மலை நாட்டுத்திருப்பதிகள் (கேரள வைணவ திருத்தலங்கள்)பகுதி 1
(BySujatha அண்ட் Venkatesan)
ஈரிருபதாம் சோழம் ஈரொன்பதாம் பாண்டி
ஓர் பதின்மூன்றாம் மலைநாடு ஓரிரண்டாம் – சீர்நடுநாடு
ஆறோடு ஈரெட்டாம் தொண்டை அவ்வடநாடு ஆறிரண்டு
கூறு திருநாடு ஒன்றாக் கொள்.
என்ற பழம்பாடலின்படி கங்கையின் புனிதமான காவிரி பாய்ந்து வளம் பெருக்கும் சோழ நாட்டில் பூலோக வைகுண்டமாம் திருவரங்கம் முதலாக 40 திவ்ய தேசங்கள் அமைந்துள்ளன, தண்பொருநை என்னும் தாமிரபரணி பாயும் பாண்டிநாட்டில் 18 திவ்ய தேசங்கள் அமைந்துள்ளன. வேழமுடைத்து மலைநாடு என்ற சிறப்புப் பெற்ற அன்றைய சேரநாடு, இன்றைய கேரளத்தில் 13 திவ்ய தேசங்கள் அமைந்துள்ளன, நடுநாட்டில் 2 திவ்ய தேசங்களும், திருக்கச்சி அடங்கிய தொண்டைநாட்டில் 22 திவ்ய தேசங்களும், தமிழகம் அல்லாத வடநாட்டில் 12 திவ்ய தேசங்களும், திருவைகுந்தமாம் திருநாடு ஒன்றாகும் என்பது இப்பாடலின் விளக்கம் ஆகும்.
மலை நாட்டு திவ்ய தேச பெருமாள்களை திவ்யமாக சேவிப்பதற்கு முன்னால் கேரளக் கோவில்களின் தனித்தன்மைகளைப் பற்றிக் காணலாம். நமது தமிழ்நாட்டு ஆலயங்களைப் போல கேரள ஆலயங்கள் பிரம்மாண்டம் மற்றும் கலை அம்சம் நிறைந்தவையாக இல்லாவிட்டாலும் இக்கோவில்களில் எளிமையும், ஒழுங்கும், தூய்மையும், நேரம் தவறாமையும், சிரத்தையும் நம்மை அதிசயிக்க வைக்கின்றன.
இங்கு திருக்கோவில்கள் “அம்பலம்” என்றழைக்கப்படுகின்றன. இவை நம்முடைய கோவில்களைப் போல பிரம்மாண்டமானவை அல்ல, நெடிதுயர்ந்த இராஜ கோபுரங்கள் இல்லை. எளிமையாக இயற்கையுடன் இயைந்தவாறு அமைந்துள்ளன. மலைப்பகுதி என்பதால் கட்டிடங்கள் பொதுவாக மரத்தால் ஆனவை. கூரைகள் எல்லாம் பொதுவாக ஓடு வேய்ந்தவையாகவே உள்ளன. அதிகமாக மழை பெய்யும் பிரதேசம் என்பதால் மழை நீர் வழிந்து ஓடும் படியாக எல்லா அமைப்புகளுமே சாய்ந்த கூரை கொண்டவையாக அமைந்துள்ளதைக் காணலாம். அதுவும் அனைத்தும் தாழ் கூரையாகவே அமைந்துள்ளன. சன்னதிக்குள் நுழையும் போதே குனிந்து பணிவாகத்தான் நாம் செல்ல வேண்டும். மரச்சிற்பங்கள் மற்றும் மூலிகை வர்ண ஓவியங்கள், விளக்குகள், யானைகள், தூய்மை மற்றும் காலம் தவறாமை, ஆகியவை இக்கோவில்களின் தனி சிறப்பு ஆகும்
பல திவ்ய தேசங்களின் கர்ப்பகிரக சுவர்களில் கேரள பாணி ஓவியங்கள் அருமையாக வரையப்பட்டுள்ளன, இன்றும் இயற்கை மூலிகைவர்ணங்களையே இந்த ஓவியங்களை வரையப் பயன்படுத்துகின்றனர் என்பது சிறப்பு. சில ஆலயங்களில் கூரையிலிருந்து எழிலாக விளக்குகள் தொங்குகின்றன. கர்ப்பகிரகத்திற்கு முன் உள்ள படிகள் சோபனம் என்றழைக்கப்படுகின்றன. அவற்றில் பூசை செய்யும் போத்திகள் மட்டுமே ஏற அனுமதிக்கப்படுகின்றனர். சில ஆலயங்களில் சோபனத்தின் இருபுறமும் துவார பாலகர்கள் அமைத்துள்ளனர்.
புதிது புதிதாக நினைத்த இடத்தில் சந்நிதிகளை அமைக்காமல் ஆதி காலத்தில் இருந்ததைப் போலவே அப்படியே பாதுகாக்கின்றனர். எல்லா ஆலயங்களிலும் பொதுவாக நந்தவனங்கள் உள்ளன. மேலும் ஊட்டுப்புரம் என்னும் அன்னக்கூடம், கதகளி முதலிய கலை நிகழ்ச்சிகள் நடைபெறும் கூத்தம்பலம் மற்றும் கோவிலுக்கு வெளியே திருக்குளம் எல்லாம் பொதுவாக அனைத்து ஆலயங்களிலும் அமைந்துள்ளன.
எழிலான சூழ்நிலையில் அமைந்துள்ள திருக்கோவிலை மிகவும் தூய்மையாக பராமரிக்கின்றனர். சுத்தம் என்றால் அவ்வளவு சுத்தம். நேரம் தவறாமல் சரியாக அனைத்து வழிபாடுகளையும் நடத்துகின்றனர். யாருக்காகவும், எதற்காகவும் பூஜை விதிகளை மாற்றுவதில்லை என்பது பாராட்டுக்குரியது. திருக்கதவை பூஜை செய்த பின் அடைத்து விட்டால் எதற்காகவும் பின் திறப்பதில்லை. மலர்கள், நைவேத்யம் மற்றும் எந்த பூஜைப் பொருளையும் கையில் வாங்குவதில்லை, கீழே வைக்க சொல்கின்றனர். யாரும் தங்களைத் தொட்டு விடக்கூடாது என்பதில் போத்திகள் மிகவும் கவனமாக உள்ளனர். எந்தக் கோவிலிலும் கர்ப்பகிரகத்தில் மின் விளக்குகளை பயன்படுத்துவதில்லை. நெய் விளக்குகள்தான் பயன்படுத்தப்படுகின்றது. கேரளத்திற்கே உரித்தான மூன்று கிளை விளக்குகள் மற்றும் சர விளக்குகளின் ஒளியிலேயே நாம் பெருமாளை திவ்யமாக சேவிக்கின்றோம். கண்ணாடி தேவைப்படுபவர்கள் கண்டிப்பாக கண்ணாடி அணிந்து செல்வது மிகவும் முக்கியம்.
இவர்கள் சட்டையைச் சட்டை செய்வதில்லை. இந்த அம்பலங்களுக்குள் ஆண்கள் மேல் சட்டை, பனியன், கால் சட்டை அணிந்து செல்ல அனுமதி இல்லை, கைலி அணிந்து கொண்டும் செல்ல முடியாது. கரங்களில் மூட்டை முடிச்சுகளை எடுத்துச் செல்லவும் அனுமதிப்பதில்லை வெளியே வைத்து விட்டுதான் செல்ல வேண்டும். மிகச் சில ஆலயங்களில் மட்டுமே பெண்கள் சுடிதார் அணிந்து செல்ல அனுமதிக்கின்றனர் பெண்களுக்கும் கேரள பாணி முண்டு அல்லது சேலை அணிவது அவசியம். இந்த விதி அனைவருக்கும் பொது அரசனாக இருந்தாலும் ஆண்டியாக இருந்தாலும் இந்த விதியை தளர்த்துவதில்லை.
அதிகாலை நான்கு மணிக்கே சன்னதி திறந்து விடுகின்றனர். இங்கு ஆராதனைகள் எல்லாம் கேரள முறையில் நடைபெறுகின்றன. ஆராதனை செய்யும் கேரள பிராம்மணர்கள் போத்திகள் என்று அழைக்கப்படுகின்றனர். தலைமை அர்ச்சகர் மேல்சாந்தி என்றும் அவரது உதவியாளர்கள் தந்திரிகள் என்றும் அழைக்கப்படுகின்றனர். அவர்கள் உடம்பில் திருமண் அணிவதில்லை நெற்றியில் சந்தனம் மட்டுமே அணிகின்றனர். இக்கோவில்களில் பெருமாள் பிரசாதமாக தீர்த்தமும், சடாரியும் கிடையாது. தமிழ்நாட்டில் பூஜை செய்வது போல் அர்ச்சனைகளை வாயால் உச்சரிப்பது இல்லை. வாய்க்குள்ளேயே மந்திரங்களை சொல்லிக் கொண்டு கையினால் ஆவாஹனம் செய்து கை செய்கையாலேயே பூஜை செய்கின்றனர், பின்னர் வெளியே வந்து அமர்ந்து ஒரு வாழை இலையில் சிறிது சந்தனமும், துளசியும் மலர்களும் பிரசாதமாக வழங்குகின்றனர். சில ஆலயங்களில் சிறிது விபூதியும் சேர்த்து pவழங்குகின்றனர். பொதுவாக தட்சிணை தருபவர்களுக்கு இலையில் பிரசாதம் வழங்குகின்றனர் இல்லாவிட்டால் சிறிது சந்தனம் கரங்களில் வழங்குகின்றனர். அதிகமாக எதுவும் பேசுவதில்லை மிகவும் சுத்தமாகவும் நியமத்துடனும் பூஜை செய்கின்றனர். யாரும் வீண் பேச்சு பேசுவதில்லை, எந்த வித ஏற்றத் தாழ்வுகளும் இல்லை, சிறப்பு தரிசன கட்டணம் வாங்கிக் கொண்டு பெருமாளின் அருகில் சென்று சேவிக்க வைக்கும் பழக்கம் இல்லை அனைவரையும் சமமாக நடத்துகின்றனர். சில ஆலயங்களில் மட்டுமே நாம் தரும் நைவேத்யங்களை பெருமாளுக்கு படைக்கின்றனர். இங்கு நடத்தப்படும் பூஜைகள் எல்லாம் வழிபாடுகள் என்றழைக்கப்படுகின்றன. ஒவ்வொரு வழிபாட்டிற்கும் ஒரு கட்டணம் உள்ளது. வெடி வழிபாடு என்று வேட்டுப் போடும் வழிபாடு புதுமையாக உள்ளது. பொதுவாக ஒரு சில ஆலயங்களை தவிர்த்து அனைத்து ஆலயங்களிலும் அதிக கூட்ட நெரிசலும் வரிசைகளும் இல்லை, எனவே எவ்வளவு சமயம் வேண்டுமென்றாலும் மனப்பூர்வமாக பெருமாளை சேவிக்க முடிகின்றது.
இனி இந்தக்கோயில்களுக்கு எளிதாக செல்லும் வழி ,தங்குமிடம் ,திட்டமிடல் போன்றவற்றில் எங்கள் அனுபவங்களை தொடர்ந்து பார்ப்போம்….
தொடரும்…

No comments:
Post a Comment