நன்றி: அறிவுஜீவி சுஜாதா வாசகர்கள் குழு
கடவுள் இயந்திரம் - சுஜாதா ( விஞ்ஞான) சிறுகதை - (2001)
ஆபீஸில் அவ்வளவு உற்சாக தினமல்ல. ரூபன் விட்டுப் போய்விட்டான். திலீபனுக்கு எய்ட்ஸ். நேத்ரி இன்னும் வரவில்லை. 10 மணிக்கு நித்யனை பெரியவர் கூப்பிட்டனுப்பினார். உள்ளே நுழைந்ததும் புஸ்தி மீசையும் கழுத்து வரை மூடியிருந்த ஸ்கார்ப்பும், பட்டாபட்டி டீ ஷர்ட்டுமாக புன்னகைத்து எதிர் சீட்டில் அமர்ந்திருந்த பெரிய மனிதரை காட்டினார். ஒட்ட வெட்டப்பட்ட கிராப்புடன் கச்சிதமாக இருந்தார். பக்கத்து சீட்டில் தன் சைஸுக்கு ஒவ்வாத பெட்டி வைத்திருந்தார்.
"பையா, மீட் ப்ரொபசர் ராகவானந்தம். இவர் ஒரு அற்புதம் கண்டுபிடித்திருக்கிறார். நம் கம்பெனி மூலம் அதை விளம்பரப்படுத்த வேண்டும். இது நித்யன், இந்தக் கம்பெனியின் உயிர் நாடி"…..
"என்ன ப்ராடக்ட்?" என்றான் நித்யன்
பேராசிரியர் அவனை அற்பமாக பார்ப்பதை ரசிக்காமல், "கடவுள் பெட்டி. விளம்பரமே இப்படி வெச்சுரலாமே. ப்ரொபசர், பெட்டிக்குள் கடவுள், உங்கள் முட்டிக்குள் கடவுள், முழங்கால் முட்டி ஞாபகம் வரும். ப்ராடக்ட் என்ன செய்யும் சொல்லுங்க" என்றான் நித்யன்.
"சொல்லுங்க ப்ரொபசர், நீங்கதான் கம்பெனி முதலாளியா?"
"இல்லை. நான் கண்டுபிடித்த விஞ்ஞானி" என்று இரண்டு ஆஸ்பிரின் மாத்திரைகளை கிழித்து வாயில் போட்டுக் கொண்டார்
"கடவுள் பெட்டின்னா ! கொஞ்சம் விவரமாக சொல்லுங்க"
"சிம்பிள். கடவுள் எங்கும் இருக்கிறார். இந்த பெட்டிக்குள்ளே அவரை கொஞ்சம் சிரப் மாதிரி, கான்சன்ட்ரேட் மாதிரி அவரை கிரகிச்சு அடச்சு வெச்சிருக்கேன்".....
"மை காட்…. எந்தக் கடவுள்?"....
"எந்தக் கடவுள் தேவையோ அந்தக் கடவுள்"
“யு மஸ்ட் பி ஜோக்கிங், ப்ரொபசர்"
"ஒரு முறை பார்த்தீங்கன்னா நம்புவீங்க. மின்சாரம் இல்லையா அதை பேட்டரியில் அல்லது கப்பாசிட்டரில் சேர்த்து வைக்க முடியும் இல்லையா? மின்சாரம் ஒரு சக்தி. அதுபோல கடவுள் சக்தி தான். எங்கும் இருக்கிறார். அதனால் சப்ளை ப்ராப்ளம் இல்லை, மின்சாரத்தைப் போல. மின்சாரத்தை சேர்த்துவைக்க முடியும் என்றால் கடவுளை சேர்த்துவைக்க முடியாதா?
நித்யனுக்கு நம்பிக்கையில்லை. ஆனால் கஸ்டமர் / கிளையண்ட் சொல்வது அனைத்தும் வேதவாக்கு என்பது கம்பெனி பாலிசி
"அந்தப் பெட்டிக்குள் கைவிட்டால் ஷாக் அடிக்குமோ?" என்றான் கேலியாக.
"சில சமயத்தில் தான் ஷாக் அடிக்கும். ராமர் கிருஷ்ணர் அதெல்லாம் மைல்ட். காளி கொஞ்சம் உதறும். அல்லா, இயேசுநாதர் இவங்களெல்லாம் ரொம்ப மைல்டு. . புத்தர் புஷ்பம் மாதிரி ரொம்ப பொறுமை. இந்த கிராமத்து மதுரை வீரன், காட்டுவிரியன், முத்துக்கருப்பன் இவங்கதான் கொஞ்சம் அடக்கமுடியாமப் போயிடும். அதுவும் மகமாயி"…..
"என்ன சொல்றீங்க நீங்க ? இந்தப் பெட்டிக்குள்ளே எந்தக் கடவுளை வேணுமானாலும் அடச்சு வைச்சுக்கலாமா"?
"அடைத்து விற்க போறாரு" என்றார் பெரியவர்
"அமேஸிங். பெட்டியைக் கொண்டுவந்து இருக்கீங்களா?"
அவர் தன்னருகில் இருந்த பெட்டியை எடுத்தார். ஒரு மாதிரி அரக்கு நிற பெட்டி போல உயரமாக குறுகலாக இருந்தது. ஆனால், பளபளப்பாக அரக்கு நிற பழைய காலத்து கிராமபோன் போலவும் இருந்தது. அதிலிருந்து மையமாக ஆனால் விருப்பமான வாசனை வந்தது.
"லெட் மி ஸீ. இதுக்குள்ள கடவுள் இருக்காருங்கறீங்க? என்றான் ஆச்சரியத்துடன்.
"ஆமா, கடைசியா வெச்சது ஜோராஸ்ட்ரிய கடவுள்னு நினைக்கிறேன். கொஞ்சம் சூடா இருப்பார். பாகன் கடவுள் ஒருவன் இருக்கார். இனிமையா ஃப்ளூட் வாசிக்கிறார், கிருஷ்ணர் கூடப் பரவாயில்லை. பிருந்தாவன சாரங்கா ராகத்தை நன்றாக வாசிக்கிறார். தொட்டுக் கேட்டுகிட்டே இருக்கலாம்."
நித்யன் முதலாளியைத் தனியாக அழைத்து, " திஸ் மான் இஸ் எ நட்கேஸ்" என்றான்.
"நமக்கென்ன, விளம்பர ஏஜென்ஸி கொடுக்கிறாங்க.ஜெனரல் எலெக்ட்ரானிக்ஸ் பெரிய பார்ட்டி. அதுக்குள்ளே கடவுள் இருக்கோ, கடலை இருக்கோ? விளம்பர வாக்கியம் அமைச்சு, வசீகரமாக விளம்பரம் செய்யணும். அதானே! தட்ஸ் இட். பையா, கஸ்டமரின் மன ஆரோக்கியத்தைப் பற்றி நாம் கவலைப்படக்கூடாது."
"இருந்தாலும் மக்களை ஏமாத்தறதில்லையா?"
"கடவுள் பெட்டிக்குள்ள இருந்தா என்ன, வெளியே இருந்தா என்னப்பா, அந்தாளு சொல்றதில கொஞ்சம் அர்த்தம் இருக்கு. டயம் இருந்தா கேட்டுப்பார். ஸ்க்ரிப்ச்சர்ஸ் அத்தனையும் நெட்டுரு.பைபிள், குரான், தம்மபதா, கீதை....உன்னைப் பொறுத்தவரை ஒரு விளம்பர வாக்கியம்...அவ்வளவுதான்...தியாலஜி, பிலாசபி இதெல்லாம் வுட்டுரு . அம்பேல் !"
"இந்தப் பெட்டி என்ன விலை?" என்றான் நித்யன்.
"விலை கொஞ்சம் அதிகம்தான்."
"கடவுள்னா, சும்மாவா!"
"கேலி புரியுது. கடவுளுக்கு விலை இல்லை. கடவுள் சக்தியை கிரகிக்கத் தங்கத்தில் இன்லே வர்க் பண்ண வேண்டியிருந்தது. தங்கம் மின்சாரத்தை அதிகம் கடத்தும்னு தெரியுமில்லே?"
நித்யன் அவர்பால் நாற்காலியை இழுத்துப் போட்டுக்கொண்டு "டாக்டர் பரமானந்தம்..."
"பேரு ராகவானந்தம்..."
"ஸம் ஆனந்தம்...நீங்க நிஜமாவே இதை நம்பறீங்களா?"
"இதில் நம்பிக்கை பிரச்சினையே இல்லைப்பா. கடவுள் இருக்கார். அவர் சக்தியும் இருக்காது. இன்ஸ்ட்ரக்ஷன் மான்யுவலைப் பாருங்க. பைபிள், குரான், தம்மபதா, கீதை, தாவ் ...எல்லாத்தையும் படிச்சு அதனதன் சாரத்தைக் கொண்டுவந்திருக்கேன். எகிப்தியச் சூரியக் கடவுள் ரா கூட ஆப்ஷனா கொண்டுவரப்போறேன்."
"பிள்ளையார், முருகன்..."
"அதெல்லாம் ரொம்பச் சுலபம்..."
ஓகே, ஓகே, இது எப்படி வேலை செய்யுதுன்னு சொல்லுங்க. கடவுளைப் பத்தி இன்னும் தீர்மானிக்காத என்னைப் போல பாமரனுக்குப் புரியும்படி..."
"சிம்பிள். பெட்டி மேல பிளேட் இருக்கு, பாருங்க. இதைத் தொட்டுக்கங்க. தொட்டுக்கிட்டு இந்தக் குமிழ் இருக்கு பாருங்க இதை மெல்ல, மெல்லத் திருகுங்க. உங்களுக்கு என்ன கடவுள் வேணுமோ நினைச்சுக்குங்க. அந்தக் கடவுள் உங்க மேல பரவுவார். அவருடைய சக்திகள் உங்களுக்கு ஏற்படும். இன் அதர் வர்ட்ஸ் டைம் அவுட் வரைக்கும் நீங்க கடவுளா மாறுவீங்க."
:”அதென்ன டைம் அவுட்?"
"பெட்டிக்குள்ள எலெக்ட்ரானிக் டைமர் இருக்கு. சொல்லுங்க, எந்தக் கடவுள் வேணும்?"
"ம்ம்ம்...எனக்குப் பிடிச்சது கிருஷ்ணர்தான்"
"லிஸ்ட்ல இருக்கு. சரி" என்று அதனுள் இருந்த எண் வரிசையில் எட்டாம் நம்பரை வைத்தார்.
நித்யன் பெட்டியைத் தொட்டுக்கொண்டு, மெல்ல அந்தக் குமிழைத் திருகினான்."ம்ஹூம்...எதுவும் இல்லை"
"கிருஷ்ணர் தெரியலை உங்களுக்கு! சரியாப் பாருங்க. கிருஷ்ணருடைய மாயா சக்தி வர ஆரம்பிச்சிருக்குமே!"
"இல்லை" கண்ணை மூடிக் கொண்டான். பார்த்தான். தெரிந்தது எல்லாம் எதிரே இருந்த கே.பி. வெங்கட்ரமணா கம்பெனி காலண்டர்தான். ப்ரொபசர் குமிழைக் கடைசிவரை திருகினார்,
"ம்ஹூம், கடவுளும் இல்லை, கட் பாடியும் இல்லை"
"கை எடுங்க" என்று ப்ரொபசர் பெட்டியை ஜாக்கிரதையாகத் திறந்து பார்த்தார்.
"ஓ, ஓ, இதுதான் ப்ராப்ளம்" என்று அதிலிருந்து சின்னதாக ஒரு பொருளை எடுத்து "தைரிஸ்டர் புட்டுக்கிச்சு"
நித்யன் அவரை வியப்புடன் பார்த்தான். இவரை மேதை என்பதா? பைத்தியமா? ஆனால், எந்தவித பாசாங்கும் இன்றித் தீவிரமாக முகத்தை வைத்துக்கொண்டிருந்தார்.தன் கைப்பையிலிருந்து ஒரு குட்டியான ஸால்டரிங் அயர்னை எடுத்து, "நல்லவேளை, ஸ்பேர் இருக்கு" என்று பெட்டியைத் திறந்து எதையோ உருக்கிப் பற்ற வைத்தார். "இப்பப் பாருங்க" என்றார்.
இப்போது நித்யன் அதில் கை வைத்தபோது அதன் குமிழ் முழுவதும் திருப்பட்டிருப்பதை ராகவானந்தம் கவனிக்கவில்லை.
நித்யன் முகத்தில் ஒருவிதமான மாறுதல் ஏற்பட்டது.
"தெரியுதா? உடல் பூரா பொங்குமே, பாட்டு ? புல்லாங்குழல் கேக்குதா? அவர் சக்தி அனைத்தும் உனக்கு இத்தனை நேரத்துக்கு வந்திருக்கணுமே?"
குமிழைப் பார்த்தார். "ஊப்ஸ், கொஞ்சம் அதிகம் வெச்சுட்டேன்" என்று குமிழை அவசரமாக அப்பிரதட்சணமாகத் திருப்பினார்.
நித்யன் எழுந்து மெல்ல ஒரே திசையில் பார்த்துக்கொண்டு, நடந்து பெரிய சன்னல் கதவைத் திறந்து அதன் விளிம்பில் ஏறிக்கொண்டு கைகளை இறக்கை போல விரித்துக் கொண்டு, "பரித்ராணாய சாதூனாம், விநாசாய சதூஷ்க்ருதாம், தர்ம சம்ஸ்தாபனார்த்தாய, சம்பவாமி யுகே, யுகே" என்று ஆறாவது மாடியிலிருந்து குதித்தான்.
அவன் பறப்பானா ? பறந்தானா?
No comments:
Post a Comment