புது தில்லி - சுஜாதா
[“கணையாழியின் கடைசிப் பக்கங்கள்” ஜூலை 1973].
பல தினங்களுக்குப் பின் மறுபடி டில்லிக்கு வருகிறேன். விமானத்தில் உச்சந்தலையில் சொட்டையுடன் நான்கு மாதம் கர்ப்பமாக இருக்கும் கனவான்கள் அவர்கள் மனைவி போல் இருக்கும் ஹோஸ்டஸை ஏமாற்றி கை நிறைய பிஸ்கட் அள்ளிக் கொள்கிறார்கள், ‘லாக்-அவுட்’ காரணமாக விமானம் சமயத்தில் புறப்பட்டு சமயத்தில் சேர்கிறது.
பாலம் விமான நிலையம் காலியாக இருக்கிறது. நிலையத்தை விட்டு வெளியே வரும்போது டில்லி போலீஸ் என் பெயர் கேட்கிறது.
டாக்சிக்காரன் ’ஜனாப் ஜனாப்’ என்று என்னை மரியாதை செய்கிறான் [பிற்பாடு இருபது ரூபாய் கேட்கப் போகிறான்.]
உட்லண்ட்ஸ் ஹோட்டலில் மாலி புல்லாங்குழல் ஊத, இடியாப்பத்தை அரங்கேற்றி ரூ. 4-50 சார்ஜ் பண்ணுகிறார்கள்.
செய்தித்தாளில் ஐந்து லட்சம் கொள்ளையடித்த இளைஞர்களைக் கைது செய்த போலீஸ்காரர்கள் மாலை அணிந்து சிரிக்கிறார்கள். ஒரு மனைவியைப் பதினைந்து தடவை கொன்ற டாக்டர் ஜெயின் புன்முறுவல் செய்கிறான்.
குளிர்....ஜன்பத்....
தங்கப் பல் வெள்ளைக்காரர்கள் அலங்கரிக்கப்பட்ட குப்பைகளை வாங்குகிறார்கள்.
ஹிப்பிகள் கணேஷ் பீடி குடித்துக் கொண்டு ஒரு கையில் சத்ய சாய்பாபாவின் வாழ்க்கை வரலாறு மறு கையில் கட்வாலிப் பாவாடை அணிந்த வெண் பெண்ணுடன் அலைகிறார்கள்.
‘பாபி’ பார்த்துவிட்டதில் ஜென்ம சாபல்யம் அடைந்து விட்ட பஞ்சாபி இளைஞர்கள் வாயில் விரல்விட்டு சப்பிக்கொண்டே நடக்கிறார்கள்.
நகரெங்கும் சிவப்பு அம்பர் பச்சை, ஜன்சங்கத்தின் நீரூற்றுகள் சுவரொட்டிகளில் சென்ற மாத ஹீரோ காம்ரேட் ப்ரெஷ்னெவ் புன்னகைக்க முற்படுகிறார்.
அரசாங்கக் கட்டிடங்களில் உட்காரும் நாற்காலிகள் கூட ‘ஆப் கி மர்ஜி ஹை ஸாப்’ என்று லஞ்சம் கேட்கிறது. பைல்களைப் பிரித்துப் பார்த்தால் இளைஞர்கள் ஹௌஸ் ரெண்ட் அலவன்ஸ் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
காண்டீனில் சிவசுப்பிரமண்யமும் கன்னாவும் மசால் தோசையின் மகத்துவம் பற்றி அளவளாவுகிறார்கள்.
சோப்ராக்களும் ஆபீஸ் நேரத்தில் டேபிள் டென்னிஸ் ஆடிக்கொண்டிருக்கிறார்கள். வெளியே கடலைக்கொட்டை உரித்துத் தின்று கொண்டிருக்கிறார்கள் அல்லது ”சாண்டே கா தேலின்” மகத்துவம் பற்றியோ கிருஷ்ண பகவானின் சீர்வரிசைகள் பற்றியோ வெளியே கூட்டங்களில் கேட்கிறார்கள்.
சிவப்பு விளக்குக்கு டாக்ஸி தயங்கி நின்றபோது விதவிதமான கார்களும் ஆட்டோக்களும் சூழ்ந்த அந்த வினோத வரிசையின் ஊடே பதறிப் பதறி ஒரு தமிழ்ப்பெண் வருகிறாள்.
ஒரு கையில் குழந்தை மற்றொரு கையில்.... “ஈவ்னிங் நியூஸ் வாங்குங்கள் வாங்குங்கள்…” என்று ஒவ்வொரு காராக நின்று கெஞ்சிக் கெஞ்சி….
தில்லி மாறவில்லை…..
No comments:
Post a Comment