78. கடன் (சிசீ7) #ganeshamarkalam
அந்த டீக்கடை சரியான இடத்தில் அமைஞ்சு போச்சு. கணேசன் நல்ல இடமா பார்த்து போட்ருக்கான். சமயத்தில் செம கூட்டம். இல்லைன்னா ஆளில்லாத கடையில் டீ ஆத்தரான்னு பழமொழி சொல்லி கேலிக்கு ஆளாகியிருப்பான்.
எத்தனை பேர் வந்து டீ குடிச்சா நமக்கென்ன? நம்ப கதைக்கு 4 பேர் போதும். கணெசன். அதான் டீக்கடை ஓனர். அவன் கடைக்கு 5 வருஷமா வாடிக்கையா 1 வாட்டியாவது தினம் வரும் சுடலையும் பீதாவும். 4ஆவது யார்? அவர் அப்பரமா என்ட்ரி கொடுப்பர். அதுக்கு முன்னாடி கடைக்கு ரிஷிமூலம் சொல்லிடணும்.
ஆரம்பிச்சு 11 வருஷமா நடந்திண்டிருக்கான் நம்ப கணேசன். மன்னார்குடி ராஜகோபாலஸ்வாமி கோவில் தெரியுமா? போயிருக்கேளா? எப்படிப் போனேள்? காரில் போய் கோபுரத்துக்கு கிட்டக்க இறங்கி நேர செருப்பு விடர இடத்துக்கோ தேங்காய் பழம் வாங்கரத்துக்கோ போர ஆள்னா கடைய கவனிச்சிருக்க மாட்டீங்க. கும்மோணத்துலேந்து நீடாமங்கலம் வழியா பேரூந்தில் வரணும். மன்னார்குடி தெப்பக் குளத்தை சுத்தி வந்து கோவில் ஸ்டாப்புன்னு சொல்லி இறங்கிக்கணும். அந்த இடத்தில், பஸ் பேரூந்து நிலயத்துக்குன்னு திரும்பரத்துக்கு முன்னாடி டீக்கடை. இறங்கினதும் கணேசனைப் பாக்கலாம். “ஒரு டீக்குடிச்சுட்டு போங்க!” கூப்பிடுவான். கனிவான முகம். டீ நல்லாவே இருக்கும்.
4 வகை டீ. சாதாரண, அஸ்ஸாம் லீஃப் போட்டது. இஞ்சி ஏலக்காய் தட்டிப்போட்டு தருவது. பாலில்லாம சக்கரைப் போடாம கருப்பட்டி டீ. அப்பரம் ரெம்ப பழசாப்போயிட்ட பலதடவை காய்ச்சி ‘இனிமேல் முடியலை, என்னை விட்டுடூ’ன்னு கதறி அழும் இலையில் டிகாக்ஷண் போட்டுத் தருவது. ஆளுக்குத் தோதா அவனுக்கே என்ன தரலாம்னு தெரியும். பக்கத்தில் கன்ஸ்ட்ரக்ஷண் நடக்கரப்போ டீ குடிக்கன்னு வரவங்க ஒரு டீ 4ரூபாய்க்கு கொடுக்க முடியுமான்னு கேட்டுட்டு தினம் 65 டீ கார்த்தாலே 60 சாயங்காலம்னு கானட்ரேக்ட் போட்டப்போ ஏழை பாளைங்க மாதிரி வரவங்களுக்கு சூடா எதுவா இருந்தா என்னன்னு நாலாவது வகை. இஞ்சீ ஏலக்காய் வேண்டப்பட்டவங்களுக்கு. நண்பர்களுக்கு, வாகனத்தில் வரவங்களுக்கு.
கடையில் இன்ன பிற விஷயங்களும் கிடைக்கும். எல்லாத்தையும் விவரிச்சிண்டிருந்தா கதை நீளும். படத்தை பாத்துத் தெரிஞ்சுக்கத் தெரியணும்.
சுடலை கூப்பிடர பேர். நிஜப் பெயர் சுடலைமாடன். நல்லவன். விவசாயி. திருவிழாவுக்கு மட்டும் சட்டை போடுவான். மத்த நேரம் வேஷ்டி வெத்துடம்பில் மேல்துண்டு. பலதடவை பிஞ்சுபோய் திரும்பத் திரும்ப தெய்ச்ச செருப்பு இல்லாம வெளீய கிளம்பரதில்லை. விவசாயம்னா நிலபுலன் வச்சிட்டு பெரீய ஆள் இல்லை. சொந்தமா சின்னதா காய்கறித் தோட்டம். வெள்ளரி பயிரிட்டு சம்பாதிப்பான். குத்தகைக்கும் நிலம் பாத்துக்கிடுவான். ஊர் மழவராயநல்லூர். இங்கேந்து 8 கிமீ. மன்னார்குடி சந்தைக்கு வருவான். விளைஞ்சதை போட்டு காசு வாங்கிட்டு டீக்கடையில் பொழுதை போக்கிட்டு.
பீதான்னு கூப்பிடுவது கணேசனும் சுடலையும்தான். முழுப்பெயர் பீதாம்பரம். பேர வச்சு பணக்காரனா? பரம ஏழை. கூலிவேலை. மன்னார்குடியில் என்ன கிடைக்கும். மாசத்தில் 4நா ஜோலி கிடெச்சா பெரீய விஷயம். நீடாமங்கலம் ரயில்வே மேம்பால ப்ராஜெக்ட் மட்டும் 9 வருஷமா நடந்திட்டிருக்கு. ஆரம்பிக்கும் அப்பரம் நின்னிடும். இவன் அதையும் இதையும் செஞ்சு காசு வாங்கிப்பான். தினக்கூலி 300ரூ. இப்ப பஸ் ஸ்டாண்ட் விரிவாக்கம், சில பழைய வீடுகளை இடிச்சு தள்ளி அப்பார்ட்மென்ட் நடக்கரதுனாலே மாசத்துக்கு அதே அஞ்சாறு ஜோலி கிட்டும். எங்கே போனாலும் வந்தாலும் இந்த வழியாத்தான். டீக்கடையில் உக்காந்துகிடுவான். அப்படித்தான் இவிங்க ஃப்ரெண்ட்ஸ் ஆனாய்ங்க.
ஒரு ஒத்துமை. ரெண்டு பேருமே கணேசன் டீக்கடையில் கடனுக்கு டீக் குடிக்கரவங்க. அப்பாடா, இவன் கதையோட தீம்குள்ள வந்துட்டான்னு தோணியிருக்கும்!
டீக்கடையில் அப்பப்போ குடிச்சதுக்கு காசு கொடுத்துட்டு போரவங்க பாதிப்பேர்னா சொச்சப்பேர் எழுதி வச்சுட்டுப் போரவங்கதான். அதான் டீக்கடையோட எகனாமிக் மாடல். கடனுக்கு கொடுக்க மாட்டேன்னு சொல்லிப் பாக்கட்டும் 50% மார்கட் சரிஞ்சுடும். அந்த மனுஷாதான் ரெகுலரா வரவங்க. கடனில்லைன்னா ரிப்பீட் பிஸினெஸ் இல்லை. காசு தரவன் இன்னைக்கு இங்கே வாங்கிப்பான், நாளைக்கு வேற கடையில் குடிச்சுப்பான். கூவாலிடி நல்லா இல்லைன்னா போயிடுவான். கடனுக்கு குடிக்கரவந்தான் தரம் இல்லைன்னாலும் பொறுத்துண்டு திரும்ப. குடிச்சுட்டு ஜம்பமா “எழுதிக்க” கண்ணால் ஜாடை காட்டிட்டு போயிடலாம். அப்பப்போ கடனில் பாதிக்காவது காசு தந்து உறவை புதுப்பிச்சுக்குவாய்ங்க.
ரெண்டு மூணு கடையில் கடன் வச்சிண்டு சுத்தரவங்களையும் பாக்கலாம். ஒரு கடையில் கொடுக்க வேண்டிய பாக்கி மலைபோல் ஏறிட்டாலும் வந்துண்டு போயிண்டு, சிலசமயம் பென்சில் உக்காந்து இன்னைக்கு டீ வேண்டாம்னு பேப்பர் மட்டும் புரட்டீட்டு - கணேசனே பரிதாபப்பட்டு “பரவாயில்லை குடீங்க”ன்னு அந்த நாலாந்தர டீத்தூளப் போட்டு அரை கிளாஸ் தந்தா சப்பி சப்பி குடிக்கலாம். பீதா அந்த ஸ்டேஜில் இல்லை. சுடலையும் சரி, பீதாவும் சரி, மாசம் எப்படியும் ஒரு வாட்டியாவது “பாக்கி எவ்ளோ?” கேட்டு முடிஞ்சதை தந்துடுவது வழக்கம். ரிலேஷன்ஷிப் ஸ்மூத்தா போயிட்டிருக்கு. காசு கொடுக்கும் அன்னைக்கு கணேசன் டீயோட ஒரு உளுத்தம் வடையும் பேப்பரில் வச்சு கொடுப்பான். அதை இனாமா எடுத்துப்பதா இல்லை அதையும் கணக்கில் எழுதுவானா? ஆனா வாங்கிக்க கை நீண்டுடும். ஒருநா பீதா கேட்டுட்டான். சுடலையும் இருக்கப்போ.
“கணக்கு எளுதி வச்சு எவ்ளோன்னதும் கரிக்கெட்டா சொல்லுதியே, எங்கே காமி?” அவனும் நோட்டு புஸ்தகத்தை எடுத்து தர ரெண்டு பெரும் பாக்க, தெளிவா டீக்கணக்கு தேதி போட்டு. ஒரு டீக்கு 7ரூ. எங்கேயும் வடை எழுதலை. அப்ப வடை இனாமா? இல்லை ஒரு வடை 10 ரூவா. அதை இவிங்க வராத ரெண்டு தேதியில் 2 டீயா காமிச்சிருப்பான். இவிங்க தரவேண்டிய பாக்கி எப்பவும் ஆளுக்கு 200ரூ நிலுவையில் ஓடிட்டிருக்கும். அதுக்கு வட்டி என்னாச்சு? அதான். “கடன் அன்பை முறிக்கும்” எழுதி போர்ட் வைக்கலாம். இப்பெல்லாம் அப்படி முடிவதில்லை.
அன்னைக்கு காலங்கார்த்தால சுடலையும் பீதாவும் கடையில் ஆஜர். 1 லோடு வெள்ளரி சந்தையில் கொடுத்து காசு வாங்கிட்ட சுடலை அந்த க்ஷனத்தில் பெரீய பணக்காரன். பீதாவுக்கு இன்னீலேந்து 15நா தொடர்ந்து வேலையாம். பேரூந்து நிலைய விரிவாக்கம் எலெக்ஷணுக்கு மின்னாடி முடிச்சிடணும்னு எடப்பாடி மும்முரமா ஆரம்பிச்சாச்சு. மாசக் கடைசீல பீதா கையிலும் பணம் புரளும். சுடலைக்கு ரெம்பவே குதூகலமா இருக்கவே வந்ததும் 2 பெருக்கும் ஸ்பெஷல் டீ சொல்லிட்டு ரெவ்வெண்டு பன்னும் ஆர்டெர் செஞ்சான். “என்ன சுடலை எனக்கும் சேர்த்தா?” பீதாவுக்கு ஆச்சர்யம். “ஆமாம், இன்னைக்கு சொன்ன விலைக்கு வெள்ளரி விக்க முடிஞ்சது”.
கணேசனைப் பாத்து “எங்க ரெண்டு பெர் கணக்கிலும் எத்தனை பாகி சொல்லு?” “நீ 285 தரணும் பீதா 345. ஏன் எதுக்கு கேக்குதே?” “இந்தா!” 500ரூ தாள எடுத்து நீட்ட கணெசனுக்கு வாயெல்லாம் பல். பீதாவுக்குத்தான் முகம் தொய்ந்து போச்சு. “என்னை கடனாளியாக்கிட்டயே சுடலை”. கணெசன் கேக்கரான் “இதுவரைக்கும் எப்படி இருந்தியாம்?” “டீக்கடையில் வச்ச கடன் சுமையாத் தெரியலை, இப்ப நம்ப சுடலைக்கு கடன் பட்டிருப்பது மனசு கனக்குது. எப்ப அடைக்க முடியும்னு தெரியலை? “அதான் மாசக் கடைசீல கூலி கிடெச்சிடுமே!”
அப்பத்தான் தாடிவச்சுகிட்டு – கதைக்கு 4ஆவது கேரக்டர் - வராரு. பாத்தா சாமியார். கம்பு ஊணிட்டு. காலில் செருப்பில்லை. காவி வேஷ்டீ. வந்தவர் நேர நின்னு கோவில் கோபுரத்தைப் பாத்து கன்னத்தில் போட்டுக்கராரு. மணி 7:30. ஊரில் நடமாட்டம் கம்மி. டீக்கடைப் பக்கமா திரும்பிப் பாத்தவர் யோசிச்சுட்டே கணெசனை நோக்கி வரவே மூணுபேரும் அவரைப் பாக்க, “பக்கத்தில் தங்க சத்திரம் ஏதாவது இருக்கா? ரெஸ்ட் எடுத்துட்டு குளிச்சிட்டு உடை மாத்திகிட்டு ராஜகோபால ஸ்வாமிய தரிசிக்கப் போணம்”. கணேசன் சுடலைய கேக்கரான். “ஏதாவது தெரியுமா?” இவன் இல்லைன்னு தலைய ஆட்ட பீதா, “இப்படியே போனீங்கன்னா சோத்துக்கைப் பக்கம் தேற்குத்தெரு வரும். அதில் மூணாவது வீடு ஒரு ஐயர். கனபாடிகள்னு சொல்லுவாங்க. ஜாதகம் பாப்பாரு. உங்களைப்போல் வந்தா தங்கிக்க இடம் கொடுப்பாங்க. பெரீய திண்ணை வச்ச வீடு. அங்கே போய்க்குங்க”.
வந்தவர் கிளம்ப மின்னாடி கணேசன், “ஊருக்கு புதுசா?” “ஆமாம். கோவில் கோவிலா சுத்திட்டிருக்கேன்”. “ஏலக்கா போட்டு டீ கொடுக்கரேன் குடிச்சுட்டு போங்க. மன்னார்குடீ வந்திட்டு என் கடை டீ குடிக்கலைன்னா?” “காசில்லையே!” “பரவாயில்லை. மெதுவாத் தாங்க”. “கடன் வைக்கும் பழக்கமில்லையே!” “அப்ப சும்மா குடிச்சுக்கங்க. மன்னார்குடீக்கு வந்திட்டு காசு இல்லாத ஒரே காரணத்துக்காக டீ சாப்டாம யாரும் போகக் கூடாது”. “ஆமாம்”. கணெசன் சொன்னதுக்கு இசப்பாட்டு இவிங்க 2 பேரும். “சரி கொடுங்க”.
என்ன இந்த சாமியார் கடனுக்கு சாப்ட இவ்ளோ அலுத்துக்கராரு, நாம கடனில்தான் வாள்ந்திட்டிருக்கம். சொன்னா நம்பளப் பத்தி என்ன நினைப்பார்? தெய்வ சிந்தனை உள்ள பல விஷயங்கள் தெரிஞ்ச ஆசாமி, அவர் நம்ப கூட டீ குடிச்சா நமக்குத்தான் பெருமைன்னு இவிங்களும் எதிர்பாராம 500ரூ வரவு அதில் 7ரூ தானம் செஞ்சதா வச்சுக்கலாம்னு கணெசனும் நினைக்க, “நிக்கரீங்களே உக்காருங்க!” பென்சில் பீதா நகந்து இடம் தரான்.
“சாமி! உங்க பேரென்ன? எந்தூர்லேந்து வரீங்க?” “என் பெயர் சிரபாத்திரி. காஞ்சீபுரம். நடந்தே போயிட்டிருக்கேன். வீடுன்னு கிடையாது ஏகாந்தி. கோவில் பிரஸாதம் மட்டும் ஆகாரம். ஒண்ணும் கிடைக்கலைன்னா பிக்ஷை. இந்தூரில் 4நா. இந்த டீயையும் பிக்ஷையா ஏத்துகிட்டேன். கடனா இல்லை. நீங்கெல்லாம் என்ன செய்யரீங்க?” பீதா எல்லார் சார்பிலும் சொல்ல தலையாட்டி கேட்டுக்கரர் சிரபாத்திரி.
சுடலை நின்னுகிட்டே “கடன் வாங்கரது கொடுப்பது நடந்துட்டுதானே இருக்கு. அரசாங்கமே கடன் வாங்குது, பேங்கெல்லாம் கடன் வாங்க ஊக்குவிக்கராங்க, நாங்க எப்பவும் இந்த டீக்கடையில் 250ரூவாவது கடன் இல்லாம இருக்காது. கடை வச்சிருக்கும் கணேசனும் மாமனார்கிட்டே 8000 வாங்கித்தான் கடையே போட்டான், பணம் புரண்டுகிட்டே இருந்தாத்தான் அதுக்கு மதிப்பு, தப்பில்லையே!” “தப்பா ரைட்டான்னெல்லாம் சொல்ல விரும்பலை. நான் ஏற்கனவே பட்ட கடனை எப்படியாவது உயிர் போரத்துக்குள்ள அடைச்சுடணும்னு அலைஞ்சிட்டிருக்கேன்”. அட, இந்தாளும் யார் கிட்டேயோ செமத்தியா கடன் வாங்கிட்டு ஊர விட்டு ஓடி வந்துட்டரோ? “என்ன கடன் சாமி, எவ்ளவு? கட்ட முடியலையா? சொல்லலாம்னா சொல்லுங்க”.
“நான் பட்ட கடன் நீங்களும்தான் பட்டிருக்கீங்க. சொல்ரேன்”.
“மொதக் கடன் நம்மை பெற்றவர்களிடம் நாம் பட்டிருக்கும் பெத்த கடன். அவங்க இல்லைன்னா நாம இல்லை. நாம உயிரோட ஆரோக்யமா நடமாடுவதுக்கு அவுங்களே காரணம். அந்த கடனை எப்படியாவது அடைக்கணும். ரெண்டாவது இந்த பூமாதேவி கிட்ட தினம் தினம் பெற்றுக் கொள்ளூம் கடன். நாம நிக்க, நடக்க, படுத்துக்க இடம் தந்து இத்தனை இயற்கை வளங்களை என்னை உழுது விளைவித்து அனுபவிச்சுக்கோன்னு தந்து தன்னை சுத்தி அத்தனை தாவரங்களையும் அழகான உயிரினங்களையும் நமக்கு துணையா வளரவிட்டு நாம சுவாசிக்கும் வாயுவ தடையில்லம தந்து, ஒருநா நாம இறந்து போறப்போ நம்பளை ஆசையா உள்ளே வாங்கி அணைச்சு வச்சுக்கும் பூமாதேவிக்கு நாம் பட்ட கடன்”. கணேசன், சுடலைமாடன், பீதாம்பரம் கண்கள் மூடாம சாமியார் சொல்வதை கேட்டுகிட்டு.
“அப்பா அம்மாவ நம்மில் யாரு கடைசீ வரைக்கும் ஆசையா வச்சு காப்பாத்தரம்? ஒரு வயசுக்கப்பரம் அவர்களும் குழந்தைகள்னும் அந்த பருவத்தில் அவர்களை நாம வளர்க்க கிடைச்ச பாக்கியமா எடுத்துக்காம எப்படி சுயநலவாதிகளா மாறிடரம்? பூமி நாம செழிக்க தன் சுழற்சியால் கொண்டுவரும் சுத்தமான மழைநீரை சேகரிக்க விடாம பண்ணிட்டு பதிலுக்கு நகர் மயமாக்கரம்னு கழிவு நீரை பூமிக்குள் ஆழமா தோண்டி ஓடவிடரம். கடனை அடைக்கலைன்னாலும் நமக்கு கடன் தந்தவங்களை இழிவு படுத்தாமவாவது இருக்கணும். கொடுத்தவங்க திருப்பிக் கேக்கலைன்னா பட்ட கடன் இல்லாமப் போகுமா என்ன?”
இவர் சொல்வது அப்படியே சொரேர்னு மண்டையில் ஏறித்து. ஒருத்தன் விளைச்சலை காசு பண்ணும்போது அது தந்த பூமிய நினைச்சுக் கூட பாக்கல. இவன் சிமென்டும் மண்ணும் கலந்து என்னன்னமோ உசரமா கட்டி பூமிக்கு பாரமா பண்ணிட்டு. கட்டும்போது நிலத்தடி நீரை கணக்கு வழக்கு இல்லாம உறிஞ்செடுத்து. “சாமி இந்த ரெண்டு கடனையும் எப்படி அடைக்க?” “சுலபம்தான் ஆனா அத்த செய்ய மாட்டம். ஆரம்பிப்பம். விட்ருவம். சொல்ரேன் கேட்டுக்குங்க!” கணெசன் அடுப்பை அணைச்சிட்டு வெளீய வந்து நின்னுக்கிடுதான்.
“பெத்தவங்களை கடைசீ வரைக்கும் பாத்துக்கிடணும். அவுங்க செத்தப்பரம் பசு பக்ஷீங்களுக்கு அவுங்க நினைவு நாட்களில் உணவு கொடுக்கணும். பூமிக்கு பட்ட கடனுக்கு பிராயச்சித்தமா நாம எத்தனை வருஷம் வாழுகிரோமோ அந்த ஒவ்வொரு வருஷத்துக்கும் ஒரு பெரீய மரமா வளரக்கூடிய விதைய நட்டு வச்சு பரிபாலிக்கணும். இதெல்லாம் தெரிஞ்சும் என்னால முடியலை. அதான் ஊரூரா சுத்திட்டிருக்கேன். வரேன்”.
டீ டம்பளை வச்சிட்டு எழுந்து நடந்து போராரு அந்த சிரபாத்திரி என்ற சித்தர்.
No comments:
Post a Comment