ஆந்திரா,ஒரிஸ்ஸா ஆன்மீகப்பயணம் 24
கொனார்க்...சூரிய வழிபாடு ஒரு பார்வை..அலசல்
ஸ்ரீ சூரிய தேவாய நமஹ!
பூவுலகத்தில் சூரிய வழிபாடு இன்று நேற்று ஏற்பட்டதல்ல. ரிக்வேத காலத்துக்கும் முன்பிருந்தே இந்த வழிபாடு இருந்து வருகிறது. அசையும் பொருள்கள் அனைத்திற்கும் சூரியனே உயிர் தருகிறான் என்கின்றன, வேதங்கள்! சூரிய வழிபாடுபற்றியும் சூரிய வழிபாட்டினால் ஏற்படும் பலாபலன்கள் பற்றியும் விரிவாக அலசுவதே இந்தப்பதிவு.
இந்த வழிபாடு எப்படி ஏற்பட்டது என்பது பற்றி நிச்சயமாக ஒன்றும் கூறமுடியவில்லை. கி.மு.2000-க்கு முன்பே சூரியன், அக்னி, வருணன் ஆகியோரை உலகத்தினர் வழிபட்டு வந்துள்ளனர்.
நம்நாடு சூரிய வெப்பம் மிகுந்த நாடு. ஆகவே, அவன் அருளைப் பெற அவனை மக்கள் வழிபட முற்பட்டதில் வியப்பில்லை. பல நோய்களை சூரிய கிரணங்கள் குணப்படுத்துவதாக அதர்வண வேதம் குறிப்பிடுகிறது. உபநிஷத்துக்களும் புராண இதிகாசங்களும் சூரியனின் புகழைப் பேசுகின்றன. பிற தெய்வங்களைப் போல் அல்லாமல் சூரியன் கண்ணெதிரே தோன்றும் தெய்வமாக விளங்குகிறான்.
சூரியன் ஒரு கோள்! கிரகம்! அதைக் கடவுளாக வழிபடலாமா என்ற சந்தேகம் எழலாம். வேதம் ஒன்றுதான் இந்த சந்தேகத்தைப் போக்குகிறது. வேதமே, சூரியன் கோள மயமானதுதான் என்கிறது. வேதகால ரிஷிகள், “சூரியனே தண்ணீருக்கெல்லாம் ஆத்மா” என்று குறிப்பிடுகிறார்கள். சூரியனால் உலகத்துக்கு ஏற்படும் நன்மைகளையும் வேதம் வரிசைப்படுத்திக் கூறுகிறது.
வேதத்தில் காணும் உண்மைகள், நவீன விஞ்ஞான உண்மைகளுக்கு முரணாக இல்லை. சூரிய ஒளியில் நிறப்பிரிகை ஏற்பட்டால் ஏழு வண்ணமாகப் பிரிகிறது. ஏழு வண்ண ஒளியின் சேர்க்கையே சூரிய ஒளி. சூரியனுக்கு ஏழு குதிரைகள் என்று வேதம் வர்ணிப்பதன் சூட்சுமம் இதுவே. குதிரையை அசுவம் என்பர். அசுவம் என்ற சொல்லுக்கு வர்ணம் என்றும் பொருளுண்டு.
பாரசீகத்தில் தங்கிவிட்ட ஆரிய குலத்தினர் சூரியனை வழிபட்டார்கள் என்றாலும், அக்னிக்குத்தான் அவர்கள் முக்கியத்துவம் கொடுத்தார்கள். இந்தியாவுக்கு வந்த ஆரியர்கள் திராவிடர்களுடன் கலந்து விக்ரக ஆராதனையை மேற்கொண்டார்கள். சூரியனை விஷ்ணுவின் அவதாரமாக இவர்கள் கொண்டார்கள்.
சூரிய வழிபாட்டினால் தோல் நோய், கண் நோய்கள் குணமாகிவிடும் என்று பாரசீகர்கள் நம்பினார்கள். பாரசீக மத குருக்களான மாகாஸ்கள், சூரிய வழிபாட்டின் மூலம் சிகிச்சை செய்யும் மருத்துவர்களாக விளங்கினர்.
பஞ்சாபை ஆண்ட மன்னன் ஒருவனுக்கு தோல் நோய் ஏற்பட்டது. அவன் மாகாஸ்களை வரவழைத்தான். நோய் குணமாகவே, இப்போது பாகிஸ்தானில் உள்ள “மூல்தான்” நகரில் அவன் சூரியனுக்காகவே ஒரு கோவில் கட்டுவித்தான். 2000 ஆண்டுகளுக்கு முன் கட்டிய இந்த ஆலயம்தான் பண்டைய இந்தியாவில் சூரியனுக்காக ஏற்பட்ட முதல் கோயில்.
இந்த ஆலயம் அவுரங்கசீப் காலத்தில் அழிவுற்றது. மூல்தானிலிருந்து சூரியவழிபாடு காஷ்மீருக்குப் பரவியது. பிரபல மன்னனான லலிதாதித்ய முக்தா பீடன் என்பவன் இங்கே சூரியனுக்கு ஒரு கோயில் கட்டினான். இந்தக் கோயில், கிரேக்க ஆலய அமைப்பில் கட்டப்பட்டது. பின்னர் வந்த இஸ்லாமிய மன்னன் சிக்கந்தர் பட்டீஸ்கான் (கி.பி.1391 - 1414) இந்தக் கோயிலை இடித்து நாசமாக்கி விட்டான்.

No comments:
Post a Comment