எனது சதுரகிரிப்பயணம்.....🙏
ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்களோடு நான்.....
இந்த முறை நான் உங்களை அழைத்துச் செல்லும் இடம்.....
சித்தர்கள் வாழும் பூமி.... சதுரகிரி....
சதுரகிரி மலை ஏறுவதற்கு விருப்பம் மட்டும் இருந்தால் போதாது.... . . மன வலிமையும் உடல் வலிமையும்..... அவசியமாக தேவை...
பல நண்பர்கள் விருப்பப்பட்டாலும்...
சில நண்பர்களால் தான் , இந்த பயணத்தை மேற்கொள்ள முடிந்தது.... காரணம் அந்த சிவனுக்கே வெளிச்சம்....
வெகு நாட்களுக்கு பிறகு எனது நண்பர், ரமேஷ் சித்தர், என்று என்னால் பிரியமாக அழைக்கப்படும், எனது கல்லூரி நண்பரான ரமேஷ் அவர்கள்.... என்னை தொலைபேசியில் அழைத்து... சதுரகிரி செல்ல வேண்டும் என்ற அவரது விருப்பத்தை என்னிடம் பகிர்ந்து கொண்டார். அவருடைய விருப்பத்தை செயலாக்க நான் முற்பட்டேன்.
எனக்குத் தெரிந்த நண்பர்களுக்கு தொலைபேசி வழியாகவும், whatsapp குரூப் வழியாகவும் ,நாம் மேற்கொள்ள போகும் சதுரகிரி பயணத்தைப் பற்றியும், விருப்பமுள்ளவர் கலந்து கொள்ளலாம் என்பதைப் பற்றியும் தெரிவித்தேன்.
நான் எண்ணியது போல்..... கருத்து ஒருமித்த 6 நண்பர்கள் சென்னையிலிருந்தும் மற்றொரு நண்பர் திருப்பூரில் இருந்தும், இந்த ஆன்மீக பயணத்தில் சேர்ந்து கொள்வதற்காக சம்மதித்தார்கள். புறப்படும் நாளும்.... நேரமும்... இடமும்.... தேர்ந்தெடுக்கப்பட்டது.
பயணத்தில் கலந்து கொண்ட நண்பர் சங்கரலிங்கம் மூலமாக ஒரு இனோவா வண்டியை புக் செய்தோம். நான் மூன்று முறை சதுரகிரி சென்று வந்து இருந்தாலும், ஒவ்வொரு முறை செல்லும் போது வெவ்வேறு அனுபவங்கள் எனக்கு ஏற்பட்டிருக்கிறது.
வானத்தில் பறந்து விரிந்து கிடக்கும் நட்சத்திரங்களை காண நமக்கு ஒரு டெலஸ்கோப் தேவைப்படுகிறது..... நம் உடலிலும், மற்ற இடத்திலும் வாழ்ந்து கொண்டிருக்கும் நுண்ணுயிர்கள் காணுவதற்கு... மைக்ரோஸ்கோப் தேவைப்படுகிறது.... அதேபோல் ... எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் இறையை காணுவதற்கு... உணர்வதற்கு... சித்தர்களின் ஆசி தேவைப்படுகிறது. அத்தகைய சித்தர்கள் வாழும் பூமி, சதுரகிரி மலை ஏறுவதற்கு.... தயாராக இருங்கள்...🙏
ஓம் நமச்சிவாய 🙏
எங்களது ஆன்மீகப்பயணம்...
18.01.2019 அன்று காலை ஆறரை மணிக்கு அண்ணா நகரில் இருந்து புறப்பட்டது. எல்லோர் மனதிலும் மகிழ்ச்சி. எங்களுக்குள்ளே... ஒரு சின்ன அறிமுகம் செய்து கொண்ட பிறகு... சதுரகிரி மலையின் அதிசயங்களைப் பற்றி பேசிக்கொண்டே பயணத்தைத் தொடர்ந்தோம்.
"அரிது அரிது, மானிடராய் பிறத்தல் அரிது....
மானிடராய் பிறந்த காலையின்...... கூன் குருடு ....செவிடு... பேடு.... நீங்கி பிறத்தல் அரிது....
கூன் குருடு செவிடு பேடு நீங்கி பிறந்த காலையின் .....
ஞானமும் ....கல்வியும்... நயத்தல் அரிது.... ஞானமும் கல்வியும் நயந்த காலையும் தானமும் தவமும் தான் செய்தல் அரிது தானமும் தவமும் தான் செய்ததாயினும் வானவர் நாடி வழி திறந்திடுமே....."
ஔவை பாட்டியின் வரிகளில் கூறியதுபோல் நம் நண்பர்களுக்கு நிச்சயமாக ஒரு நல்ல பயணமாக அமையும் ஒரு நம்பிக்கை இருந்தது.
இங்கே எங்களது "கேப்டன் of the ship" (owner cum driver) குமார் அவர்களை பற்றி குறிப்பிட்டு கூற வேண்டும். அவர் இன்னோவாவை கையாண்ட விதம்.... திமிரிக்கொண்டு ஓடி வரும் ஜல்லிக்கட்டு காளையை லாவகமாக அடக்கும் வீரரைப்போல்... அவர் சொல்படி... இனோவா வண்டி சென்று கொண்டிருந்தது. சீரான வேகம்... மிகவும் கவனமான ஓட்டம்... அமைதியான போக்கு... எங்களுக்கு மிகவும் பிடித்திருந்தது.
காலை 8 மணி அளவில் வயிற்றிலிருந்து ஒரு call....
"பசிக்கிறது... என்னை கவனி"
எல்லோரும் கருத்து ஒருமித்து சிற்றுண்டி சாப்பிட... ஓட்டுப்போட்ட ஒரு ஹோட்டல்... மேல்மருவத்தூரில் உள்ள பாலாஜி பவன்.
இட்லி... பொங்கல்... வடை... தோசை...காபி...டீ... அவரவர்கள் விருப்பப்படி வயிற்றைக் கவனித்துக் கொண்டோம்.
உண்ட மயக்கம் தொண்டனுக்கும் உண்டு... மெல்லிய இசையோடு... குமாரை தவிர அனைவரும் சிறிது நேரம் கண் அயர்ந்தோம்.
ட்ரிங் ட்ரிங் ட்ரிங் ட்ரிங்.... மறுபடியும் call... ஆனால் இம்முறை தொலைபேசியில் (cell) இருந்து... ரமேஷ் நண்பர் செல்லை எடுத்து பேசினார்.... நான் அவரை கூர்ந்து கவனித்தேன்...
அவர் செல் பேசப்பேச அவர் கண்களில் ஆச்சரியத்தை கண்டேன்... அவர் பேசி முடித்து ....அவர் கூறிய விஷயங்கள் எங்களை மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது...
What is that information....wait and watch....😳🤔😉
பயணித்த நண்பர்கள்... உங்கள் அறிமுகத்துக்கு...
மனமது செம்மையானால்..... மந்திரஞ் செபிக்க வேண்டா....
மனமது செம்மையானால் மந்திரஞ் செம்மையாமே.. என்கிறார் அகத்தியர்.
ஆக, முதலில் தன் மனதை அறிந்து .....பின் தன்னை அறிந்து.... பின் இறையை அறிந்து.... இறுதியில் சித்த நிலைக்கு உயரலாம் என்பது தெளிவு.
மிகக் கடினமான இந்த முறையைப் பின்பற்ற முடியாத நிலையில் வாழ்பவர்கள் என்ன செய்வது?
வாழ்வில் ஏற்படும் துன்பங்களிலிருந்தும் துயரங்களிலிருந்தும் நம்மை எவ்வாறு காத்துக் கொள்வது?
யார் உதவுவார்கள்?
ஏனெனில், அவரவர் செய்த ஊழ்வினையை அவரவர்களே அனுபவிக்க வேண்டும் என்பது விதி. அதனை நிறைவேற்றத்தான் நவக்கிரகங்கள் செயல்படுகின்றன.
சாந்தி, பரிகாரம் போன்றவை செய்தாலும், சில சமயங்களில் மனிதனின் கர்மவினை பலம் அதிகமாக இருக்குமானால் , அவன் அவற்றை அனுபவித்தே ஆக வேண்டும் என்ற நிலைப்பாடு இருக்குமானால் அவ்வகைத் துன்பங்களிலிருந்து தப்பிப்பது எப்படி?.
யார் உதவி செய்வார்கள்?.
இது மாதிரி நேரத்தில் மனிதனுக்கு உதவி செய்வது சித்த புருஷர்கள் மட்டுமே.
அவர்கள் வலியுறுத்துவது உண்மை,நேர்மை, கருணை ,அன்பு தூய்மையான வாழ்க்கை மட்டுமே.
மற்றவர்களுக்கு உதவும் நல்லஎண்ணம், நல்லசெயல், நல்ல சிந்தனையோடு செயல்படுபவர்களுக்கு சித்தரின் அருள் நிச்சயம் கிடைக்கும்.
வெறும் 18 பேர் மட்டுமல்ல, பல்லாயிரக்கணக்கான சித்தர்கள் உலகில் அருள்பாலித்துக் கொண்டிருக்கின்றனர் அவர்களின் அருள் கிடைக்க நாம் செய்ய வேண்டியது தூய்மையான வாழ்வு வாழ வேண்டியது மட்டுமே.🙏.
எல்லாம் நண்பர்களிடத்திலும் எப்படியாவது சித்த புருஷர்களின் பார்வை நம் மீது பட்டு விட வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி இருந்தது.
சித்தர்கள் ரெடி.... நாம் ரெடியா?...மேற்கூறியது போல் நாம் தூய்மையான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறோமா?🤔. இந்தக் கேள்விக்கு பதில் உங்களிடம் இருக்கிறது. ஆம் என்றால், சித்தர்களின் பார்வை நம்மீது படுவது நிச்சயம்.
சித்தர்களின் அருள் பற்றி உரையாடியதில்... ரமேஷுக்கு வந்த தொலைபேசி பற்றி பேச மறந்து விட்டேன்.
அந்த மகிழ்ச்சியான செய்தி என்னவென்றால்🤔.... பயணம் செல்லும் வழியில்... மதுரை விரகனூர் இல்...60 இட்லி, தக்காளி குழம்பு, தேங்காய்ச் சட்னி, புளி சாதம் (அம்பட் பாத்), சுண்டல், ஊறுகாய் (எல்லாம் சௌராஷ்டிர மக்கள் தயாரித்த உணவு) கொண்டுவந்து தருவதற்கு... ஒத்துக்கொண்டதாக வந்த தகவல் எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இரவில் தங்குமிடமான தாணிப்பாறையிலும்.... அடுத்த நாள் காலை மலையேறும் போதும்.... உண்ண உணவு கிடைக்காது என்பது செய்தி. சித்தனை காணச் சென்றாலும்.... சிந்தனை உணவு பற்றியிருந்தது.
திட்டமிட்டபடி இரண்டு மணிக்கு மதுரை அடைவோம் என்றிருந்த போதிலும்.... குமார் (குமார் யார் என்று உங்களுக்கு ஏற்கனவே அறிமுகம் செய்து விட்டேன்) எங்களை ஒரு மணிக்கு மதுரை விக்ரம் ஹாஸ்பிடல் அருகே அழைத்து வந்து விட்டார். மனதில் மகிழ்ச்சி... ஆகையால் வயிற்றில் பசி அதிகம் இல்லை... இருந்தபோதிலும் நேரத்தை வீணடிக்காமல்.... கேட்டரிங் மக்கள் உணவை கொண்டுவந்து தருவதற்கு முன்.... மதிய உணவுக்காக டெம்பிள் சிட்டி உணவு விடுதிக்குள் நுழைந்தோம்.
நமது நண்பர் சந்திரசேகரை தவிர மற்றவர் அனைவரும் ஃபுல் மீல்ஸ் 🙊 சாப்பிட்டோம்.
சரியாக இரண்டு மணியளவில் கேட்டரிங் கொண்டுவந்த உணவை வண்டியில் ஏற்றிக்கொண்டு சிட்டாக ....திருமங்கலம் பஸ் ஸ்டாண்ட் நோக்கி... எங்களது பயணத்தை தொடர்ந்தோம்.
அங்கே....எங்களை எதிர் பார்த்துக் கொண்டிருந்தவர்.... திருப்பூரில் இருந்து வந்த பாலகிருஷ்ணன் அவர்கள்.... இவரோடு நாம் எட்டு (நபர்கள்) ஆகிவிட்டோம்.. மாலையில் டீ அருந்த மூன்று பால் பாக்கெட்டுகளையும் ஒரு தயிர் பாக்கெட்டையும் கடையிலிருந்து அள்ளிக்கொண்டு.... சுமார் நாலு மணி அளவில்.... தாணிப்பாறை வந்தடைந்தோம்..
அங்கு நடந்த சில சுவையான நிகழ்ச்சிகளை.. நீங்கள் அறிந்துகொள்ள சற்று இளைப்பாறுங்கள்...😌
"தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி"🙏
இளைப்பாறியது போதும் நண்பர்களே.... நாம் நம் பயணத்தைத் தொடர்வோம்... சிறப்பான... தரமான... சம்பவங்களையும்... காட்சிகளையும்....🤔 இனிமேல் தான் நீங்கள் காணப்போகிறீர்கள்....🤪
தாணிப்பாறை வந்தடைந்த நாங்கள் இரவு தங்க முடிவு செய்த இடம் "சதுர trust".
நண்பர் ரமேஷ் அவர்கள் , சிவனடியார்கள்,(சிவ பக்தர்கள்) சதுரகிரி அடிவாரத்தில் தங்கிச்செல்ல அமைத்த கட்டிடம். கட்டிடத்தின் சுற்றிலும்....கண் பட்ட இடமெல்லாம் இயற்கை அன்னை தட்டுப்பட்டாள்.... ரம்மியமான சூழல்... மெடிட்டேஷன் செய்வதற்குத் தகுந்த இடம்.....
கொண்டு வந்த பொருட்களை எல்லாம் இறக்கி, ( 800 சதுர அடி) அறையில் வைத்தோம். ரம்மியமான மாலை அல்லவா.... எல்லோருக்கும் சூடான தேநீர் அருந்த வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியது.... பாலும், சர்க்கரையும், தேயிலைத்தூளும் கைவசம் இருந்தது.
அந்தத் தருணத்தில்... நண்பர் சங்கர் ஒரு ரகசியத்தை வெளியிட்டார்.
"அண்ணா (என்னை இப்படித்தான் பிரியமாக அழைப்பார்) மோகன்தாஸ் அவர்கள் அருமையாக டீ போடுவார்கள்" என்றார்.
எல்லோரும்... ஒரு மனதாக, டீ தயாரிக்கும் உரிமையை அவரிடம் ஒப்படைத்தோம். அவரும் அதை மகிழ்ச்சியாக ஏற்றுக் கொண்டார். சிறிது நேரத்தில் எல்லோருக்கும் சுவையான👌 டீ ரெடி. இவ்வளவு சுவையான டீ அருந்தி வெகுநாட்கள் ஆகிவிட்டது.(மனைவிகள் கோபித்துக் கொள்ள வேண்டாம்).
பிறகு ஒரு சின்ன குளியல்... குளிர்ந்த நீர் உடலில் பட்டவுடன் எல்லா களைப்பும் நீங்கி விட்டது. என்னையும், ரமேஷையும் தவிர, மற்ற அனைவரும், ஒரு சின்ன நடைபயணம் சென்று வந்தனர்.
இரவு வந்தது.... எங்களுக்கு இட்லி தக்காளி குழம்பு மேல்... காதலும் வந்தது...
நண்பர் சங்கர் அவர்கள்... தட்டில் குழம்பு மிகுந்துவிட்டது
என்று இட்லியையும்....😉.... இட்லி மிகுந்து விட்டது என்று குழம்பையும்.... மாறி.... மாறி.... ஆசை தீர உண்டு களித்தார்.🤣🤣🤣🤣🤣.
நல்ல குளிர்.... கட்டிடத்தில் வெளியே இருந்த... காய்ந்த இலைகளை ஒன்று திரட்டி .... தீ வைத்தோம்... அதனுடைய பாதிப்பு , அடுத்த நாள் காலையில்
தான் எங்களுக்கு தெரிந்தது.(அடுத்த தொடர் வரை அது ரகசியமாகவே இருக்கட்டும்)
இரவும் வந்தது...
உறக்கமும் வந்தது..
நாளை .... அதிகாலை.... இருந்திருக்க வேண்டும் என்ற உணர்வுடன்... படுக்கச் சென்றோம்.
எனக்கு சிறிது நேரம் தூக்கம் வரவில்லை...
எனக்குத் தூக்கம் வரும்வரை...
எனக்குத் தெரிந்த...
நான் அறிந்த... உணர்ந்த....(திருடிய)... ஆன்மீக விதிகளை... உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.
1.எந்த ஒரு சூழ்நிலையிலும் உங்களையும், உங்கள் ஆன்மீக முறைகளையும், வெளிக்காட்டக் கூடாது.
பொதுவாக ஒருவர் தான் செய்யும் யோக முறைகளையோ, மந்திரங்களையோ, வெளிப்படுத்தும் போது... அவற்றின் பலன்கள் குறைந்து விடுகின்றன. அவர் அதை வெளிப்படுத்த காரணமே, தன்னைப் பற்றி பெருமைப்பட்டுக் கொள்ளவோ...அல்லது தனது முறைகளை பெருமைப்படுத்த முற்படுவதோ ஆகும்.இதில்... அவரைப்பற்றி வெளிப்படுத்தும் போது அவரின் ஆணவம் அதிகமாகின்றது. அவரின் முறைகளைப் பற்றி விளக்கும்போது, தேவையில்லாத கேலிப்பேச்சுக்கு ஆளாகின்றனர். ஆன்மிகத்தில் உயர் நிலை என்பது, ஒன்றும் இல்லாமல் இருப்பதுதான்.அதாவது மனதில் எந்த ஒரு எண்ணமும், சலனமும் இல்லாமல் இருப்பது.
2. ஆன்மீக அனுபவங்களை பகிர வேண்டாம். ஆன்மீக பயணத்தில்.... ஒரு நிலைக்கு மேல்... செல்லும் போது, பலவிதமான அனுபவங்களும், இரகசியங்களும் கிடைக்கும் இதை வெளிப்படுத்துவது என்பது தன்னைப் பற்றி பெருமைப்பட்டுக் கொள்வதற்காகவே. மேலும் பக்குவ நிலைக்கு தகுந்தவாறு இரகசியங்கள் கற்பிக்கப்படுகின்றன. இதை வெளிப்படுத்தும்போது.. அடுத்து வரவிருக்கும் பாடங்கள், தடை செய்யப்படுகின்றன.
3. அடுத்தவர் முறைகளில் தலையிட வேண்டாம்.
ஆன்மீகத்தில் எல்லோருக்கும் ஒரே விதமான பயிற்சி கிடையாது. எனவே மற்றவர்கள் பாதையில் நீங்கள் தலையிட வேண்டிய அவசியம் இல்லை. அப்படி அடுத்தவர் முறை தவறு என்று நீங்கள் உணர்ந்தால் அதை சொல்வதற்கு நீங்கள் ஆன்மீகத்தில் கரை கண்டவராக, கரை கடந்தவராக இருக்கவேண்டும். இது மனதில் பதிந்தால் யாருடைய பாதையிலும் தலையிட தோன்றாது. எவன் ஒருவன் தன்னை தாழ்த்தி கொள்கிறானோ அவனே ஆன்மீகத்தில் உச்சநிலையில் எளிதாக அடைய முடியும் .
நண்பர்களே.... நானும் நாளை காலை எழவேண்டும்.
உறக்kam ஆட்கொண்டுவிட்டது...
கெர்ர்ர்ர்....இல்லை.... ஆழ்ந்த உறக்கம்.... சவுண்ட் (less) sleep....👌
"எல்லோருக்கும் சூடான தேநீர் ரெடி".......
கனவுலகில் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் போது 🤔...... நமது மோகன்தாஸின் குரல், எங்களை எழுப்பியது. காலை 5 .30 மணி... சூரியன் உதிக்க, எங்களுடைய உத்தரவுக்காக, காத்துக்கொண்டிருந்தா நேரம். அந்தப் பணி படர்ந்த காலை நேரத்தில்... போர்வையை விட்டு வெளியே வர பிடிக்காமல்... சோம்பல் முறித்துக்கொண்டே... வேறு வழி இல்லாமல்.. படுக்கையை விட்டு எழுந்தோம். கவனமாகவும்.... மிகுந்த அன்போடும்.... மோகன்தாஸ் நண்பரால் தயாரிக்கப்பட்ட தேனீர்... தொண்டைக்குழியில் பயணித்த உடன்... எல்லோருக்கும் சுறுசுறுப்பு தொற்றிக்கொண்டது. அனைவரும் வேகமாக காலைக்கடன்களை முடித்துக் கொள்வதற்குள்.... நண்பர் மோகன்தாஸ் தக்காளி குழம்பை அடுப்பில் வைத்து சூடேற்றி இருந்தார். மீதம் இருந்த இட்லியை... சுவையான தக்காளி குழம்புடன்... காலைச் சிற்றுண்டியை முடித்துக்கொண்டு... மலை ஏற ஆயத்தமானோம்.
"நீ பற்ற வைத்த நெருப்பு ஒன்று.... பற்றி எரிய உன்னை கேட்கும்"
ஆம்....... நேற்று காய்ந்த இலைகளை எரித்த நெருப்பு... எங்கள் அனுமதி இல்லாமலே.... தண்ணீரை சுமந்து செல்லும் பிளாஸ்டிக் pipeym 😭😭😭😭🙊.
நண்பர்கள் சங்கரலிங்கம், குமாரும் சேர்ந்து..🤝.... அதை விரைவாக சரி செய்தார்கள்.
🚟சதுரா trust...
மலையடிவார ஆரம்பத்திலேயே இருந்தபோதிலும்.... innova எங்களை ... நடை ஆரம்பிக்கும் கேட் வரை சுமந்து சென்றது.
வண்டியை விட்டு இறங்கிய உடன் நாங்கள் தேடியது....
"மூன்றாவது (ஊன்றுகோல்) கால்".
எங்களோடு பயணித்த நண்பர் பிரசன்னா... 65 வயது இளைஞர்... ஆகையால் அவருக்கு ஊன்றுகோல் ... தேவையற்ற விஷயமாக இருந்தது😉. சங்கரலிங்கம்.(.60 வயதை தாண்டியவர்)... மோகன்தாஸ் (வயது தெரியாது)... குமார்... ஆகிய நண்பர்களும், ஊன்றுகோல் உதவியை நாடவில்லை.
எங்கள் பாவ மூட்டைகளை சுமக்க... (சோல்டர் bags )... ஒரு சுமை தூக்கியை ஏற்பாடு செய்து கொண்டோம்.
எங்களோடு ஆன்மீக பயணத்தை மேற்கொள்ளும் நண்பர்களே.... இனி நீங்கள் சந்திக்கப்போவது கடுமையான மலையேற்றம்...
நீங்கள் அதற்குத் தயாரா....💪.... தயார் என்றால்... எழில் கொஞ்சும் மலையைப் பற்றியும்.... சுமைதூக்கி பெரியசாமி எனக்குக் கற்றுக்கொடுத்த ஆன்மீக பாடத்தை பற்றியும்.... தெரிந்து கொள்வதற்காக.... கவனத்தோடு... என்னைத் தொடருங்கள்.... ஓம் நமச்சிவாய🙏.
Entrance of the hills🙏
எங்கும்... எதிலும் சிவமயம்🙏
உங்கள் மன தைரியத்தை பாராட்டுகிறேன்....👌 கடினமான மலை ஏற்றம் என்று அறிந்தும் என்னை தொடர.... வாழ்த்துக்கள்.
மூச்சைப்பிடித்து உடலை வளைத்து நீண்ட தூரம் மலைக் காட்டுப் பாதையில் பயணிப்பது.... ஒரு விதத்தில் யோகப் பயிற்சி தான். பாய்ந்தோடும் ஓடைகளை கடக்கும்போது.... சில்லிட்டு விரைக்கும் பாதங்களை பொருட்படுத்தாமல், கீழே குனிந்து நீரை கைகளில் அள்ளிக் குடிக்கும் போது அமிர்தம்போல் இருக்கிறது .உடலும், உள்ளமும் புத்துணர்வு பெறுகிறது.
எங்கும் கேட்டிராத இசையை எழுப்பும் வண்டுகள், பாடும் பறவைகள்🦅, அதை ரசிக்கும் குழந்தைகள் போல மரங்களின் இடுக்குகளில் ஓடிவரும் சூரிய ஒளிக்கதிர்கள்.... என மலைப்பயணம் தரும் அனுபவத்தை சொல்ல வார்த்தை இல்லை. இயற்கையின் அழகை கண்டு களிக்க ஆண்டுக்கு ஒருமுறையாவது இங்கு வரவேண்டும் என்ற எண்ணம் எழுகிறது.இயற்கை காட்சிகளை படம் பிடிப்பதில் மனம் ஒருபோதும் அலுப்பதில்லை. ஆனால் பாதையில் கவனம் தேவை.... கடக்க வேண்டிய தூரம்.... பத்து கிலோமீட்டர்..... உயரம் 4500 மீட்டர்.
சதுரகிரி மலையில் ஓடுகின்ற தீர்த்தங்களும், மூலிகைகளும், பல நோய்களை தீர்க்க வல்லது .இந்த மலை ஏறி இறங்கினால், உடலில் உள்ள வியர்வை வெளியேறி, மூலிகை கலந்த காற்றுபட்டு, பல நோய்கள் குணமாவதாகச் சொல்கிறார்கள் சித்த மருத்துவர்கள் பலர், மூலிகைகளை இங்கிருந்து சேகரித்து செல்கின்றனர்.
திசைக்கு 4 கிரிகள் (மலை) வீதம் 16 கிரிகள் சமமாக சதுரமாக அமைந்த காரணத்தால் , சதுரகிரி என்ற பெயர் ஏற்பட்டது.(ராஜசேகர் கவனத்திற்கு) மலையின் பரப்பளவு 64 ஆயிரம் ஏக்கர்.
உங்களிடம் பேசிக் கொண்டும் வரும் பொழுது... என்னோடு பயணித்த நண்பர்கள்... என்னை விட வேகமாக நடந்து கொண்டிருந்தார்கள். நண்பர் ரமேஷ், சந்திரசேகர் ஆகிய இருவரைத் தவிர... மற்ற அனைவரும் என் கண்ணில் படவில்லை.
மலையேற்றம் எனக்குப் பிடித்தமான விஷயம்.... ஆனால் அதை வேகமாக(நினைத்தாலும் முடியாது😏) கடப்பது பிடிக்காத விஷயம்.... என்னைப் பொறுத்தவரையில்... நிதானமாக..... மெதுவாக......
இயற்கை சூழலை அனுபவித்து... ஓடையில் கால் பதித்து...
நடப்பதில் ஒரு சுகம். வழக்கம் போல் என்னால் முடிந்தவற்றை... என்னுடைய கேமராக்களில் பதிவிறக்கம் செய்து கொண்டேன்.
ஒரு சிறு நடை பயணத்திற்குப் பிறகு, நாம் முதலில் வணங்க இருப்பது..... பிள்ளையார்...
"முப்புர மெரிசெய்த அச்சிவ னுறைரதம்
அச்சது பொடி செய்த.... அதிதீரா".....
எந்த ஒரு முக்கியமான... சிரமமான ....
காரியத்தை மேற்கொள்ளும் போதும் .....நாம் கணேசப் பெருமான் வணங்கிச் செல்வது வழக்கம். இதற்கு அந்த சிவபெருமானே விலக்கு இல்லை.
திரி புறத்தின் மேல் படையெடுக்கத் தொடங்குகையில், சிவபெருமான் விநாயகரை பூஜிக்க மறந்தார் , ஆதலால் சிவபெருமான் ஏறி வந்த தேரின் அச்சு முறியும்படி விநாயகர் செய்தார்....என்பது சிவபுராணம்.
சிவனுக்கே இந்த கதி என்றால் நாம் எம்மாத்திரம். 🙏
எல்லோரும் பிள்ளையாரை வணங்கியபின் சிவசிந்தனையுடன் மலை யாத்திரையைத் தொடங்கினோம். பிறகு..
ராஜயோக காளி, பேச்சியம்மன், கருப்பணசாமி கோயில்களில் தரிசனம் செய்து... வழுக்குப் பாறை வந்தடைந்தோம்.
நண்பர்களே வழுக்குப்பாறை ஏறுவதற்கு முன் நான் சிறிது இளைப்பாற வேண்டும்.... நீங்களும் தானே🙏.
(இப்பவே கண்ண கட்டுதே சாமி🤔)
மலையின் தோற்றம்..🙏
பிள்ளையார் கோயில்🙏
வழுக்குப்பாறை ஆரம்பம்அன்பே சிவம்🙏
இளைப்பாறியது போதும் நண்பர்களே...
வழுக்குப்பாறை ஏறுவோம் வாருங்கள்....
மலை ஏறும் பொழுது எனக்கு கற்றுக் கொடுத்த முதல் பால பாடம்.... எக்காரணத்தைக் கொண்டும் ,தலையை தூக்கி, ஏற வேண்டிய உயரத்தை பார்க்கக்கூடாது....
கவனம் யாவும் ,நாம் கால் வைக்கின்ற
பா (றை)தையில்தான், இருக்க வேண்டும்.
மலை....
இந்த ஒற்றைச் சொல்லில் தான்.... எவ்வளவு அடங்கி இருக்கிறது...
வாழ்கின்ற ஜீவராசிகள் தான் எத்தனை...
மரம்... செடி.... கொடி... பூ... பழங்கள்.... அதையே நம்பி வாழும்... பறவை..... அணில்... குரங்கு... மேலும் பல...
"வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும்🙈,மந்தி சிந்து கனிகளுக்கு வான் கவிகள் கெஞ்சும்,👌 கானவர்கள் விழியெறிந்து வானவரை அழைப்பர், கமனசித்தர்🙏 வந்துவந்து காயசித்தி விளைப்பார்,தேனருவித் திரை எழுப்பி வானின் வழி ஒழுகும் செங்கதிரோன் பரிக்காலும் தேர்க்காலும் வழுகும்🤔".
மலையிலேயுள்ள, பழ மரங்களிலே, கனிகளை, ஆண் குரங்குகள் பறித்துக் கொண்டு வந்து, பெண் குரங்குகளுக்கு கொடுத்து, அவற்றோடு கொஞ்சிக் கொண்டிருக்கும்.அப்போது, அந்தப் பெண் குரங்குகளின் கையிலிருந்து கீழே சிந்துகின்ற கனிகளைப் பெறுவதற்காகத், தேவர்கள் கெஞ்சி கொண்டிருப்பார்கள். எத்தகைய கற்பனை, எவ்வளவு சொல்வளம்,
வியக்க வைக்கும் கவிஞரின் கற்பனை வரிகள். குறவஞ்சி கவி வரிகளை, அசைபோட்டவாறே, மெதுவாக நானும் வழுக்குப் பாறையை கடந்தேன். எனக்கு முன்னால் சென்ற நண்பர் ரமேஷ் , என்மீது ஒரு கண்ணும் , வழி மீது ஒரு கண்ணும் வைத்து , சிறிது முன்னால் சென்று கொண்டிருந்தார்.
போகிற பாதையில் ஆங்காங்கே சிவ அடிகளார்கள் நீண்ட ஜடையுடன்.... காவி உடை உடுத்தி.... அமர்ந்திருந்தார்கள்.
அவர்களைக் கண்டவுடன், என்னுள் ஒருமுறை திருவள்ளுவர், வந்து போனார்🙂.
"மழித்தலும் நீட்டலும் வேண்டா.......
உலகம் பழித்தது ஒழித்து விடின்."
அவரின் கூற்றுப்படி.... உலகம் பழிக்கும் தீயொழுக்கத்தை விட்டு விட்டால்..... மொட்டை அடித்தலும் சடை வளர்த்தலுமகிய புறக்கோலங்கள் வேண்டா. சிவ பக்தர்கள் , இதிலிருந்து விதிவிலக்கோ🤔.
சிந்தனையோடு... நடந்து சென்று கொண்டிருக்கும் பொழுது, என் முன்னே சென்றுகொண்டிருந்த கூட்டத்திலிருந்து ஒரு குரல்..
"மம்மி.... attack"...😇.
ரிலாக்ஸ் செய்து கொண்டிருந்த,
என்னுடைய எல்லா புலன்களும்... சுதாரித்துக் கொண்டது.
யார்? .....யாரை?.... அட்டாக் செய்கிறார்கள்?.... உங்களுக்கு சொல்லாமலா....🤪....🙏
நமச்சிவாய வாழ்க... நாதன் தாள் வாழ்க... இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க🙏
"மம்மி.... அட்டாக்".... குரல் வந்த திசையை ஆச்சரியத்துடனும்... ஆர்வத்துடனும்...... கவனத்துடனும்..... பார்த்தேன். குரல் கொடுத்தவர்... 15 வயது மதிக்கத்தக்க ஒரு சிறுமி.... கண்களை அகல விரித்து... பயத்துடன் அவள் பார்த்துக்கொண்ட திசையில் என் பார்வை சென்றது.... அங்கே நான் கண்ட காட்சி... சிறுமியின் தாயின் கைகளிலிருந்த பையை ஒரு குரங்கு சிறிதும் பயமின்றி அபகரித்து கொண்டிருந்தது.
பக்கத்தில் இருந்த அனைவரும் அதை விரட்டினாலும், அனைவரையும் அது முறைத்துவிட்டு அதன் வேலையில் மும்முரமாக இருந்தது. சண்டையில் கடைசி குரங்கு தான் ஜெயித்தது.. குரங்கு கையில் பூமாலை....😆... பையிலிருந்த அனைத்தையும் குரங்கு சூறையாடி விட்டது.
அடுத்ததாக நாம் சந்திக்க போகும் மலை "சங்கிலிப் பாறை". சங்கிலிப் பாறை.... வழுக்குப் பாறை போல இருந்தாலும்... முன்எச்சரிக்கையாக... பக்தர்கள் மலை ஏறுவதற்கு தோதாக...
இரும்புச்சங்கிலியை, மலை ஓரத்தில் கட்டி இருந்தார்கள். தண்ணீர் வரத்து அதிகம் இருக்கும் காலத்தில் இந்த சங்கிலியை பிடித்துக்கொண்டுதான் ஏற முடியும். இந்தப் பாறையை நாங்கள் நெருங்கும் பொழுது, சூரிய பகவான் தன் வேலையை ஆரம்பித்துவிட்டார். கொஞ்சம் வியர்க்க ஆரம்பித்துவிட்டது... இருந்தாலும் மலையேற்றத்தை தொடர்ந்தோம். நண்பர் சந்திரசேகர், முதல் முறையாக மலைக்கு வந்திருந்த போதிலும், அவர் வேகமாக மலை ஏறிக் கொண்டிருந்தார்.
மலையேறும்போது... "இன்னும் எவ்வளவு தூரம் கடக்க வேண்டும்"என்று யாரிடம் கேட்டாலும்.... எல்லோரும் தருகின்ற ஒரே (பொய்யான) பதில்..."இதோ வந்துவிட்டது.... இன்னும் சிறிது தூரம் தான்".😆😆😆😆😆.
சற்று நேரத்தில் கோணத் தலைவாசல்
என்கின்ற " z " வடிவிலான மலையேற்றத்தை தாண்டினோம். அதிலிருந்து இன்னும் மேலே ஏற😪😪😪 காராம் பசுத்தடம் என்கின்ற இடத்தை அடைந்தோம்.
காராம் பசுத்தடம் என்பது... பாறையின் மீது சந்தனமும், மஞ்சளும் கலந்து பூசி வழிபட்டிருக்கிறார்கள். தலபுராணத்தோடு சம்பந்தப்பட்ட இடம். பாறையில் பசுவை கட்டி வைக்கும் வளையமும் இருந்தது.
நண்பர்களே இங்குதான் நான் ஒவ்வொரு வருடமும் தவறாமல் சந்தித்து ஆசி வாங்கும் சாமியார்.... இந்த வருடமும் எனக்காக காத்திருந்தார். எனக்கு அவர் ஆசி கொடுத்ததை ஆவணப்படுத்தி இருக்கிறேன்..... உங்கள் பார்வைக்காக. மெய்சிலிர்க்கும் அனுபவம்.... அவர் விரல்கள் என் நெற்றியில் பட்டவுடன்.... என் உடம்பில் உள்ள அத்தனை painகளும் பறந்தோடிவிடும். அவருடைய விரல்கள்... ஐஸ் கட்டிகள் போன்று... குளிர்ந்திருக்கும். நம் நண்பர் சங்கரலிங்கம்... அவரிடம் ஆசி பெறும் போது.... மேற் கூறிய படியே உணர்ந்தார் என்று என்னிடம் கூறினார்.
அடுத்ததாக நாம் இளைப்பாறிய இடம் "கோரக்கர் குகை".
இங்கே நான் நடத்திய நேர்காணல்😜😜😜 உங்களுக்காக...🙏
Mummy Attack....Monkey expecting some more...😛
யார்... யார்.. சிவம்...
நீ..... ... நான்....சிவம்....
வாழ்வே .....தவம்...
அன்பே சிவம்🙏
ஆத்திகம் பேசும் அடியார்க்கெல்லாம் சிவமே அன்பாகும்...
நாத்திகம் பேசும் நல்லவர்க்கெல்லாம்
அன்பே சிவமாகும்.....🙏
தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை.
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்.
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்... தன்னையே அர்ச்சிக்கத் தான் இருந்தானே.🙏
எங்களுடைய சுமைகளை தூக்கிவந்த சுமை தூக்கியின் பெயர் பெரியசாமி. அவர் எல்லோரையும் "சிவா" என்று அன்புடன் அழைத்தார். நானும் அவரை "சிவா" என்றே அழைத்தேன். எங்கும்... எவரிடத்திலும்... நீக்கமற இருக்கும் இறைவன் சிவனே... என்று உணர்ந்ததனால் எல்லோரையும் அவர் சிவா என்று அன்போடு அழைத்தது புரிந்தது.
செவிக்கு உணவில்லையேல்... சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.
கடிகாரம் பத்து மணியை காட்டிய பொழுதும்... பசி இல்லாத காரணத்தினால்... யாரும் (கையில் கொண்டுவந்திருந்த) உணவருந்த தயாராக இல்லை. ஆகையால் கோரக்கர் சித்தரிடம் உத்தரவு வாங்கிக் கொண்டு... மீண்டும் நடைபயணம். அடுத்ததாக நாம் தரிசிக்கவிருப்பது இரட்டை லிங்கம். இரட்டை லிங்கத்தை தரிசிக்கும் தருணத்தில் ரமேஷ் என்னிடத்தில் ஒரு உண்மையை கூறினார்...... அந்த உண்மையை கேட்க எங்களுக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது... What is that truth? நீங்களும் அதை அறிந்து கொண்டால் சந்தோஷப்படுவீர்கள்... ஸ்மால் பிரேக்... Stay tuned with me to share the happiness.... 🙏
கோரக்கர் குகை எதிரே உள்ள மலையில் வரையப்பட்ட லிங்கம்.
உங்களுடைய அனுமதி இல்லாமலேயே
ஏதோ ஒன்று உங்களை இழுத்து வந்து விட்டது.
வருவதற்கு சிரமம்
வந்தால் போவதற்கு சிரமம்.
ஏன் வந்தோம்...
வந்து கொண்டே இருப்போமா...
வருவது தடைபடுமா..
தெரியாது
காதலைப் போல
புரியவில்லை.
பிடித்திருக்கிறது.
இதுதான் இறை அருள் .உங்களை மாயா
உறக்கத்திலிருந்து
எழுப்பும் செயல்.
ஒத்துழைத்தால் சிவமாவாய்.
உறங்குவது போல்
நடித்துக் கொண்டிருந்தால்
சவமாவாய்.
ஒத்து அது அறிவான்
உயிர் வாழ்வான்
மற்ற எல்லாரும் செத்தாருள் வைக்கப்படும்
உள்ளம் பெருங்கோயில்,
ஊன் உடம்பு ஆலயம்,
வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல்,
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்,
கள்ளப் புலன் ஐந்தும் காளா மணிவிளக்கு."
உடலுக்குள் இருக்கும் சீவனை சிவனாக அறிய வேண்டுமென்றால், உடலை முதலில் கோவிலாக நாம் கருத வேண்டும்.
எங்கே செய்கிறோம்?
புகைப்பிடிப்பது😏,
தண்ணி அடிப்பது😟,
அளவுக்கு அதிகமாக உணவை உண்பது,
கண்ட நேரம் தூங்குவது,
தூய்மையாக இல்லாமல் இருப்பது.
இதில் எங்கே இறைவனைக் காண்பது.இறை என்பது நுணுக்கமான விஷயம், அதை அறிய , நம் புலன்கள் கூர்மையாக மென்மையாக இருக்க வேண்டும்.
அது ஒரு புறம் இருக்கட்டும்.
நண்பர் ரமேஷ் கூறிய சந்தோசமான
செய்தியை இன்னும் நான் உங்களுக்கு கூறவில்லையே.... நாம் மலைப்பாதையில் பாதி வழியைக் கடந்துவிட்டோம் என்று அவர் கூறியது, நம் நண்பர்கள் எல்லோருக்கும் மகிழ்ச்சியை கொடுத்தது. அந்த மகிழ்ச்சியில்... ரெட்டை லிங்கம் தலபுராணத்தை கேட்டு அறிந்து கொண்டோம்.
இரட்டை லிங்கம்:
ஆனந்த சுந்தரம் என்ற வியாபாரிக்கு சிவன் மீது அளவு கடந்த ஈடுபாடு இருந்தது. அவரது மனைவி ஆண்டாள். பெருமாள் பக்தை. இவர்கள் இருவரும், தான் வணங்கும் கடவுளே பெரியவர் என்று தர்க்கம் செய்வர். இதற்கு விடை காண இருவரும் சதுரகிரி வந்து தியானம் செய்தனர். இவர்கள் முன்பு சிவன் தோன்றினார்.
""சிவபெருமானே! தாங்களே அனைத்துமாக இருக்கிறீர்கள், என்பதை என் மனைவியிடம் தெரிவிக்க வேண்டும்,''என வேண்டினார் வியாபாரி. சிவன் ஆண்டாளிடம் சென்றார். அவளோ, ""நான் உம்மை நினைத்ததே இல்லை. பெருமாளை நினைத்தே தவம் செய்தேன்,'' என்றாள். அப்போது சிவனும், விஷ்ணுவும் இணைந்து சங்கரநாராயணராக காட்சி கொடுத்தனர். இதன் அடிப்படையில் மலை ஏறும் வழியில் சிவலிங்கம், விஷ்ணு லிங்கம் என இரட்டை லிங்கம் பிரதிஷ்டை செய்து ராமதேவ சித்தர் என்பவர் பூஜை செய்தார். இந்த சன்னதிக்கு எதிரே ராமதேவர் குகை இருக்கிறது.
கேட்டதையும், பார்த்ததையும் ,அறிந்து கொண்டதையும் , அசை போட்டுக் கொண்டே... ஒரு சின்ன நடைபயணம். நடை பயணத்தின் முடிவில் நாம் கண்ட காட்சி...😳😴😴😴.
இரட்டை லிங்கம்
"நட்டகல்லைத் தெய்வமென்று நாலு புஷ்பம் சாத்தியே....
சுற்றிவந்து முணமுணென்று சொல்லு மந்திரம் ஏதடா... நட்ட கல்லும் பேசுமோ... நாதன் உள்ளிருக்கையில்...
சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ"
ஓம் நமச்சிவாய🙏
நாங்கள் மலையித்து நின்றதற்கு காரணம்.... எங்கள் கண்முன்னே.... நாங்கள் ஏற வேண்டிய இன்னொரு மலையேற்றம்... "பச்சரிசிப்பாறை".... சில இடங்களில் என்னால் தவழ்ந்துதான் ஏற முடிந்தது....😟😟😟... பசியும் வயிற்றை கிள்ள... மலை ஏறி முடித்தவுடன்... நாங்கள் வந்து சேர்ந்த இடம் பெரிய பசு கிடை... சிரிது இளைப்பாறிவிட்டு... கையில் கொண்டுவந்திருந்த உணவை... (அம்பட்பாத்).. புளிசாதம் , தயிர், சிப்ஸ்... சாப்பிட ஆரம்பித்தோம். சாப்பிடுவதற்கு முன்.. எங்களோடு வந்த சிவாவுக்கும் மற்றும் சில, சிவ பக்தர்களுக்கும், அன்ன (புளி சாதம்) தானம் செய்தோம்.... பக்தர்கள் இதை விரும்பி உண்டார்கள்.
மர நிழல் ....சில்லென்ற காற்று... சுவையான சுணை நீர்... களைப்புத் தீர சிறிது உறங்க எண்ணினாலும்... அந்த எண்ணத்திற்கு இடம் தராமல்... சிவா கொடுத்த உற்சாகத்தில்... மறுபடியும்.. நடை..
அடுத்ததாக நாங்கள் தரிசித்தது... வனதுர்க்கை அம்மன் கோயில்..அங்கிருந்து சிறிய மலை ஏற்றத்துக்கு பிறகு பிலாடி அய்யனார் கோயில் ... அங்கிருந்து பத்து நிமிடத்தில் சுந்தரமகாலிங்கம் வந்துவிடுகிறது. கோவில் நுழையும் இடத்தில் கடைகள் அதிகம். சுக்குமல்லி காபி கடை... சாம்பிராணி... வகைவகையாக விற்கின்றனர். கூட்டம் அதிகம் இல்லை....கடைசியாக வந்த நாங்கள் கோவிலை அடைந்த போது மணி மதியம் 1..
முதலில் சுந்தரமூர்த்தி தரிசித்துவிட்டு பிறகு சுந்தர மகாலிங்கத்தை தரிசித்து.. அடுத்ததாக சில படிகள் ஏறி சந்தன மகாலிங்கத்தை தரிசித்தோம். எல்லோருக்கும் பரம திருப்தி. அன்று இரவு அங்கே தங்குவதற்கு முடிவு செய்திருந்ததால்.... தங்குவதற்கு தேவையான இடத்தை பிடிக்க சிரமம் ஏற்பட்டது. அங்கே... அன்னதானத்திற்கு பக்தர்களை கையை பிடித்து இழுக்காத குறையாக அன்பாக அழைத்துக் கொண்டிருந்தார்கள். பசி அதிகமாக இல்லையென்றாலும் நாங்கள் சுவையான மதிய உணவை முடித்துக்கொண்டோம்.
சந்தன மகாலிங்கம் எதிரே நாங்கள் தங்குவதற்காக... வசதியான ஒரு இடம் கிடைத்தது. இடம் கொடுத்த பூஜாரி மாரியப்பன்.... 3 மணி அளவில் தொடங்கியிருக்கும் சித்தர் பூஜைக்கு எங்களை அழைத்தார். மூன்று மணி நேரம் நடந்த இந்த பூஜையில் கலந்துகொண்டு ஆறு மணி அளவில்... நாம் தங்கும் இடத்திற்கு சென்றோம்... அன்று இரவு எனக்கு நேர்ந்த .... கிடைத்த... அனுபவங்களை இன்றுவரை நான் யாரிடமும் பகிர்ந்து கொள்ளவில்லை... அவற்றை நான் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்... மெய் சிலிர்க்கும் அந்த அனுபவத்தை தெரிந்துகொள்ள காத்திருங்கள்...🙏🙏🙏."ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த சோதியை...
நாடி நாடி நாடிநாடி நாட்களும் கழிந்துபோய்...
வாடி வாடி வாடி வாடி மாண்டுபோன மாந்தர்கள்....
கோடி கோடி கோடி கோடி எண்ணிறந்த கோடியே..."
ஓம் நமச்சிவாய 🙏
பகலை இரவு கவ்வும் நேரம்...
"பூவில் வண்டு கூடும்...
கண்டு பூவும் கண்கள் மூடும்...
பூவினம் மானாடு போடும்...
வண்டுகள் சங்கீதம் பாடும்"
வண்டுகள் பாடிய சங்கீதம் காதில் ஒலித்தது... மலையில் மின்சாரம் கிடையாது... கும்மிருட்டு.....
ஐந்து மணி நேரம் மலை ஏறிய களைப்பு.... எனக்கு தூக்கத்தை வரவழைத்தது. மற்ற நண்பர்கள் என்னை காபி குடிக்க அழைத்த போதிலும் நான் அதை நிராகரித்துவிட்டு படுக்க ஆயத்தமானேன். நல்ல குளிர். அதற்குத் தேவையான உடைகளை எடுத்துக்கொண்டு சென்றதினால்.... உடை மாற்றிக் கொண்டு... காலை நீட்டி படுத்தேன். உடன் இருந்த நண்பர்கள் எங்கே சென்றார்கள்... எப்போது சென்றார்கள்... எப்போது திரும்பி வந்தார்கள்..... என்று எதுவும் எனக்குத் தெரியாது. நன்றாக உறங்கி விட்டேன்.
திடீரென்று... என் உடம்பின் முழுவதிலும்... இனம் தெரியாத ஒரு கணத்தை உணர்ந்தேன்..... என்னால் என் உடம்பை சிறிது கூட அசைக்க முடியவில்லை....😳... என் மனதில் பயம் தொற்றிக்கொண்டது... மெதுவாக தூக்கம் கலையும் நேரத்தில்... எங்கும் ....சந்தனமும் ஊதுபத்தியும் கலந்த வாசம்... இதுவரை என் வாழ்நாளில் என்றுமே, அந்த மாதிரி வாசத்தை நான் நுகர்ந்த தில்லை..🤔. கண்விழித்து பார்க்க பயம்....
ஒருவழியாக தைரியத்தை வரவழைத்துக்கொண்டு கண்விழித்துப் பார்த்தேன்... எங்கும் இருட்டு... உறங்குவதற்கு முன் படுக்கையில் பக்கத்தில் வைத்திருந்த பேட்டரி லைட் ஆன் செய்தேன்...
எனது இடது பக்கத்தில் நண்பர் ரமேஷும்....வலது பக்கத்தில் நண்பர் சங்கரலிங்கம் படுத்து இருந்தார்கள். கை கடிகாரத்தில் நேரத்தைப் பார்த்தேன்... இரவு மணி 12... நடுநிசி நேரம்... எனக்கோ இயற்கை உபாதை... நம்பர் ஒன்று...
சந்தனத்தின் வாசம் (மிதந்து )மிகுந்து கொண்டு இருந்தது.... தனியே வெளியே செல்வதற்கு பயம்....கைக்கெட்டிய தூரத்தில் படுத்திருந்த ரமேஷ் நண்பரை பிடித்து உலுக்கினேன்..... அவரிடம் இருந்து ஒரு சின்ன முனகல்...
"எ... ன்.....ன....?"
"ரமேஷ்.... எனக்கு (1) வருகிறது..... நீ வருகிறாயா?"....
கேள்வியின் அர்த்தத்தை புரிந்துகொண்ட ரமேஷ், முனகியபடியே..
"எனக்கு வரலை.... ஆகையால் நான் வரவில்லை"... ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றுவிட்டார்.
என்ன செய்வது.... மதுரைக்கு வந்த சோதனை.... தட்டுத்தடுமாறி, தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, டார்ச் லைட் வெளிச்சத்தில் கதவைத் திறந்து வெளியே பார்த்தேன்... அங்கே....🙏
"இனியது கேட்கின் தனிநெடு வேலோய்.. இனிது.. இனிது... ஏகாந்தம் இனிது... அதனினும் இனிது... ஆதியைத் தொழுதல்... அதனினும் இனிது... அறிவினர்ச் சேர்தல்... அதனினும் இனிது அறிவுள்ளாரைக் கனவிலும் ..நனவிலும்.. காண்பது தானே.."
ஓம் நமச்சிவாய 🙏
ஏகாந்தம்..(தனிமை)... எங்கும் இருட்டு... கண் திறந்து கொண்டு இருக்கிறேனா... இல்லை கண்மூடி இருக்கின்றதா... என்ற சந்தேகம் எழும் அளவுக்கு ... கும்மிருட்டு... கையில் இருந்த டார்ச் லைட் மிகச் சிறியது... அதிலிருந்து வெளிவந்த வெளிச்சம் கால் வைத்து நடக்கும் பாதையை காட்டுவதற்கே திணறியது....
"சரக்...சரக்..." காய்ந்த இலைகள் கால் பட்டு நொறுங்கும் சத்தம்.. Dolby டிஜிட்டல் surround சிஸ்டம் பாணியில் கேட்டது. இன்னும் சந்தன சுகந்தம் நின்றபாடில்லை... நன்றாக ஒரு முறை மூச்சை இழுத்து விட்டு... அந்த சுகத்தை அனுபவித்தேன்... எங்கேயோ இருந்து... இரு கண்கள் என்னை பார்ப்பது போன்ற ஒரு உள் உணர்வு... மிகவும் கவனத்துடன் (அக்கம்பக்கம் பார்க்காமல்).... அடிமேல் அடிவைத்து... அருகிலிருந்த மரத்துக்கு பக்கத்தில்... டார்ச் லைட்டை வாயில் கவ்விக்கொண்டு... வந்த காரியத்தை முடிக்க எத்தனித்தேன்.
மனதில் ஏதேதோ சிந்தனைகள்....
நேற்று இல்லாத வாசம் இன்று ... என்ன அது?... சித்தர்களின் வருகைக்கான அறிகுறி இதுவா... அவர்கள் அருவமாகவும்... சூட்சுமமாகவும்... நடமாடுவார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.
சிந்தனையுடன்... வந்த காரியத்தை முடிக்கும் தருணத்தில்... என் மிக அருகில்... ஏதோ அசைவது போன்ற ஒரு உணர்வு.... சப்த நாடியும் ஒடுங்கி விட்டது...தைரியத்தை வரவழைத்துக் கொண்டு திரும்பிப் பார்த்தேன்.... அது ஒரு பசு மாடு... கண் இமைக்காமல் என்னை பார்த்துக் கொண்டிருந்தது... ஓம் நமச்சிவாயா என் மனதில் கூறிக்கொண்டு... வேகவேகமாக... தட்டுத்தடுமாறி... கதவை திறந்து... படுத்து இருந்த இடத்திற்கு வந்தேன். கண்களை மூடினேன்... உறக்கம் என்னை ஆரத் தழுவிக் கொண்டது. சந்தன வாசத்திற்கும்... பசு மாட்டிற்கும்.... சித்தர்களுக்கும்.... என்ன சம்பந்தம்? .... அடுத்த நாள் காலையில்... சுந்தர லிங்கத்தை தரிசித்து பொழுது நடந்த விஷயங்கள்🙂.... மூலமாக... சம்பந்தம் இருக்கிறது என்று தெள்ளத் தெளிவாக தெரிந்தது...🙏
"நின்றும்...
இருந்தும்....
கிடந்தும்...
நடந்தும்....
நினை ....
என்றும் சிவன் தாளினை"
ஓம் நமச்சிவாய🙏
இறை சிந்தனையோடு படுத்து உறங்கிய என்னை.... நண்பர் ரமேஷ் எழுப்பும் போது காலை மணி 5.30. போர்வையை, சற்றே விலக்கி, அவரை உற்றுப் பார்த்தேன்....
அந்தப் பார்வையில் "ஏன் இவ்வளவு சீக்கிரம் எழுப்பினாய்?"என்று கேட்டேன். குளிர் இன்னும் குறைந்தபாடில்லை... சூரிய பகவானும் இன்னும் காட்சி தரவில்லை.... ஏன் இந்த பள்ளி எழுச்சி.
ரமேஷ் தந்த பதில், என்னையும் எழுந்து உட்கார வைத்தது.
காலையில் 3 மணியிலிருந்து, சந்தன மகாலிங்கத்துக்கு பூஜை ஆரம்பித்து விட்டது என்றும்.... நண்பர்கள் சந்திரசேகரும் சங்கரலிங்கம் பூஜை நடக்கும் இடத்திற்குச் சென்று விட்டார்கள் என்றும் கூறினார். நானும் ரமேஷும் ,சில நிமிடங்களில் தயாராகி பூஜையில் கலந்து கொண்டோம். பூஜையில் கவனம் ஒன்றவில்லை....
மனம், இரவில் தரிசித்த, அந்தப் பசுவின் கண்கள் எங்கேயாவது தெரிகிறதா என்று அலை பாய்ந்து கொண்டிருந்தது. இரவில் பெற்ற அனுபவங்களை ரமேஷிடம் கூட நான் பகிர்ந்து கொள்ளவில்லை.
ஆறு மணி அளவில் பூஜை முடிந்தவுடன், சந்தன மகாலிங்கத்திடம் ஆசியையும்... பூஜாரி கொடுத்த பிரசாதத்தையும்... நாங்கள் கொண்டுவந்திருந்த பைகளில் பேக் செய்து கொண்டோம்.
விரைவாக காலைக்கடன்களை முடித்துக்கொண்டு (நோ குளியல்) .... அடுத்ததாக சுந்தர மகாலிங்கத்தை தரிசிக்க... அங்கு கூடியிருந்த பக்தர்களின் ஜோதியில் கரைந்தோம்.
சுந்தர மஹாலிங்கத்துக்கு திரை... பக்தர்கள் அமைதியாக... இறையின் தரிசனத்துக்காக காத்துக் கொண்டிருந்தார்கள்... எனது மனமும்... அமைதியான சூழ்நிலையில்... தியானத்தில் மூழ்கி கொண்டிருந்தது...
திடீரென்று கூட்டத்தில் ஒரு சலசலப்பு.... பக்தர்கள் பதற்றத்துடன், யாரோ வருவதைக் கண்டு.... வரிசையிலிருந்து நகர்ந்து கொண்டிருந்தார்கள்.
சலசலப்பு சத்தத்தை கேட்டு....
மெதுவாக கண்ணைத் திறந்து பார்த்தேன்.... அங்கே .....
நான் இரவில் சந்தித்த கண்கள்...
அதே கண்கள்...
ஆம்...
ஒரு பசுமாடு... முண்டியடித்துக்கொண்டு.... பக்தர்களின் வரிசையில், நெரிசலில், சுந்தர மகாலிங்கத்தை தரிசிக்க... யாருக்கும்... எதற்கும்... சட்டை செய்யாமல் முன்னேறிக்கொண்டிருந்தது. நானும் நண்பர்களும், சற்று பதட்டமடைந்து... அதன் வரும் வழியில் இருந்து ஒதுங்கி .... அந்தப் பசு பக்தருக்கு வழி கொடுத்தோம்.
எங்கேயோ இருந்து ஒரு குரல் "யாரும்... பயமோ... பதற்றமோ... அடைய வேண்டாம்.... இந்தப் பசு மூன்றாவது முறையாக... கோயிலை சுற்றிவந்து.... இறைவனின் தரிசனத்துக்காக... வந்து கொண்டிருக்கிறது.... சில நேரங்களில் சித்தர்கள்... பசு வடிவம் கொண்டு இறைவனை தரிசிக்க வருவது இயல்பாக நடக்கும் விஷயம்" என்று கூறிக் கொண்டிருந்தார்.
அவர் கூறிய செய்தி... என் காதில் ரீங்காரமிட்டு....
என் மூலாதாரத்திற்கு சென்று....
என்னை மெய்சிலிர்க்க வைத்தது.
ஆம்....
நேற்று இரவே, எனக்கு சித்தன் காட்சி அளித்து விட்டார் என்ற உண்மை எனக்கு உரைத்தது.
அருள் பாலிக்கும் அந்த கண்கள்... இருதயத்தில் நேராக பாய்ந்த அந்த கூரிய பார்வை...
மனதில் பதிந்து விட்டது.
திரை விலகியது....
பக்தர்கள் மெதுவாக முன்னேறி கொண்டிருந்தார்கள்.... எனக்கும் ரமேஷுக்கும் சுந்தர மகாலிங்கத்தை முழுவதுமாக தரிசிக்க முடியாத நிலை...
நானும், ரமேஷ் நண்பரும் , கோயிலின் பின் வழியாக.... பூசாரிகள் நின்று பூஜை செய்யும் இடத்திற்குச் சென்று... சுந்தர மகாலிங்கத்திற்கு முன் நேர் எதிரே அமர்ந்து கொண்டோம். திவ்ய தரிசனம்🙏. பிரசாதத்தை வாங்கிக்கொண்டு... வெளியில் வந்து.... மற்ற நண்பர்களும் அங்கே அமர்ந்து இறைவனை தரிசிக்க ஏற்பாடு செய்தேன். யாரும் எங்களை தடுக்கவில்லை....
நெற்றி நிறைய திருநீறு பூசிக்கொண்டு... மலையிலிருந்து இறங்குவதற்கு ஆயத்தமானோம். வழியில் ....அன்போடு காலைச் சிற்றுண்டிக்காக அழைத்த மடத்தில்...
சூடான கேசரி...
இட்லி...
பொங்கல் சாம்பார்..
அனைத்தையும் வயிற்றுக்கு பரிசளித்துவிட்டு... சூட்சுமமாக மலை எங்கும் பரவியிருக்கும், இறைவனுக்கும் சித்தர்களுக்கும் நன்றி கூறிவிட்டு... மெதுவாக.... நான் மட்டும் ரொம்ப மெ....து....வா....க...
சில இடங்களில்... த....வ....ழ்....ந்....து.... நண்பர் சங்கரலிங்கம் துணையுடன்... அவர் தோள்களில் என் கைகளை ஊன்றி..... மூன்றாவது கால் (ஊன்றுகோல்) துணையுடன்... எனக்கு ஏற்பட்ட அனுபவங்களை எல்லாம், மனதில் மவுனமாக அசை போட்டுக்கொண்டு, கடைசியாக.... நண்பர்களுடன் அடிவாரம் வந்து சேர்த்தேன்.🙏
நண்பர்களே.... நான் பெற்ற பாக்கியத்தை.... நீங்களும் பெற வேண்டி.... என்னால் முடிந்த வரையில்.... சதுரகிரி பயணத்தை... கட்டுரை வழியாகவும்... காட்சிப்படங்கள் வழியாகவும்... என்னால் முடிந்தவரையில்.... ஆவணப் படுத்தி உள்ளேன். இந்தக் கட்டுரை எழுதக் காரணமாக இருந்த நண்பர்களுக்கும்.... என்னை உற்சாகப்படுத்திய நண்பர்களுக்கும்.... என்னோடு கட்டுரையில் மிக கவனமாக கலந்துகொண்ட நண்பர்களுக்கும்.... என் உள்ளம் கனிந்த நன்றி நன்றி கூறி.... சிரம் தாழ்த்தி வணங்கி... எனது அடுத்த பயணக்கட்டுரை யுடன்... வெகுவிரைவில்... உங்களை சந்திக்கிறேன் என்ற செய்தியும் கூறி.... எங்கும் நிறைந்திருக்கும் இறைவனுக்கு நன்றி சொல்லி.... உங்களிடமிருந்து பிரியா விடை பெறுகிறேன்....
"என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்தது இல்லையே...
என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்து கொண்டபின்....
என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்தது காண வல்லரோ...
என்னிலே இருந்திருந்து யான்உணர்ந்து கொண்டனே"
ஓம் நமச்சிவாய🙏
பக்தியும், இயற்கை எழிலும், சித்தர்களின் அமானுஷ்யமான உணர்வும் கலந்து தந்துள்ள சுவையான கட்டுரை. பலருக்கு எம்பெருமான் தன்னை சங்கர நாராயணனாக காட்சி தந்தது உண்டு. இதைத்தான் ஸ்ரீ வைஷ்ணவ ர்கள் அந்தர்யாமித்வம் என்பர். நம்மாழ்வார் பாசுரம் ஒன்று:
ReplyDeleteநாகத்தணையானை நாள்தோறும் ஞானத்தால்
ஆகத்தணைப்பார்க்கு அருள் செய்யும் அம்மானை
மாகத்து இளமதியம் சேரும் சடையானைபாகத்து வைத்தான்தன் பாதம் பணிந்தேனே என்று அருளிச் செய்தார்