Friday, July 10, 2020

திருநாகையென்னும் நாகப்பட்டினம்

நமஸ்காரம்    

19.  திருநாகையென்னும் நாகப்பட்டினம்

மூலவர் :   நீலமேகப் பெருமாள், சவுந்தரராஜப் பெருமாள்
உற்சவர்  :  சவுந்தரராஜப் பெருமாள்
தாயார்  :  சௌந்தர்யவல்லி  கஜலெட்சுமி
உற்சவர்  தாயார் : கஜலஷ்மி

பாசுரம்

பொன்னிவர் மேனி மரகதத்தின் பொங்கிளஞ் சோதி யகலத்தாரம்
மின் இவர் வாயில் நல்வேத மோதும் வேதியர் வானவராவர் தோழீ,
என்னையும் நோக்கி யென்னல் குலும் நோக்கி ஏந்திளங் கொங்கையும் நோக்குகின்றார்
அன்னையென்னோக்கு மென்றஞ்சுகின்றேன் அச்சோ ஒருவர் அழகியவா.
- பெரிய திருமொழி (1758)

பொன் போன்ற மேனியும், பொங்கி வழியும் ஒளியுடைய மரகதத்தை இடையினில் ஆரமாக அணிந்து வாயினால் நல்ல வேதத்தை நவிலும் தேவரான இவர், என்னைப் பார்த்துக்கொண்டே இருக்கிறார். என் அல்குலைப் பார்க்கிறார். என் திரண்ட கொங்கையையும் விடாது பார்க்கிறார். இப்படிப் பார்க்கின்றாரே இவர், இது எனது தாய்க்குத் தெரிந்தால், அவள் என்னை எப்படிப் பார்ப்பாளோ, என்ன சொல்வாளோ என்று எனக்குப் பயமாக இருக்கிறதுஎன்று தன்னை நாயகியாகப் பாவித்துக் கொண்டு திருநாகையில் எழுந்தருளியுள்ள சௌந்தர்ராஜ பெருமானிடம் மையல் கொண்டு நிற்கிறார் திருமங்கை ஆழ்வார்.

திருமங்கையாழ்வாரால் மட்டும் 10 பாக்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திருத்தலம், ஒவ்வொரு பாடலிலும் “அச்சோ ஒருவர் அழகிய வா” என்று இப்பெருமானின் அழகில் வியந்து மயங்கி மையல் கொண்டு  துருவன் ஆனந்தித்தது போல் மாந்தி மகிழ்கிறார் திருமங்கை.10 பாக்களிலும் இப்பெருமானின் பேரழகில் ஈடுபட்ட திருமங்கை கடைசிப் பாசுரத்தில்தான் இத்தலத்தின் பெயரைக் குறிக்கிறார்.

பாசுரம் பதவுரை:

தோழீ - வாராய் தோழியே
இவர் மேனி - இந்த எம்பெருமானுடைய திருமேனியானது
பொன் – பொன்னாயிருக்கின்றது
மரதகத்தின் பொங்கு இள சோதி - மரதகப்பச்சையின் பரம்பின புதிய தேஜஸ்ஸை யுடைத்தான
அகலத்து - திருமார்பில் (சாத்தப்பட்டுள்ள)
ஆரம் - ஹாரமானது
மின் – மின்னலாயிருக்கிறது
இவர் – இப்பெரியவர்
வாயில் - வாயினால்
நல் வேதம் ஓதும் வேதியர் - நல்லவேதத்தை உருச்சொல்லுகிற வைதிகராயிருக்கின்றார்;
வானவர் ஆவர் – (மேன்மையில்) தேவர்களோடொப்பர்;  (இவர்)
என்னையும் நோக்கி - என்னையும் உற்றுப் பார்த்து
என் அல்குலும் நோக்கி -  எனது நிதம்பத்தையும் உற்றுப் பார்த்து
ஏந்து இள கொங்கையும் - ஏந்தப்படுகின்ற இளைய முலைகளையும்
 நோக்குகின்றார் - உற்றுப்பார்க்கின்றார்;
அன்னை என் நோக்கும் என்று - தாய் என்ன நினைப்பாளோ வென்று
அஞ்சுகின்றேன்- பயப்படுகிறேன்;
அச்சோ - ஆச்சரியம்;
ஒருவர் அழகிய ஆ - ஒரு பெரியவருடைய ஸௌந்தரியத்தை என்ன! சொல்லுவேன்.

பாசுரம் விளக்க உரை

தோழீ! நான் பெற்ற பாக்கியமே பாக்கியம்; அந்தோ! இழந்தாயே! ; கெடுவாய்! காணப்பெற்றிலையே!’ என்றாள் பரகால நாயகி தன்தோழியை நோக்கி; ‘நங்காய் என்ன அற்புதங் காணப்பெற்றாய்? விரித்துரையாய்’ என்று தோழிவினவ வ்ருத்த கீர்த்தனம் பண்ணுகிறாள் தலைவி.  திவ்யாத்மஸ்வரூபம் திவ்யகுணம் முதலானவை யெல்லாங் கிடக்க முந்துற முன்னம் திவ்ய மங்கள விக்ரஹத்திலே தன்னெஞ்சு பறியுண்டமை தோன்றச் சொல்லுகிறாள்.  பொன்னிவர் மேனி என்கிறாள்.  இவருடைய வடிவைப் பார்த்தவாறே “சுட்டுரைத்த நன்பொன் உன்திருமேனியொளி யொவ்வாது” என்கிறபடியே நன்றான பொன் என்னலா யிராநின்றது. 

இதனால் ஸமுதாய சோபைபற்றி ‘பொன்னிவர் மேனி’ என்ற தென்பது விளங்கும்.  பசுமை நீலம் கருமை என்னும் நிறங்களை அபேதமாகக்  கூறுவது கவி மரபாதலால் எம்பெருமானுடைய காளமேகத் திருவுருவத்திற்கு மரதகப்  பச்சையை உவமை கூறினது பொருத்தமேயாம்.  காணப்புக் கவர்களின் கண்ணையும் நெஞ்சையும் குளிர்வித்து அவர்களுடைய ஸம்ஸாரதாபங்களை யெல்லாம் போக்குந் தன்மையும் இதில் தொனிக்கும். 

இவர் மேனி பொன்; மரதகத்தின் பொங்கிளஞ்சோதியகலத்து ஆரம்மின் – என்று இரண்டு வாக்கியமாகக் கொள்வதன்றி, மூன்று வாக்கியமாக நிர்வஹிப்பராம் பிள்ளையமுதனார்; எங்ஙனே யென்னில்;  இவர் பொன்; மேனி மரதகத்தின் பொங்கிளஞ்சோதி அகலத்து ஆரம் மின் – என்றாம்.  இந்த நிர்வாஹத்தில் ‘இவர்பொன்’ என்றது “எண்ணுபொன்னுவருவாய்” என்னுமாபோலே ஸ்வரூபபரமாகச் சொன்னவாறாம். 

இவர் வாயில் நல்வேதம் ஓதும் வேதியர் = “அன்னேயிவரையறிவன் மறை நான்கும் முன்னேயுரைத்த முனிவர்” என்றாப்போலே ஆதியில் வேதோபதேசம் பண்ணுமவர் என்கிறதன்று; பரமவைதிகரென்றும் விஷயாந்தரங்களில் சிறிதும் கருத்தில்லாதவரென்றும் தோன்றும்படி அந்யபரர் போல வேதங்களை உருச்சொல்லிக் கொண்டிருந்தார் போலும்; அதைச் சொன்னபடி.  நல்வேத மென்றதனால் ஸாமவேதமென்று பொருளருளிச்செய்வர்.

வானவராவர் = மேன்மையைப் பார்த்தவாறே “வெற்றிப்போ ரிந்திரற்குமிந்திரனே யொக்குமால்” என்னும்படியே தேவர்களோடொக்கச் சொல்லலாயிராநின்றார்.  வடிவழகைப் பார்த்தாலோ ராஜாக்களோடொக்கச் சொல்லலாயிரா நின்றார்; மேன்மையைப் பார்த்தாலோ தேவர்களோடொக்கச் சொல்லலாயிரா நின்றார்; ஆக இன்னாரென்று அறுதியிட முடியவில்லை காண் தோழீ! என்றாளாயிற்று.

இங்ஙனே சொல்லக்கேட்ட தோழியானவள் ‘நங்காய்! அவரை நீநோக்கின வளவேயோ? உன்னை அவர் நோக்கிற்று முண்டோ?’ என்று கேட்க, அதையுஞ் சொல்லக்கேளாய் தோழீயென்று மருமங்களையும் வெளியிட்டுச் சொல்லுகிறாள்.  என்னையும் நோக்கியென்னல்குலும் நோக்கி ஏந்திளங் கொங்கையும் நோக்குகின்றார் என்கிறாள்.  “மர்மங்களிலே கடாக்ஷியா நின்றார்; பார்த்தபார்வை ஒருகால் மாறவைக்கிறிலர்” என்பது வியாக்கியானம் ‘நம்மைப்பாங்காக அநுபவிப்பதற் குறுப்பான பக்தி இவ்வாழ்வார்க்கு முதிர்ந்ததேர்’ என்று எம்பெருமான் ஆராய்ந்தமையைச் சொல்லிற்றாகக் கொள்க.  போகத்திற்குக் கொங்கை  முதலிய உறுப்புகள் எப்படி இன்றியமையாதனவோ அப்படி பகவதநுபவத்திற்குப் பரபக்தி பரஜ்ஞாந பரம பக்திகள் இன்றியமையாதனவாதலால் ஸ்வாபதேசத்தில் அவற்றைப் பொருளாகக் கொள்க.

அவர் நோக்கினவாறே நீ செய்ததென்? என்று தோழி கேட்க, அன்னையென்னோக்கு மென்றஞ்சுகின்றேன் என்கிறாள். அவர் பார்த்த பார்வை யெல்லாம் எனக்குப் பரமபோக்யமாகவேயிருந்தது; ஆனால் இந்த நிலைமையை நம்தாய் காண்பளேல் என்ன பாடு படுத்துவளோ வென்று அஞ்சி நிற்பதே என்கருமமாயிற்றுக்காண் என்கை.  ‘நான் பதறி மேல் விழுவேன்; இதனைத் தாய் நோக்கினாளாகில் என்னாகுமோ வென்று அஞ்சி யொழித்தேன்’ என்றவாறு. (அன்னை) பெற்று வளர்த்துப் பெண் பிள்ளை யௌவன பருவத்தில் நாயகனிடத்துள்ள அன்புமிகுதியால் அவனிருப்பிடத்துக்குச் செல்ல வேணுமென்றும் மேல்விழுந்து அநுபவிக்க வேணுமென்றும் பதறுமளவில் படிகடந்து புறப்படுகை குலமரியாதைக்குப் பொருந்தாதென்று தடுப்பவள் உலகில் தாய் எனப்படுவாள்; ஸித்தோபாயமான எம்பெருமானைப் பற்றினவர்கள் பேற்றை விளம்பித்துப்பெறுதலில் காரணமில்லாமையாலே அதனை விரைவில் பெறவேணுமென்கிற ஆவலைப் பிறப்பித்து அதனால் படிகடந்து நடக்க வேண்டிவந்த வளவில் இது ப்ரபந்நர் குடிக்கட்டுப்பாட்டுக்குச் சேராததென்று விலக்கி ‘எம்பெருமான் தானே வந்து விஷயீகரிக்கக் கண்டிருக்கவேணம்.’ என்றுசொல்லித் துடிப்பை அடக்கப் பார்க்கிற நம பதத்திற்கூறப்பட்ட உபாய அத்யவஸாயமாகிற ப்ரஜ்ஞாவஸ்த்தையைத் தாய் என்பதாக ஸ்வாபதேசத்திற் கொள்ளவேணுமென்பது ஆசார்யஹ்ருதயத்தில் விரியும்; ஆகவே, இங்கு “அன்னை என்னோக்கு மென்றஞ்சுகின்றேன்” என்றது – உபாயாத்யவஸாயத்தில் ஊற்றத்தாலே பதறுதல் தவிர்ந்தேன் என்றவாறாம்.

அச்சோவொருவரழகியவா! = ‘அச்சோ’ என்பது ஆச்சரியக் குறிப்பிடைச்சொல்; எங்கும் என்றுங் கண்டறியாத அழகுடன் ஒருவர் என் கண்ணுக்குத் தோற்றுகிற இவ்வாச்சரியம் வாசரமகோசரம் என்றவாறு.  திருநாகை எம்பெருமானாகிய ஸௌந்தர்யராஜனை ஒரு வாறாகக் குறிப்பிடுவதாகவுங் கொள்க. 

முன்னடிகளிற் கூறப்பட்ட ஸௌந்தர்யம் வைதிகத்வம் பரத்வம் என்ற மூன்றனுள் ஸௌந்தர்யமே தன்னெஞ்சைக் கொள்ளை கொண்டமை கூறிற்றாயிற்று.

வழித்தடம்

திருநாகையென்னும் நாகப்பட்டினம் இன்றைய தமிழ்நாட்டில் சிறந்து விளங்கும் அழகிய கடற்கரை நகரங்களுள் மிகச்சிறந்த ஒன்றாகும். தற்போதைய காயிதே மில்லத் மாவட்டத்தின் தலைநகரமும் ஆகும். மயிலாடுதுறையிலிருந்து நாகப்பட்டினம் செல்லும் பேருந்துகள் இந்தக் கோவிலின் அருகாமையிலே செல்கிறது (சுமார் ஒரு பர்லாங் தூரம்).

ஸ்தல வரலாறு:

இத்தலம் பற்றி பிர்ம்மாண்ட புராணத்தின் உத்திர காண்டத்தில் 10 அத்தியாயங்களில் சௌந்திர ஆரண்ய மகிமை என்று சூதபுராணிகர் தமது சீடர்களுக்கு உரைத்ததாகக் காணப்படுகிறது. 
உத்தான பாத மகாராஜனின் குமாரன் துருவன். சிறுவனான இவன் நாரதர் மூலம் இத்தலத்தின் பெருமையை அறிந்தான். உலகம் முழுவதும் தனக்கே அடிமையாக வேண்டும் என்று பெருமாளை குறித்து தவம் செய்தான். இவனது தவத்தை கலைக்க தேவர்கள் இடைஞ்சல் செய்தனர். இருப்பினும் தவத்தை வெற்றிகரமாக முடித்த துருவன் முன்பு பெருமாள் கருடன் மீது அமர்ந்து பேரழகு பொருந்தியவராக தரிசனம் தந்தார். பெருமாளின் பேரழகில் மயங்கிய துருவன் தான் கேட்க வந்த வரத்தை மறந்தான். இறைவனது பேரழகே போதும். இதில் தான் உண்மையான சுகம் இருக்கிறது. அந்த பேரழகை எப்போதும் தரிசிக்கும் பாக்கியத்தை தர வேண்டும் என பெருமாளிடம் கேட்டான். பெருமாளும் தனது சவுந்தரியமான திருக்கோலத்தை துருவனுக்கு காட்டி அவன் தவமிருந்த தலத்திலேயே தங்கினார். அழகான இவர் “சவுந்தரராஜப் பெருமாள்’ என்றழைக்கப்படுகிறார். 

காவிரியின் தென்கரை தொடங்கி திருமறைக்காடு வரை தென்வடல் கீழ்மேலாக பரந்துபட்ட காட்டின் 50 யோஜனை அளவுக்கு கிருஷ்ணாரண்யம் (கிருஷ்ணனின் காடு) என்று பெயர். இதன் கீழ்த்திசையில் 5 மைல் தொலைவுக்கு உள்ள பகுதியே சௌந்தர்ய ஆர்ணயம். மிகப்பழஞ்சுவடிகள் சுந்தராரண்யம், என்றே இப்பகுதியைப் பற்றிப் பேசுகின்றது. 

இத்தலம் நான்கு யுகங்களில் பெருமை பெற்றுத் திகழ்ந்தது. கிரேதாயுகத்தில் நாகங்களுக்கெல்லாம் தலைவனான ஆதிசேஷன் இத்தலத்தில் ஒரு தீர்த்தம் உண்டாக்கி அதற்கு “சாரபுஷ்கரணி’ என்று பெயரிட்டு அதன் கரையில் அமர்ந்து பெருமாள் குறித்து தவமிருந்தார். பெருமாளும் மகிழ்ந்து தனது படுக்கையாக ஏற்றுக்கொள்வதாக இத்தலத்தில் அருள்புரிந்தார். நாகம் (ஆதிசேஷன்).

ஆதிசேடன் ஆகம விதிப்படி அஷ்டாங்க விதான முறையில் பெருமாளை ஆராதித்ததால் அவன் பெயராலேயே நாகன்பட்டினமாகி நாகப்பட்டினமாயிற்று. 

சிறப்பு

நின்ற, இருந்த, கிடந்த என்ற மூன்று திருக்கோலச் சேவையும் இங்குண்டு. மூலவர் நின்ற திருக்கோலம் “வீற்றிருந்த பெருமாள்” என்று அமர்ந்த திருக்கோலமும், பள்ளி கொண்ட திருக்கோலத்தில் அரங்கநாதனும் இங்கு காட்சி தருகின்றனர். நாகராஜனுக்கு மூன்று திருக்கோலங்களிலும் எம்பெருமான் ஸேவை சாதித்ததாகச் சொல்லுவர். 

தசாவதாரங்களை விளக்கக்கூடிய செம்புத் தகட்டாலான மாலையொன்று இப்பெருமானின் இடையை அலங்கரிக்கிறது. 

இங்குள்ள அரங்கனின் சன்னதியில் உள்ள நரசிம்ம அவதாரத்தினை விளக்கும் வெண்கலச் சிலை மிகவும் அபூர்வமானதாகும்.ஒரு கையால் பிரஹலாதனை தாங்கி ஆசீர்வாதம் செய்வது போலவும், ஒரு கையை அபய முத்திரையாகவும் வைத்துக்கொண்டு, மற்ற எல்லாக் கைகளாலும் இரண்யனை வதம் செய்வது போலவும் அமைந்துள்ளது.

ஆதிசேஷனால் உண்டாக்கப்பட்ட சாரபுஷ்கரிணியில் நீராடி பெருமாளை வழிபட்டால் அவர்கள் சூரிய மண்டலத்தை அடைவார்கள் என்பது ஐதீகம். இங்குள்ள அஷ்டபுஜ துர்க்கையும் சக்தி வாய்ந்தவள். திருமங்கை ஆழ்வார் இத்தல பெருமாளின் அழகில் மயங்கிய நிலையில் 9 பாசுரங்களை பாடிவிட்டு பத்தாவது பாடலில் தான் இத்தலத்தின் பெயரை குறிப்பிடுகிறார். 

கண்டன், சுகண்டன் என்ற இரு அந்தண சகோதரர்கள் நிறைய கொடுஞ்செயல் புரிந்து வந்தார்கள். ஒருநாள் இவர்கள் சார புஷ்கரிணியில் நீராடினார்கள். உடனே அவர்கள் பாவம் நீங்கி வைகுண்டம் சென்றார்கள். இவர்களது சிற்பங்களை பெருமாள் சன்னதியில் வைத்துள்ளார்கள்.

கிருதயுகத்தில் ஆதிசேஷனால், திரேதாயுகத்தில் பூமாதேவியும், துவாபரயுகத்தில் மார்க்கண்டேயனும் கலியுகத்தில் சாலி சுகர் என்கின்ற மகாராஜாவால் ஆராதிக்கப்பட்டு பெருமாள்

ஸ்வாமி உ.வே. வேளுக்குடி கிருஷ்ணன் அவர்களால் உபன்யாசம் செய்த திவ்யதேச வீடியோ லிங்க் கீழே கொடுக்கப் பட்டிருக்கிறது.

https://youtu.be/qrV1VTKnIuM

No comments:

Post a Comment