Wednesday, March 10, 2021

பாஸ்கரேசுவரர்சுவாமி_திருக்கோயில்

 இன்றைய கோபுர தரிசனம் கோடி புண்ணியம் பாவ விமோசனம் இயற்கை எழில் கொஞ்சும் சூழலில் மிகவும் பழமையான தலம் #ஆதிசுன்சனகிரி_காலபைரேஸ்வரர் 

#அருள்மிகுபாஸ்கரேசுவரர்சுவாமி_திருக்கோயில்:

மூர்த்தி, தலம், தீர்த்தம் முறையாய்த் தொடங்கி ஒரு வார்த்தை சொல்ல சத்குருவும் வாய்க்கும் பராபரமே என்பார் தாயுமானவர்.

மூர்த்திச் சிறப்பு, தல சிறப்பு, தீர்த்த சிறப்பு முதலான மூவகை சிறப்புகளோடு சூரிய கிரக தோஷ நிவர்த்தி தலமாகவும் சிறந்து விளங்கும் திருத்தலம் பரிதியப்பர்கோயில் என வழங்கப்பெறும் திருப்பரிதிநியமம் (தற்போது பரிதியப்பர்கோயில் என்று அழைக்கப்படுகிறது).

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு வட்டம், மேலஉளூர் அருகே உள்ள பரிதியப்பர் ஆலயம், பிதுர் தோஷ நிவர்த்தி தலமாகவும் விளங்குகிறது.

சோழ வளநாட்டுத் தேவாரப் பாடல் பெற்ற 190 தலங்களை வரலாற்று ஆசிரியர்கள் காவிரி வடகரைத் தலங்கள் எனவும், காவிரி தென்கரைத் தலங்கள் எனவும் பிரித்துக் கூறி வழங்குவர். அவ்வகையில் சிதம்பரம் எனப் பெறும் தில்லை முதலாக ஈங்கோய்மலை ஈறாக உள்ள 63 திருத்தலங்களை காவிரி வடகரைத் தலங்கள் எனவும், திருவாட்போக்கி முதலாக திருக்கோடிக்குழகர் ஈறாக உள்ள 127 திருத்தலங்களை காவிரி தென்கரைத் தலங்கள் எனவும் சுட்டி வழங்குவர். அவ்வகையில் காவிரியின் தென்கரையில் அமைந்துள்ள தேவாரத் தலங்களுள் 101-வது திருத்தலமாக அமையப்பெற்ற தலமே திருஞானசம்பந்தரின் மூன்றாம் திருமுறை பதிகம் பெற்ற சிறப்பினையுடைய திருப்பரிதி நியமம் என்று அழைக்கப்படும் பரிதியப்பர் கோவில். 

தேவார திருவாசகப் பாடல்களை அருளிச்செய்த சைவ சமயக் குரவர் நால்வராலும் இத்தலம் குறிப்பிட்டுப் பாடப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 நாலும் இன்னிசையால் நற்றமிழ் பரப்பி வாழ்ந்த ஞானசம்பந்தர், பண்கொண்ட வண்டினம் பாடியாடும் பரிதிந்நியமமே எனவும்

நற்றமிழ் வல்ல நாவினுக்கரையார், பரிதிநியமத்தானைப் பாசூரானை எனவும்

செந்தமிழ்த் திறம் வல்ல சுந்தரமூர்த்தி, பருந்திநியம் துறைவாய் வெயிலாய் எனவும்,

தேனினும் இனிய திருவாசகத்தை அருளிய மாணிக்கவாசகர், பரிதிவாழ் ஒளியாய் எனவும் சிறப்பித்துப் போற்றியுள்ள இத்திருத்தலம் பற்றிய குறிப்புகளை உமாபதி சிவம், சேக்கிழார், வடலூர் ராமலிங்க அடிகளார் முதலானோரும் தந்துள்ளனர்.

#நடனதலங்கள்பன்னிரண்டில்_ஒன்று

சிவபெருமானுடைய மகேஸ்வர வடிவங்கள் 25-இல் ஒன்று நடராஜ மூர்த்தமாகும். அவ்வாறு சிவபெருமான் விரும்பி நடனமாடிய திருத்தலங்கள் 12 எனவும் அப்பன்னிரண்டில் இத்தலமும் ஒன்றியமைந்து சிவன் நடன தலமாகவும் விளங்குகின்றது. 

#சூரியத்தலங்கள்ஏழினுள்_ஒன்று

சிவபெருமானை சூரியன் பூஜித்துப் பேறு பெற்ற தேவாரத் தலங்கள் 7 எனவும், அவ்வேழு தலங்களுள் இக்கோவிலும் ஒன்று என்று ஒரு தனிப்பாடல் குறிப்பு கூறியுள்ளது.

#பிதுர்தோஷபரிகாரம்மற்றும்பிரார்த்தனை_முறை

சூரிய பகவான் தட்ச யாகத்தில் சிவபெருமானுடைய அனுமதி இல்லாமல் கலந்துகொண்டதற்காக ஸ்ரீஅகோர வீரபத்திரரால் தண்டிக்கப்பட்டு அந்த தோஷ நிவர்த்திக்காக 16 சிவத் தலங்களில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து தோஷம் நிவர்த்தி அடைந்துள்ளார். அந்த வகையில், இத்திருக்கோவிலில் சூரிய பகவான் சிவலிங்கம் அமைத்து வழிபட்டதாகக் கூறப்படுகிறது.

சூரிய பகவானுக்கு சிவன் நிந்தனைகள் ஏற்பட்டு அதற்கு பிராயச்சித்தம் ஏற்பட்டதால் இத்திருக்கோவிலில் ஜாதக ரீதியாக பிதுர்காரகன் சூரியன், சனி, ராகு, கேது, மாந்தி ஆகிய பாவ கிரகங்களுடன் இணைந்தோ அல்லது மேற்படி கிரகங்களால் பார்வை பட்டோ இருந்தால் அந்த ஜாதகருக்கோ அல்லது அந்த பரம்பரையினருக்கோ ஏற்படும் பிதுர்தோஷத்துக்கு இங்கு பிரார்த்தனை செய்வதால் நிவர்த்தியாகிறது. மேலும், பிதுர்காரனாகிய சூரியன் கெட்டிருந்தாலும் மேற்படி பரம்பரையில் ஏற்படும் பிதுர் தர்ப்பண தோஷத்திற்கு இங்கு பிரார்த்தனை செய்தால் நிவர்த்தி ஏற்படுகிறது.

மேலும் கார்த்திகை, உத்திரம், உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும், சூரிய திசை நடப்பில் உள்ளவர்களுக்கும், சிம்ம லக்னத்தில் மற்றும் சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கும், ஞாயிற்றுக் கிழமையில் பிறந்தவர்களும், சூரியன் உச்சம் பெற்றவர்களும் (சித்திரை மாதம் பிறந்தவர்கள்), சூரியன் ஆட்சி பெற்றவர்களும் (ஆவணி மாதம் பிறந்தவர்கள்) சூரியன் நீச்சம் பெற்றவர்கள் (ஐப்பசி மாதம் பிறந்தவர்கள்) மேலும் பிரதி தமிழ் மாதம் முதல் தேதியில் பிறந்தவர்களும் இத்தலத்தில் எழுந்தருளியுள்ள விசேஷ மூர்த்திகள் ஆகிய சூரிய பகவானையும் சிவபெருமானையும் பிரதி தமிழ் மாதம் சுக்லபட்ச வளர்பிறையில் வருகின்ற முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபடலாம்.

.#ஆயுள்விருத்திதலம்

மார்க்கண்டேயன் இங்கு அருவ வடிவில் தினமும் சிவபூஜை செய்வதாக ஐதீகம். நோயினால் நீண்ட நாள் பாதிக்கப்பட்டவர்கள், தீராத நோயினால் அவதிப்படுபவர்கள் இங்கு வழிபாடு செய்து பலனடைகிறார்கள். 60, 70, 80 வயதானவர்கள் இத்தலத்தில் "சஷ்டியப்தபூர்த்தி' திருமணம் செய்வதால் அவர்களது ஆயுள் அதிகரிக்கும் என்பது ஐதீகம். பிரமசர்மா என்பவனும் அவரது மனைவி சுசீலையும் தாங்கள் செய்த பாவத்தினால் பருந்தும் கிளியுமாக மாற சாபம் பெறுகின்றனர். இவர்கள் தாங்கள் செய்த பாவத்திலிருந்து மன்னிப்புப் பெற இத்தலம் வந்து பிரார்த்தனை செய்து சாபவிமோசனம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

#முகவரி 

அருள்மிகு பாஸ்கரேசுவரர் சுவாமி திருக்கோயில்
பரிதியப்பர் கோயில்,
ஒரத்தநாடு வட்டம்,
தஞ்சாவூர் மாவட்டம் - 614 904.
=======================================================================
இன்றைய கோபுர தரிசனம் கோடி புண்ணியம் பாவ விமோசனம் இயற்கை எழில் கொஞ்சும் சூழலில் மிகவும் பழமையான தலம் #ஆதிசுன்சனகிரி_காலபைரேஸ்வரர் 

#மாதேஸ்வரன்மலைகோவில்:

உயர்ந்த மலை. அதிலே அடர்ந்த காடுகள். மலைப்பகுதி கண்களுக்கு இதமானது. பசுமை நிறைந்த காடும், மலையும் நம் மனதை உற்சாகப்படுத்துகின்றன. மலைவாசம் நம் மனச்சுமைகளை இறக்கி வைக்க அருமையான இடம். குளுமையான அந்த மலையிலே, அருமையான தெய்வம் அங்கே ஒரு கோயிலில்  குடிகொண்டிருந்தால், நம் ஐம்புலன்களையும் அடக்கி ஆழ்ந்த தியானத்தை மேற்கொள்வதற்கு ஆனந்தமான ஒரு ஆற்றலைப் பெறுவதற்கு ஏற்றதாகவும் அந்தச் சூழல் அமைந்து விடுகிறது. மேற்குத்தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியான காடும், மலையும் கர்நாடக மாநிலத்தில் வந்து சேர்கின்றன. இந்த அழகிய மலைச்சாரலில் ‘மாதேஸ்வரன்’ என்ற பரமேஸ்வரன் குடி கொண்டிருக்கும் மலை ‘மாதேஸ்வரன் மலை’ என்று அழைக்கப்படுகிறது. அங்குள்ள 14ம்  நூற்றாண்டுகாலகல்வெட்டுகள் மாதேஸ்வரன் என்ற ஒரு சிறுவன், பரமேஸ்வரனின் அருளால் அந்த ஈஸ்வரனுக்குப் பணிவிடை செய்யும் பொருட்டு வானத்திலிருந்து பூமிக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகத் தெரிவிக்கின்றன.

வானத்திலிருந்து தோன்றிய அந்த சிறுவன் ‘சித்தநஞ்ச தேசிகர்’ என்ற ஒரு சித்புருஷர் தனது ‘சுத்தூர்’மாட சிம்மாசமான மடத்தில் பணியாற்ற தனது சீடனாக ஏற்றுக் கொண்டார். அந்த சீடனுக்கு ‘சிவசக்தியின்’ அருட்கடாட்சத்தைப் பலவகையிலும் கற்றுக் கொடுத்து, அந்த ஈசனின் அருளால் அவனுக்கு வாரி வழங்கி அந்த சிறுவனை ஒரு சிவபக்தனாக வளர்த்தார். அந்தச் சிறுவனிடம் அவ்வப்போது அதிசயத்தக்க சில மாற்றங்கள் தோன்றிக்கொண்டே இருந்தன. அவன் சில அற்புதங்களை அவ்வப்போது அந்த மடத்திலே ஈசனின் அருளால் நிகழ்த்திக் காட்டினான். ஒரு சமயம் பரமேஸ்வரனுக்குப் பூஜை செய்ய மலர்களைப் பறித்துவர அந்தச் சிறுவனையும், அவனுடன் மற்ற சீடர்களையும் அந்த வனப்பகுதிக்குள் அனுப்பினார், சித்தநந்ததேசிகர். குருவின் கட்டளைப்படி இதர சீடர்கள் பூப்பறித்து வந்து நின்றனர். ஆனால், அந்த சிறுவனைக் காணவில்லை. அவன் எங்கே என்று மற்ற சீடர்களைக் கேட்டார், குரு.

அவன் தங்களை விட்டுப் பிரிந்து தனியாக சென்று விட்டான் என்று பதில் வந்தது. சற்று நேரத்திற்கெல்லாம் அந்தச் சிறுவன் காட்டுப்புலி ஒன்றின்மீது அமர்ந்து கொண்டு, பூக்களுக்குப் பதில் தேள், பூரான், பாம்பு, அரணை போன்ற விஷப் பூச்சிகளைப் பூக்கூடையில் நிரப்பிக் கொண்டு வந்தான். புலிமீது அமர்ந்திருக்கும் அவனைக் கண்டு குரு பயந்து போய் செய்வதறியாது திகைத்து நின்றார். சிரித்துக் கொண்டே அந்தச் சிறுவன் புலியின் மீதிருந்து இறங்கி, புலியின் தாடையைத்  தடவினான். அடுத்த நொடி புலி மாயமாய் மறைந்து விட்டது. பூக்கூடையில் இருந்த விஷப் பூச்சிகளை குருவிடம் காட்டி விட்டு அருகிலிருந்த குளத்து நீரில் போட்டு எடுத்தான். அவையெல்லாம் மணமிக்க மலர்களாக மாறின. அந்த மலர்களைக் கொண்டு வந்து குருவின் முன் கொட்டினான். இந்த செயல்களைக் கண்ட குரு மிகுந்த ஆச்சரியப்பட்டு போனார். இது இந்த சிறுவனின் செயல் அல்ல. சிவபெருமானின் அருட்கடாட்சத்தால்தான் இவனுக்கு இந்த யோக சக்தி  ஏற்பட்டுள்ளது.

 
எனவே, இவன் சிவபெருமானின் அவதாரமாகத்தான் இருக்க வேண்டுமென்று கருதி அவனை உயர்ந்த இடத்தில் வைக்க விரும்பினார். அந்த மலைப்பகுதியில் தங்களுடைய ஆண் பிள்ளைகளுக்கு அந்த கிராம மக்கள் பெரும்பாலும் மாதன்என்ற பெயரைத்தான் வைப்பார்கள். ஆகவே அந்த குரு இந்த சிறுவனுக்கு மாதன் என்ற பெயரோடு ஈஸ்வரன் என்ற திருப்பெயரையும் சேர்த்து மாதேஸ்வரன் என அழைத்தார். பிறகு அவனை குடகு மலையிலுள்ள பிரபுலிங்க மலை என்ற இடத்திலிருக்கும் திரு ஆதி கணேஸ்வரர் என்ற தனது குருவிடம், மேலும் நல்ல கல்வி கற்று மேம்பட, அனுப்பி வைத்தார். அப்படியே சென்ற மாதேஸ்வரன், அந்த குருவிடமிருந்து வேதம், யாகம், யோகம், தவம் ஆகியவற்றில் சிறப்புத் தேர்ச்சி பெற்றான். கூடவே தன் சித்துவேலைகளையும் செய்து காட்டினான்.  விஷப்பூச்சிகளை வைத்து சில அதிசயத்தக்க லீலைகளை செய்து காட்டி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துவான்.

பல்லியைப் பாம்பாக்குவான், பாம்பைப் பூரானாக்குவான், ஓடிக் கொண்டிருக்கும் தேள் சட்டென்று அரணையாகி விடும். அதேபோல அரணை பல்லியாகி விடும்! இப்படியெல்லாம் சித்து வேலைகள் செய்து அந்த கிராம மக்களை அசத்துவான். மக்கள் சிலசமயம் இவனிடம் வந்து அருள்வாக்குக் கேட்பார்கள். மாதேஸ்வரன் சொன்னதெல்லாம் அப்படியே நடக்கும். ஒருவர் ஒரு பசுமாட்டைக் கொண்டு வந்து மாதேஸ்வரன் முன்பு காட்டி ‘‘இது மலட்டுப் பசுவாக அமைந்து விட்டது பாலே சுரப்பதில்லை’என்று குறைபட்டுக் கொண்டார். அவன் அந்தப் பசுவைத் தொட்டான். அப்போதே அந்தப் பசு பால் சொரிய ஆரம்பித்து விட்டது. வியந்து நின்றான் பசுவின் சொந்தக்காரன். ஒரு சமயம் ஒருவர் தீராத நோயொன்று தன்னைப் பாடாய்ப்படுத்துகிறது என்றார். வெறுங்கையில் விபூதியை வரவழைத்த  மாதேஸ்வரன் அந்த விபூதியை அந்த நோயாளி உடல் முழுவதும் பூசினான். அவன் நோய் தீர்ந்து குணமடைந்தான்.

இப்படியெல்லாம் செய்து அந்த மலைவாழ் மக்களிடமும், மற்ற ஊர் மக்களிடமும் பேரும், புகழும் பெற்றான். நன்கு முதிர்ச்சியடைந்த மாதேஸ்வரனை மீண்டும் மாதேஸ்வரன் மலையில் இருந்த பழைய குருவிடமே அனுப்பி வைத்தார் ஆதிகணேச குரு. மீண்டும் மாதேஸ்வரன் மலைக்கே வந்த மாதேஸ்வரனின் பாதம் பட்டதும் அங்கே இருந்த சிறுசிறு குன்றுகளெல்லாம் சம நிலங்களாயின. காய்ந்து போயிருந்த பூச்செடிகள் எல்லாம் துளிர்விட்டன. மரங்கள் பசுமை போர்த்துக்கொண்டன. அங்கே தெய்வீக மணம் கமழ்ந்தது. குளுமையான அந்தப் பச்சைப்புல் தரையில் அப்படியே அமர்ந்து ஈஸ்வர தியானத்தில் ஆழ்ந்தான் மாதேஸ்வரன். இப்படி தினமும் ஆழ்நிலை தியானத்தில் பன்னிரண்டு ஆண்டுகள் கழிந்தன. ஒருகட்டத்தில் அவன் அப்படியே ஒரு கல் லிங்க வடிவமாகவே  உருமாறி விட்டான். மாதேஸ்வரன் மறைந்துபோய் மாதேஸ்வர லிங்கமானான் அவன்! மனிதனே இறைவனாகும் பேரற்புதம் அங்கே நிகழ்ந்தது.

பதினான்காம் நூற்றாண்டுக்குப் பின்னால் இந்த மாதேஸ்வரனுடைய பக்தர்களும், பக்தர்களின் வம்சாவழியினரும் ஒன்று சேர்ந்து ஒரு கோயில் எழுப்பி வழிபட்டு வந்தனர். அந்தக் கோயில் காலப்போக்கில் வளர்ச்சி பெற்று மூன்று அற்புத ஆலயங்களாக இன்று அமைந்துள்ளது. மூலக் கருவறைக்குள்ளே மாதேஸ்வர சிவலிங்கம் ஐந்து தலைப்பாம்பு படமெடுத்திருக்க தெய்வீக ஒளியுடன் மிக அற்புதமாக தங்கக்காப்புடன் பளீரென்று மின்னுகிறது. மைசூர் மன்னராக இருந்த ஸ்ரீஜெயசாம்ராஜ உடையார் பகதூர் ஸ்வாமிகள் ஸ்ரீமாதேஸ்வரன் மீது கொண்ட அளவற்ற பக்தியால் இந்த மலையில் பக்தர்கள் வந்து தங்குவதற்கு இருப்பிட  வசதிகள் செய்து கொடுத்தார். பல ஏக்கர் புன்செய் நிலங்களையும் விலைமதிப்பில்லாத அளவுக்குத் தங்கம், வெள்ளி, வைர நகைகளையும் நிவந்தனமாகக்  கொடுத்துள்ளார்.

இவருக்குப் பிறகு ஜீஞ்சே கவுடா என்ற குருபர் இனத்து மலைவாழ் பக்தர் இக்கோயிலை மேலும் சீரமைத்து அற்புதமாக்கினார். அணுமலை, கனுமலை, ஜெனுமலை, பச்சைமலை, பவளமலை, லிங்கமலை, பொன்னாச்சி மலை ஆகிய ஏழு மலைகள் இணைந்ததே மாதேஸ்வரன் மலை. இங்கு வாழும் சோளிகர், ஜேனுகுருபர், காடுகுருபர், குருபகவுடர் இனத்தவர்களுக்கு ஸ்ரீமாதேஸ்வரனே குலதெய்வம். இவர்களில் தம்மடிகள் என்பவர்கள் லிங்கத்தைக் கழுத்தில் மாலையாக அணிந்துகொண்டிருப்பார்கள். கண்ணப்ப நாயனாரின் வாரிசுகள் இந்தக் கோயிலில் அர்ச்சகர்கள். இவர்கள் எல்லாம் இக்கோயிலைச் சுற்றிய கிராமங்களிலேயே வசிக்கிறார்கள். சிவராத்திரி, நவராத்திரி, தீபாவளி போன்ற பண்டிகை நாட்களிலும், அமாவாசை, பௌர்ணமி நாட்களிலும் இங்கு சிறப்பு பூஜை நடைபெறும்.

குடும்பப் பிரச்னைகள் நீங்கவும், தீராத நோய்களிலிருந்து விடுபடவும், குறிப்பாக விஷப்பூச்சிக் கடியிலிருந்து நிவாரணம் பெறவும், பசுமாடு முதலான கால்நடைகள் பிணி தீரவும், அவை நிறைய பால் வழங்கவும், இந்த மாதேஸ்வரனை பிரார்த்தித்துக் கொள்கிறார்கள். இங்கேயுள்ள அந்தர கங்கை குளத்தில் நீராடினால் காசி, கேதார்நாத், ராமேஸ்வரம் போன்ற தலங்களில் நீராடிய பலன் கிடைக்கும். குடும்பக் குறைகள் தீர, ரிஷபம் அல்லது புலி வாகனத்தில் மாதேஸ்வரனை அமர்த்தி கோயிலை வலம் வந்து வேண்டுதல் செய்கிறார்கள். குறிப்பாகத் தங்கத்தேர் ஊர்வலம் சகல நன்மையையும் அளிக்கக்கூடியதாக நம்பப்படுகிறது. இக்கோயில் கர்நாடக மாநிலம், சாம்ராஜ் நகர் மாவட்டம், கொள்ளேகால் தாலுக்காவில் மலைமீது 300 அடி உயரத்தில் அமைந்துள்ளது.

பெங்களூரிலிருந்து 210 கி.மீ.; மைசூரிலிருந்து 140 கி.மீ.; கொள்ளேகாலிலிருந்து 70 கி.மீ. தூரத்தில் உள்ளது. தமிழ்நாட்டிலிருந்து சேலம், மேட்டூர் அணை, கொளத்தூர் வழியாக 4 மணிநேர பயணத்தூரத்தில் இந்த கோயிலை அடையலாம்.




No comments:

Post a Comment