Friday, March 12, 2021

முண்டகக் கண்ணியம்மன் கோவில்

 கயிலையே மயிலை      மயிலையே கயிலை. 

      மயிலையிலே கோவில் கொண்டாய் முண்டகக் கண்ணியம்மா, கயிலை நாதன் நாயகியே முண்டகக் கண்ணியம்மா

              சென்னை மாநகரின் மையமாகத் திகழ்வது 'மயிலாப்பூர்'. மயிலை என்றதும் அனைவரின் நினைவுக்கும் வருவது கபாலீஸ்வரர் கோயில்தான். அதனால்தான், ‘மயிலையே கயிலை... கயிலையே மயிலை’ என்கிறார்கள் பக்தர்கள். இந்த மயிலையின் காவல் தெய்வங்களாகத் திகழ்பவர்கள், கோலவிழி அம்மன் மற்றும் முண்டகக்கண்ணி அம்மன்.

        1000 வருடங்களாக சுயம்புவாகத் தோன்றிஅருள்பாலிக்கும்   முண்டகக் கண்ணியம்மன் கோவில்

                     சென்னையில் உள்ள மிக பழமையான திருத்தலங்களில் ஒன்று மயிலாப்பூர் முண்டகக்கண்ணி அம்மன் கோயில். 

         பழமையான பல திருத்தலங்களை ஒப்பிடுகையில் மயிலாப்பூரில் அமைந்துள்ள முண்டகக்கண்ணி அம்மன் மிகவும் பழம்பெருமையும், பல்வேறு சிறப்புக்களையும் கொண்டது. 

                    1000 ஆண்டுகளுக்கு முன்பு இப்போது முண்டகக்கண்ணி அம்மன் ஆலயம் இருக்கும் இடத்தில் ஒரு குளம் இருந்துள்ளது.  அந்த குளக்கரையில் பல நூறு ஆண்டு வயதுடைய மிகப்பெரிய ஆலமரம் இருந்தது. 

                 ஒரு நாள் அந்த ஆலமரத்தடியில் அப்பகுதி மக்கள் அமர்ந்து இருந்தபோது அம்மன் தன்னை சுயம்புவாக வெளிப்படுத்தி காட்சி தந்தாள் என்கிறது இத்தலத்தின் வரலாறு. மேலும் தாமரை மொட்டு வடிவத்திலேயே தன்னை அம்மன் சுயம்புவாக வெளிப்படுத்திக் கொண்டதால் தாமரை என்ற தமிழ்ச் சொல்லுக்குரிய முண்டகம் என்பதை குறிப்பிடும் வகையில் அம்மனுக்கு முண்டகக்கண்ணி அம்மன் என்ற பெயர் பெற்றதாக இக்கோவில் புராணம் கூறுகிறது.

             அத்தகைய சிறப்புமிக்க இத்திருக்கோயிலில் ஆடித்திருவிழா  மொத்தம் பத்துவாரங்களுக்கு நடைபெறும்.

           இத்திருவிழாவில் வாரந்தோறும் செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கூழ் வார்த்தல் நிகழ்ச்சி நடைபெறும். 

                   மதியம் 12 மணிக்கு பக்தர்களுக்கு கோவில் சார்பில் கூழ் வழங்கப்படும். அம்மன் கோவிலில் வழங்கப்படும் இக் கூழில் மருத்துவகுணம் உள்ளதால் எண்ணற்ற பக்தர்கள் இக்கோவிலுக்கு வந்து கூழ் அருந்தி மகிழ்ந்து வருகிறார்கள்.                  

            ரேணுகாதேவியின் அவதாரங்களுள் ஒன்றாகவும், சப்த கன்னிகைகளுள் ஒருவராகவும் கருதப்படும் முண்டகக்கண்ணி அம்மன், இந்தத் தலத்தில் சுயம்புவாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இத்தலத்தில், அன்னையின் கருவறை ஓர் எளிய தென்னங் கீற்றுக் கொட்டகைதான். இங்கு, கிழக்கு நோக்கி எழுந்தருளியிருக்கும் அம்மனை , 'விரிந்த பெரிய விழிகளைக் கொண்டவள்' என்ற பொருளில் 'முண்டகக் கண்ணியம்மன்' என்கின்றனர்.

முண்டகக்கண்ணி அம்மனை வழிபடும் பெண்கள், அவரைத் தாயாகவே ஏற்று வேண்டிக்கொள்கிறார்கள். கோயிலில் எப்போதும் பெண்கள் கூட்டத்தை அதிகமாகக் காணமுடியும். அம்மனும் பெற்ற தாயைவிட வாஞ்சையுடன் பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்றுகிறாள். கோயிலில், அம்மன் சந்நிதிக்கு எதிரே மிகப்பெரிய அரசமரம் ஒன்று உள்ளது.

அதன்கீழ், நாக கன்னிகளின் விக்கிரகங்கள் காணப்படுகின்றன. இந்த நாக கன்னிகளுக்கு பால் ஊற்றி, அரசமரத்தை மூன்று முறை சுற்றிவந்து வணங்குகிறார்கள் பக்தர்கள். இதேபோன்று, அம்மன் சந்நிதிக்குப் பின்புறம் விழுதுகள் இல்லாத அபூர்வ கல்லால மரமும் புற்றுடன்கூடிய மூன்றடி கல்நாகமும் இருக்கின்றன. இந்தக் கல்லால மரம்தான் தலமரமாக வணங்கப்படுகிறது. அந்தப் புற்றில் நாகம் ஒன்று வாழ்வதாகவும் தினமும் இரவு நேரத்தில், அந்த நாகம் கோயிலுக்குள் வந்து அம்மனை வழிபடுவதாகவும் பக்தர்கள் நம்புகிறார்கள்.

அம்மனின் திருப்பெயரான 'முண்டகக் கண்ணியம்மன்' என்பதில் 'முண்டகம்' என்றால் 'தாமரை' என்று பொருள். 'தாமரை மலர் போன்ற கண்களை உடையவள்' என்பதாலும், 'தாமரை மொட்டு' போன்று தன்னை வெளிப்படுத்திக்கொண்டாள் என்பதாலும் அம்மனுக்கு 'முண்டகக் கண்ணி' என்று பெயர் ஏற்பட்டதாகத் தலபுராணம் கூறுகிறது.

          இங்கு, மூலவராக வீற்றிருக்கும் அம்மனுக்கு உருவம் இல்லை. தாமரை மொட்டு போன்று காட்சியளிக்கும் சுயம்பின் உச்சிப் பகுதியில், சந்தனத்தைக் குழைத்து உருவம் செய்து வழிபடுகிறார்கள். சந்தன உருவத்தில் குங்குமம் வைத்து, தலைக்குப் பின்புறத்தில் நாக கிரீடம் சூட்டிப் பார்க்கும்போது அம்மன் அமர்ந்த நிலையில் காட்சியளிப்பதைப் போன்றே இருக்கும். மூலவர் சந்நிதிக்கு இடப்புறத்தில் உற்சவர் சந்நிதி இருக்கிறது.

ராகு - கேது தோஷம் உள்ளவர்கள் இந்த அம்மனை வழிபட, அவற்றிலிருந்து முழுமையாக விடுபடலாம் ; அம்மை மற்றும் கண் தொடர்பான நோய்கள் தீர, இந்த அம்மனை வழிபடலாம் என்பது மேலும் சிறப்பு. தீராப்பிணி, திருமணத்தடை, கல்வி வரம், மகப்பேறு, வீடு வாகன வசதிகள் என அனைத்தையும் அருள்பவள் இந்த அம்மன்.

நாகதோஷம் இருப்பவர்கள், முண்டகக் கண்ணி அம்மனை வழிபட்டு, நாககன்னி சிலையை பிரதிஷ்டை செய்வதாக வேண்டிக்கொள்கிறார்கள். அதன்பிறகு, 48 நாள்களுக்கு நீரிலேயே நாககன்னியை வைத்திருந்து, அதை ஆலயத்தின் முகப்பில் இருக்கும் மரத்தடியில் பிரதிஷ்டை செய்து, அதற்கு அபிஷேகமும் செய்து வழிபடுகிறார்கள். அனைத்து செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் கோயில், திருவிழாக்கோலம் பூண்டுவிடும். ஆடி மாதம் முண்டகக் கண்ணியம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபடுவது மேலும் சிறப்பு.

     வெள்ளிக்கிழமையன்று முண்டகக்கண்ணியம்மனுக்கு பொங்கல் வைத்துக்கொண்டிருந்த பெண் பக்தர் ஒருவரிடம் பேசினோம்.

“என் பேரு   சாஹிபா பேகம் . திருவான்மியூர்லருந்து வர்றேன். நாப்பது வருஷமா மயிலாப்பூர்லதான் இருந்தேன். இப்ப திருவான்மியூர் போய் இருபது வருஷம் ஆகுது. மயிலாப்பூர்ல தங்கிருந்த காலத்துல இருந்து இப்பவரைக்கும் தவறாம ஆடிமாசம் பொங்கல் வெச்சி இந்த அம்மாவ கும்புட்டுக்கிட்டு இருக்கேன். எனக்கு எல்லாமே இந்த அம்மாதான்.

       பிரிட்டீஷ் ஆட்சியின்போது இங்கிலாந்து நாட்டைச்சேர்ந்த ஒரு குடும்பம் தங்கள் மகனின் தீராத வாதப்பிரச்சனைக்காக இங்கு வந்து அம்மாவிற்குப் படைத்த கூழை அவர்கள் மகனுக்குத்தர நிரந்தரமாக அவர்கள் மகனுக்கு  வாதம் முற்றிலும் குணமானதாக கூறுகிறார்கள் இங்குள்ள பெரியவர்கள். 

          என ஜாதி மத பேதம் இல்லாமல் எல்லோரும் இவளை குடும்பத்தை காக்கும் காவல் தாயாக வணங்கிச் செல்கின்றனர்.

            ஓம் ஸ்ரீ முண்டகக்கண்ணித் தாயே போற்றி!



                               


No comments:

Post a Comment