🌺
61. எதிரொலி (1 of 2) (சிசீ6) #ganeshamarkalam
என் பேரன் கெட்டிக்காரன். என்னென்னமோ இன்வென்ஷண் செஞ்சிண்டு. ஏகப்பட்ட விருதுகள். அரசாங்கமும் இவனண்ட எது கண்டுபிடிச்சாலும் அதை மொதல்ல அரசாங்கத்திடம் காமிக்கணும்னு பிரியமா சொல்லியிருக்கா. பிரதமர் மோடி கிட்டேந்து பாராட்டுக் கடிதமும் வந்தது. போன ரெண்டு வருஷமா இவன் கண்டுபிடிப்புகள் சோஷியல் மீடியாவில் வைரல்.
என்னெல்லாம் கண்டுபிடிக்கரான்னு தெரிஞ்சுக்கத் தோணும். அவன் சமீபத்தில் கண்டுபிடிச்ச “ரோபஸ்ட் ட்ரோன் வ3” நம்ப ஆர்மீக்கு மிகவும் பயன்படும்னு கூப்பீட்டு பேசினா. அதைப் பத்தி தமிழ் பிராம்ணா திண்ணையில் ஒரு போஸ்ட் போட்டேன். உங்களில் சிலர் படிச்சிருக்கலாம். அதை படிச்சுட்டு ஒரு மாமி எனக்கு கூப்பிட்டு வாழ்த்தரா மாதிரி பாவ்லா செஞ்சுட்டு “அப்படி என்னெல்லாம் உன் பேரன் கண்டுபிடிச்சுட்டான் சித்தே விளங்கரா மாதிரி எழுதப் பிடாதோ?” கேக்கரா. “அதெல்லாம் சயின்ஸ், டெக்னாலஜி சம்பந்தமா இருக்கு மாமி. எனக்கும் சிலது புரியலை!” மழுப்பிட்டேன். சொள்லியிருந்தாலும் குறுக்குக் கேள்வி கேட்டு அதென்ன பெரீய விஷயம்னு சொல்லத்தான் அந்த மாமி தயாராயிக்கரான்னு நன்னா புரிஞ்சிண்டேன்.
கிட்டத்தட்ட 20 கண்டுபிடிப்புகள். ட்ரோன் சொன்னேன். அப்பரம் ஒரு கருவி ஆத்தில் பொருத்திட்டா கரன்ட் சிலவு மிச்சப்படுத்தும். பாதியா குறைச்சுடலாம். அதே மாதிரி காரில் பொருத்தவும் ஒண்ணு. அதை மாட்டிண்டு ஒரு மாசம் காரை ஓட்டிண்டிருந்துட்டு அது ரெக்கார்ட் செஞ்சதை கம்ப்யூடரில் போட்டுப் பாத்தா நாம என்னெல்லாம் காரோட்டரச்சே தப்புதப்பா செஞ்சம்னும் எதையெல்லாம் மாத்திச் செஞ்சா பெட்ரோல் மிச்சம் பிடிக்கலாம்னு. இன்னொரு மென்பொருள் சம்பந்தப் பட்டது. ஆத்தில் இருப்பவா எல்லாரோட தகவலையும் அதில் போட்டுட்டா, நாம தினம் எந்த மாதிரி சமையல் செஞ்சுண்டா எல்லாருக்கும் பிடிச்ச உணவும் ஆரோக்கியமான டயட்டும் கிடைக்கும், டாக்டருக்கு அழ வேண்டாம்னும் அட்டவணை போட்டுத் தந்துடும். அதுபடி சமைப்பதும் தின்னுவதும் உங்க பாடு.
அரசாங்கம் இவன் கிட்டேந்து வாங்கிண்ட கண்டுபிடிப்புன்னா ஒண்ணு சொல்லியே ஆணம். இது ட்ரேஃபிக் சிக்னலுக்கெல்லாம் ஒரு கன்ட்ரோல் ரூம் இருக்குமோன்னோ. அங்கே இவனோட மென்பொருளை போட்டுடணுமாம். அது போரவர வண்டியை எல்லாம் நாள்பூர கணக்கெடுத்து, வாரம் பூரா கண்காணிச்சிட்டு எந்த ட்ரேபிக் ஜங்க்ஷணில் எத்தனை நாழி ரெட்டோ பச்சையோ எரிஞ்சா ஊர்பூரா ட்ரேஃபிக் ஸ்மூத்தா தடங்கலில்லாம வேமாக ஓடும்னு அதுவே தோதா சிக்னல்களை இயக்க ஆரம்பிச்சுடும். அதுக்கு எல்லா ஜங்க்ஷண்லேயும் இருக்கும் சிக்னல் சிஸ்டங்களையும் சித்தே நவீனப் படுத்தணும். சில ஊர்களில் இப்ப செயல் படுத்திண்டிருக்கா. அந்த ட்ரோனை BSFஇல் டெஸ்ட் செஞ்சாரது. அவாளுக்கு அது பலவிதத்தில் உபயோகமாகும்னுட்டா. அது பறப்பதை எதிரியால கண்டே பிடிக்க முடியாது. அதான் மேட்டர்.
இன்னும் என்னத்தையோ அவன் ரூமில் வச்சிண்டு நோண்டிண்டிருக்கான். செஞ்சதும் பாட்டிகிட்டே வந்து சொல்லுவான். அப்பத்தான் தெரியும். நடூலே போய் என்னடா பண்ராய்னா சொல்ல மாட்டான்.
என்ன வயசாரது உங்க பேரனுக்கு? கேப்பேள். 8ஆவது படிக்கரான். இதெல்லாம் ஆரம்பிச்சு 3 வருஷமா. என் புள்ளை மயிலாபூரில் சிஐடி நகரில். TVSஇல். மாட்டுப்பொண் செட்டிநாடு வித்யாஸ்ரமத்தில் டீச்சர். நானும் எங்காத்து மாமாவும் இந்தண்டை அண்ணா நகர் வெஸ்ட் சீப்ராஸ் அப்பார்ட்மென்டில் ஜாகை. எங்காத்து மாமா HP, IBMனு வேலை பாத்துட்டு இதை வாங்கினர். இதில் நாங்க இருக்கம். இது நல்ல சென்ட்ரல் ஏரியா, வசதிகளோட, பெரீசா 3 பெட்ரூம். சித்தே பாஷ். பாக்காத்துலே ரெண்டு பெரீய கட்டிடத்தில் சரவணா சூப்பர்ஸ்டொர். பால்கனீலேந்து பாத்தா ஃப்ளை ஓவர். அழகா வாகனங்கள் போயிண்டும் வந்துண்டும். இன்னொண்ணூ, இதுக்கு மின்னாடி கேகே நகரில் வாங்கினது, அதை வாடகைக்கு விட்டு காசு பாத்தாரது. ஏன் அதுலேயே தங்கிண்டிருக்கலாமேன்னு கேக்கலாம். அது சித்தே கீக்கிடமாப் போச்சு. எதுவும் நம்ப ஸ்டேடஸுக்கு தகுந்தாப்போல் இருக்கணுமா வேண்டாமா? அதான்.
ஐடீலே வேலை பாத்திருக்கர், காசு கொழிக்கரதேன்னு நினைக்கேண்டாம். கல்யாணம் ஆன புதுசுலேயே இவர் சொல்லுவர். அப்பப்போ கடனோ உடனோ வாங்கி இன்வெஸ்ட் செஞ்சுடணும். அப்பத்தான் ரிடயர் ஆரப்போ வரும்படி வராப் போலவும், நாம நம்ப ஸ்டேடஸ் மெயின்டெயின் செஞ்சுண்டு இருக்காப்போல் ஜாகையும் அமைச்சுக்கலாம்னு. நான் எங்காத்தில் ஒரே பொண். எனக்கு ஒரே பையன். அவனுக்கு ஒரே பையன், இன்வென்டர், இப்ப அவனைப் பத்தித்தான் நாம பெசிண்டிருந்தது.
இவன் என்னத்தை செஞ்சிருக்கான்னு தெரிஞ்சுக்கவே மாசம் ஒருதடவை புள்ளையாத்துக்கு போய் ஒரு வீக்கெண்ட் ஸ்பெண்ட் செஞ்சுட்டு வந்துடுவேன். கூடமாட மாடுப்பொண்ணூக்கு 4 நா காணராமாதிரி காய்கறிகள் நறுக்கித் தந்து, இட்லீக்கு அரைச்சு வச்சு, சீயக்காய்பொடி, சாம்பார்பொடி தீந்து போயிருந்துன்னா ஆத்துலேந்து கொண்டு போய் கொடுத்து.
கூட வந்தர்னா சங்கோஜம் பாக்காம இவரும் மாட்டுப்பொண் கஷ்டப்படப் போராளென்னு தேங்காய் உடெச்சு திருகி வச்சுட்டு வருவர். அவசரமா கார்த்தாலே இவாள்லாம் வேலைக்கு கிளம்பரச்சே சட்டுன்னு சமைச்சுக்கலாமேன்னு. மாட்டுப்பொண் “வேண்டாம் வேண்டாம்”னு சொல்லுவள். பிள்ளைதான் “செய்யணும்னு ஆசைப் படரா, செஞ்சுட்டு போட்டமே”ம்பான். “கேகே நகர் ஆத்துலேந்து வாடகையெல்லாம் கரெக்டா வரதோன்னோ?” கேட்டுப்பான். அப்பாவோட ரெண்டு வீடும் எங்களுக்கப்புரம் அவனுக்குத்தான்னு தெரியும். இப்ப அவன் இருப்பது வாடகைக்குத்தான். எதுக்கு நாமளும் ஒண்ணை வாங்கிப் போட்டு அதுக்கு EMI கட்டிண்டுன்னு தனக்கு வர சம்பளத்தையும், ஆத்துக்காரிக்கு கிடைப்பதையும் வச்சு தாராளாமா ஆத்தில் லெடஸ்ட்டா சாமங்கள் வாங்கி போட்டுண்டு. 3 பெட்ரூம் செட்டில் 45ஆயிரம் மாசம் வாடகை. “அவன் இஷ்டப்படி இருந்துட்டு போட்டம்.” இவர் சொல்லுவர்.
கல்யாணத்துக்கு மின்னாடி நான் பொறந்து வளர்ந்தது எல்லாம் குரோம்பேட்டை. சின்ன வீடு. அப்பா ப்ளாட் வாங்கினர். அந்த கடன் அடைஞ்சதும் ரெம்ப கஷ்டப்பட்டு காசு சேர்த்து கட்டினர். இன்னும் அப்படியே இருக்கு. ரெண்டு மாசம் வரைக்கும் குடி விட்டிருந்தம். இப்ப காலிதான். நல்ல குடுத்தனக்காரா நம்படவா கிடெச்சா வைக்கலாம்னு பாத்துண்டிருக்கம். ஹாலும் ஒரு பெட்ரூமும், கிட்சன், வராண்டா, மொட்டைமாடி. மரஞ்செடிகள் இருந்தது, கவனிக்காம பலது இப்ப இல்லை. தென்னை மட்டும் 3. காய்ச்சு விழரதாம், பக்கத்தாத்தில் சொன்னா. “நீங்க எடுத்துக்கோங்கோ”ன்னுட்டம்.
இன்னைக்கு சனிக்கிழமை, பேரனைப் பாக்க போரேன். பேரன் என்னவோ காமிக்கரேன்னான். பாக்கணும்னு ஆசை.
போனா கையில் சின்னூண்டா என்னவோ வச்சிண்டு “பாட்டி இது என்னன்னு சொல்லு?” “தெரியலையேடா?” “இது ரெம்ப சென்சிடிவ் சவுண்ட் ரிகார்டர். மிகமிக சன்னமான ஒலியைக் கூட கிரஹிச்சு ரெக்கார்ட் செஞ்சு வச்சுக்கும். அப்பரம் கம்ப்யூட்டரில் போட்டுப் கேக்கலாம்”. “அப்படியா எங்கே காமீ!”. “நீ அங்கே போய் உக்காந்துக்கோ. யாரும் பெசப்பிடாது.” அதை நடுவுலே டீப்பாயில் வைக்கரான். கைக்கடக்கமா சோழி மாதிரி அதுலேந்து ஏன்டினா நீட்டிண்டு. 10 நிமிஷம் யாரும் பெசலை. “விளையாடினது போதும், நீங்க காபி குடீங்கோ!” மாட்டுப்பொண் வர இவன் அதை எடுத்துண்டு போய் தன் லேப்டாப்பில் மாட்டி என்னவோ செஞ்சான். ரெகார்ட் ஆனதை ட்ரேன்ஸ்ஃபர் செய்யரானாம்.
லேப்டாப்பை எடுத்துண்டு வந்து பாட்டி பக்கத்தில் உக்காந்திண்டு, “காதில் மாட்டிக்கோ பாட்டி.” ப்ளூடூத்தை கொடுக்க சித்தே நாழி ஒண்ணுமே கேக்கலை. மொள்ள காத்து அடிக்கர சத்தம், புஸ் புஸ்ஸுன்னு யாரோ மூச்சு விடரது இப்படீன்னு ஆரம்பிக்க ஆச்சர்யமா இருந்தது. சட்டுன்னு ஒரு குழந்தை அழறதும். “இதோடா செல்லம், தோ வந்துட்டேன், பசிக்கரதா?” யாரோ கேக்கரா. என்னடா இது, அப்படியெல்லாம் யாரும் பெசலையே, மின்னமேயே ரெக்கார்ட் செஞ்சதான்னா இல்லையாம். அப்பரம் கம்ப்யூடரில் என்னத்தையோ டைப் செஞ்சு டப்புன்னு அடிக்க, தெளீவா பிள்ளை குரல், “சாயங்காலம் சீக்கிரம் வந்துடரேன், குழந்தைக்கு போலியோ ட்ராப்ஸ் போட அழைச்சிண்டு போணம், ரெடியா இரு”.
நிமிந்து பாத்தா புள்ளை ஆச்சர்யமா கண்கள் விரிஞ்சு என்னது இது நாம பெசினாப்போல் இருக்கேனு இவனைப் பாக்க, அம்மாக்காரிக்கோ சித்தே கோவமும், நமக்குத் தெரியாம இவன் எதையோ ரெக்கார்ட் செஞ்சு வச்சிருக்கான்னு பதட்டமும். “10 நிமிஷத்தில் இவ்ளோதான், இன்னும் இம்ப்ரூவ்மென்ட் செஞ்சா பெர்ஃபெக்ட் டிவைஸ் ஆகிடும், இதுக்கு என்ன பேர் வைக்கலாம்னு நீ சொல்லு பாட்டீ!”
என்னத்தை ரிக்கார்ட் செஞ்சது? மூச்சு விடரது, அப்பரம் குழந்தை அழர சவுண்ட் கூடவே மாட்டுப்பொண் அப்பரம், இவன் அப்பா போலியோ ட்ராப்ஸ் கொடுக்கணும்கரர். “சொல்லட்டுமா பாட்டி? எல்லாரும் கேட்டுக்கோங்கோ. இது அதி நவீன ஹைபெர் சென்சிடிவ் சவுண்ட் ரிகார்டர். இது வைச்ச இடத்துக்கு 2 மீட்டர் தூரத்தில் பேசின எழுப்பப்பட்ட சவுண்ட் அது கடுகளவே இருந்தாலும் பிடிச்சுடும். இதை வெவ்வேர ரேஞ்சில் வச்சு ரிகார்டிங்க் செய்யலாம். சமீபத்திய சத்தம், 1 வருஷம் பின்னாடி, 5 வருஷம் பின்னாடீன்னு வச்சுட்டா, அந்த அந்த காலத்தில் இங்கே பெசினது எத்தனை சன்னமா எதிரொலிச்சிண்டிருந்தாலும் பிடிச்சு ரெக்கார்ட் செஞ்சுடும்”. “அப்படியா?” அசந்து போயிட்டம்!
மொதல்ல கேட்டது இப்ப இன்னைக்கு கேட்ட சத்தம், நாமெல்லாம் கொயட்டா மூச்சு மட்டும் விட்டிண்டிருந்தது. அதுக்கப்பரம் 12 வருஷம் மின்னாடி அம்மா யாரோ குழந்தை பசியில் அழ அத கொஞ்சிண்டே சாப்பிட எதோ கோண்டுவரேன்னு சொல்ரது. அதுக்கப்பரம் அதுக்கு 6மாசம் மின்னாடி போலியோ பத்தி அப்பா. குழந்தை நானாத்தான் இருக்கணும். எப்படி என் இன்வென்ஷண்? இதன் பயன்பாடு நிறைய. க்ரைம் இன்வெஸ்டிகேஷணுக்கு உதவும். என்ன நடந்ததுன்னும் என்ன பெசினானும் இடம் தெரிஞ்சா அங்கே போய் வச்சு ரெக்கார்ட் செஞ்சுக்கலாம். துப்புத் துலக்கலாம்”. எங்கள் எல்லாருக்கும் தலை நன்னாவே சுத்தீத்து. இன்னொண்ணும் சொன்னான்
“எத்தனை வருஷம் பின்னாடி போணம், எத்தனை நாழி ரிக்கார்ட் வேணும்னு முன்கூட்டியே ப்ரொக்ரேம் செஞ்சுடலாம். இப்பத்லேந்து ஒவ்வொரு வருஷமா பின்னோக்கிப் போய் ஒவ்வொரு வருஷத்துக்கும் 3 நிமிஷம் என்ன ஒலி அங்கே இருக்கோ அதை பிடிச்சுடலாம். ஒவ்வொரு வருஷமாப் போரமா, ரெவ்வெண்டு வருஷமா போவமா, ஒவ்வொரு தடவையும் எத்தனை நிமிஷம் ரிக்கார்ட் செய்யணும் என்பது நாம செலெக்ட் செஞ்சுக்கலாம், எத்தனை ரிக்கார்ட் செய்ய முடியும் என்பதில்தான் லிமிடேஷன், மெமொரி கம்மீ. நிறைய வேணும்னா பெரீசா ஆகிடும், எடுத்துண்டு யாருக்கும் தெரியாம வைப்பது கஷ்டம்”.
இப்படி பேரன் இருந்தா பாட்டியானவள் என்ன செய்வா? அதையேத்தான் நானும் செஞ்சேன். “பாட்டிக்கு ஒண்ணு செஞ்சு தாடா? எடுத்தூண்டு குரோம்பேட்டைக்கு போய் உன் கொள்ளுத் தாத்தா கொள்ளூப் பாட்டி பேசினதை பிடிச்சிண்டு வந்து உனக்கும் போட்டுக் காமிப்பேன்.” அந்த ஐடியா அவனுக்கும் பிடிச்சிருந்தது. கொள்ளுத்தாத்தாவ அவன் பாத்ததில்லை. எங்கம்மா இவன் பொறக்கரத்துக்குள் போயிட்டா. இவன் 8 மாசமா இருக்கப்போ அப்பாவும். “சரி பாட்டி, 2 வாரம் டயம் தா இதுக்குன்னே ஒண்ணு ஸ்பெஷலா செஞ்சு வைக்கரேன். ரெக்கார்ட் ஆனதும் தாத்தா கம்ப்யூடரில் போட்டு எப்படி கேப்பது அப்படீனு போனில் சொல்லித் தரேன்”.
அந்த வீக்கெண்ட் திவ்யமா போச்சு. எங்காத்து மாமாவும் சன்டே வந்து சேர்ந்துண்டர். இவன் கண்டுபிடிப்பை யாரண்டையும் மூச்சு விடப் பிடாதுன்னு சொல்லி வச்சிருந்தான். தாத்தாவுக்கும் சர்பரைஸா இருக்கட்டுமேன்னு.
சொன்னாப்போல் 2 வாரத்தில் குழந்தை “பாட்டி உன்னோட டிவைஸ் ரெடீ!” எனக்கும் குரோம்பேட்டை போய் அந்தாத்தை பாத்துட்டு தேங்காய் காய்ச்சிருந்துதுன்னா பரிச்சிண்டு வரலாமேன்னும். அங்கே அக்கம் பக்கத்தில் இருப்பவாளையும் பாக்கணும். இப்படி போயிண்டு வந்திண்டு இருந்தாத்தான் சித்தே பயம் இருக்கும், யாரும் சுவரேறிக் குதுச்சு ஏடாகூடமா திருடிண்டு பொயிடப் பிடாது பாருங்கோ!
ஓலா புக் செஞ்சுண்டு கிளம்பிட்டேன். மயிலாப்பூர் வந்து இவன் வச்சிருந்த புது சோழிய வாங்கீண்டு. ஒரு பெரீய சயின்டிஸ்ட் ஓலாவுலே குரோம்பேட்டைக்குப் போராப்போல் ஃபீல் ஆச்சு. (நாளை நிறைவடையும்)
No comments:
Post a Comment