ஆந்திரா,ஒரிஸ்ஸா ஆன்மீகப்பயணம் 22
பழமையும், நவீனமும் கலந்து மிளிரும் இடம் ஒடிசா தலைநகர் புவனேஸ்வர். அற்புதமான கோயில்களும், நினைவுச் சின்னங்களும் இவ்வூரின் அடையாளம். திரிபுவனேஸ்வரர் கோயில்: காசிக்கு வீசம் அதிகம் என்று தமிழகத்திலுள்ள சில கோயில்களைச் சொல்வது போல, இங்குள்ள திரிபுவனேஸ்வரர் கோயிலும் புகழ்மிக்கது. காசியை விட இத்தலம் உயர்ந்தது என்பதற்கான காரணத்தை அறிய, பார்வதி தேவி புவனேஸ்வருக்கு வந்தாள்.
அப்போது அவளது அழகில் மயங்கிய கீர்த்தி, வாசன் என்ற அசுரர்கள் தங்களை மணந்து கொள்ளும்படி வற்புறுத்தினர். பார்வதி அவர்களிடம், என்னை உங்கள் தோளில் தூக்கி வையுங்கள். அதன்பிறகு உங்கள் கேள்விக்கு பதில் கிடைக்கும், என்றாள். தோளில் ஏறியவுடன் தன் எடையை பலமடங்காக அதிகரித்தாள். சக்திதேவியின் அபார சக்தியைதாங்காத அசுரர்கள் நசுங்கியே இறந்து போனார்கள். அவர்கள் இறக்கும் தருவாயில் சிவன் அங்கு வந்தார். அவரிடம் லோகமாதாவான பார்வதி மீது ஆசைப்பட்டதற்காக வருத்தம் தெரிவித்த அசுரர்கள், தங்கள் பெயரையே ஏற்று, அத்தலத்தில் குடிகொள்ளுமாறு சிவனிடம் வேண்டினர். சிவனும் கீர்த்திவாசன் என்ற பெயருடன் அங்கயே அருள்பாலித்து வருகிறார்.
முக்தீஸ்வரர் கோயில்
இக்கோயில் சிற்பங்கள் கலிங்க கலைக்கு எடுத்துக்காட்டு. அனைத்தும் வாயில் பிறைவடிவில் இருக்கும். இந்தக் கோயிலின் கோபுரம் 25 அடி உயரம் மட்டுமே கொண்டது. இதன் வாசலை ஒட்டி ஊஞ்சல் விழா நடப்பது உண்டு. இங்கு கட்டிடக்கலை சிறப்பு அம்சத்தை பார்த்த ஒரு வெளிநாட்டினர், இதனை ‘‘ஒடிகாவின் நகை” என அழைத்தார். 10ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட கோயில் இது. உள்ளே மூலவராக லிங்கம்.
பார்க்க வேண்டிய மற்றொரு கோயில் ராஜாராணி கோயில். 11ம் நூற்றாண்டைச் சார்ந்தது. உள்ளே இன்று தெய்வம் இல்லை. ராஜாராணி என்பது இந்த ஊரில் கிடைக்கும் ஒரு ஸ்பெஷல் கல்லின் பெயராம். அதனை வைத்து இந்தக் கோயில் கட்டப்பட்டதால் இந்த பெயராம். சிவப்பு மற்றும் தங்க வண்ணம் இந்த கல்லின் சிறப்பு.
புவனேஸ்வரத்தில் 1.பிரம்மேஸ்வரர் கோயில், 2. லட்சுமனேஸ்வரர் கோயில், 3.மார்க்கண்டேஸ்வரர் கோயில், 4. ராமேஸ்வரர் கோயில், 5.கேதாரேஸ்வரர் கோயில், 6.சத்ருகுனேஸ்வரர் கோயில், 7.மகரேஸ்வரர் கோயில், 8.மோகினி கோயில், 9.விமலேஸ்வரர் கோயில், 10. பரதேஸ்வரர் கோயில், 11.பரசுராமேஸ்வரர் கோயில் முதலான ஏராளமான கோயில்கள் உள்ளன.
புவனேஸ்வரத்தில் உள்ள லிங்கராஜா கோயிலுக்கு சோழ மன்னன் இரண்டாம் ராஜராஜன் வந்திருந்து தரிசித்து, தங்க காசுகளை அன்பளிப்பாக வழங்கிச் சென்றிருக்கிறான். இந்த மன்னனாலேயே இங்கு சேவலுடன் கூடிய கார்த்திகேயன், மூஞ்சுறுடன் கூடிய கணபதி ஆகியோர் அறிமுகமானதாகக் கூட ஒரு தகவல் உண்டு.
புவனேஷ்வரின் அனைத்து கோயில்களையும் தரிசிக்க நான்கு நாட்களாகும். இப்ப சூரியனுக்கு நம்ம கும்பகோணம் சூரியனார் கோயில் போல மிகப்பெரிய சூரியக்கோயில் கொனார்க் போகலாம்
ஒடிசா மாநிலத்தின் பல்வேறு நகரங்களில் இருந்து தேசிய நெடுஞ்சாலைகள் கோனார்க்கை இணைக்கின்றன. பூரி, புவனேஸ்வர், பிப்லி போன்ற பல நகரங்களில் இருந்து பேருந்துகள் மூலமாகவோ, சொந்த வாகனம் மூலமாகவோ கோனார்க் செல்லலாம்.
பூரி ரெயில் நிலையத்தில் இருந்து 31 கிலோமீட்டர் தொலைவிலும், புவனேஸ்வர் ரெயில் நிலையத்தில் இருந்து 64 கிலோமீட்டர் தூரத்திலும் கோனார்க் உள்ளது.
சென்னை, டெல்லி, ஐதராபாத், கொல்கட்டா, நாக்பூர் விமான நிலையங்களில் இருந்து புவனேஸ்வருக்கு நேரடி விமானங்கள் இயக்கப்படுகின்றன.
கொனார் நாளை...



No comments:
Post a Comment