Saturday, July 18, 2020

வைதேகியும் பாங்க் லாக்கரும்

வைதேகியும் பாங்க் லாக்கரும் (மனதை தொட்டுவிடும் கதைகள் – 15)  #ganeshamarkalam

நான் இந்தியன் பாங்கில் சேந்து 17 வருஷம் ஆச்சு. அங்கே இங்கே சுத்தி இப்போ செஞ்சியில் போஸ்டிங்க். ஜனவரியில்தான் சார்ஜ் எடுத்துண்டேன். பொண்ணு +2 படிக்கிறான்னுட்டு சுமதி சென்னையிலேயே அவளோட ஜாகை. வாரக்கடைசீலே போயிண்டிருந்தேன், இப்போல்லாம் வெயிலில் பஸ்ஸில் மல்லுக்கட்றது உடம்புக்கு ஒத்துக்கலை, மாசம் ஒருதடவை மட்டும். சுமதி அடிக்கடி ஏன் வரதில்லைன்னு கேக்கிரதை நிறுத்திட்டா.

செஞ்சீ சின்ன ஊர். திண்டிவனம் திருவண்ணாமலை ரோட்லெ ரெண்டுபக்கமும் சேர்த்து ஒரு 200வீடுகள் இருக்கும். மத்தது விவசாய நிலம். விவசாய லோன் கொடுக்கிரத்துக்குன்னே எங்க பிரான்ச். 9 மணிக்கு பாங்க் தொரந்தா 11 வரைக்கும் ஈ ஆடும். அப்புரம் 10 பேர் வந்தா பெருசு. மாசக்கடைசீலேயும் நடுவுலேயும் கொஞ்சம் கூட்டம் வரும். அதுவும் அவா ஓட்டிண்டுவர ஆடு, மாடு கழிச்சுட்டா ஒண்ணுமேயில்லை.

பிராம்ணாளுக்கு சமைக்க தெரியலைன்னா சாப்பாட்டுக்கு கஷ்டம்தான். ரொம்ப அலைஞ்சு பிடிச்சேன் ஒரு தம்பதி இப்போ சமைச்சு கொடுக்கிரா. சைவ பிள்ளை, வெஜிடேரியன். கார்த்தாலே இட்லி, மத்தியான சாப்பாடு கட்டி கொடுத்துடுவா, ராத்திரி டிபன். கொஞ்சநாழி பேசிண்டிருந்துட்டு வந்துடுவேன். இங்கே வந்ததுக்கு திருவண்ணாமலை ப்ரான்ச் மானேஜர் நட்பு கிடெச்சது. 

அவர் தயவில் கோவிலுக்குள்ளே கார்த்திகை தீபம் பாஸ் கிடெச்சு. சுமதி, வர்ஷா அப்புரம் சுமதியோட ஸ்னேகிதிகள்னு ஒரு பட்டாளமே வந்து தரிசனம் பண்ணினா. போரப்போ சொல்லி அனுப்பிச்சேன், உங்களுக்கு என்னை தெரியும்னு உங்க நண்பிகளையெல்லாம் கூட்டிண்டு அடுத்த வருஷம் தீபத்துக்கு பாஸ் கேக்காதீங்கோன்னு. கிடெச்சா சேத்துக்கலாம். அவாளா நம்மை பிச்சு பிடுங்கப்பிடாது பாருங்கோ!

எங்க செஞ்சீ பிரான்ச்சில் லாக்கர்வஸதி உண்டு. அது என்னமோ தெரியலை இந்த ஊரிலேயும் எல்லா லாக்கரும் கொடுத்தாச்சு. புதுசா யாராவது கேட்டா இல்லைன்னு சொல்லவேண்டியிருக்கு. இந்த லாக்கர் பத்தி ஹெட் ஆபீஸில் ரிபோர்ட் கேட்டா. அதை பண்ரப்போ வைதேகி மாமி வந்தா. லாக்கர் தொரக்கணுமாம். லெட்ஜரில் எழுதிட்டு அப்புரம் போய் தொரந்துவிட்டேன். 40 நிமிஷம் கழிச்சுத்தான் போனா. கையில் ஒரு பையொட வந்தா, அதோட போனா. அன்னைக்கு அந்த மாமி வந்ததுதான் விசேஷம். அப்புரம் சின்னதா ஒரு தூக்கம் போடலாம்னு கண்ணஸந்தாச்சு.

ஒருவாரம் போச்சு மாமி திரும்பவும் வரா லாக்கர்லேந்து ஏதோ எடுக்கணுமாம். “மாமி, நீங்க எதுவும் எங்கிட்டே சொல்லவேண்டாம் உங்க இஷ்டம்”னுட்டேன். ரூல்ஸ்னு ஒண்ணு இருக்கோனோ? அப்புரம் மானேஜர்கிட்டேகூட சொன்னேன்னு ஏதாவது விவகாரம் ஆச்சுன்னா? அதேமாதிரி 40 நீமிஷம் ஆனதும் வெளியே வந்தா, “தேங்யூ மாமா”ன்னுட்டு போயிட்டா. இந்ததடவை அந்த மாமிக்கே நான் மாமா ஆகிட்டேன். அப்போதான் டை அடிச்சுக்கணும்னு ஞாபகம் வந்தது.

ஒரு 10 நாள் போனதும் வைதேகி திரும்பவும் வந்தா. என்னோட பிரான்ச்சில் 3 பேர் வேலை. ஒரு கிளர்க், ஒரு காஷியர் ஒரு பியூன். ஆனா நேர எங்கிட்டேதான் வரா. “என்ன மாமி லாக்கரா”ன்னு புத்திசாலித்தனமா ஒரு கேள்வி. அப்படியே முன்னாடி போட்டிருந்த சேரில் உட்காந்துட்டா. “அப்பாடான்னு இருக்கு, வெய்யல் தாங்கலை கொஞ்சம் உங்க ஏஸிலே உட்காந்துக்கரேன்”னு சொன்னா. நானும் “செஞ்சீலே வெறும் பாறைதானே மாமி, அப்படித்தான் தகிக்கும்”னேன். 

கொஞ்சம் மூச்சுவாங்கரது நின்னதும் என்னைபத்தியும் விசாரிக்க ஆரம்பிச்சா. “மாமா முகம் வாடியிருக்கே மாமியோட செஞ்சீலே ஜாகை வைக்கலையா”ன்னுட்டா! என்ன ஒரு தீர்க்கதாக்ஷண்யம்? என்ன தோணித்தொ என்னவோ, அப்படியே என் நிலைமையை கொட்டி தீத்துட்டேன். ஸ்துச்சோ கொட்டினா, தலயை ஆட்டிண்டே. “நீங்க என்ன பண்ரேள், மாமா எங்க வேலை பாக்கிரார்”ன்னு நானும் என் பங்குக்கு கேட்டேன். கேக்கலைன்னா மரியாதை இல்லை. சொல்ரத்தை சொல்லட்டும்.

வைதேகி மாமி நின்னு நிதானமா எல்லாத்தையும் சொல்ரா. மாமாவும் பாங்க் வேலையில் இருந்துட்டு வாலன்டரி வாங்கிண்டு இங்கேவந்து செட்டில் ஆயிட்டாளாம். 5 வருஷம். ஒரே பையன் கல்யாணம் பண்ணி கொடுத்தாச்சு. மாட்டுப்பொண்ணு சரியா கவனிச்சுக்கலை. இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி பிள்ளையை பிரிச்சு மும்பைக்கு கூட்டிண்டு போயிட்டாளாம். 

தனக்கப்புரம் நகையெல்லாம், ஒரு 60 பவுன் தேறும், அது தவிற ஒரு காசுமாலையும் (எல்லாமே மாமிக்கு அவரை பெத்தவா போட்டது, இவர் ஒரு குந்துமணிகூட வாங்கிக்கொடுக்கலை) மறுமகளுக்குத்தான் போய் சேரும். அது தான் உசுரோட இருக்கிரவரைக்கும் நடக்கக்கூடாதுன்னு எல்லாத்தையும் லாக்கரில் வச்சுருக்காளாம். மாமி அப்பப்போ கும்பகோணம் போவா அப்போ ஆத்துக்காரர் வந்து லாக்கர்லேந்து எடுத்துண்டுபோய் மாட்டுப்பொண்ணுக்கு கொடுத்துட்டா? அவருக்கு எப்போவுமே அவள்மேல் ஒரு ஸாஃப்ட் கார்னெர். அதான் அடிக்கடி வந்து செக் பண்றாளாம்.

“சரியாப்போச்சு”ன்னு நினைச்சுண்டேன். இப்படி லாக்கர் வச்சுண்டிருக்கிரவா எல்லார்கிட்டேயும் ஒரு நல்ல ஆழமான உணர்வுகலந்த கதைகள் இருக்கும்னு நினைச்சுக்கரேன். எல்லாத்தையும் கேட்டு தெரிஞ்சுக்க முயற்சி பண்ணினால் இந்த செஞ்சீயில் நேரம் போரதே தெரியாது. ஆனால் வைதேகி மாதிரி அடிக்கடி வந்து எல்லாத்தையும் எல்லாரும் சொல்லுவாளா? மாட்டா.
“மாமி, காபி சொல்லட்டுமா”ன்னு கேக்கிரேன், “வேண்டாம்டா, என் தம்பி மாதிரி இருக்கே, இன்னொருதடவை வரேன்”னுட்டு லாக்கர் ரூமுக்குள்ளே போரா. 

பாருங்கோ அவா கதையை மனஸு கொடுத்து கேட்டுட்டு, காபி வேணுமான்னு கேட்டதுக்கே “மாமா”ங்கிர போஸ்ட்லேந்து “தம்பி”ங்கிர போஸ்டுக்கு ப்ரொமோஷன் கிடெச்சது.

ரெண்டுவாரமா மாமியை காணலை. வெளியூருக்கு போயிருக்கமாட்டா. ஓரு நல்ல புதன்கிழமை பாங்க்கை தொரந்துட்டு, சுவாமி படத்துகெல்லாம் பூ வச்சு, தூபம் காமிச்சுட்டு அக்கடான்னு உட்காரச்சே ஒரு பெரியவர் உள்ளே வரார். புதுசா இருக்கு. லாக்கரை தொரக்கணுமாம். அவரை கையெழுத்து போடுங்கோன்னு சொல்லிட்டு சாவியை எடுக்கரேன். அவர் என்னமோ முன்னாடி வைதேகி மாமி போட்ர அதே பக்கத்தில் போடராப்போல தோணித்து. “மாமா, நீங்க”ன்னு இழுக்கரேன். 

அவர் “ஆமாம், நான்தான் ராமசுப்பன், லாக்கர் ஜி45 என்பேரில், மனைவி வைதெகி பேரில் ஜாயின்டா இருக்கு”ங்கரார். “கிளாட் டு மீட் யு மாமா, கொஞ்சநாள் முன்னாடி உங்க மாமி வந்துண்டிருந்தாளே சௌக்கியமா இருக்காளா”ன்னு கேக்கரேன். “என்னை தம்பி மாதிரின்னு சொல்லுவா”ங்கிரேன். (முதல்லே மாமான்னு கூப்பிட்டதை இவர்கிட்டே ஏன் சொல்லணும்?)

அவர் ஸ்தம்பித்துபோய் உட்காந்துக்கரார். “வைதேகி வந்தாளா? அப்படி நடந்திருக்க முடியாதே”ங்கிரார். “இல்லை சார் வந்தா, ஆக்சுவல்லி முன்ணாடியெல்லாம் வாரம் ஒருதடவை வருவா, இப்போல்லாம் காணரதில்லையேன்னு கேட்டேன்”. ஏதொ தப்பா சொல்லி மாமியை மாட்டிவச்சுட்டேனா? 
“இல்லை சார். அவ திடீர்னு ஹார்ட் அட்டாக்லெ போய் 2 வருஷம் ஆச்சு”ங்கிரார். கண்ணில் லேசா கண்ணீர் ததும்பரது, எனக்கும். என்ன சொல்ரதுன்னு குழம்பிப்போரேன், மனசில் ஏதொ ஒரு பயமும் தொத்திக்கிரது. 

“என் பையன் எங்களை விட்டுட்டு ஆத்துக்காரி பேச்சைகேட்டுண்டு மும்பை போயிட்டான், போனதிலேந்து இவ உடம்பு ஒண்ணு மாத்தி ஒண்ணு வந்து கடைசீலே மாரடைப்புலே போயிட்டா. இத்தனை நாளா வராம இருந்த பையனும் மாட்டுப்பொண்ணும் ஒரு பெண் குழந்தையோட வந்திருக்கா. அதான் அவ நகையெல்லாத்தையும் எடுத்து பேத்திக்கு வச்சுக்கோன்னு கொடுத்துடலாம்னு வந்தேன். லாக்கரையும் சர்ரெண்டர் பண்ணிடணும் சார்”. 

அவர் சொல்ல சொல்ல எனக்கு தலையே சுத்தரது
லெட்ஜரை எடுத்து மாமி கையெழுத்து போட்ட பக்கத்தை பார்க்கிரேன். அங்கே ராமாசுப்பன் இப்போ போட்ட கையெழுத்து மட்டுமே இருக்கு. வேர ஒண்ணையும் காணோம்.

No comments:

Post a Comment