும் என்னென்னன்னு தெரிஞ்சுக்க அரண்மனைய விட்டூட்டு வந்துடரர். இதெல்லாம் ஏன்னு கண்டுபிடிக்க ஆசை. துறவரமெல்லாம் எடுத்துக்கலை. அப்படி காட்டில் அலையரச்சே இசைக் கலைஞன், ஆட்டிடயன்னு பலரையும் எதிர்கொண்டு பல விஷயங்களை தெரிஞ்சுக்கரர். 30 வருஷத்தை அரண்மனை போகத்தில் கழிச்சுட்டமே, இன்னும் வாழ்க்கையின் உண்மை புரியலையே, அதைத் தெரிஞ்சுக்கரத்துக்குள் போயிடுவமோன்னும் கவலை. 5 வருஷம் அல்லாடிட்டு கயா வந்து சேரரர்”.

கேட்ட கேள்விக்கு கிட்டே வந்தாச்சுன்னு நிமுந்து உக்காந்துக்கரேன்.

“கயாவில் போதி மரத்தடீலே உக்காந்துண்டு இங்கேயே இருப்பம், எல்லாம் விளங்கர வரைக்கும்னு. அப்பத்தான் அவருக்கு ஞானம் பிறந்தது. அதைத்தான் என்லைட்டென்மென்ட் அப்படீன்னு சொல்லுவம்.” அடச்சே! “அதுதான் இது”ன்னு வாழைப்பழ ஜோக் மாதிரின்னா முடிக்கரர்? என் சங்கடத்தை அறிஞ்சிண்ட குருபிரஸாத் “கவனமா கேட்டுக்கோங்கோ.” இன்னும் சொல்ரர்.

“புத்தருக்கு கிடெச்ச ஞானம் 'எது உண்மையில் அதுவாக உள்ளதோ அந்த நிலையை உணர்ந்து கொண்டார்’னு எடுத்துக்கணும். அதாவது பிறப்பு, இறப்பு, இரண்டுக்கும் இடையில் எல்லாமும் அதுவே, அதுதான் உண்மை அதை அப்படியே ஏத்துக்கணும். இதுலேந்து விடுபடணும்னா பிறப்பெடுக்காம இருக்கணும். அதுக்கென்ன வழியோ அதை தேடணும்னு தெளிவு வந்ததை ஞானம் கிடெச்சதுன்னு சொல்ரம்.” புரிஞ்சது, ஆனா புரியலை. குருப்ரஸாதும் என்ன விடலை.

“ஞானம் கிடெப்பதுன்னா ஒண்ணு. அதை வச்சு அடுத்து என்ன செய்யரம் என்பதுவே முக்கியம். செய்யரதை வச்சு என்ன ஞானம் கிட்டித்துன்னு புரிஞ்சுக்கலாம். அரண்மனையையும் சுகபோக வாழ்க்கையயும் விட்டூட்டு வந்ததுமே சித்தார்த்தர் ஆசையயும் அகந்தையயும் வெற்றி கண்டாச்சு. அதனால் அதுவே நம்மை நல்வழிப்படுத்தும் எங்கிர உணர்வு போதிமரத்தடீலே கிடெச்சதுன்னு வச்சுக்கணும். புத்தர் என்றாலே மெய்ஞானம் கிட்டியவர், உண்மைய அறிந்தவர்னு. பிறப்பு, முதிர்ச்சி, துறவு, தேடல், விழிப்புணர்வு மற்றும் விடுதலை, இறப்பு என்பதை நாம் தெரிஞ்சு வச்சிண்டிருந்தாலும் இதெல்லாம் எதுக்கு, இதுலேந்து மீளுவதுலேயே நமது சிந்தனை போணம்னு தோண்றியதை என்லைட்டென்மென்ட்னு சொல்லலாம்.”

“புத்த மதம்னு எப்படி வந்தது?” “கயாவில் இப்படி ஆனதும் கிட்டத்தட்ட 45 வருஷங்களுக்கு அவர் பின்னாடி நிறைய சீடர்கள் சேர்ந்துக்கரா. இந்த வாழ்க்கையிலும், அதுக்கு அப்பரமும் சந்தோஷம் கிடைக்க நாம எப்படி வாழ்க்கைய அமைச்சுக்கணும்னு பல விஷயங்களை கோர்வையா புத்தர் சொல்லியிருக்கார். அதுதான் புத்த மதத்தின் மிக முக்கியமான விஷயம். அதெல்லாம் பெச நிறைய நேரம் பிடிக்கும். ஒண்ணு மட்டும் சொல்ரேன். எல்லா உயிரினங்களிடனும் அன்பா இருன்னு சொல்ரர். அதை பிடிச்சிண்டாலே போதும்.” எழுந்துக்கரர். குருப்ரஸாதுக்கு நன்றி சொல்லிட்டு கிளம்பரேன். “ஆட்ரெஸ் தந்து ஆத்துக்கு வாங்கோ. நிறைய பேசலாம். என் மனைவி இட்லி ஜோரா சாஃப்டா பண்ணுவள். சாப்டுண்டே பெசலாம்” 

ட்ரெயினில் யோசிச்சிண்டே வரேன். விஷயத்தை புரிஞ்சுக்காம புஸ்த்தகம் போட்டவா, ஸ்கூல் டீச்சர் வெளீநாடு போரவா எல்லாரையும் கரிச்சுக் கொட்டிட்டேனே! இத்தனை வயசுக்கப்புரமும் எல்லார்கிட்டேயும் அன்பு பாராட்டணும்னு தெரிஞ்சுக்கலையே? 

யோசிச்சுண்டே ரயிலில் வந்து இறங்கினவன், மேம்பாலம் ஏறி இந்தண்டை GST ரோட்டில் வந்துட்டேன். இப்ப இதெல்லாத்தையும் பேரனுக்கு எப்படி புரிய வைக்க? ஒண்ணு நன்னா விளங்கித்து. பேரனுக்கு எதாவது சொல்லித் தரணும்னா அதை நாம மொதல்ல நன்னா படிச்சு புரிஞ்சிண்டப்பரம்தான் செய்யணும்னு. எல்லா உயிர்களிடத்தும் அன்பா இருந்தா அதுவே ஒரு தவம். இதைப் புரிஞ்சிண்டதே ஒருவகை ஞானம்தான். ‘அட’ன்னு பட்டது. 

அண்ணாந்து பாக்கரேன். எனக்கு மேல் அரச மரம்.

No comments:

Post a Comment