Monday, March 15, 2021

ஏகாதசி

 முகநூலிலிருந்து (மத்யமர்)

திரு சாரதி பதிவு...

ஏகாதசி

“ நெத்தி மேட்ல இருக்கிற அந்த சுழிதாண்டா அவனை அப்படி எங்கேயோ கொண்டு போய் நிறுத்துது. மச்சம்டா அவனுக்கு அதான் எல்லா விளையாட்லையும் முதல்ல வாரான்” !!.....

என்னுடன் பள்ளியில் படிக்கும் அத்தனை பேரும் ஒம்மலை வெளிப்படுத்துவார்கள்.

ஸ்கூல் அட்டெண்டன்ஸ் ரெஜிஸ்டரில் மட்டும் அவன் கோபாலன். மற்றபடி எல்லோருக்கும் அவன் கோபு.

கோபு என்கிற கோபாலனுக்கும் அவன் அண்ணனுக்கும் 8 வயசு வித்தியாசம். கோபு ரெண்டு வயசு குழந்தையாக இருக்கும் பொழுதே அப்பா போய் சேர்ந்துவிட்டார். ஏழ்மையான குடும்பம். ரெண்டு பசங்களை படிக்க வச்சி ஆளாக்கறதுக்கு ஜானகி மாமி ரொம்ப உழைக்க வேண்டி இருந்தது. சொந்தமா வீடு வாசல் கிடையாது. வ்யாஸராஜ மடம் பக்கத்தில் ஒரு ஓட்டு வீட்டில் ஒண்டு குடுத்தனம்.

கல்யாணம் மற்றும் பல விசேஷ நாட்களில் காய்கறி திருத்துவது , சாப்பிட்ட இலைகளை எடுத்து எச்சை பிரட்டி சுத்தம் செய்வது போன்ற வேலைகளில் சொற்ப வருமானம் பார்ப்பாள். பசங்களுக்கும் அவளுக்கும் அங்கேயே சாப்பாடு கிடைத்துவிடும்.

மற்ற நாட்களில் மந்தார இலைகளை தைத்து விற்பாள். அப்பளம், வடகம், வத்தல் தயார் செய்து வீடு வீடாக சென்று விற்பாள். மாமிக்கு காது செவிடு. ரொம்ப கத்தி பேசினால்தான் கேட்கும்.

அவ்வளவு தரித்தரத்திலும் மகன்களை பொத்தி பொத்தி ஆசையாய் வளர்த்தாள். கோபுவின் மேல் அவளுக்கு கொஞ்சம் பாசம் அதிகம்.

கோபு ரொம்ப குள்ளமா இருப்பான். மூளைக்காரன். படிப்பு விளையாட்டு எல்லாத்திலயும் நம்பர் ஒன். ஒட்டப்பந்தயத்தில் அவன் கால்களில் புயல் மாதிரி ஒரு வேகம் வரும்.

ட்ரில் மாஸ்டருக்கு அவன் திறமை கண்டு கர்வம் கலந்த பெருமை. நான்தான் அவனை இந்த அளவுக்கு தயார் செய்திருக்கிறேன் என்பார். மாவட்ட அளவிலான போட்டிகளில் அவன் முதலிடத்தில் வந்து அவருக்கும் பள்ளிக்கும் புகழை அள்ளிக்கொண்டு வந்து சேர்த்தான்.

கோபுவின் அருமை பெருமைகளை மற்றவர்கள் சொல்லி கேட்கும் போதேல்லாம் ஜானகி மாமிக்கு தலை தோளில் தங்காது.

அப்பாவை சிறு வயதிலேயே முழுங்கி விட்டாலும் அவன் மீது அவ்வளவு பாசம். செல்லம் கொடுத்து வளர்த்தாள் அவனை. அவள் வாழ்வின் விடி வெள்ளியாக முளைத்து சூரியன் போல தக தக என்று ஒளி வீசுவான் கோபு என நம்பினாள்.

தினமும் காலை 4 மணிக்கு மாட வீதி பிரதக்ஷணத்தில் அவளை காணலாம். காஞ்சி வரதராஜ பெருமாளிடம் அவ்வளவு பக்தி.

அருகிலிருக்கும் ஏரிதான் பள்ளியின் மைதானம். வெயில் காலங்களில் தண்ணீர் பெரும்பாலும் சூரிய பகவானின் தீராத தாகத்திற்கும், பூமா தேவியின் பசிக்கும் இரையாகிவிடுவதால் வறண்டு காணப்படும். என்னை போன்ற விடலைப் பசங்களுக்கெல்லாம் லீவ் விட்டாயிற்று என்றால் சோறு தண்ணி கூட பார்க்காமல் அங்குதான் ஆட்டம்.

சூரியன் மேற்கே சரிய தொடங்கும் நேரம் நாங்கள் ஆட்டத்தை ஏறக்கட்ட ஆரம்பிப்போம். நேரம் சற்று அதிகமாகி அந்தி சாய்ந்து விட்டால் மாமி கவலையுடன் கோபுவை தேடிக்கொண்டு வந்துவிடுவாள். சற்று வளர்ந்த சில பொறுக்கி பசங்கள் கேலியும் கிண்டலுமாக " டேய் ! செவிடு வந்திருக்கு! கோபு எங்க பாரு ! செவிடு தவிச்சி போய்டும் ! " என்று கூச்சலிடுவார்கள்.

பள்ளியின் ஆண்டு தினத்தன்று கோபுவுக்கு ஏகப்பட்ட பரிசுகள், பாராட்டுகள். சிறந்த மாணவனாக அறிவிக்கப்பட்டு பெரிய சுழல் கோப்பை அளிக்கப்பட்டதில் அவனுக்கும் ஜானகி மாமிக்கும் ரொம்ப பெருமை. விழாவிற்கு தலைமை தாங்கியவர், வரும் காலத்தில் கோபு இந்தியாவின் தலை சிறந்த விளையாட்டு வீரனாக வருவதற்கான சாத்தியக்கூறுகள் பிரகாசமாக தெரிவதாக கணித்து வாழ்த்தினார்.

மாமி வீட்டிற்கு வந்ததும் மகனை சுழல் கோப்பையுடன் வாசலில் நிற்கவைத்து, திருஷ்டி கழித்து, ஆரத்தி சுற்றி வீட்டினுள் அழைத்து வந்தாள்.

பள்ளிக்கு விடுமுறை விட்டாயிற்று. அப்பாவுக்கும் சிங்கபெருமாள் கோவிலுக்கு ட்ரான்ஸ்பர் ஆகி விட்டது. நண்பர்களையும், காஞ்சிபுரத்தையும் பிரியமனமில்லாமல் பிரிந்தேன். கோபு கெட்டியாக கைகளை அழுந்த பிடித்துக்கொண்டான். எங்கள் இருவரின் கண்களிலும் சமுத்திரம்.

சிங்கபெருமாள் கோவிலில் ஒரு ஆண்டு, பிறகு சென்னை மற்றும் பெங்களூரில் படிப்பு தொடர்ந்தது. ஏனோ புரியவில்லை. கோபு மனதில் சுற்றி சுற்றி வந்தான். பெரிய ஸ்போர்ட்ஸ்மேனாக ஆகி இருப்பான்.

காலம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை. நானும் குடும்பஸ்தனாகி இருந்தேன். தலை முடியில் அங்கங்கே நரை ஓடியிருந்தது. என்னுடைய நாற்பதாவது வயதில் மீண்டும் காஞ்சிபுரம். கிழக்கு கோபுர வாசலில் வந்து இறங்கியதும் உடம்பு பூராவும் ஒரு சிலிர்ப்பு. மனம் என் சிறு வயது நண்பர்களை அந்த தெருவில் அங்கங்கே பொருத்தி வைத்து, பார்த்து பார்த்து, நிகழ்வுகளை அசை போட்டு அசை போட்டு, ரசித்தது.

என் வீடு ஒரே களேபரமாக இருந்தது. லாரியில் வந்திறங்கிய சாமான்களை இன்னும் ரகம் பிரித்து அடுக்கி முடிக்கவில்லை. அத்தை வீட்டில் மனைவியையும் பசங்களையும் தங்க வைத்துவிட்டு ஊர் சுற்ற கிளம்பினேன்.

வீட்டுக்கு வீடு டிஷ் ஆன்டெனாக்கள் தலையை துருத்திக்கொண்டு எட்டி பார்த்தன. பழைய வீடுகள் பல இடிக்கப்பட்டு அபார்ட்மெண்ட்களாக அவதாரம் எடுத்திருந்தன. தெருவே மாறிப்போயிருந்தது.

ஒன்று விட்ட சித்தப்பா செல்லப்பாவிடம் நண்பர்கள் குறித்து விஜாரித்தேன். கோபு எப்படி இருக்கிறான். எந்த ஊரில் இருக்கிறான். பெரிய ஸ்போர்ட்ஸ்மேனாக இருக்கிறானா என்றெல்லாம் கேள்விகளை அடுக்கினேன். அவர் கூறிய பதில் தூக்கிவாரி போட்டது. என்னால் நம்பவே முடியவில்லை.

கோபு கோவிலில் தினசரி தேசாந்தரி வாங்கி சாப்பிட்டு கொண்டு ஒரு விதமாக பிழைத்து கிடக்கிறான் என்றார். முதலில் என்னை சீண்டி விட்டு வேடிக்கை பார்க்கிறார் என்று நினைத்தேன். சத்யமாக சொல்லுங்கள் என்றேன். ஆனால் அவரோ என் தலையில் ஓங்கி அடித்து சத்யம் என்றார். என் தலையில் அவர் ஓங்கி அடித்தது கூட வலிக்கவேயில்லை. வலித்ததென்னவோ ஏழாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த கள்ளமறியாத இந்த சிறு வயது பையனின் பிஞ்சு இதயத்தில்.

ஒரு நொடியில் இதயம் மிகவும் புண்ணாகி, கடுமையாக வலித்தது. மேற்கொண்டு ஊரை சுற்றாமல் கனத்துப்போன மனதுடன் மௌனமாக வீட்டிற்கு திரும்பினேன். இரவெல்லாம் தூக்கமில்லை. தவித்து போனேன்.

மறுநாள் காலை எழுந்து கோவிலுக்கு சென்றோம். தாயார் சன்னதியில் சேவை முடிந்தது. என் மனைவி, பசங்கள் சற்று பின் தங்கி அத்தையுடன் பேசிக்கொண்டே வந்தனர்.

தாயார் சன்னதி படி இறக்கத்தில் அந்த குள்ள உருவத்தை பார்த்துவிட்டேன். தலை முடி செம்பட்டை படிந்து, கண்கள் இடுங்கி போய் குழி விழுந்து, பஞ்சடைந்து, உடல் இன்னும் குறுகிப்போய், அழுக்கான வேட்டி சட்டையில். ..... கோபுவை நான் பார்த்தேன்.

மனம் துடிதுடித்துப்போனது. அப்போதுதான் விநியோகம் செய்யப்பட்டிருந்த 'தேசாந்தரி' என்றழைக்கப்படும் பிரசாதத்தை பசி மேலோங்க வேகமாக சாப்பிட்டு கொண்டிருந்தான். பழைய நட்பினாலும் பரிதாப உணர்ச்சியாலும் உந்தப்பட்டு மேலும் அருகில் சென்று அவனை அப்படியே கட்டிப்பிடித்து அணைக்க முயன்ற பொழுது......

"விடு... விடு.... என்னை விடு... நான் ஒன்னும் பண்ணலையே…. என்னை விட்டுடு…….”

பயந்து போய் திமிர தொடங்கினான். கையில் மிச்சம் இருந்த பிரசாதம் நழுவி தரையில் விழுந்து சிதறியது. அரண்டு மிரண்டு போய் தன்னை விடுவித்து கொண்டு என்னை விட்டு சற்று தள்ளி போய் நின்று கொண்டு கீழே விழுந்த பிரசாதத்தை ஏமாற்றத்துடன் பார்த்தான்.

அவனுக்கு என்னை யார் என்று புரிந்திருக்காது என்பது அப்பொழுதுதான் எனக்கு உரைத்தது. பெரும் முயற்சிக்கு பிறகு நினைவு படுத்திக்கொண்டான். என்னுடைய முக ஜாடை மாறி போய்விட்டிருந்ததை அவனால் அவ்வளவு சுலபமாக ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. தட்டு தடுமாறி அவன் சொன்னதில் நான் புரிந்து கொண்டது.....

நான் ஊரைவிட்டு கிளம்பி சிங்கபெருமாள் கோவில் வந்த சில வாரங்களுக்குள் கோபுவின் அம்மா லாரியில் அடிபட்டு இறந்து போனாள். பின்னால் வந்த லாரியின் ஹாரன் சப்தம் கேட்காமல் போனது அவளின் விதி. அவளின் செவிட்டு தன்மை அவனை அனாதையாக்கியது.

சில வருடங்களுக்குள் அண்ணனும் கை விட்டு விட்டான். சில காலம் தெருவாசிகள் பரிதாபத்தில் அவனை கவனித்துக்கொண்டனர். பிறகு படிப்படியாக அதுவும் நின்று போனது. யாரையும் நொந்து கொள்ளமுடியாது. வாயும் வயிறும் வேறு வேறாயிற்றே.

பள்ளியில் படிப்பிலும் விளையாட்டு போட்டியிலும் முதல் மாணாக்கனாக வந்த கோபு ஆதரிக்க ஆளில்லாமல், பள்ளியில் படிக்க வக்கில்லாமல், சோத்துக்கு வழியில்லாமல், தெருவில் நடக்கும் கல்யாணம் மற்றும் விசேஷங்களில் அழையா விருந்தாளியாக ஒரு ஜாண் வயிற்று பாட்டிற்காக ஒரு ஓரமாக காத்திருக்க ஆரம்பித்தான்.

தினமும் இரு வேளையும் ஒரு பிடி தேசாந்தரி பிரசாதத்தை அவனுக்கு ஸ்ரீ வரதராஜ பெருமாள் படி அளந்து பசி நீக்கி இருக்கிறார்.

ராத்திரி நேரங்களில் சன்னதி தெருவிலுள்ள பதினாறு கால் மண்டபத்தின் ஒரு மூலையில் தெரு நாய்களிடமிருந்து சற்று விலகி இருந்து படுத்துக்கொண்டு, இரவு முழுவதும் அவ்வப்பொழுது மெல்லிய குரலில் புலம்பிக்கொண்டே, கோடை காலங்களையும், மழை காலங்களையும் , குளிர் காலங்களையும் மாறி மாறி சந்தித்தவன், வாழ்க்கையில் வசந்த காலத்தை மட்டும் என்றுமே சந்திக்காமல் போனது விதியின் கொடுமை.

அம்மா ஜானகியுடன் அவன் வசந்த காலம் முடிந்து போனதை திக்கி திணறி அவன் சொல்லி முடித்தவுடன் நான் உறைந்து போனேன்.

ஒரு ஓரமாக காத்திருந்த என் மனைவியையும், பசங்களையும் அருகிலழைத்து அறிமுகம் செய்துவைத்தேன். திடீரென்று அவன் கை கால்கள் நடுங்க ஆரம்பித்தன. அப்புறம் பார்க்கலாம் என்று அவசரமாக கூறிவிட்டு விந்தி விந்தி ஓட்டமும் நடையுமாக அந்த இடத்தை விட்டு விலகினான்.

அன்று இரவு மீண்டு அவனை சந்திக்க முயன்றேன். கோவில் மணியக்காரர் அவன் எப்போதோ திருவை சாதம் பெற்றுக்கொண்டு சென்று விட்டதாக சொன்னார்.

மாமர தெருவின் மேட்டில், ஒரு ஓரத்திலிருக்கும், இருட்டு கப்பிய அந்த பெட்டி கடையின் பின் பக்கத்தில் யாரோ ஒளிந்து கொள்ள முயன்றது தெரிந்தது.

பீடி நெருப்பை மறைத்துக்கொள்ள முயற்சித்த அந்த உருவத்தை கண்டு தயங்கினேன். கோபு என்று உள்ளுணர்வு தெரிவித்தது. இரண்டு முறை குரல் கொடுத்தவுடன் தயங்கி தயங்கி வெளிப்பட்டான்.

வெகு காலமாகவே பீடி குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகி விட்டிருந்தானாம். காசில்லாமல் போகும்போது பாதி பிடித்து அணைத்துவிட்டு பிறகு மீண்டும் மிச்சத்தை பிடிப்பானாம். பிடிக்காமல் இருக்கவும் முடியவில்லை, நிறுத்தினால் கை கால்கள் உதறுவது போல ஒரு உணர்வு ஏற்படுவதாக சொன்னான்.

அன்று ஓட்ட பந்தயத்தில் முதலாவதாக வந்த அவன் இன்று செயலிழந்து சற்று தூரம் வரை விந்தி விந்தி நடந்தவாறே என்னுடன் பேசிக்கொண்டு வந்தான்.

பேச்சில் விரக்தி தெரிந்தது. அழுது கொண்டே சொன்னான்

" நான் சீக்கிரமா செத்து போய்டுனம்னுதான் பெருமாளை நித்தமும் பிரார்த்திக்கிறேன். ஆனால் அவர் கண் திறக்கலை. இந்த கோவில் திருக்குளத்திலே வீழ்ந்து செத்து போய்டுலாம்ன்னு பல சமயம் தோணறது. ஆனா மனுசுல திராணி இல்ல. குளத்துகிட்ட போவேன். ஆனால் கடைசி நேரத்தில திரும்பிடுவேன். செத்து போக கூட பயமா இருக்குடா".

அன்று இரவு முழுவதும் தூக்கம் வராமல் சித்திரவதை. அந்த உருவம் என் மனக்கண் முன்பு மீண்டும் மீண்டும் வந்து அழுது விட்டு போனது.

மறுநாள் காலை கோபுவை சந்தித்தேன். கொஞ்சம் பணம் கொடுத்தேன். முதலில் வாங்க மறுத்தான். பிறகு வாங்கிக்கொண்டு தயங்கி தயங்கி கேட்டான் " ராத்திரி ரொம்ப குளிராய் இருக்கிறது. பழைய சட்டை ஏதாவது இருந்தால் குடுக்கிறாயா".

என் பெரிய பையனின் சட்டைகள் சிலவற்றை அவனிடம் கொடுத்தேன். என் மனைவி அவனிடம் சொன்னாள் " தினமும் நீங்கள் எங்கள் வீட்டிற்கே வந்து சாப்பிட்டுவிட்டு போகலாமே" .....

உணர்ச்சி வசப்பட்டு அழுதான். பிறகு 'தேவை ஏற்பட்டால் வருகிறேன்' என்றான்.

ஒரு நாள் இரவு பிஸ்கெட் வாங்கிக்கொண்டு ஸ்கூட்டரில் சன்னதி தெரு வழியாக திரும்பிய சமயம் கோபுர வாசலின் ஓரமாக யாரோ விழுந்து கிடந்ததை பார்த்தேன்.

அருகில் சென்று பார்த்த பொழுது அதிர்ந்து போனேன். கோபுதான் மல்லாந்து விழுந்துகிடந்தான். நல்ல வேளை மூச்சு வந்து கொண்டிருந்தது. கோபு… கோபு …என்று குரல் கொடுத்தும் கண் விழிக்கவில்லை.

சற்று தள்ளி அமர்ந்து பூ தொடுத்து கொண்டிருந்த பூக்காரி அலட்டிக்கொள்ளாமல் சொன்னாள்….

" அது வலிப்பு வந்து விழுந்து கிடக்கு. தானே சரியாகி கொஞ்சம் நேரம் பொறுத்து எந்திரிச்சி போய்டும் ".

அவளுக்கு அது தினமும் காண்கின்ற ஒரு சகஜமான நிகழ்வு. எனக்கு கஷ்டமாக இருந்தது. மெல்ல கோபுவை உட்கார வைத்தேன். வலிப்பின் தாக்கத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு கொண்டிருந்தான்.

அரை மயக்கத்தில் அவன் கேவியது கோர்வையாக இல்லையென்றாலும் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.....

"அம்மா ! எப்பம்மா என்னை உன்னோட அழைச்சிப்ப .... நீ இருக்கச்சேதான் செவிடா இருந்தே.... இப்பவும் அப்படி இருக்காதேம்மா..... இந்த உலகத்தில என்னால இருக்க முடியலேம்மா"....

என் கண்களில் வழியும் கண்ணீரை கட்டு படுத்த முடியவில்லை. சில மனிதரின் வாழ்க்கை ஏன்தான் இப்படி எல்லாம் திக்கு திசை தெரியாமல் சின்னாபின்னமாகி போகிறதோ. சிலர் பிறவி எடுப்பது கஷ்டப்படத்தானோ ? இவன் வாழ்வில் விளையாடிய விதி கொடியது.

மேற்கொண்டு எழுத கை வலிக்கவில்லை.... மனம்தான் வலிக்கிறது.

மனதின் வலி கொஞ்சம் கொஞ்சமாக மறைய ஆரம்பித்தது. சில நாட்கள் கழிந்து ஒரு மாலை பொழுதில் அவனை பார்த்தேன். ஸ்கூட்டரை நிறுத்தி விட்டு காசு கொடுக்கலாம் என்று பாக்கெட்டில் கையை விட்டேன். அது காலியாக இருந்தது. "

உனக்கு அதிர்ஷ்டம் இல்லைடா கோபு" என்று வாய் தவறி சொல்லிவிட்டேன்.

மெல்ல சிரித்துக்கொண்டே சோகமாக சொன்னான் " அதான் நெத்தி மேட்ல ஏற்கனவே விதி சுழிச்சிருக்கே " ....

மறுபடியும் அவனை பார்த்தது பங்குனி உத்திரம் அன்று. சேவை முடிந்து வந்த பொழுது நாலு கால் மண்டபம் அருகில் நின்றிருந்தான்.

என் பசங்களிடம் சொன்னான் " இங்கிலீஷ், இந்தி, சமஸ்கிருதம் நன்றாக படியுங்கள். அப்போதான் நல்ல வேலை கிடைக்கும்".

ஜேபியில் கை விட்டு கைக்கு வந்த ரூபாய் நோட்டுகளை எடுத்து அவனிடம் கொடுக்க முற்பட்ட பொழுது ஏனோ தெரியவில்லை வாங்க மறுத்துவிட்டான்.

கோபுவை கோபுவாக சந்தித்த கடைசி நாள் அதுதான் என்பது அன்று எனக்கு தெரியாமல் போனது விதியின் விளையாட்டு.

ஏனோ தெரியவில்லை, பலமுறை சன்னதி தெரு வழியாக போய் கொண்டும் வந்து கொண்டும் இருந்தாலும், அவனை பார்க்க முடியாமல் போய்விட்டது.

ஒரு பத்து நாள் ஆகி இருக்கும்... நான் ஆபிஸில் இருந்த பொழுது கூரியர் சர்வீஸ் தேவா அவசரம் அவசரமாக நுழைந்தான்.

சார் ! உங்கள் பிரெண்ட் கோபு செத்து போய்ட்டார் சார் !......

தலை சுழன்றது.

கோவில் குளத்தின் வடக்கு மூலையில் மிதந்து கொண்டிருந்த உடல் அவனுடையதுதான் என்பது புரட்டி போட்ட பிறகுதான் தெரிந்ததாம்.

முந்தய நாள் கூட தேசாந்தரி வாங்கி சாப்பிட்டு விட்டு சென்றானாம். கால் வழுக்கி குளத்தில் விழுந்திருக்க வாய்ப்பில்லை, தற்கொலைதான் என்றான் தேவா.

அவசரம் அவசரமாக ஆபீஸிலிருந்து கிளம்பினேன். கோவில் வாசலில் தேங்காய் கடை வைத்திருக்கும் செட்டியார் சொன்னார் " எப்போவோ சுடு காட்டுக்கு எடுத்துட்டு போய்ட்டாங்களேப்பா"...

இது மாதிரியான அசுப காரியங்களில், மிகவும் வசதி குறைவானவர்கள் யாரேனும் இறந்து போனால் தெருவாசிகள் அனைவரும் பணம் வசூல் செய்து இறந்து போனவரை ஒப்பேற்றுவதற்கு முடிந்த அளவில் ஒத்தாசையாக இருப்பது வழக்கம். 

அதே ஏற்பாட்டை கோபுவுக்கும் செய்திருப்பார்கள் என்றெண்ணி என்னாலான பணத்தை கொடுத்து விட உத்தேசித்திருந்தேன்.

வேகவதி நதிக்கரையோரம் இருந்த சுடுகாட்டை நோக்கி விரைந்தேன். தூரத்திலிருந்து பார்த்துக்கொண்டே சென்ற பொழுது ஆள்நடமாட்டமே தெரியவில்லை. சிம்ம தீர்த்த குளக்கரையில் முன்பே ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு ஓடினேன். நான்தான் தாமதமாக வந்திருக்கிறேன் என்று என்னை நொந்து கொண்டே நெருங்கினேன்.

சுடுகாட்டில் கோபுவின் அண்ணன் மற்றும் மூன்று பெண்கள் மட்டும் நின்று கொண்டிருந்தனர். தெருவாசிகள் ஒருவர் கூட தென்படவில்லை.

கோபுவின் உடலைக்காண என் கண்கள் அலைந்தன. எங்கும் தென்படாததால் ஒரு ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சைக்கிள் ரிக்க்ஷா மீது என் பார்வை செல்வதை தவிர்க்க முடியவில்லை.

என் வாழ்நாளில் அதுவரை இந்த அளவுவுக்கு கடுமையான அதிர்ச்சியையும், கஷ்டத்தையும், கசப்பையும் ஒருசேர தரக்கூடிய கோரமான காட்சியை பார்த்ததேயில்லை.

சொன்னால் நம்புவது கடினம். அப்படி ஒரு பரிதாப காட்சியை நாம் யாரும் கனவில் கூட நினைத்து பார்த்திருக்க மாட்டோம்.

கோபுவின் உடலை ஒரு சாக்கு துணியில் சுருட்டிக்கட்டி அந்த ரிக்க்ஷா மேல் போட்டிருந்தார்கள். ஏராளமான ஈக்கள் மொய்த்துக்கொண்டிருந்தன. செத்துப்போன மாட்டினைத்தான் அதுமாதிரியாக ஏற்றிச்செல்வதை பார்த்திருக்கிறேன்.

இறந்து போய்விட்ட ஒரு மனித ஜென்மத்தை அப்படி உதாசீனப்படுத்தி மூட்டை போல தூக்கி போட்டு கேவலப்படுத்தியிருந்ததை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

டயர் பூட்டிய மாட்டு வண்டியில் கட்டை,வறட்டியை ஏற்றிவந்த கோவிந்தன் சொன்னான், அதற்கெல்லாம் காசு கோவில் மணியக்காரர் கொடுத்ததாக.

வண்டிக்கார கோவிந்தன், வெட்டியான்,மற்றும் ரிக்க்ஷாகாரன் சேர்ந்து சிதையை தயார் செய்தனர். கோபுவின் உடலை அதன் மேல் வைத்து அண்ணன்காரன் நெருப்பு வைக்க சுழன்றடித்த காற்றில் நெருப்பு திகுதிகுவென்று கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தது. என் மனசில் பற்றிய தீ வெகு நாட்கள் என்னை எரித்தது.

அண்ணன்காரன் முனகியது என் காதில் விழுந்தது....

" இன்றைக்கு ஏகாதசி ... நல்ல நாள்ல செத்திருக்கான்.... புண்ணியம் செய்தவன்.....

என் மனம் அரற்றியது.. கத்தி ஓலமிட்டது .... 

"சோறு தண்ணி கிடைக்காம அலைஞ்சவன்டா உன் தம்பி... அவனுக்கு தினமும் ஏகாதசிதாண்டா".

வீட்டிற்கு வந்து தலை முழுகினேன். கோபுவை பற்றிய எண்ணங்களை மட்டும் ஏனோ இன்று வரை என்னால் தலை முழுக முடியவில்லை.

No comments:

Post a Comment