Sunday, July 19, 2020

ஆண்வாடை (

ஆண்வாடை (மனதை தொட்டுவிடும் கதை – 98)
#ganeshamarkalam

“ஏண்டீ இப்படி சொல்ராய். இப்படியே பண்ணிண்டு இருந்தாயானா உனக்கு இந்த ஜன்மத்தில் கல்யாணம் ஆகாது. நான் என் தம்பிக்கு போன் போட்டு இதுக்கு ஏதாவது தீர்வு பண்ணச்சொல்ரேன். உனக்கு அவந்தான் சரீ”ன்னு ஆனந்தி கத்த, “நீ என்ன வேணும்னாலும் செஞ்சுக்கோ, எனக்கு பிடிச்சாத்தான் நான் சரீன்னு சொல்வேன், நீ காட்டரவனுக்கெல்லாம் நான் கழுத்தை நீட்ட முடியாது”ன்னு வர்ஷா பதிலுக்கு கத்த, வீடே அதிர்ந்தது.

வர்ஷா ஆனந்தி-சடகோபன் தம்பதிகளுக்கு ஒரே பொண்ணு. நன்னா படிச்சு பெரீய உத்யோகத்தில் இருக்கா. வயசு 28, இவளுக்கு சீக்கிரம் ஒரு நல்ல வரனா முடிச்சுடணும்னு. இவளோ காதில் ஹேண்ட்ஸ்ஃப்ரீயும், கையில் டேப்புமா, மாசத்துக்கு 4 தடவை பிளேனில் பறந்துண்டு, இவளை ஒரு இடத்தில் நிக்கவச்சு கல்யாணப்பேச்சை எடுக்கவே முடியலை. பாக்கர வரன், பலவிஷயங்கள் பொருந்தி கூடி வரச்சே எப்பவும் சொல்ராப்புலே ஏதோ நொட்டாங்கு சொல்லி தட்டிக்கழிக்கரா. இவளை இப்படியே விட்டா அப்புரம் என்ன ஆகுமோன்னு கவலை வந்துடுத்து.

மணிகண்டன், அதான் சடகோபன் மச்சினன், மாயவரத்தில் இருக்கான். அவனையும் பாத்து நாளாச்சு. வரச்சொல்லலாம்னு இவா முடிவு பண்ணிட்டா. “அதுக்கென்ன அத்திம்பேர், நானும் என் ஆத்துக்காரியும் சேர்ந்தே வரோம். வர்ஷா எங்காத்து பொண் மாதிரி அவளுக்கு ஒரு வரன் நிச்சயம் செஞ்சுட்டு நான் ஊருக்கு திரும்பரேன்”னு டணால்னு ஞாயித்துக்கிழமை வந்து சேர்ந்தான்.

 “பஸ்ஸில் தாம்பரத்தில் இறங்கி நேர நங்கநல்லூருக்கு ட்ரைனில் வந்தோம், குளிச்சிட்டு வரேன் அக்கா பொங்கலும் கொத்ஸுவும் பண்ணி வை”ன்னுட்டு போனான். “மத்தியான சமையலை கௌரி பாத்துப்பா, நீ ரெஸ்ட் எடுத்துக்கோ.” கௌரிக்கு தன்னைக் கேக்காம இவன் அனௌன்ஸ் செஞ்சுட்டானேன்னு கண் சிவந்தது.

இவா வந்தன்னைக்கு வர்ஷா வெளியூர். நாளைக்குத்தான் வரா. அதுக்குள்ள இவங்கிட்டே தனியா சில விஷயங்களை பகிர்ந்துக்கணும்னு இவா பிளான்.

குளிச்சிட்டு வந்தவன் “அக்கா கையால சாப்டு ரொம்ப வருஷம் ஆச்சு”ன்னுட்டு ஒரு கட்டு கட்டினான். “ராத்திரி பஸ்ஸில் சரியா தூக்கம் இல்லை, பொங்கலும் கொத்ஸுவும் அபாரம், அசதியாயிருக்கு அத்திம்பேர், சித்த சிரம பரிகாரம் செஞ்சுண்டு அப்புரம் பேசுவோமே”ன்னு அப்படியே ஹாலில் சரிஞ்சவன் 1 மணிவரைக்கும் அசையலை. திடீர்னு ஏதோ கெட்ட சொப்பனம் கண்டா மாதிரி சிலிர்த்திண்டு எழுந்தவன், “அக்கா சமையல் ஆயிடுத்தா வயித்தை கிள்ரது”ங்கரான். 

சடகோபன், இவனுக்கு இன்னொரு தடவை வயித்தை ரொப்பினோமானால் இவனை வரவழைச்ச காரியம் ஆகாதுன்னு “எல்லோரும் வாங்கோ 2 மணிக்கு இலை போடலாம், இப்போ விஷயம் பெசணும்னு உக்காரரர்.

“இதுவரைக்கும் 49 வரன், அதில் 43 ஜாதகம் நன்னா பொருந்தித்து, எல்லாம் நல்ல உத்யோகம், பலபேர் வெளிநாட்டில் செட்டில், எல்லோரும் கண்ணுக்கு ராஜா மாதிரி இவளுக்கு பொருத்தமா, ஆனா எவனையும் இவளுக்கு பிடிக்கலை. அழகை எதிர்பாக்கிராளா, இல்லை அதிக படிப்பா, ஒவ்வொரு தடவையும் அவ சொல்ரதை அடுத்த வரனில் நாங்க இருக்கான்னு பாத்துட்டுதான் இவகிட்டே வரோம், கடைசீ நிமிஷத்தில் வேண்டாம்கிரா. என்ன செய்யலாம்?” இப்படி கேட்டுட்டு எல்லோரும் மணிகண்டன் மூஞ்சியையே பாத்திண்டு இருந்தா.

அவனோ நீண்ட கொட்டாவி ஒண்ணை எடுத்து விட்டான். 49 வரன் பாத்தேளா? எங்கம்மா எனக்கு 3தான் பாத்தா. இன்னும் 5 பாத்திருக்கலாமே அவசரப்பட்டுட்டாளோன்னு இவன் கவலை. ஆனால் வந்தது இவனுக்கு ரெண்டாம் கல்யாணத்துக்கு இல்லையே! இந்த விஷயத்தில் ஒரு சுமுகமான தீர்வு கிடைக்கும்னு நம்பர அத்திம்பேருக்கும் அக்காவுக்கும் துரோகம் செய்யாம இதில் நன்னா உழைக்கணும். இல்லைன்னா நாம ஊரை சுத்திபாத்துட்டு உக்காந்து சாப்டுட்டு போக வந்தோம்னு அவாளுக்கு தோணிடும்.

“அவளுக்கு எப்படித்தான் கணவன் வேணுமாம்?” இப்படி கேட்டா விவரமான பதில் தரணும், அதில் கொஞ்சம் நேரம் போயிடும், கவனமா கேக்கிராப்புலே கண் அயரலாம். அதுக்கு ஆனந்தியோ “நாளைக்கு உன் மருமாள் வருவா நீயே கேட்டுத் தெரிஞ்சுக்கோ”ன்னுட்டா. இவனுக்கு சப்புன்னு ஆயிடரது. “இப்படி எல்லாரையும் வேண்டாம்னு சொல்ரவ மனசுலே யாராவது இருப்பா. அதைக்கேட்டியா?” சடகோபனுக்கு சட்டுன்னு கோபம் வரது. “என் பொண்ணு அப்படியெல்லாம் செய்ய மாட்டா.” “அத்திம்பேர் இன்னும் நீங்க அந்த காலத்துலேயே இருக்கேள். விடுங்கோ, அதையும் நானே விசாரிக்கரேன்.

அப்புரம் உங்களைப் பொருத்தவரைக்கும் இதுவரை பாத்த வரங்களில் ஒரு 2 அ 3 வரனை யார் ஆத்துக்கு மாப்பிள்ளையா வந்தால் நன்னா இருக்கும்னு நினைக்கரேளோ எடுத்துக்கொடுங்கோ. அவாளுக்கு இன்னும் கல்யாணம் ஆகலைன்னும் விசாரிச்சுட்டு. அப்புரம் பாருங்கோ இந்த மணியோட சாமர்த்தியத்தை!”ன்னு சொல்லிட்டு, “இப்போ சாப்பிடலாமா? கௌரி, இலை போடுடீ!”

சடகோபனுக்கு இவன் சாப்பாட்டில் காட்ர கவனத்தை காரியத்திலும் காட்டுவானான்னு டவுட்டு. அவருக்கு என்னவோ இவன் இங்கே எஞ்சாய் பண்ணவே வந்திருக்கான்னு ஸ்பஷ்டமா தெரிஞ்சுது.

வர்ஷா வந்ததும் “ஹாய் மணி மாமா, என்ன திடீர்னு, இங்கே ஏன் வந்தாய்”னு கேட்டுட்டா. அது இந்தக்காலத்து பெண்கள் தமிழ் பேசரது. மனசில் பட்டதை அப்படியே ஆங்கிலத்தில் யோசிச்சு, தமிஷில் மொழிபெயர்த்து அதன் அர்த்தம் கேக்கிரவாளுக்கு எப்படிப்போகும்னு லவலேசமும் கவலைப்படாமல், கேட்ட கேள்விக்கு பதில் தரலைன்னாலும் பரவாயில்லைகிராப்புலே. 

ஞாயித்துக்கிழமை ஆனதால் வெளிக்காரியம்னு ஓடி ஒளிஞ்சுக்க முடியலை. ஆத்தில் இன்னும் ரெண்டு பேர் இவளை கட்டம் கட்டி மடக்கரத்துக்கு ரெடியா இருக்காப்புலே இவளையே கண்காணிச்சிண்டு, என்ன பண்ரா, எப்போ ஹாலுக்கு வருவா, சூழ்ந்துக்கலாம்னு காத்திண்டிருக்கா மாதிரி. அப்போதான் மணிகண்டன் ஒரு உத்தி யோசிக்கரான். “வர்ஷாகுட்டி, உங்கூரில் கடற்கரை இருக்காமே, மாமாவுக்கு அழைச்சிண்டு போய் காட்டு, அதுவும் நீ கார் ஓட்டிப்பாக்கணும்னு ஆசைடா”ன்னான். இவளும் இவன் ஒருத்தனை, கிராமத்தானை சமாளிக்கரது ஈஸி, எல்லோர்கிட்டேயும் மாட்டிண்டா காண்டாயிடுவோம்னு “சரி மாமா வாங்கோ ஒரு லாங்க் போலாம்”கிரா.

கௌரி “அது என்ன லாங்க், நானும் வரேனே?” “லாங்க்னா ரொம்ப தூரம், கால் வலிக்கும்”னுட்டு இவா ரெண்டுபேர் மட்டும் கிளம்பரா. போரச்சே இவன் அக்காகிட்டே வந்து காதோட “நான் பாத்துக்கரேன், கவலைப்படாதே”ங்கிரான். கௌரி வர்ஷாகிட்டே “உங்க மாம்மாவுக்கு விவரம் பத்தாது, ஜாக்கிரதையா அழைச்சிண்டு போயிட்டு வா”ங்கிரா.
ரெண்டு பேரும் ECR டோல்கேட் கிட்டே இருக்கர ஜுஹு பீச்சுக்கு போரா. யாரும் அதிகமா வராத, பணக்காரா பீச் பங்க்ளா வச்சிருக்கிர இடம். லீவுங்கிரத்துனாலே கொஞ்சம் ஃபேமிலி அலைகள் கிட்டே ஆட்டம். இவா ரெண்டு பெரும் ஒரு இடம் பாத்து காரை நிருத்திட்டு மணலில் உக்காந்துக்கரா. 

உக்காந்ததும் வர்ஷாவுக்கு இவனை இங்கேயே மடக்கி மாயவரத்துக்கு அனுப்பிடணும்னு தோண்ரது.

“மணி மாமா, நீங்க என்னை கல்யாணத்துக்கு சம்மதம் வாங்கவும் அவாளுக்கு பிடிச்ச பையனை ஓகே செய்யவும்தானே வந்திருக்கேள்?”

 “பக்”குன்னாலும் இவன் எதிர்பார்த்ததுதான். “இல்லைம்மா, உன் விருப்பத்தை தெரிஞ்சுண்டு இனிமேல் இவா உன்னை தொந்திரவு செய்யாம இருக்க ஒரு வழி செஞ்சுட்டு போலாம்னு வந்தேன்.” ஆச்சர்யமா, அப்படீன்னா நாம தான் அவசரப்பட்டு இவரை அவமதிப்பா ஏதாவது சொல்லிட்டோ மோன்னு வர்ஷாவுக்கு. ரெண்டு பேருக்கும் வயசில் 20 வருஷம் வித்யாசம். படிப்பில் மருமாள் என்ன படிச்சிருக்கான்னு கண்டுபிடிச்சு அதை புரிஞ்சுக்கவே மாமாக்கு ரெண்டு மாசம் ஆகும். இவா ரெண்டு பேரும் என்னத்தை பேசி யார் ஜயிக்கப்போரான்னு அங்கே கிட்டக்கே மண்லேந்து வெளீலெ வந்த ஒரு நண்டு யோசனையில் மூழ்கித்து.

“கல்யாணத்தில் ஆசைதானே?” “ஆமாம், ஆனா கண்டவனையில்லை!” “அப்படீன்னா காணாதவனை எப்படி பண்ணிப்பாய்?” “இதுதானே வேண்டாங்கிரது. எனக்குப் பிடிக்கணும், அதில் நான் கெட்டியா இருக்கேன்.” “49இல் ஒண்ணுமேவா தேரலை?” “அப்படீன்னு இல்லை, முதல்லே இதைவிட இன்னும் நல்ல மாப்பிள்ளையா பாக்கலாம்னு அம்மாவே தள்ளிப்போட்டா. அப்புரம் அதே எனக்கும் தோணித்து. இதைவிட இன்னும் நன்னா ஒருத்தன் வருவான்னு. அப்புரம் என்ன அவசரம், கொஞ்சநாள் ஃப்ரீயா அனுபவிச்சுட்டு அப்புரம் பாத்துக்கலாம்னு. பெண்பாக்க நேரில் வந்த மாப்பிள்ளை எனக்கு பிடிக்கராமாதிரி இருந்தா கூட வந்தவா எத்தையாவது கேட்டு, என் மூடை கெடுத்துட்டு போனா. சில பையன்கள் பேச ஆரம்பிச்சதும் நமக்கு இவன் செட் ஆக மாட்டான்னு தோணித்து. எனக்குத் தெரியும் அம்மா அப்பா ரொம்பவே கஷ்டப்பட்ரான்னு ஆனா இது என் வாழ்க்கை, நான்தான் முடிவுசெய்யணும். இதுவரைக்கும் ஒண்ணும் திருப்தியாயில்லை நான் என்ன செய்யட்டும்?”

“ஒண்ணும் செய்ய வேண்டாம், உனக்கு எப்படிப்பட்ட கணவன் அல்லது வாழ்க்கை துணை வேணும்னு நினைக்கராய்?” “துணைங்கிர வார்த்தைக்கு அர்த்தமே இல்லை மாமா, நானே கை நிறைய சம்பாதிக்கரேன், பேங்கில் டெபாசிட் இருக்கு. 49இல் 3 பேர்தான் என்னைவிட ஜாஸ்தி சம்பளம். இவா என்ன எனக்குத்துணை? நான்தான் அவாளுக்கு துணை.” “அப்படீன்னா காசு பணம்தான் துணையா, மனோரீதியில் ஒரு துணை, எல்லாத்தையும் பகிர்ந்துக்கரத்துக்கு, இல்லை வயசு முதிர்ந்த காலத்தில் நம்மை புரிஞ்சிண்டு நமக்கு ஆதரவா கூட இருக்காங்கிர தெம்பு வரத்துக்கு?” “வேணும்தான், வரவன் அப்போ அப்படி இருப்பான்னு எப்படி இப்போவே நம்பரது? எனக்கு அப்படி ஒரு ரிஸ்க் எடுக்கதோணலை. ஃபைனான்ஷியல் செக்யூரிடி பல விஷயங்களை அதுவே கொடுத்துட்ரது.” 

“சரிதான், ஒரு பொண்ணா பிறந்தவளுக்கு ஆண்வாடையே வேண்டாமா? அதைப்பத்தி உன் கருத்தென்ன?” “வேணும்தான், அதுக்காக வாழ்க்கையை கேம்பிள் பண்ண நான் விரும்பலை.”

அதுக்கு அந்த மாமாக்காரன் சொல்ரான். “வர்ஷா, நீ நிறைய படிச்சிருக்காய், உனக்கு நான் என்ன சொல்லித்தரப்போரேன். கௌரியை நான் எப்படி கல்யாணம் செஞ்சுண்டேன் தெரியுமோ? அப்போ நீ சின்னக்குழந்தை. ஜான்வாஸக்காரில் என் பக்கத்தில் உக்காந்துண்டு வந்தாய். நான் 12 வரைக்கும் படிச்சுட்டு, BA ஃபெயில். ஆனா கௌரியோட அப்பா எனக்கு குமாஸ்த்தா வேலை பாத்துக்கொடுத்தர். இன்னி வரைக்கும் நான் ஃபெயில்னு யாருக்கும் அவர் சொல்லலை. கௌரி 5ஆம் கிளாஸ் தாண்டலை. அப்போவே தோணித்து படிப்பேயில்லாத இவளோட எப்படி வாழரதுன்னு தோணித்து. இன்னைக்கு எனக்குத் தெரியும் என்னைவிட அவள் எந்த விதத்திலும் குறைஞ்சவ இல்லைன்னு. கொஞ்சம் வெகுளி, எங்கிட்டேயே ஏமாந்துடுவா! ரொம்ப பொஸசிவ். அவளுக்கு உள்ளூர உங்கூட நான் தனியா வந்தது கஷ்டப்படுத்தியிருக்கும்.” 

“இதெயெல்லாம் என் கிட்டே ஏன் சொல்ரேள்?” “நல்ல கேள்வி. வாழ்க்கையில் உங்கூட முழுசா கடைசீவரைக்கும் வரத்துக்கு, ஆயுசு பரியந்தம் சரிபங்கு காதலையும் கோபத்தை கொட்டி, ஹாஸ்யத்தை ஷேர் பண்ணி, சந்தோஷத்தை பகிர்ந்து சாப்பிட்டு, பொஸசிவ்வா உன்னை கன்ட்ரோல் செஞ்சு, அழுகை வந்தா உன் தோளில் சாஞ்சுக்க இல்லை ஆறுதலா உன் கண்ணீரை தொடைக்க ஒரு துணை அதுக்குத்தான் கல்யாணம். இதில் படிப்பு, பணம் காசு, குடும்ப ஸ்டேடஸ் இதெல்லாம் முக்கியமே இல்லை. இதை பாக்கிர பையனிடம் நீ ஆத்மார்த்தமா உணரணும். உணர்ந்தால் அவனை பிடிச்சிருக்குன்னு சொல்லலாமே. அதுக்கப்புரம் அவன் 30 வருஷம் கழிச்சு எதிர்பாக்கிராப்புல நடந்துக்கரது நடந்துக்காதது எல்லாம் நீ அவங்கிட்டே எப்படி நடந்துக்கராய் என்பதை பொருத்துதான். இதில் ரிஸ்கே இல்லை”ன்னான்

வர்ஷாவுக்கு புரியரா மாதிரி இருந்தது. அதை சட்டுன்னு பிடிச்சிண்ட மணி, “வர்ஷா இப்போ உனக்கும் வயசாகிடுத்துன்னு ஒப்புக்கொள்வாயா? இன்னும் ரெண்டு வருஷத்தில் 30க்கு அந்தப்பக்கம் போயிடுவாய். அப்போ உன்னையும் ஒருத்தனுக்கு பிடிக்கணுமே! அப்படியே பிடிச்சு பண்ணிண்டாலும் வயசாயிடுத்துன்னா ஒரு ஆண்பிள்ளைகிட்டேந்து நீ எதிர்பாக்கர சந்தோஷத்தை தேடித்தேடித்தான் அனுபவிக்கணும். வருத்தப்படுவாய்.”

“சரி இப்போ நான் என்ன செய்யணும்கிராய்?” “நான் 3 பையனை காமிக்கரேன் அதில் யார்கிட்டே உனக்கு நான் சொன்ன கெமிஸ்ட்ரி வரதுன்னு சொல்லு. அவனையே முடிச்சுடலாம்.” “அப்படீன்னா பெண் பாக்கும் படலமா? அய்யோ சாமீ, வேண்டாமே”ங்கிரா. “இல்லை, வேரமாதிரி ஏர்பாடு செய்யரேன், நீ சரின்னு மட்டும் சொல்லு.” “ஓகே மாமா நீ சொல்ரதையும் பண்ணலாம். ஆனா எனக்கு பிடிக்கலைன்னா பிடிக்கலை!”

2 வாரம் கழிச்சு மணிகண்டனும், கௌரியும் மாயவரம் கிளம்பினா. கல்யாணத்தேதியை குறிச்சுட்டு. ஆனந்தி-சடகோபன் தம்பதிக்கு அவன் என்ன பண்ணி இவள் கல்யாணத்துக்கு ஒத்துண்டா, அதுவும் இவா ஓகே செஞ்ச மூணில் ஒத்தனைன்னு?

மணிகண்டன் செஞ்சது, வர்ஷா மனசில் இருந்த காசு, பேங்க் பாலன்ஸ், லைஃப் செக்யூரிடி எங்கிர ஒட்டடையை எடுத்துட்டு, தேவை ஒரு துணைன்னு வலியுருத்தி, அதுக்காக இவளுக்கு ஆண்வாடை காட்டி அழைச்சிண்டு வந்தான்னு புரியாது. இவாளே செஞ்சிருக்கலாம். 

பட் ஒரு தாய்மாமன் வேண்டியிருந்தது.

No comments:

Post a Comment