71. ரூம் # 21 (பார்ட் 1 of 2) (சிசீ7) #ganeshamarkalam
கன்யாகுமரி எதுக்கு ஃபேம்ஸ்? கேட்டா எல்லாரும் விவேகானந்தா ராக், வள்ளுவர் சிலை அப்படீம்பா. கன்யாகுமரிக்கு இருக்கும் கோவில சொல்ல மாட்டா. அப்படி ஆய்ப்போச்சு. இங்கே சூர்யோதயம் அஸ்த்தமன அழகும் பிரஸித்தி. மறந்துட்டம்.
ட்யூரிஸ்ட் வந்தா விடிகாலை எழுந்து இன்னைக்கு மேகமூட்டமா இருக்கப் பிடாதுன்னு வேண்டிண்டு எங்கே நின்னுண்டா சமுத்திரத்துக்கு அடீலேந்து பிழம்பா எழும்பி வரும் அந்த ஜோதியப் பாக்கலாம்னு ஏங்குவா. கிழக்கில் சின்னதா ஒரு மேகம். சூ சூன்னு அதை கண்ணாலயே விரட்டிட்டு ஜகத்ஜாலம் செஞ்சிண்டு சூரியோதயம் ஆரச்சே ஆண்டவன் கொடுத்த ரெண்டு கண்ணும் பத்தாமப் போகும். சாயங்காலம் நாள்பூரா தகிச்ச அதே சூரியன் கொயட்டா கலர்கலரா வர்ணஜாலம் காமிச்சுட்டு அதே சமுத்திரத்தில் அமுங்கப்போ இன்னொண்ணும் சொல்லும். இன்னைக்கு இப்படி. நாளைக்கு சுத்தமா வேற மாதிரி வருவேன், மிஸ் செஞ்சுடாதேன்னு.
கார்த்தாலே போன். நாகர்கோவில்லேந்து ஜீப்பில் போயிண்டிருக்கேன். DHOலேந்து 20 கிமீ. குறுகலான ரோட். ட்ரேஃபிக் ஜாஸ்த்தி. போய்ச் சேர 30 நிமிஷம் ஆலாம். லோகல் ஸ்டேஷணில் சொல்லி ஸ்பாட்டில் ஆள் இருக்கணும், DSP ராகவன் வந்திண்டிருக்கார்னு தகவல் போயிருக்கும். ஒண்ணூத்துக்கும் லாயக்கில்லாத ஆளுங்க. சல்யூட் விரைப்பா அடிப்பானுவ. துப்புத் துலக்கரதுன்னா கால்கிலோ என்னம்பா. அதுக்குத்தான் நானே போயாரது. கன்யாகுமரீல ஃபேமஸ் ரிஸார்ட்டில் காலங்கார்த்தாலே டெட் பாடி. ஸ்யூசைட்ன்னு தகவல். பல வெளிநாட்டுக் காரா ட்யூரிஸ்ட்டுகள், இன்ன பிற பெரும்புள்ளிகள் தங்கர இடம். நம்மூர் அரசியல்வாதிக்கு சொந்தமான ரிசார்ட். பினாமிதான். எங்களுக்கு மூலப்பத்திரம் வரைக்கும் தெரியும்.
இந்த டிஸ்ட்ரிக்டில் போஸ்டிங்க் கிடெச்சு இங்கே வந்து 4 மாசம்தான். இப்பத்தான் குமரிமுனை போயாரது. காலேஜ் படிக்கப்போ போன ஞாபகம். இங்கெல்லாம் மின்னே ஸ்டேட் கவர்ன்மென்ட் கெஸ்ட் ஹவுஸா இருந்தது. எங்கேன்னா, காந்தி மண்டபத்லேந்து கடலோரமா பீச் ரோடுன்னு போகும். அதுக்கந்தண்ட 30 அடி பள்ளம் கீழே ஆர்ப்பரிக்கும் கடல். இந்தண்டை கோவளம் ரோடு. ரெண்டுக்கும் நடூல லேண்ட் அல்லாட் ஆகி ஒவ்வொரு ஸ்டேடுக்கும் தந்து அவாள சுற்றுலா விடுதிகள் கட்டிக்கச் சொல்லி. வந்து தங்கினவா என்னவோ செல்வாக்கு உள்ள அந்தந்த ஸ்டேட் அதிகாரிகளும் அவா குடும்பங்களும்தான். வரும்படி இல்லாம மெயின்டேயின் பண்ண முடியாம சிலதை தனியாருக்கு லீஸ் விட்டு இப்ப காசு பாத்தாரது. நாளோண்ணுக்கு 5800ரூ + GSTயாம்.
எதுத்தாப்போல் சன்செட் பாயின்ட் கட்டி வச்சிருக்கா. ஜிலுஜிலுன்னு போய் நின்னுக்கலாம். சன்செட் மட்டுமான்னா இல்லை, சன்ரைஸும்தான், சில மாதங்கள் வள்ளுவர் மறைப்பர். தூங்கி எழுந்துக்க நேரமாகிடுத்துன்னா ரூம்லேந்தே சூரியோதயம் பாக்கலாம். பைசா வசூல். ராத்திரி பூரா எதுத்தாப்போல் மணலில் படுத்துண்டு பீர் குடிச்சிண்டு கொண்டாட்டம் பொடலாம். எல்லாம் ப்ரைவேட் பீச். இதுக்கெல்லாம் அனுமதி இருக்கு.
சிலது தெரியும், சொச்சத்தை ட்ரைவர் கதிரேசன் சொல்லிண்டே வரான். இந்தூர்காரன்தான். அவனுக்கு எங்கே போரம், என்ன விபரீதம் தெரியும். பூச்தாச் முடிஞ்சு கிளம்ப மத்தியானம் ஆகிடும்.
ரிஸார்ட் மேனேஜரும் இன்னும் சிலரும் வாசல்ல லோக்கல் போலீஸோட காத்திண்டு. ட்ரேஃபிக்ல அப்பப்போ சிக்கிரம் போணம்னு சைரன், ஊருக்குள் வந்ததும் அநாவசியத்துக்கு அடென்ஷண் ஈர்க்க வேண்டாமேன்னு அணைக்கச் சொல்லி கொயட்டா வந்து மிடுக்கா இறங்கரேன். மஃப்டீலதான். காலில் ஷூ காட்டிக் கொடுத்துடும். வயசு 50 ஆச்சு ஆனா தேகம் காட்டித் தராது. காதோர நரை மட்டும். கருப்புக் கண்ணாடிய கழட்டி சினிமாவுலே வச்சுப்பாளே அப்படி சட்டை பொத்தான் மேலே தவழ விட்டூண்டு. லோக்கல் இன்ஸ் வந்து விரைப்பா சல்யூட். “ஸ்பாட்டுக்கு போவம்”.
ரூம் 21. கார்த்தாலே 6 மணிக்கு மார்னிங்க் காபிக்கு டெய்லி இன்ஸ்ட்ரக்ஷண் இருந்ததால் கொண்டு போனவன் கதவு தொறந்திருக்கவே ரெண்டு தட்டு சம்பிரதாயத்துக்கு தட்டீட்டு உள்ளே போயிருக்கான். அங்கே அலங்கோலமா இந்த பெண் படுக்கையில். 30க்குள் வயசிருக்கும். மூச்சுப் பேச்சில்லை. நிச்சயமா தூக்கத்தில் இல்லைன்னு புரிஞ்சிண்டு ஃப்ரொன்ட் டெஸ்க் இன்ஃபார்ம் செஞ்சுட்டு குவார்டர்ஸில் தூங்கிண்டிருந்த மேனேஜர எழுப்பி விவரம் சொல்ல அந்த ஆள் இன்னும் தன் பைஜாமா பனியனில். டாக்டரை வரவழைச்சு டெத் கன்ஃபெர்ம் செஞ்சுட்டு போலீஸுக்கும். பாடிய முதலில் பாத்த ரூம் செர்வீஸ் பாய விசாரிச்சுட்டு மேனேஜரை “யார் கெஸ்டு?” கேக்க கம்ப்யூட்டரை காமிக்க “வளர்மதிங்கர பேரில் ரூம் எடுத்தாங்க சார்”.
“தனியா தங்கினாங்களா?” “இல்லை, கூட ஒருத்தர், இவிங்க கணவர். “அவர் எங்கே?” “செக் இன் செய்யரப்போ 2 பெர்சன்ஸ்னு வந்தவங்க நேத்து சாயங்காலம் அவர் கிளம்பிப் போயிட்டார், இவுங்க நாளைக்கு காலி செய்வாங்கன்னு சொன்னார்”. “அட்ரெஸ்? போன்?” இன்ஸை கூப்பிட்டு “செக் செஞ்சீங்களா?” “செஞ்சுட்டேன் சார், ரெண்டும் ஃபேக்”. “செத்துப்போனது யார், கூட வந்தது யார்? CCTV லாபீல இருக்கு, காரிடர்லும். கூட வந்த ஆள் இமேஜ் பிடிங்க. எல்லா ஸ்டேஷணுக்கும் அனுப்புங்க. ஃபாரென்ஸிக் வந்ததும் பாடிய போஸ்ட் மார்ட்டம். முக்கியமா செத்தது யாருன்னு கண்டு பிடிக்கணும். மிஸ்ஸிங்னு இந்த ஏரியாவுல கம்ப்ளெயின்ட் வந்தா சொல்லுங்க. ரூம சீஸ் செய்யுங்க. இப்பத்தைக்கு ப்ரெஸ் வேண்டாம். அதர் கெஸ்ட்டுக்கு தெரிய வேண்டாம். ஸ்டாஃபுக்கு சொல்லுங்க. ஐ வான்ட் டு ஸ்டடி தி க்ரைம் சீன் அலோன்.”
என் வழக்கம். சத்தம் சந்தடி இல்லாம இடத்தை பாக்கரச்சே சிலது புலப்படும். ஃபாரென்ஸிக் வர நாழியிருக்கு.
செத்தவள் இன்னும் அப்படியே ஒருக்களிச்சு. நைட் ட்ரெஸ் அலங்கோலமா எல்லாம் பாக்கலாம். தற்கொலைன்னா விஷம் சாப்டிருக்கலாம். உதட்டுகிட்டே வாந்தி இல்லை. ஆனா இப்பெல்லாம் ஹைடெக் விஷம் கப்புன்னு தொண்டைய அடைக்கும், ஹார்ட் நிக்கும். வாந்தியெல்லாம் வராது. வலதுகை நெஞ்சைப் பிடிக்கப் போனாப்போல் வச்சிருக்கா. அழகான பெண் உருவம். இப்படி குமரியில் அஸ்தமனம் ஆணம்னு விதியோ? வளர்மதி சட்டுன்னு தேய்பிறையாகி! விஷம்னாலும் கொலையா ஏன் இருக்கப் பிடாது? கண்டுபிடிக்கணும். யாருன்னு தெரிஞ்சுட்டா பல விஷயங்கள் தெளிவாகும். பாப்பம். கட்டில சுத்தி வரேன். கூட ஓருத்தன் தங்கினதுக்கு தடயமே இல்லை. அவன் சாமான அவன் எடுத்துண்டு போயிட்டானா? இவள் சாமான் இருக்கணுமே?
பீரோவத் தொறந்தா ஒண்ணுமே இல்லை. இவளொட மாத்துத் துணிகள், இவளொட பொட்டி? ஹேண்ட்பேக்? மொபைல்? ஒண்ணுத்தையும் காணலை. இந்த நைட்டீய மாட்டிண்டேவா செகின் செஞ்சிருப்பா? நதிங்க் லுக்ஸ் ஆல்ரைட். கட்டிலுக்கு அடீல பாக்கரேன். இவளோட செருப்பு கூட கண்ணில் தென்படலை. என்னத்தை கொண்டு வந்தம், கூடவே எடுத்துண்டுபோகன்னு சொல்ராளோ. போஸ்ட் மார்டம் நடந்ததும் சிலது புலப்படும். ரூம் 20உம் 22உம் காலி. யாராவது இருந்தா 21லேந்து சத்தம் வந்ததான்னு விசாரிக்கலாம். கூட தங்கின ஆள் கிடைக்கலைன்னா வளர்மதியே எழுந்து வந்து என்ன நடந்ததுன்னு சொன்னாத்தான் ஆச்சுன்னு நினைச்சிண்டேன்.
ரூம் வாசலில் இன்ஸ் நின்னான். “என்ன மேன்?” “CCTV ஃபுட்டேஜ் கிடெச்சிருச்சு. பாக்கரீங்களா?” ஃபுட்டேஜில் வளர்மதி இன்னும் அழகா. நன்னாத்தான் ட்ரெஸ் செஞ்சிண்டு வந்திருக்கா. கையில் சின்னதா ட்ராலி பேக். இன்னொரு கையில் போனும். ஆனா கூட யாரும் நிக்கலை. தனியாவா வந்திருக்கா? மேனேஜர் 2 பேர்னும், கணவர்னு அடிச்சுச் சொன்னானே! அவனை கூப்பிட்டுக் கேக்கணும். அப்பரம் காரிடரில் இவள் மட்டுமே பெல் பாயோட வந்து ரூமுக்குள் போனதும் இங்கே இருந்த 2நாளும் வெளீல போரப்போவும் வரப்போவும் இவ மட்டும் தனியாத்தான். அதிகம் வெளீல போலை. ப்ரேக்ஃபாஸ்ட் போரப்போ அப்பரம் சாயங்காலம் எங்கேயோ வாக் போராப்போல் போய்ட்டு வந்தது பதிவாகியிருக்கு. அப்படீன்னா கூடவந்தவன்? தென்படவேயில்லை.
திரும்ப ரூமுக்கு போய் சுத்திப் பாக்கரேன். ரெசார்ட்டோன்னோ, மின்னாடி சிட்டவுட் மாதிரி ஒண்ணு, அப்பரம் பெரீய பெட்ரூம், அந்தண்டை கடல் பாத்து பால்கனி, இந்தண்டை டாய்லட் காம்ப்ளேக்ஸ். ரூமில் காஃபி மேக்கர் இருக்கு. ஆனா சிலர் ஆர்டெர் செஞ்சுதான் நல்ல காபியா குடிக்கலாமேன்னு. இன்ஸை கூப்பிட்டு “பெல்பாய் அப்பரம் மேனேஜரை வரவை. இன்னும் பேசணும்”. வந்தானுவ. பெல்பாய கேக்கரேன். “தினம் எத்தனை காபீக்கு ஆர்டெர்?” “2 சார்”. “காலி கப்பை நீதான் எடுத்துண்டு போக வருவாயா?” “ஆமாம் சார். சிலசமயம் நான், சிலசமயம் வேற யாராவது”. “போன ரெண்டுநாளில் நீ வந்தியா?” “இல்லை சார் வேற யாரோ”. “கண்டுபிடி, அவனோட பெசணும். அழைச்சிண்டு வா”. கேட்டுண்டே மேனேஜர் நிக்கரான்.
பைஜாமா பனியனை மாத்திட்டான். கோட் மாட்டிக்கலை. இருக்கும், வச்சிருப்பான். “கூட வந்து தங்கினது இவள் கணவர்னு எப்படி கண்டுபிடிச்சாய்? அந்த ஆள் ஏன் செகின் செய்யரப்போ CCTVலே வரல?” “அந்த ஆள் தள்ளீ சோபாவுல உக்காந்திருந்தார். அவர் கிட்டே ஒரு பொட்டி வச்சிருந்தார். கணவர் போலத்தான் பட்டது. அதெல்லாம் கேக்க முடியுமா சார்.” “வழக்கமா ஜோடியா வந்தா ஆம்பிள்ளதான் செகின் செஞ்சு பேர் கொடுத்து கையெழுத்து போடுவா, இது வித்யாசமா இருக்கே!” “ஆமாம் சார், வித்யாசமா இருக்கு. ஆனா இந்த பெண் சாவி வாங்கிண்டதும் அவரை கண் காமிக்க நீ போ நான் வரேன்னு சொல்ல இவிங்க மட்டும் பெல் பாயோட போனாங்க.”
பேசிட்டிருக்கப்பவே ஃபாரென்ஸிக் டீம் வந்தாச்சு. அவுங்களுக்கு ரூம விட்டூட்டு “ஏர்லி சம்மரி இன்னும் 1 மணீல வேணும், வெளீல நிக்கரேன்.” சொல்லீட்டு மானேஜரை கூடவே அழைச்சிண்டு வெளீல வந்துட்டேன். போர்டிகோவில் நிக்காம இன்னும் தள்ளீ வந்து பீச் ரோடுகிட்டே. கடலையே வெறிச்சுப் பாத்துண்டு. அவனும் கொயட்டா பக்கத்தில். “சார், நிங்க இந்தூருக்கு மின்னே வந்திருக்கீங்களா? ஃபர்ஸ்ட் விஸிட்டா சார்?” “வந்திருக்கேன். வடக்கில் வேலை பாத்துட்டு இப்பத்தான் இங்கே போஸ்டிங்க். சார்ஜ் எடுத்ததும் மொத மர்டெர் இன்வெஸ்டிகேஷன்.” “மர்டரா சார். நிச்சயமா தெரியுமா?” “ஆமாம். இதிலென்ன சந்தேகம்.” “சாவுக்கு காரணம் போஸ்ட் மார்ட்டம் முடிஞ்சுதானே சொல்லுவாங்க, அதான் கேட்டேன். அப்பரமா தற்கொலையா, ஃபவுல் ப்ளேயான்னு கண்டு பிடிப்பீங்கனு நினைச்சேன்.” “இதுக்கெல்லாம் ஒரு 6த் சென்ஸ் வேணும் மேன்.” “அப்படியா சார்!. நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும்.”
“சரி. நீங்க போய் வேலையப் பாருங்க. கிளம்பிப் போரத்துக்கு மின்னாடி திரும்ப பேச வேண்டியிருக்கும். எங்கேயும் போகவேண்டாம்”. “சார், ஊருக்குள் கொஞ்சம் வேலை, 1 அவரில் வந்துடுவேன்.” “உங்க போன் நம்பரை இன்ஸ்கிட்டே தந்துட்டு போங்க, கூப்பிடரோம்.”
கன்னியாகுமரியில்தான் பாக்க முடியும் கொஞ்சும் அழகை. அது என்ன கொஞ்சும் அழகு? கண் பாத்தது காதுகிட்டே வந்து இனிக்க இனிக்க பேசும். அதுதான் கொஞ்சும் அழகு. இங்கெல்லாம் காதலியோட வரணும். இல்லை வந்த இடத்தில் நல்ல பொண்னாப் பாத்து காதலிக்கலாம். என் மனைவியும் குழந்தைகளும் நாகர்கோவிலில். அழைச்சிண்டு வரணும். ஜெய்பூர்லேந்து வந்ததும் ஸ்கூல் அட்மிஷன் அது இதுன்னு பிஸி. என் பையன் 9ஆவது. அங்கேயே பொறந்தான். இந்த குமரிமுனை பாத்தா அசந்து போவான். மனைவி சரிதா நெல்லைக்காரி. போலீஸ்காரனை பண்ணிண்டு லோலோன்னு ஊர் ஊரா அலைஞ்சிண்டு கஷ்டப்படரா. அட்லீஸ்ட் இந்த வாட்டி நம்மூர் பக்கம்னு சந்தோஷமா கிளம்பி வந்தா.
ஃபாரென்ஸிக் டீம் லீடர் வரா. சங்கவீன்னு ஒரு பெண். கெட்டிக்காரீன்னு கேள்விப் பட்டிருக்கேன். ஜீன்ஸ் டாப்ஸ். “சம் ஏர்லி ஃபைண்டிங்க்ஸ். கேக்கரீங்களா? ரிப்போர்ட் வில் பி ரெடி பய் ஈவெனிங்க்.” “சொல்லுங்க.”
“தடயம்னு ஒண்ணுமே கிடைக்கலை. கூட யாரும் தங்கினதா ப்ரூஃப் இருக்கான்னு பாத்தா ரெண்டு தலைகாணி உறைகளையும் கழட்டியிருக்காங்க. கிடெச்சா தலைமயிர் நிச்சயம் கிடைக்கும், DNA பாக்கலாம். வி சஸ்பெக்ட் இன்டெர்கோர்ஸ். ஸ்வேப் எடுத்து வச்சிருக்கம். கை ரேகை இருக்கும் இடமெல்லாம் நல்லா துடெச்சிருக்காங்கன்னு நிச்சயமா சொல்லலாம். இன்னைக்கு காபி கப் ரெண்டு ஆறிப்போன காபியோட டேபிளீல். அதை கெஸ்ட் தொடலை. எனக்குத் தெரிஞ்ச வரைக்கும் டெத் அதிகாலை 2 மணி கிட்ட ஆகியிருக்கும்.” “சரி, என்ன விஷயம்னு யார் கிட்டேயும் சொல்ல வேண்டாம். பாடிய போஸ்ட் மார்ட்டத்துக்கு அனிப்பிச்சுடுங்க.”
என்னமோ தோணித்து. “சங்கவீ, லெட் அஸ் கோ வித் தி பாடி அண்ட் கெட் இட் டன் ப்ரான்டோ.” . (நாளை நிறைவடையும்)
No comments:
Post a Comment