Wednesday, March 10, 2021

மகா பெரியவா

 மகா பெரியவா - புதிய தொடர்

 தஞ்சையைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்துவந்த சேவப்ப நாயகர், வேதப் பண்டிதர்களையெல்லாம் ஆதரித்துத் தன்னுடைய சோழ தேசத்தில் குடியேற்றியவர்.  

சேவப்ப நாயக்கரிடம் அமைச்சராக இருந்தவர் கோவிந்த தீட்சிதர். கன்னட தேசத்தைச் சேர்ந்த ஹொய்சாளர். இவரும், அந்தணர்கள் பலரும் காவேரிக்கரையில் குடியேறியதாக வரலாறு. திருவையாறுக்கு அருகில் இருக்கும் ஈச்சங்குடி என்ற கிராமத்தில் இருந்தது, கோவிந்த தீட்சிதரின் பரம்பரையில் வந்த நாகேஸ்வர சாஸ்திரிகள் குடும்பம். இவருடைய மகள், மகாலட்சுமி.

ஒரு முறை, திருவிடைமருதூர் சென்றிருக்கிறார் நாகேஸ்வர சாஸ்திரிகள். கையில் மகாலட்சுமியின் ஜாதகம்.  நாராயண சாஸ்திரிகள் என்ற மகானின் வழியில் வந்தவரான கணபதி சாஸ்திரிகளை சந்தித்திருக்கிறார். பரஸ்பரம் அறிமுகம் ஆனது.

“என் பொண்ணு மகாலட்சுமியின் ஜாதகத்தைக் கொண்டு வந்திருக்கேன்... உங்க மூத்த மகன் சுப்ரமணியனின் ஜாதகத்தோடு நீங்க பொருத்தம் பார்க்கணும்... சமசப்த ஜாதகமா இருந்தால், பெரியவர்கள் ஆசிர்வாதத்தோடு இந்தக் கல்யாணம் நடக்கணும்கறது என் பிரார்த்தனை...” என்றார், நாகேஸ்வர சாஸ்திரிகள். பக்கத்துக் கோயிலில் இருந்து மணியோசை ஒலித்தது.

‘`பிராப்தம் இருந்தா நடக்கட்டும்...” என்றபடியே ஜாதகத்தை வாங்கிக்கொண்டு பூஜை மாடத்தில் வைத்தார் கணபதி சாஸ்திரிகள். நம்பிக்கையோடு விடைப்பெற்றுக் கொண்டார். நாகேஸ்வர சாஸ்திரிகள், வரும் வழியில் மகாலிங்கேஸ்வரரை தரிசனம் செய்து விட்டு ஊர் திரும்பினார்.

ஒருசில மாதங்களில் மகாலட்சுமியின் கரம் பற்றினார் சுப்ரமணியன். ஈச்சங்குடியில் எளிமையான முறையில், சாஸ்திர சம்பிரதாயங் களுடன் திருமணம் நடந்தேறியது. நல்லறமாக சென்று கொண்டிருந்தது இல்லறம்.

இந்தத் தம்பதிக்கு முதல் மகன் பிறந்தபோது, குழந்தைக்கு கணபதி என்ற தாத்தாவின் பெயரை வைத்தார்கள். குழந்தையும் கொழுகொழு வென்று வளர்ந்தது. அடுத்தப் பத்து ஆண்டு களுக்கு மகாலட்சுமிக்கு இன்னொருக் குழந்தை

|பிறக்கவில்லை. குடும்பத்துக்கு இது ஒரு குறையாகவே இருந்தது. இரண்டாவது குழந்தைக்காக மகாலட்சுமி தவமிருந்தாள்.

ஒரு முறை, ‘‘ஏம்மா... எப்பவும் உன் முகம் வாடியபடியே இருக்கு...?” என்று கேட்டான், பத்து வயது சிறுவன் கணபதி. “ஒண்ணுமில்லேடா... உன்னோட விளையாட ஒரு தம்பியோ, தங்கையோ இருந்தா நல்லா இருக்குமேன்னு நினைச்சேன்...” என்றாள் மகாலட்சுமி.

நாட்கள் உருண்டோடின...

மகாலட்சுமியின் பிரார்த்தனைப் பலித்தது. தர்மசம்வர்த்தினி அருள்பாலித்தாள். மறுபடியும் கருவுற்றாள். சுற்றமும் நட்பும் சந்தோஷித்தது. 1894-ம் வருடம் மே மாதம் 20-ம் தேதி. அதாவது, ஜய வருடம், வைகாசி மாதம் 8-ம் தேதி அனுஷம் நட்சத்திரம் கூடிய சுபயோக சுப நாளில், பகல் 1:16 மணிக்கு குழந்தை பிறந்தது. சுவாமிநாதன் என்று குழந்தைக்கு நாமகரணம் செய்தார்கள்.

“குழந்தையோட முகத்தைக் கவனிச்சியா மகாலட்சுமி... எத்தனைக் களையோடு இருக்கு பார்...” என்று அப்பா சுப்ரமணியன் பூரிக்க, ‘`அப்படியே உங்களை உரிச்சு வச்சுருக்கு...” என்று மகாலட்சுமி வெட்கத்துடன் மகிழ...

பரமாசாரியாரின் திரு அவதாரம் நிகழ்ந்தது!

(வளரும்)

No comments:

Post a Comment