Thursday, July 9, 2020

நல்ல மனம் வாழ்க.

நல்ல மனம் வாழ்க.

காலை வாக்கிங் கிளம்பினேன், ஆவின் பால் பாக்கெட் வாங்கிண்டு வந்துடேன் எனும் தங்கையின் குரலும் காதில ஒலிக்க, சட்டைப்பையில் பணத்தையும் எடுத்துக்கொண்டு படி இறங்கினேன்...

லாக்டௌன் ஸ்ரீரங்கம்  மெயின் ரோடுகளில் ஒரிரண்டு, ஜன நடமாட்டங்களே... ஆதரவற்றோர் தெருவோரங்களில்... பிச்சைகாரர்களும்...  கவர்மென்ட் ஆஸ்பிடல் கடந்து... அம்மா உணவகம், நல்ல கூட்டம்... பாவம் பலர் க்யூவில்... பார்த்தாலே ஏழைகள் கூட்டம், மற்றும் ஆஸ்பிடல் கூட்டம், என தெரிகிறது.. அதை கடக்க முயலும் போது...

"சாமி, காலை வணக்கம். மனமிருந்தால், காலை உணவுக்கு ஏதாவது உதவி செய்யுங்களேன்" என்னும் குரல்... திரும்பினேன்... வயதான ஒருவர்... காவி கலர் வேஷ்டி மட்டும்... சாப்பிட்டு ரெண்டு நாளாச்சு, ஏதாவது  கொடுங்களேன் என்றார்... பார்த்தாலே தெரிந்தது...  பத்து ரூபாய் கொடுத்தேன்... எங்க சாப்பிடுவீங்க என்றேன். ... அம்மா உணவகத்தை காட்டினார்...

பணம் போதுமா என்றேன்....  அதற்கு சாமி... அதிகம் ஆசைப்பட கூடாதுங்க... கிடைச்சதே போதுங்க! என்னை யாரோ அறைந்த  மாதிரி இருந்தது.

மெதுவாக நடந்து வந்து ராஜ கோபுரத்தை வணங்கி... நம்பெருமாளையும் தாயாரையும், மனதில் நினைத்து... எல்லோரையும் காப்பாத்து... போதும்டா சாமி, உன் பசங்களை படுத்தினது, என வேண்டிக்கொண்டு... ஆவின் பால் பாக்கெட்  வாங்கி விட்டு  திரும்ப வரும்போது.... அம்மா உணவகம், மனம் குறு குறு வென.... காசு வாங்கிய ஆள், என்ன செய்குறார் பார்ப்போம்.. என நினைத்து... உள்ளே பார்க்க... வரிசையில் தட்டோடு நின்று இருந்தார்...

அதோ வருகிறார்... கையில் தட்டு... அதில் இட்லிகள் சாம்பார் நிறைய ஊற்றி...

வந்தவர் என்னை பார்த்து சிநேகமாக சிரித்து, கடந்தார்...  ரோட்டராமாக இருநத பசு மாடு, அதன்வாயில் இரண்டு இடலிகளை தள்ளினா்... குஷியாக இட்லிகளை மாடு சாப்பிட... தட்டை எடுத்துக்கொண்டு தரையில் அமர்ந்தவர்... ரோட்டில் படுத்திருந்த முதியவர் ஒருவரை, எழுப்பி இட்லிகளை கொடுத்து...  தானும் சாப்பிட  ஆரம்பித்தார்... ஆடிவிட்டேன். நான்  கவனிப்பதை உணர்ந்த அவர்...  சாமி... பத்து இட்லி கொடுத்தாங்க... மாடு பாவம் சாமி... விரட்டி வுட்டானுங்க... முன்னமாறி கூட்டம் இல்ல... சாப்பிட ஏதுமில்ல அதுக்கு, அதான் ரெண்டு இட்லி கொடுத்தேன்... அது இஙக தான் சுத்தும்  என்றார்...  நான் உடனே, இது யாரு? உங்க அப்பாவா? என்றேன்...

இல்லீங்க... நான் பக்கிரிசாமி... எனக்கு கடையில வேலங்க... பொண்டாட்டி போய்ட்டா...  என் பசங்க விரட்டி வுட்டாங்க... வயசாயிடுச்சு, வேலை செய்யமுடியல அதான் இப்படி....  இங்க படுத்து இருக்காரே, இவருடைய கதையும் கிட்டதட்ட என்ன மாறிதான், ஆனா என்னவிட ரொம்ப வயசானவரு...  வாழ்ந்து கெட்ட மனுசனாம்... மனுசனுக்கு மனுசன் உதவி... அதான் எனக்கு கெடச்சதுல, அவருக்கும்...

பெருமாள் யார் மூலமாவது படி அளந்துறுவாருங்க... அவரோட ஊருங்க இது....  இருக்க வச்சிருக்காரு... கைவிட மாட்டாருங்க... காப்பாத்துவாருங்க...

எனக்கு ஒன்றும் புரியவில்லை... கண்களில்.கண்ணீர் எட்டிப்பார்க்க... பெருமாள், இவர் மூலம் நமக்கு ஏதோ பாடம் நடத்துகிறார், என தெரிந்த்து...

படக்கென பையில் இருந்த ஐம்பது ரூபாய் எடுத்து, அவரிடம் கொடுத்தேன்... உடனே அவர், "சாமி  பாத்தீங்களா", பெருமாள் கைவிடலை, எங்களை! ரெண்டு நாளைக்கு எங்களுக்கு கவலையில்லாம, பண்ணிட்டாருங்க... நீங்க நல்லா இருக்கனும் சாமி...

நான் சொன்னேன்...  அய்யா... பெருமாளை நம்பறீங்க ... வேறென்ன வேண்டும், அவர் உங்களை் மட்டுமல்ல நம்மளையும் வாழ வைக்கறார்... நம்புனா போறும் அவரை...

அவ்விடம் விட்டு, நகரவே மனமில்லாமல் நகர்ந்தேன்...

நம்பினார் கெடுவதில்லை...

No comments:

Post a Comment