#சண்டிகேஸ்வரர் சன்னதியில் கைதட்டுவது ஏன் ?
சிவாலயங்களில் நாம் தவறாமல் கடந்து செல்லக் கூடியது சண்டிகேஸ்வரர் சன்னதி.
பெரும்பாலானவர்கள்
இந்த சன்னதி அருகே வந்தவுடன்,
சொடக்கு போட்டோ அல்லது பலமாக கைதட்டியோ வணங்குவதை பார்த்திருப்போம்.
ஏன் நாமே கூட அதை செய்திருப்போம்.
நம்மில் பலருக்கும் இதில் குழப்பம் உண்டு.
சண்டிகேஸ்வரரை எப்படி வணங்குவது? என்று வணங்குவது?
உண்மையில் சண்டிகேஸ்வரர் என்பவர் ஒரு மிக சிறந்த சிவ பக்தர்.
அவர் எப்போதும் ஆழ்ந்த சிவ சிந்தனையிலே இருப்பவர் என்று கூறப்படுவதுண்டு.
யார் இந்த சண்டிகேஸ்வரர்?
சோழநாட்டின் சேய்ஞ்ஞலூர் என்ற திருத்தலத்தில் எச்சதத்தன் – பவித்திரை தம்பதியரின் புதல்வர் விசாரசருமன்.
பசுக்களை மேய்க்கும் தொழிலை மேற்கொண்ட போதிலும்,
சிறுவயது முதலே சிவபக்தி கொண்டவர்.
பசுக்கள் மீது மிகுந்த அன்பு கொண்டதால், பசுக்களும் இவரை தங்கள் உயிராகக் கருதின.
மாடு மேய்க்கச் செல்லும் இடத்திலும் மணலைக் குழைத்து சிவலிங்கம் வடித்து வணங்கும் அளவிற்கு,
சிவ பக்தி கொண்டவர்.
இவர் மேய்ச்சலில் இருக்கும் பசுக்களும் தங்கள் பாலை லிங்கத்தின் மேல் சுரந்து அபிஷேகம் செய்யும்.
இவ்வாறு சிவசேவை செய்த பசுக்கள்,
தங்கள் வீட்டுக்கு வந்த பிறகும், தங்கள் எஜமானர்களுக்கு தேவைக்கு அதிகமாகவே பாலைக் கொடுத்தன.
ஒருமுறை அந்த ஊர் இளைஞன் ஒருவன், சிவலிங்கம் மீது பசுக்கள் பால் சுரந்ததைப் பார்த்து விட்டு, ஊருக்குள் போய், விசாரசருமனின் செய்கை பற்றி சொல்லியதால், பசுக்களின் எஜமானர்களும் இது குறித்து எச்சதத்தனிடம் சொல்லி, மகனைக் கண்டித்து வைக்கும்படி கூறினர்.
உண்மையை அறிய,
ஒருநாள் மாடு மேய்க்கும் இடத்திற்கு வந்து மறைந்திருந்து கவனித்தான் எச்சதத்தன்.
அந்த இளைஞன் சொன்னது போலவே,
மண் லிங்கத்தின் மீது பசுக்கள் பாலைச் சொரிந்தன.
விசாரசருமன், லிங்கத்தின் முன் ஆழ்ந்த தியானத்தில் இருந்தான்.
கோபம் மேலிட எச்சதத்தன், வேகமாக மகன் அருகே வந்து அவனை உதைத்துக் கண்டித்தான்.
தன் தந்தையிடம், “இங்கே பசுக்கள் எவ்வளவு பாலைச் சுரந்தாலும், எஜமானர்களின் வீட்டுக்கும் போதுமான பாலைத் தருகின்றன.
சிவபூஜையைக் கெடுக்காதீர்கள்…”
என்றான் விசாரசருமன்.
மகன் தன்னை எதிர்த்துப் பேசுவதை பொறுத்துக் கொள்ள முடியாத எச்சதத்தன்,
மணல் லிங்கத்தை காலால் மிதித்து உடைத்து விட்டான்.
லிங்கத்தை காலால் மிதித்த கோபத்தில் மகன்,
அவரது கால் மீது தன் கையில் இருந்த குச்சியை எறிய,
அது சிவனருளால் கோடரியாக மாறி, அவரது காலை காயப்படுத்தியது.
தன் பக்தனின் பக்திக்கு மெச்சிய சிவபெருமான், பார்வதியுடன் தோன்றினார்.
எச்சதத்தனை மன்னித்து,
அவனது காயத்தை மறையும்படி செய்தார்.
விசாரசருமனுக்கு சிவ கணங்களை நிர்வாகம் செய்யும் சண்டேச பதவியை வழங்கியதுடன், தனக்கு சூட்டப்படும் மாலை, நைவேத்யம் ஆகியவை அவருக்கே தினமும் வழங்கப்படும் என அருள்பாலித்தார்.
இன்றும் சிவாலயங்களுக்கு வருபவர்கள் சண்டிகேஸ்வரரை வணங்காமல் சென்றால், அவர்கள் ஆலயத்துக்கு வந்த பலன் கிடைக்காது என்ற நம்பிக்கை இருக்கிறது.
மேலும் சிவனின் சொத்துகளை பாதுகாப்பவர் என்று நம்பப்படுவதால்,
சிவ ஆலயங்களை விட்டு செல்லுமுன், சண்டிகேஸ்வரர் முன் சென்று கைகளை துடைத்து, சிவன் கோயில் சொத்து எதையும் நாம் எடுத்து செல்லவில்லை என்பதை சண்டிகேஸ்வரர் தியானம் கலையாமல் சொல்ல வேண்டும்.
இதுவே முறை என்பதால்,
அடுத்த முறை நாம் சிவனை தரிசித்தப் பிறகு,
மனிதனாகப் பிறந்து தெய்வநிலைக்கு உயர்ந்த சண்டிகேஸ்வரரை,
அவரின் தியானம் கலையாமல் வணங்கி நமது வேண்டுதல்களை அவர் மூலம் ஈசனுக்கு தெரியப்படுத்த வேண்டி வணங்கி வரலாம்.
சிவாலயம்
சிவார்ப்பனம்
திருச்சிற்றம்பலம்
No comments:
Post a Comment