வளர்மதி c/o ராயல் கிளினிக் மனதை தொட்டுவிடும் கதை - ganeshamarkalam
எனக்கு 76. இந்த வயசில் த்ரோட் இன்ஃபெக்ஷன் வரப்பிடாது. அது வயசைப்பாத்தா வரது? வந்துடுத்து.
பெருமாள் டாக்டர்கிட்டே போனா 5 மாத்திரை ஒரு சிரப் எல்லாம் குடுப்பன். சாப்பிட்டா வயித்தை பிசையும். த்ரோட் சரியானாலும் பழையபடி உடம்பு நார்மல் ஆகிரத்துக்கு இன்னும் 10 நாள் ஆகும். சரியாகலைன்னா 3 நாளைக்கு கொடுத்ததை இன்னும் 2 நாள் கன்டின்யூ பண்ணுன்னுட்டு அவன் வேலையை பாப்பன். அதுனாலே போகாம சமாளிச்சுடலாம்னு மாட்டுப்பொண்ணை சுக்குக்கஷாயம் வச்சுக்கொடுக்க முடியுமான்னு கேட்டேன். அரை மணீலே வாசலில் ஊஞ்சலில் உக்காந்திண்டிருந்தவன் பக்கத்தில் “ணங்க்”குன்னு டம்ப்ளரை வச்சா.
அந்த “ணங்க்” சத்தத்தை கேட்டால் எங்காத்து விஷயமெல்லாம் அம்பலம் ஆயிடும். அதை விவரிச்சு இந்தக் கதையையும் சோகமா ஆக்கப்போரதில்லை. சுருக்கமா சொல்லணும்னா ஆத்துக்காரி 10 வருஷத்துக்கு முன்னாடி போனதுலேந்து மாட்டுபொண்கிட்டே மாட்டிண்டிருக்கேன். ஏதோ வயித்துக்கு போதுமானது அப்பப்போ வந்து தட்டில் விழும். ஆத்தில் விசேஷம்னா ஏதாவது வித்யாசமா. மத்தபடி ஒரு எக்ஸ்ட்ரா காபி, அல்லது பொரிச்ச அப்பளம், அரைச்சு, கிரைச்சு பண்ணவேண்டியிருக்கிர மிளகு குழம்பு பருப்புத்தொவயல் இப்படி எதுக்காவது மசக்கை வந்தா, வாயை மூடிண்டு இருந்துடுவேன். என் ரூம் உண்டு, நான் உண்டுன்னு சுருங்கியாச்சு.
இப்போவரைக்கும் சுகர் பிபின்னு சிரமப்படுத்தலை. ஆச்சர்யம்தான். எங்கூட படிச்சவா, வேலைபாத்தவான்னு கேட்டா என்னொத்த வயசுக்காரா பல பேருக்கு உடம்புபூரா வியாதி. எங்கூட வாக் வரப்போ இதைத்தான் பேசிப்ப்பானுவ. ஃபுல் ஹெல்த் செக்கப் பண்ணிண்ட சேதுராமன் அவனுக்கு கண்டுபிடிச்சதை சொல்ரச்சே தலையே சுத்தித்து. எல்லாத்துக்கும் பேர் தெரிஞ்சு வச்சுண்டு அதை சொல்லி பயமுருத்தினான். எனக்கு த்ரோட் இன்ஃபெக்ஷன் மட்டும் தீர்ந்தபாடில்லை.
குழந்தைகளோட ஆத்தில் இருமல் வந்துட்டா மாட்டுப்பொண்ணு குழந்தைகளை எங்கிட்டே அண்டவிடமாட்டா. பெருமாள் டாக்டரை பாத்துடரதுன்னு கிளம்பினேன்.
அவன் விஷயம் கேள்விப்பட்டதுமே பிபி மெஷீன எடுத்துட்டான். புஸ்க் புஸ்க்னு பண்ணிட்டு, “150/96 இருக்கு. பிபி ரெகுலரா செக் பண்ணிப்பேளா”னான். “இல்லை”ன்னேன். “இந்த வயசுலே பண்ணிக்கணும், ஆரம்பிங்கோ. இப்படியே இருந்தா அதுக்கு மாத்திரை சாப்பிடணும், இல்லைன்னா கஷ்டம்”னான். இப்போதைக்கு தொண்டைக்கு தரேன்னுட்டு நான் சொன்னாப்புலே ஒரு தாள் முழுசும் எழுதித்தள்ளினான்.
அன்னைக்கு ஒரு தீர்மானத்துக்கு வந்தேன். வாரம் ஒருக்கா பிபி செக் பண்ணிப்பாத்துடரதுன்னு. தெருவுக்கு 8 டயக்னாஸ்டிக் கிளினிக் பாக்கரேன். பஸ் ஸ்டாண்ட் பக்கத்தில் ராயல் கிளினிக். ஒருத்தரும் இல்லை, சேர் போட்டு சுத்தமா துடச்சுவிட்டாப்புலே பளிச்சுன்னு. சரி அடுத்த வாரம் வரலாம்னுட்டு. ஆத்துலே சொல்லணுமா? வேண்டாம், அப்புரம் பாத்துக்கலாம்.
தொண்டை சரியாச்சு. அவன் கொடுத்த மருந்தாலா, நானே வாங்கிக்குடிச்ச கஷாயத்தினாலான்னு மனசில் கேள்வி வந்தது. 8நாள் கழிச்சு ராயல் கிளினிக் போரேன். சாயங்காலம் 5 இருக்கும், யாரும் இல்லை. ஆனா ஒரு 22 வயசுப்பெண் உக்காந்துண்டு போனை நோண்டிண்டிருந்தாள். “வாங்க சார்”னா. நான் “பிபி எடுக்கணும்”னேன். “சரி சார், 20₹ ஆகும். கொஞ்ச நேரம் உக்காருங்க.” “யாருமே இல்லையே, ஏன் உக்காரச்சொல்ராய்”னு கேட்டுடலாம்னு நினைக்கரச்சே, அவளே, “கொஞ்சம் நடந்து வந்த படபடப்பு அடங்கினதும் எடுப்போம்”னா. பரவாயில்லையே, இதுவும் நன்னா இருக்கேன்னு அப்படியே சாஞ்சு உக்காந்துக்கரேன்.
அவள் சாவகாசமா எழுந்து வந்து எனெக்கெதிரே ஒரு ஸ்டூலைப்போட்டுண்டு உக்காந்தா. எனக்கு பக்கத்தில் நாற்காலியில் பிபி மெஷீனை வைக்கரா. அந்த பட்டியை எனக்கு வலிச்சுடுமோங்கிரா மாதிரி மெல்ல கையில் சுத்திட்டு புஸ் புஸ் பண்ணி பாத்தா. அப்புரமா அதை மெர்குரி மீட்டரில் பொருத்தினா. நிதானமா என் முகத்தை பாத்துட்டு அழகா ஒரு சிரிப்பு. “உங்க பேர் என்ன சார்?” சொல்ரேன். “வயசு 60 இருக்குமா?” நான், “ஐய்யய்யோ, அவ்வளவு கம்மி இல்லை 76, அடுத்த மாசம் 77”கிரேன். அவள் முகத்தில் என்னை சின்னதா ஆச்சர்யப்படுத்தி குஷியும் படுத்திவிட்ட திருப்தி, என் வீக் பாயின்ட் தெரிஞ்சு அதில் நுணி விரலை வச்சு வருடினாப்புல.
என் மணிக்கட்டை மெல்ல தன் இடது கை விரல்களால் பற்றிக்கொண்டு பல்ஸ் பாத்துண்டே காத்தை அழுத்தி அப்புரம் விட்டு, மெர்குரி என்ன சொல்ரதுன்னு பாக்கரா. அப்புரம் ஏதொ தீர்மானமா ஸ்தெதஸ்கோப் காதில் மாட்டிண்டு அதை என் கை மடிப்பில் வச்சு திரும்பவும் புஸ் புஸ். அவள் கரம் சில்லுன்னு என் தோலில் பட்ரது. கிட்டக்க குனிஞ்சு பாத்துண்டெ திடீர்னு, “130/90 இருக்கு. உங்க வயசில் ஒண்ணுமில்லை”னுட்டா.
“உன் பேரென்னம்மா?” “வளர்மதி சார்”.
திருச்சி சொந்த ஊராம். பாராமேடிக்ஸ் படிச்சுட்டு சென்னையில் வேலை தேடிண்டு வந்தாளாம். கிளினிக்குக்கு பின்னாடி லேப் அதை ஒட்டி ஒரு ரூம் அதில்தான் வாசம். இவாளோட கிளினிக் 8 இருக்காம், இந்த பிரான்ச் இப்போதான் ஆரம்பிச்சு இன்னும்சூடு பிடிக்கலையாம். தினம் 10 பேர் வராளாம், ஆத்துக்கும் போய் பாப்பாளாம், சாம்பிள் எடுத்துண்டு வந்து சோதனை பண்ணி ரிஸல்ட் கொடுப்பாளாம். இவளோட ரெண்டு பசங்க வேலை செய்யரா பைக்கில் ஹோம் செர்விசுக்கு, அதில் ஒருத்தன் பிஸியோவாம். நான் வாரம் ஒருதடவை வருவேன்னுட்டு கார்ட் ஒண்ணை எடுத்துக்கரேன். வேணும்னா போன் செய்யலாமே. “காலை, மாலை, காபீ குடிச்சுட்டு, குடிக்காம வாங்க மாத்தி மாத்தி பாக்கிரது நல்லது.”. கிளம்பரச்சே 20₹ கொடுக்கரேன், சிரிச்சுண்டே வாங்கிண்டா. “ஆல் தெ பெஸ்ட்” அப்படின்னா. அப்படி ஒருத்தர் சொல்லி கேட்டு கிட்டத்தட்ட 20 வருஷம் ஆச்சு.
ஆடுத்த வாரம் போனப்போ 120/80. “பெர்ஃபெக்ட் ஹெல்த், கலக்கரீங்க சார்.” கொஞ்சநாழி உக்காந்திருக்கச்சே அவளைப்பத்தி இன்னமும் தெரிஞ்சுண்டேன். அவளோட கூடப்பிறந்தவா 2 பேர், எல்லாம் பெண்கள். அப்பா இல்லை. இவதான் மூத்தவ அதனால் உடனே வேலைசெஞ்சு சம்பாதிக்க நிர்பந்தம். இவ மாதிரி மத்தவாளும் அடுத்த வருஷம் வேலை தேடிப்பாளாம். வேர பெரீய ஆஸ்பத்ரீயில் ஏதாவது வாங்கித்தர முடியுமான்னு கேட்டா. வாரங்கள் கழிஞ்சது. அவ சொல்ர ரிசல்ட்டை ஆத்துக்கு வந்ததும் ஒரு டயரியில் எழுதிக்கரேன். பெருமாள் கேட்டால் இந்தான்னு கெத்தா காமிக்கலாமே.
நெட்டில் அலசி பிபி அதிகமாகாம என்ன செய்யலாம்னு படிச்சேன். முக்கியமா ஸ்ட்ரெஸ் கொடுக்கிர விஷயங்களை தவிர்க்கணும், லைஃப் ஸ்டைல் மாத்திக்கணும், மனசுக்கு பிடிச்ச விஷயங்களில் ஈடுபடுத்திக்கணும்னு போட்டிருக்கான். ரெட் வைன் நல்லதாம். அதுக்கெங்க போரது? அதுக்கு பதிலா வெளீலெந்து வரச்சே 200கி கருப்பு திராட்சை வாங்கிண்டு போவேன், பேரன் அம்மாகிட்டே, “தாத்தா எதையோ ஒளிச்சுவச்சு சாப்பிடரா”ன்னு போட்டுக்கொடுத்துட்டான். இப்போல்லாம் 1 கிலோ வாங்கிண்டு போயிடரது.
வாரா வாரம் இந்த பெருசு ஜோரா ட்ரெஸ் பண்ணிண்டு போரதை மாட்டுப்பொண் கவனிக்க ஆரம்பிச்சா. போனா வரத்துக்கு 1 மணி ஆகிரதையும். நடந்து போக 8 நிமிஷம். 10 நிமிஷம் ஆசுவாசம். 5 ந்மிஷத்தில் பிபி எடுத்துண்டு 30 நிமிஷம் அங்கேயே உக்காந்துண்டு அவளொட பேசிண்டிருந்துட்டு, மனசு கேக்காம கிளம்பி மீண்டும் ஆத்துக்கு நடந்து வரத்துக்கு 1 மணி ஆகிடும். செக் பண்ணிண்டு திரும்ப வரச்சேயே அடுத்த வாரம் எப்போ வரும்னு இருக்கும். இன்னும் ஏழு நாளான்னு தோணும். ஏன் மூணு நாளைக்கு ஒருதரம் வாரம் சேஞ்ச் ஆகக்கூடாது?
கையில் பட்டி கட்டினதும் நிமிர்ந்து என்னைப்பாத்து சிரிச்ச வளர்மதி இப்போல்லாம் நான் வரப்போ கிளினிக் வாசலையே பாத்துண்டு நான் வந்ததும் பெரீசா சிரிச்சிண்டு எழுந்து வரா. இப்போல்லாம் நாங்க பல விஷயங்களை பேசரோம். அவளுக்கு ரெண்டு இடத்தில் நேர்காணல் ஏர்படுத்தி கொடுத்தேன். அதிலொண்ணு தேரும்னு நினைக்கரா. நடந்துடும்னு நான் கான்ஃபிடென்ஸ் கொடுக்கரேன். “உங்களுக்கு என்ன சார், உடம்பை நன்னா பாத்துக்கரீங்க, வெஜிடேரியன், ஒண்ணும் பிராப்ளம் வராது, ஜாலியா மனம்போல இருங்க”ன்னு அவள் எனக்கு கான்ஃபிடென்ஸ் கொடுக்கிரா. நான் பாத்த லேடெஸ்ட் சினிமா பத்தி சொன்னதை வச்சு, “சார் உங்களுக்கு வயசாச்சுன்னு சொன்னா யாரும் நம்பமாட்டாங்க”ன்னா. என்ன சொன்னேன், ஞாபகம் இல்லை. இந்த வயசில் டக்குன்னு மறந்து போயிட்ரது.
அன்னைக்கு எனக்கு ரீடிங்க் பாக்கிரச்சே தன் கை என்மேல் பட்டதும், “உங்களுக்கு சூட்டு உடம்புசார்”னா. “ஆமாம் இப்போ எண்ணை குளியலும் நிருத்தி 10வ ஆச்சு”ன்னேன். அவள் எண்ணை தேச்சு குளிச்சதேயில்லையாம்.
நான் சொச்ச நேரத்தை என்ணைகுளியல் பத்தியும் நன்மைகள் பத்தியும் சொல்லிட்டு வந்தேன். பயத்தம்பருப்பு பொடிபண்ணி தேய்ச்சு குளிச்சா தோல் பள பலன்னு ஆகும்னு சொல்லிவச்சேன்.
இப்படியே 15 வாரம் ஓடிடுத்து. ஒண்ணு மட்டும் புரிஞ்சது. என் பிபி ஸ்டெடியா 120லேந்து 130 வரைக்கும் ஊசலாடிண்டிருக்குன்னும் ஒண்ணும் பெரீசா பயப்படவேண்டாம்னும், மனசை லேசா வச்சுண்டா லைஃப் ஈஸியாப்போயிடும்னும். வளர்மதி என் வாழ்க்கையில் ஒரு முக்கியமான அங்கமாகிவிட்டாள்னும் புரிஞ்சது. எங்களுக்குள் ஏற்பட்ட நட்புக்கு விளக்கம் கிடைக்கலை. எனக்கு ஒரு பெண் இருந்தால் அவளைவிட வளர்மஹிக்கு 15 வயசு ஜாஸ்தியா இருக்கும். பேத்தி இருந்தால் இவளைவிட பேத்திக்கு 12 வயசு கம்மியாயிருக்கும். அப்படி ஒரு ரெண்டும்கெட்டான் வயசுப்பொருத்தம். ஆனாலும் விகல்பமில்லாம அவளை எனக்கு ரொம்பவே பிடிச்சிருந்தது.
அவளுக்கு நான் அப்பாவும் இல்லை, தாத்தாவாகவும் இல்லை, எங்கேயோ நடுவில். ஆனால் நாங்க ரெண்டுபேரும் ரொம்ப ஒருத்தரை ஒருத்தர் இனம்புரியாத எதிர்பார்ப்போடு வாரா வாரம் சந்திச்சிண்டு, இது வேர லெவெல். நீங்க என்ன நினெச்சாலும் அதுக்கும் மேலன்னு தோணரது.
அன்னைக்கு எப்பவும் போல பிபி செக் பண்ண போகணும். உள்ளேந்து புது டிஷெர்ட் ஒண்ணு எடுத்து போட்டுண்டு. கருநீலம். காலரோட. அதை ஒரே ஒருதடவைதான் போட்டுண்டேன். அதை திரும்ப எடுத்துப்போட்டுண்டதுக்கு ஒரு காரணம். அன்னைக்கு வளர்மதிக்கு பிறந்தநாள். அவளுக்காக ஒரு பென்செட் வண்ணத்தாளில் கட்டி வச்சிருன்னு சொன்னதை போர வழீல ஃபேன்ஸி ஸ்டோரில் வாங்கிண்டு போகணும். அவள் சரீன்னா கிட்டக்கேயே இருக்கிர லோயி ஸ்வீட்ஷாப்பில் அழைச்சிண்டு போய் ஏதாவது சாப்பிட வாங்கிக்கொடுக்கலாம்னு.
என்னைக்கும் இல்லாத துள்ளலோட போரேன்.
அவளைக்கானலை. மீசை வச்சிண்டு பிஸியோதான் உக்காந்திருக்கான். என்னை கண்டுக்கவேயில்லை.
நாற்காலியை சத்தப்படுத்திண்டு உக்காரரேன், அவன் கவனத்தை ஈர்க்க. “என்ன சார்”கிரான். “வளர்மதி இல்லையா? இன்னைக்கு பிபி செக் பண்ணிக்க வரேன்னு சொல்லியிருந்தேனே?” “அமாம் சார் ரெஜிஸ்டரில் எழுதி வச்சிருக்கா. “ஏன், அவள் எங்கே, அவ தான் வழக்கமா பாப்பா?” “சார், அவள் வேலையை விட்டுட்டு திருச்சி போயிட்டா.” அதிர்ச்சியில் உறைஞ்சு போரென்.
எங்கிட்டேகூட சொல்லாமவா? அப்படி என்ன நடந்தது? யாருக்காவது உடம்பு சரியில்லையா?
பிஸியோ மெல்ல சொல்ரான். “வளர்மதி வர எல்லா கஸ்டமர்கிட்டேயும் பெர்சனலா நெறுங்கி பழகிட்டான்னு யாரொ லேடி எங்க ஓனர்கிட்டே போனில் கம்ப்ளைன்ட் செஞ்சுட்டா சார். அவள் அப்படிப்பட்ட பொண் இல்லை. ஆனாலும் சரியா விசாரிக்காம வேலைலேந்து தூக்கிட்டா. அதான் யார்கிட்டேயும் சொல்லாம போயிட்டாள்”.
அன்னைக்கு எனக்கு பிபி 150/100 காட்டித்து. மனசு பட படன்னு விவரமில்லாம அலைபாஞ்சது.
அவளோட நிலமைக்கு நாந்தான் காரணமோன்னு பயம் சூழ்ந்திண்டது. அவளுக்கு அந்த வேலையும் அதில் கிடைத்த சம்பளமும் எவ்வளவு அவசியம்னு எனக்கு தெரியும். இவள் யாரோட பழகினா இப்படி ஒருத்தர் கம்ப்ளைன்ட் செய்ய? ஆத்துக்கு வந்து என்ன பண்ரதுன்னு தெரியாம அப்படியே வாசல் ஊஞ்சலில் உக்காந்துக்கரேன்.
மாட்டுப்பொண்ணு எப்போவும் இல்லாம வாசலுக்கு வந்து, “மாமா காபி போடட்டுமா”ன்னு கேக்கரா. அவ கண்ணில் என்னைக்கும் இல்லாத நமுட்டு சிரிப்பும் இனம் புரியாத சந்தோஷமும் பாக்கிரேன்.
எல்லாமே விளங்கினா மாதிரி இருந்தது.😢🙏
No comments:
Post a Comment