Monday, March 15, 2021

ஆந்திரா,ஒரிஸ்ஸா ஆன்மீகப்பயணம் 26

 ஆந்திரா,ஒரிஸ்ஸா ஆன்மீகப்பயணம் 26

ஒரிசா மாநிலத்திலுள்ள கொனார்க் சூரியக்கோவிலைக் காண்பதற்கு ஒருவர் குறைந்தபட்சம் ஒரு மாதம் செலவழிக்க வேண்டும், போகிறபோக்கில் பார்த்துக் கடந்து போகின்றவர்கள் அதன் புறத்தோற்றத்தைத் தாண்டி உள்ளார்ந்த அழகியலை, பேரழகான சிற்பங்களை அறிந்து கொள்ள முடியாது,

இந்த முறை கொனார்க்கில் என்னை வியப்பில் ஆழ்த்தியது அங்குள்ள ஒட்டகச்சிவிங்கியின் சிற்பம்

ஆப்ரிக்காவில் வாழும் ஒட்டகச் சிவிங்கி எப்படி கொனார்க் கோவிலின் சிற்பத்தில் இடம்  பெற்றது என்ற ஆச்சரியத்துடன் கோவிலின் தென்பகுதியின் சிற்பத்தொகுப்பில் ஒன்றாக உள்ள ஒட்டகசிவிங்கியைப் பார்த்துக் கொண்டிருந்தேன்

கொனார்கிற்கு இரண்டு சிறப்புகள் இருக்கின்றன, ஒன்று அது சூரியனின் கோவில், மற்றது கலவிச் சிற்பங்களின் கூட்டுக்கலைக்கூடம், பாலின்பத்தின் களிநடனமும், உணர்ச்சிபெருக்கும், உன்மத்தமும் கிறங்கிய உடல்களுமாக கொனார்க் பார்வையாளனுள் அந்தரங்கமான ஒரு அதிர்வை உருவாக்ககூடியது.

காலம் குறித்து அதிகம் யோசித்தவர்கள் இந்தியர்கள் தானோ என்று தோன்றுகிறது, காலத்தை அறிவது என்பது கலை, விஞ்ஞானம் இரண்டிலும் முக்கியச் செயல்பாடாக இருந்திருக்கிறது,

கொனார்க் சூரியக்கோவிலின் முன்பு போய்நிற்கும் ஒவ்வொரு முறையும் காலதேவனின் முன்பு நிற்பது போன்ற நெகிழ்வுணர்வே ஏற்படுகிறது,

காலம் குறித்த இந்தியர்களின் பார்வை நுட்பமானது, காலத்தை துல்லியமாக வரையறை செய்து அறிவியல் பூர்வமாக அணுகுவது ஒரு புறம் என்றால் அது குறித்த தொன்மங்களும் பழங்கதைகளும், சிற்பங்களும், கோவில்களுமாக கற்பனைவளம் மறுபக்கமிருக்கிறது,

நம்காலம் இரண்டிற்குமான ஊசலாட்டத்தில் உள்ளது,

ஐதீகத்தின் படி கிருஷ்ணரின் மகனான சாம்பன் தன்னை விட அழகாக இருக்கிறான் என்று அவனைத் தொழுநோயாகிப் போகும்படி கிருஷ்ணன் சாபம் கொடுத்தார் எனவும், சூரியனை வணங்கிவந்தால் மட்டுமே அந்த சாபம் மீட்சி பெறும் என்பதால் கொனார்க் கோவில் கட்டப்பட்டது என்கிறார்கள்,

ஆனால் பழங்குடி மரபில் சூரியனை வணங்குவது ஆதாரமான ஒன்று, ஒரிசா அதிகம் பழங்குடிகள் வாழும் மாநிலம், ஆகவே அங்கே சூரியனை வணங்கி வருவது தொன்று தொட்டு வந்திருக்க கூடும், 

அந்தப் பழங்குடி கடவுள் செவ்வியல் வடிவம் பெறும் முயற்சியாகவே பிரம்மாண்டமான சூரியக்கோவிலாக மாற்றம் அடைந்திருக்க கூடும்.

அப்படி பழங்குடிகளின் கடவுளாக இருந்து உருமாற்றம் பெற்ற வடிவம் போலவே பூரி ஜெகனாந்தர் கோவில் உள்ளது, அங்குள்ள தெய்வத்திற்கு கைகால்கள் கிடையாது, மரத்தால் தான் கடவுளின் உருவம் செய்யப்படுகிறது,

 ஜெகனாதரை வணங்குவதிலும் நிறையப் பழங்குடியினரின் அம்சங்கள் காணப்படுகின்றன.

கொனார்க் கோவிலினுள் சூரியனின் மிகப்பெரிய சிற்பம் உள்ளது, அந்தச் சூரியனின் தோற்றம் அற்புதமானது, இளமை ததும்பும் முகம், வளைந்த துல்லியமான புருவங்கள், சாந்தம் ததும்பும் முகம், பாதி மூடியது போன்ற கண்கள், போர்வீரனின் உடலமைப்பு போன்ற கச்சிதமான உடற்கட்டு, சூரியனைப்போலவே அவனது குதிரைகளும் தனித்துவமாக இருக்கின்றன,

 அலங்கரிக்கப்பட்ட குதிரையில் சூரியன் வருவது போன்ற சிற்பமது,

சூரியனின் வாகனமாக குதிரையை ஏன் தேர்வு செய்தார்கள், குதிரையும் சூரியனும் எப்படி ஒன்றோடு ஒன்று கலந்தன,  ஏழு நாட்களை ஏழு குதிரைகள் என்று எப்படி உருவாகினார்கள், குதிரையால் பின்னால் ஒடமுடியாது என்பதற்கு தான் இது உருவாக்கபட்டதா?

தென்னிந்தியக் கோவில்களில் இருந்து கொனார்க் பெரிதும் மாறுபட்டது, வெளியே இருந்து பார்க்கையில் அதன் பிரம்மாண்டம் நமக்குப் புலப்படாது, அருகில் நெருங்கிச் சென்று பார்க்கையில் கோவில் விஸ்வரூபம் கொண்டதாகிவிடுகிறது, கோவிலின் முன்பாக நிற்கையில் நீர்வீழ்ச்சியின் முன் நிற்கும் சிறுவனைப்போலவே என்னை உணர்ந்தேன்.

தொழுநோயில் இருந்து மீட்சி பெறுவதற்கான இடம் என்று நம்ப்படுவதால் இன்றும வழியோரத்தில் தொழுநோயாளிகளை அதிகம் காண முடிகிறது, சிற்பத்தொகுப்பு ஒன்றில் தொழுநோயாளி ஒரு பெண்ணுடன் கலவியில் இடம் பெறும் சிற்பமும் இருக்கிறது,

தொழுநோயிற்கும் சூரியனுக்குமான உறவையும்,  உலகெங்கும் சூரியனுக்கு கோவில் கட்டுவது பற்றியும் ஆராந்துள்ள பாலகிருஷ்ணன் ஐஏஎஸ் கொனார்க் கோவில் பற்றி  தனது கட்டுரையில் நிறையப் புதிய தகவல்களைக் கூறுகிறார்.

சூரியன் ஆணா பெண்ணா என்பதில் ஒவ்வொரு தேசத்திலும் ஒருவித விளக்கம் காணப்படுகிறது, கிழக்கு இந்தோனேஷியாவில் சூரியன் ஆண் பெண் என்று இருவடிவிலும் காணப்படுகிறது,  போன்டா பழங்குடியில் சூரியனும் சந்திரனும் அண்ணன் தங்கை, ஒரு நாள் தங்கை நிர்வாணமாகக் குளிக்கையில் அண்ணன் பார்த்துவிடவே தங்கை இனிமேல் உன் முகத்தை நேரடியாகப் பார்க்கவே மாட்டேன் என்று பிரிந்து போய்விட்டதாக பழங்குடி கதை கூறுகிறது.

போன்டோ பழங்குடியினர்  தொழுநோயை சூரிய வெளிச்சம் நலமடையச்செய்யும என்று நம்புகிறார்கள், உலகில் எங்கெல்லாம் சூரியனுக்கு கோவில் இருக்கிறதோ அதன் அருகில் சந்திரபாஹா என்ற நதி ஒடுவதாகக் குறிப்புகள் காணப்படுகின்றன, இங்கும் கூட அது போன்ற கண்ணுக்குப்புலப்படாத சந்திரபாஹா நதி ஒடுவதாக மக்கள் நம்புகிறார்கள்

சூரியனுக்குச் சாத்தப்படும் மலர் எருக்கம்பூ அது மருத்துவ ரீதியாக  தொழுநோயை குணமாக்ககூடியது, ஆகவே சூரியனோடு தொழுநோய் குணமாக்கும் சடங்கு சேர்ந்துவிட்டது என்றும் இதைத் தமிழ்நாட்டில் உள்ள சூரியனார் கோவிலில் எருக்கம்பூ சாத்தப்படுவதை முன்வைத்து பாலகிருஷ்ணன் தனது கட்டுரையில் தெளிவாகக் குறிப்பிடுகிறார்




No comments:

Post a Comment