Thursday, July 9, 2020

அகிலா vs மாலதி

அகிலா vs மாலதி (மனதை தொட்டுவிடும் கதை – 78)
#ganeshamarkalam

ஆத்துக்குள்ள நுழைஞ்சு ஷூவை கழட்டலை உள்ளேந்து அகிலா மொலு மொலுன்னு பிடிச்சிண்டா. எப்போ வருவேன்னு காத்திண்டிருந்தா போலேருக்கு. “உங்க புள்ளையாண்டன் இன்னைக்கு ஸ்கூல்லே என்ன செஞ்சுட்டு வந்திருக்கான்னு கேளுங்கோ.” எப்பவும்போல இதுக்கெல்லாம் அசர்ரவன் நான் இல்லை, என் பிள்ளையும் இல்லை. 

சாவகாஸமா கை கால் அலம்பிண்டு காபியையும் குடிச்சுட்டு போய் ஹோம்வொர்க் செய்யராப்புலே பாவ்லா காட்டிண்டிருந்த என் புத்திரன் ப்ரணவ் கிட்டே மெள்ள உக்காந்துண்டு அவன் தலையை கோதிவிடரேன். 3ஆவது படிக்கும் அவன் என்னைப்பாத்து ஒரு சிரிப்பு சிரிச்சுட்டு என்னை கட்டிக்கரான். “அப்பா இந்த கணக்கு சொல்லிக்கொடு”ன்னு நோட்டை நீட்டரான். 

அவனுக்குத்தெரியும் அப்படி ஏதாவது செஞ்சால் நான் ஓடியே போயிடுவேன்னு. மெல்ல அதை கையிலே வாங்கி அந்தப்பக்கம் வச்சுட்டு “வாட் மாட்டர்”கிரேன். “அதுக்கு அவன் “அப்பா அந்த சைலேஷ்தான் எங்கிட்டே பேச்சு கொடுத்தான், நான் கொயட்டாதான் உக்காந்து டீச்சர் சொன்னதை கவனமா கேட்டிண்டிருந்தேன். டீச்சர் பென்ச்சில் நிக்கச்சொன்னா” சரிதான், என் பிள்ளை எப்படி தப்பு செய்யமுடியும்? அவனைப்பத்தி எனக்குத்தெரியாதா என்ன? “சரி நீ படி, நான் அப்புரம் வரேன்”னுட்டு ஹாலில் போய் உக்காந்துக்கரேன். அகிலா வந்தா.

“என்ன, நான் போகட்டுமா இல்லை நீங்க போரேளா?” “எங்கே போகணும்?” “நாளைக்கு இவன் கிளாஸ் டீச்சர் வரச்சொல்லியிருக்கா. நேரில் வந்து பாக்கணுமாம்.” “நீயே போ. எனக்கு லீவு கிடைக்காது.” “ஆகட்டும், இந்த ஒரு தடவை நானே போரேன். அடுத்த தடவை நீங்களாச்சு உங்கள் புத்திரனாச்சு. இவன் ஐடி கார்டை வாங்கி வச்சிண்டிருக்காளாம். அம்மாவை வந்து வாங்கிண்டு போகச்சொல்லுன்னு சொல்லியிருக்கா.”

இது எல்லாராத்துலேயும் நடக்கரதுதான். சிலருக்கு இந்த மாதிரி தமாஷ் அனுபவிக்கமுடியாம பெத்து போட்டது ரொம்ப சமத்தா அமைஞ்சுடும். ஆனா அகிலாவுக்கும் இவன் க்ளாஸ் மிஸ் மாலதிக்கும் அவ்வளவு பொருத்தம். ரெண்டுபேரும் அடிக்கடி மீட் பண்ரதுக்கு ப்ரணவ் தன்னால முடிஞ்ச கைங்கர்யத்தை செய்வான். சொன்னால் உங்களுக்கே விசித்திரமா இருக்கும்.

கூட இருக்கர பசங்களோட கிளாஸ் எடுக்கரச்சே சத்தமா பேஸிண்டிருக்கான்னு கம்ப்ளைன்ட். இது 3ஆவது தடவையா சொல்லிட்டா. ரெண்டுவாட்டி டயரியில் எழுதியாச்சு. டயரியில் இனிமே எழுத இடமில்லை. இப்போ நேர்லே வரணுமாம். எங்கே வராம போயிடுவோமோன்னு ஐடி கார்டை கன்ஃபிஸ்கேட் செஞ்சாச்சு. புத்திசாலி டீச்சர். ஒரு தடவை இவன் கொண்டுபோன வாட்டர் பாட்டில் மூடி கழண்டுண்டு அடுத்த வரிசை வர்ஷா புஸ்தகப்பையில் கொட்டிடுத்தாம். டீச்சர் இதை ஒரு விபத்துன்னு நம்பலை. ஏன்னா என்ன நடந்ததுன்னு இவனை கேட்டதுக்கு இவன் சிரிச்சிண்டே பதில் சொல்லியிருக்கான். இவன் சிரிப்பு போருமே இவன் மேலே சந்தேகம் எழும்பரத்துக்கு! அந்தப்பொண்ணும் டீச்சரை லன்ச் பிரீயடில் தனியா பாத்து சொன்னாளாம் “பிரணவ்தான் மூடியை அவனாவே தொரந்து இதோ நான் என்ன பண்ரேன் பாருன்னு சொல்லிட்டு அதை ஊத்தினான்.” “ஏண்டி அதை கிளாஸில் கேக்கரச்சே சொல்லலை”ன்னதுக்கு “சொன்னா காம்பஸ் இருக்குன்னு காமிச்சான்” ங்கிரா.

மாலதி நிலைமையையும் கொஞ்சம் யோசிச்சு பாக்கணும். 45 ஸ்டூடென்ட்ஸ். 3ஆவது சிலபஸ்லே இப்போ நிறைய ஏத்தியிருக்கா. 4 சப்ஜெக்ட் அவளே எடுக்கராளாம். இதுகளை மேய்க்கரது சுலபமில்லைதான். 

இதில் என்ன விசேஷம்னா, என் புள்ளையாண்டன் கிளாசில் ஃபர்ஸ்ட். ஸ்கூல் டேயில் இவந்தான் நாயகன். எல்லா கல்சுரல் விஷயத்திலும் ஆஜர். ஒரு தடவை இன்டெர் ஸ்கூல் மாறுவேடப்போட்டியில் அகோரி வேஷம் போட்டு முதல் பரிசை தட்டிண்டு வந்து கலக்கியிருக்கான். மாலதிக்கும் நல்ல பேர் கிடெச்சதாம். ஆங்க், முதல்ல அதைச்சொல்லணுமே! “நான் கலந்துக்க பொரேன் என்ன வேஷம் போட்டுக்கலாம்”னு எங்கிட்டேதான் வந்தான். பல விதமான காரெக்டர்களை யோசிச்சுட்டு – எதுவுமே அவனுக்கு பிடிக்கலை – ஏதாவது ஷாக்கிங்கா செய்யட்டும்னு அகிலாதான் ரெண்டு சாயிஸ் கொடுத்தா. டான்ஸிங்க் ட்ராஃபிக் கான்ஸ்டெபிள், அல்லது அகோரி. கடைசீலெ அகோரி. இவனுக்காகவே யூட்யூபில் “நான் கடவுள்” ட்ரைலர் போட்டு காண்பிச்சேன். சரின்னுட்டான். 

அதுக்குத் தகுந்தாப்புலே ஹிந்தியில் டயலாக் எழுதி இவன் மேல பூசரத்துக்கு கரி, அப்புரம் விபூதி, கும்கும் கட்டிக்கரத்து சிவப்பு துணி, தண்டம் எல்லாம் செகரிக்கரத்துக்குன்னே ரெண்டுநாள் ஆபீஸ் லீவு போட்டேன். போட்டி அன்னைக்கு இவனை சீக்கிரம் எழுப்பி குளிக்கச்சொல்லி மேக்கப் போடரதுக்குள்ள நானும் அகிலாவும் அகோர தம்பதிகளா ஆகிட்டோம். கடைசீலெ ஓரளவுக்கு திருப்தின்னு தோணியதும் நாங்க கையலம்பிக்க போயிருக்கச்சே இவன் எங்களை கேக்காம தன்னைத்தானே அலமாரியில் ஆளுயர கண்ணாடியில் போய் பாத்துண்டு அழ ஆரம்பிச்சுட்டான். “இப்படி வேண்டாம் நன்னா இல்லை, எனக்கு ஏர்ஃபோர்ஸ் பைலட் தான் வேணும்”னு. 

மணி பத்தாச்சு, 11 மணிக்கு ஸ்கூலில் இருக்கணும், இவனை கழுவவே அரைநாள் ஆகுமே! எப்படியோ சமாளிச்சு இழுத்திண்டு போனோம். அழுததில் டயலாக் மறந்துட்டதால், இவன் செஞ்சதெல்லாம், மேடையில் ஏறி எல்லோரையும், குறிப்பா ஜட்ஜ் மாமி ரெண்டு பேர் இருந்தா அவாளை கோபமா முறைச்சுப்பாத்துட்டு தண்டத்தை அவாளை பாத்து மிரட்டராப்புலே ஆட்டிட்டு இறங்கினான். அவா இவனுக்கே பரிசுன்னு சொல்லிட்டா.

இந்த மாதிரி சில ப்ராக்டிகல் காரணங்களுக்காக மாலதிக்கு இவன் கிளாசில் பண்ர அழிச்சாட்டியத்துக்கு திட்டவும் முடியலை, சும்மா விட்டுடவும் முடியலை. அகிலா அன்னைக்கு போயிட்டு, “நானும் அன் ஆத்துக்காரரும் ப்ரணவோட நேத்து ரொம்பநாழி பேசிண்டிருந்தோம், இனிமேல் சமத்தா இருப்பேன்னு காட் ப்ராமிஸ் செஞ்சான், குழந்தைதானே, ரெண்டு வருஷத்தில் எல்லாம் மாறிடும்”னுட்டு சொல்லிட்டு “ஐடி கார்ட் கொடுங்கோ”ன்னு வாங்கிண்டு வந்தாளாம். 

மாலதிக்கோ “இன்னும் ரெண்டு வருஷமா”ன்னு மலைப்பா இருந்திருக்கும்.

இதில் மேட்டர் என்னன்னா, அகிலாவுக்கும் மாலதிக்கும் ஆகரதில்லை. எங்கிட்டே “உங்க பிள்ளையாண்டன்”னு குத்திக்காட்டினாலும் மாலதி இப்படி மாசம் ஒருதடவை தன் குழந்தையை குத்தம் சொல்ரது அவளுக்கு பிடிக்கவேயில்லை. எந்த அம்மாவுக்குத்தான் பிடிக்கும்? “இருந்தாலும் நீ டீச்சர் கோணத்தில் இந்த பிர்ச்சனையை அணுகணும்”னு சொன்னேன். என்னை ஒரு லூக் விட்டா பாருங்கோ, அப்படியே சப்தநாடியும் உறைஞ்சு போனது. நமக்கேன் வம்பு. நம்பளை ஸ்கூலுக்கு போய் டீச்சர் பேரன்ட்ஸ் மீட்டிங்க் அட்டெண்ட் செய்யுங்கோன்னு சொல்லாதவரைக்கும் சரின்னு அப்படியே பெட்டிப்பாம்பா அடங்கிட்டேன். அடிக்கடி அடங்கரதுதானே, சுலபமா இருந்தது.

இப்படி லைஃப் ஸ்மூத்தா போரச்சேதான் இன்னொன்ணு நடந்தது.

லீவு முடிஞ்சு ஸ்கூல் தொரந்து சில வாரங்கள் ஆனதும் கிளாஸ் டெஸ்ட் வச்சா. அதை மட்டும் கரெக்டா வச்சுடரா. பாடத்தை எப்போ சொல்லிக்கொடுப்பான்னு தெரியலை. டெஸ்ட் வைக்கரது அவனுக்கா, இல்லை எனக்கான்னும் சந்தேகம் வரும். அவன் என்ன சப்ஜெக்டில் வீக்கோ அதை நான் சொல்லிகொடுக்கணுமாம். மத்ததை அகிலா பாத்துப்பாளாம். இது எப்படி இருக்கு? பார்த்தேன், தப்பிக்க ஒண்ணும் வழி தெரியலை. அவள் வேர வாட்ச் பண்ராளொன்னோ, அதுனால் ஆபீஸ்லேந்து வந்ததும் இவன் கூட உக்காந்துண்டு சொல்லிக்கொடுக்கிரா மாதிரி பாவனை. அது இவனுக்கும் ரொம்ப பிடிச்சிருந்தது. கேள்வி கேட்டா சரியா பதில் சொல்லமாட்டான், ஆனா எப்படியோ மார்க் வந்துடும். அது எனக்கே ஆச்சர்யமா இருக்கும். இவன் தானா ஒரு மெதட் வச்சிண்டு படிக்கரான். வீக்குன்னு சொன்னது 90க்கு கீழே வாங்கர அகிலா பயப்பட்ர சப்ஜெக்ட்டில்.

சொல்லித்தரச்செ கேட்டான் பாருங்கோ என்னை ஒரு கேள்வி! “அப்பா நீ படிக்கரச்சே எவ்வளவு மார்க் வாங்குவாய்?” குழந்தைகள் கிட்டே பொய் சொல்லக்கூடாது. பேச்சையும் உடனே மாத்தியாகணும். சொன்னேன். “நன்னா படிப்பேண்டா. ஆனா என்னை பிள்ளையார்தான் காப்பாத்துவர்.” “அப்படின்னா எப்படி”ன்னான். “நான் ஒரு பிள்ளையார் படத்தையோ இல்லை விக்ரஹத்தையோ பரீக்ஷைக்கு எடுத்துண்டு போய் எதுத்தாப்புலே பென்ச்சில் வச்சுண்டு பரீக்ஷை எழுதுவேன், நல்ல மார்க் கிடெச்சுடும்”னேன். கேட்டுண்டான். நான் வாங்கின மார்க் பத்தி குடையலை.

பரீக்ஷை ஆரம்பிச்ச அன்னைக்கு திங்கட்கிழமை ஆபீஸில் முக்கியமான மீட்டிங்க். அகிலா “ஆர்ஜென்ட், ப்ளீஜ் கால் பேக்”னு மெஸேஜ். நான் பெர்மிஷன் கேட்டுண்டு வெளீலெ வந்து அவளை கூப்பிடரேன். “பூஜை அலமாரியில் இருந்த பிள்ளையார் விக்ரஹத்தை காணோம்.” பக்குன்னுது. ஆனா எனக்கு மட்டும்தான் தெரியும் எங்கே போயிருக்கும்னு. “கவலைப்படாதே சாயங்காலம் வந்து தேடி கண்டுபிடிச்சுக்கொடுக்கரேன்.” அதெப்படி கவலைப்படாம இருக்கரதுன்னு அழவே ஆரம்பிச்சா. “நான் இப்போ போகணும், நீ அழாதே”ன்னு ஆசுவாசப்படுத்தினேன். ஏன்னா விஷயம் தெரிஞ்சா நானும் மாட்டிப்பேனே?

சாயங்காலம் ஆத்துக்கு போய் மெள்ள அவன் பையிலேந்து பில்ளையாரை எடுத்து பூஜை ஷெல்ஃபில் அவள் இலலாதபோது திரும்ப வச்சுட்டேன். கோவில்லேந்து வந்து பாத்ததும்தான் அவளுக்கு திருப்தி, “இப்போதான் 11 தேங்காய் உடைக்கரேன்னு வேண்டின்டேன், கிடெச்சுட்டர், இதோ பொய் உடைச்சுட்டு வரென்”னு திரும்பவும் போயிட்டா. நான் எதிர்பார்த்தாப்போல் மறுநாளும் கார்த்தாலே பில்ளையாரைக் காணோம். அன்னைக்கும் பரிக்ஷையாச்சே! இனிமேல் பூஜை அலமாரிலே சாமி காணோம்னா ஆபீஸில் இருக்கச்சே கூப்பிடாதேன்னேன்.

இப்படி நடக்க, ஒருவழியா பரீக்ஷை முடிஞ்சுதும் டீச்சர்கிட்டேந்து இவளுக்கு போன். வந்து பாக்கணுமாம். இவள் செம கடுப்பில், நான் வந்ததும் நாளைக்கு லீவு போட்டுட்டு நீங்களே போகணும்னு சொல்லிட்டா. “எதுக்கு கூப்பிட்டாளாம் தெரிஞ்சாத்தான் நான் போவேன்.” “எங்கிட்டே சொல்லலை. போய் தெரிஞ்சிண்டு வந்து எங்கிட்டேயும் சொல்லுங்கோ.” என்ன பொடிவச்சுப்பேசராளா, விஷயம் அவுட்டாகிடுத்தான்னு யோசிச்சிண்டே அன்னைக்கு தூங்கலை. கரெக்டா லன்ச் ப்ரேக்கில் ஸ்கூலுக்கு போயாச்சு. 

கிளாஸ் 3H டீச்சர் மாலதியை பாக்கணும், வரச்சொனாங்கன்னு சொன்னதும் அழைச்சிண்டுபோய் விட்டா. வராண்டா போயின்டேயிருக்கு. இவ்ளோ பெரீய ஸ்கூலிலா என் செல்லம் படிக்கரது?

டீச்சரை பத்தி இப்படி சொல்லப்பிடாது, ஆனா என்ன செய்யட்டும், அவள் கொள்ளை அழகு. சின்னப்பொண். என்னைப்பாத்துமே “நீங்க ப்ரணவ் அப்பா வெங்கடேஸ்வரன்தானே”ன்னா. என்ன அவ்ளவு ஜாடை பொருத்தமா, இல்லை அகிலா கூப்பிட்டு சொல்லிட்டாளா, நான் வருவேன்னு? உக்காந்துக்கோங்கோன்னா. பசங்கெல்லாம் ப்ளே கிரௌண்டில். சின்னப்பசங்களுக்காக பண்ணின பென்ச்சில் கூனிக்குருகி உக்காந்துண்டேன், பெற்றோர்களை இங்கே உக்காரச்சொல்ரது அதுக்காகவேங்கிராப்புலே. 

“ப்ரணவ் ரொம்பவே ஆக்டிவ் ஸ்டூடென்ட். இவன் பரீக்ஷைக்கு ஒரு பிள்ளையார் பொம்மை எடுத்துண்டு வந்திருக்கான். கடவுள் நம்பிக்கை நல்லதுதான். ஆனா இவன் விக்ரஹத்தை பாத்துட்டு இப்போ எல்லா குழந்தைகளும் எல்லா பரீக்ஷைக்கும் பொம்மை எடுத்துண்டு வர ஆரம்பிச்சுட்டா. அன்னைக்கு கரெஸ் ரவுண்டில் வரச்சே இதைபாத்துட்டு என் சீட்டை கிழிச்சுடுவேன்னு சொல்லிட்டு போனா. அதான் உங்களை வரச்சொன்னேன். ப்ரணவ்வை கேட்டதுக்கு நீங்களும் படிக்கரச்சே எடுத்துண்டு போனேள்னு சொன்னான். நீங்களே இன்னைக்கு வந்தது சரியாப்போச்சு. நீங்கதான் விக்ரஹத்தை கொடுத்தனுபிச்சேளா”ன்னு முடிச்சா.

அமாம்னு தலையை ஆட்டிட்டு சும்மாயிருந்தேன். அதுக்கு ரெண்டு காரணம். என்ன பதில் சொல்ரதுன்னு தெரியலை. இவாளுகெல்லாம் பதில் சொல்லிண்டிருக்க முடியாதுன்னு ஒரு கெத்து ஃபீலிங்க். “இனிமேல் இப்படி நடந்துக்காம பாத்துக்கோங்கோ”னுட்டு என்னை ரிலீஸ் செஞ்சா. டக்குன்னு எழுந்திருகச்சே பென்ச், டெஸ்க் எல்லாம் எங்கூடவே எழுந்துண்டது. 

ஆத்துக்கு ரைட் ராயலா வந்து அகிலாகிட்டே பிராப்ளம் சால்வ்ட்னுட்டு பிள்ளையார் காணாமப்போன மிஸ்டரியையும் ஒண்ணுமே தெரியாதமாதிரி முடிச்சுக்கொடுத்தேன். “இனிமேல் தினம் அவன் ஸ்கூலுக்கு போரச்சே பையை செக் பண்ணி அனுப்பு”. “ஹுக்கும்”னுட்டு போனா. “அவன் வரட்டும் இன்னைக்கு அவனுக்கு இருக்கு”ன்னு வேர. 

வந்தவன் நேர “அம்மா”ன்னு கிச்சேன்னில் இருந்தவள் காலை போய் ஆசையா கட்டிண்டான், அவனுக்கு தெரிஞ்சிருக்கு அப்பா மாலதி டீச்சரை வந்து பாத்திருக்கான்னு. அதான் எங்கிட்டே வரலை. அகிலா அவனை ஆசையா தூக்கி முத்தம் தரச்சே இவன் அவள் காதில் “அப்பாதான் பிள்ளையாரை எடுத்துண்டு போ நிறைய மார்க் வரும்னா”னுட்டன். எமகாதகப்பயல்!

ராத்திரி படுத்துக்க வந்துட்டு என்னை இறுக்க கட்டிண்ட அகிலா கேட்டா, “நீங்கதான் அவனை வாட்டர் பாட்டிலேந்து தண்ணியை வர்ஷா புஸ்தகப்பையிலும் ஊத்தச் சொல்லிக்கொடுத்தேளான்”னா. நான் என்னத்தை சொல்லட்டும். முழுசா 5 நாள் கழிச்சு அவளாவே வந்து கட்டிக்கரா இப்போ அந்த வாடர் பாட்டில் மேட்டர் எதுக்கு? “அது கிடக்கட்டும், உங்கிட்டேந்து ஒரு நல்ல வாஸனை வரதே, என்ன பண்ணிண்டிருக்காய்”னு அவளை சிறைப்படுத்த முயலுகிரேன்.

ஸ்கூலில் இன்னோண்ணு நடந்தது. ப்ரணவ் பாஸ் செஞ்சுட்டு அடுத்த வருஷம் 4ஆவது போகரப்போ மாலதி தான் 3ஆவதுக்கே கிளாஸ் எடுத்துக்கரேன்னு சொல்லிட்டான்னும் 4ஆவதுக்கு வேர கிளாஸ் டீச்சர் போட்டுட்டான்னும் கேள்விப்பட்டேன். 

“நம்பளை எத்தனை கஷ்டப்படுத்தினா, இப்போ தைரியம் இல்லாம என் பையனுக்கு பயந்து ஓடிட்டா”ன்னா அகிலா.

No comments:

Post a Comment