Thursday, March 3, 2022

திருப்பதி முதல் திருமலை பகுதி 6

 🌹🙏திருப்பதி முதல் திருமலை வரை...ஒரு விரிவான 🚐பயணத்தொகுப்பு

By சுஜாதா &வெங்கடேசன்

பகுதி 6 

கோவிந்தராஜர் கோயில்

தரிசனம் ஏழு மணிங்கறதால பக்கத்துல ஹயக்ரீவர் சன்னதில சேவிக்கறோம். 

பட்டர் ஆத்து மாமி தமிழ்ல பேசி தொன்னைல கடலை பருப்பு சுண்டல் தரா. எனக்கு ஒத்துக்காதுன்னு என் தொன்னையும் பெருமாள் பிரசாதம் வீணாக்காதேள்னு இவர்ட்ட கொடுக்க மொச்சு மொச்சுன்னு சாப்டுண்டே என்னோட தேசிகர் ,ராமானுஜர்னு திறந்திருக்கற சன்னதிலாம்  ஏறி எறங்கி வரார். அப்பறம் “கால் வலிக்கறது நான் ஒக்காந்து சாப்ட்டுண்டிருக்கேன் மீதி சன்னதி போய்ட்டு வாங்கறார்”. 

சேவிச்சுட்டு வாசல்ல போட்டிருக்கற கருங்கல் பலகைகள்ல கொசுக்கடி வாங்கிண்டு உக்காந்து செல்போனை பார்த்துண்டு இருக்கோம். . அதுக்குள்ள க்யூ ஃபார்ம் ஆயிடறது. ஓடிப்போய் செல் போனை டெபாசிட்பண்ணிட்டு வந்து நிக்கறோம். 

இவர் இந்த கோயில் கதையை சொல்றார்..

மிக பெரிய கோபுரத்தோட இருக்கு. 

(கோவிலின் கிழக்கு நுழைவாயிலில் 50 மீ உயரம், ஏழு மாடி ராஜகோபுரம் மட்லா அனந்தராஜாவால் கட்டப்பட்டது.)

இந்த அமைப்பில் ராமாயண காட்சிகள் மற்றும் மட்லா அனந்தராஜா மற்றும் அவரது மூன்று மனைவியோட உருவப்படம் சுவர்களில் இருக்கு பாருன்னு காட்டறார். .

ராஜகோபுரத்தோட  மேற்கே, கோவிலின் இரண்டு சுற்றுச்சுவர்களும் ஒன்றன் பின் ஒன்றாக அமைக்கப்பட்டு இருக்கு. 

திருப்பதி நகரின் பிரதானமான கோவில். இங்கு ஸ்ரீ கோவிந்த ராஜ பெருமாள் கிடந்த கோலத்தில் சேவை சாதிக்கிறார்.

இதன் வரலாறு சற்று சோகமானது.

    பதினோராம் நூற்றாண்டில், இரண்டாம் குலோத்துங்க சோழனால் சிதம்பரத்திலுள்ள நடராஜர் கோயில் உள்ளே உள்ள கோவிந்த ராஜர்  சன்னதி சேதப்படுத்தப் பட்டு (தசாவதாரம் நினைவிருக்கா?)

கடலில் மூலவரை போட்டதால் புதிய மூலவர் மற்றும் உற்சவர்களை பகவத் ராமானுஜர் இங்கு ஆவாஹனம் செய்து , அப்போதைய தொண்டை நாட்டு ராஜாவான யாதவராயனின் உதவியால் இவ்வாலயம் எழுப்பப்பட்டதாக ஒரு வரலாறும் அதே மூலவர்தான்  என்றும்

இரு வேறு வரலாறு.  

     இப்பெருமாளுக்கு வைகானஸ ஆகமத்தின் படி பூஜைகள் நடைபெறுகின்றன.திருமலையில் நடப்பது போலவே அனைத்து உற்சவங்களும் நடைபெறுகின்றன. கோவிலில் ஸ்ரீ கோவிந்த ராஜ பெருமாள், பார்த்த சாரதிப் பெருமாள், ஸ்ரீ கல்யாண வேங்கடேஸ்வர பெருமாள், ஸ்ரீ ஆண்டாள் மற்றும் தனிக் கோவில் நாச்சியாராக ஸ்ரீ புண்டரிகவல்லி நாச்சியார் எழுந்தருளியுள்ளனர்.ஆழ்வார்களுக்கும் சந்நிதி உண்டு.

        திருமலையில், பகவத் ராமானுஜரை தவிர வேறு யாருக்கும் சந்நிதியில்லை. இதன் காரணம் ஆழ்வார்கள் திருமலையையே பெருமாளாக கருதியதால் மலை மீது ஏறவில்லையாம். அதனால் ஆழ்வார்களுக்கு மலைதாழ்வரையிலே நாம் பார்த்த ஆழ்வார் தீர்த்தம் என்ற இடத்தில் சந்நிதியுண்டு. இவ்விடேமே தற்போது கபில தீர்த்தம் என்று காஞ்சி பீடாதிபதிகளின் முயற்சியால் சைவச் க்ஷேத்திரமாக விளங்குகிறது.

 இங்கே கோவிந்த ராஜ ஸ்வாமி சந்நிதியில் தான் அனைத்து ஆழ்வார்களின் உற்சவ மூர்த்திகள் எழுந்தருளியுள்ளனர்.

அடுத்தபக்கம் மூலவரை தரிசிக்கப்போனால்... என்னவோ புதுமாதிரி ஏற்பாடு. இலவச தரிசன வரிசையில் நின்னு கொஞ்சம் கொஞ்சமா நகர்ந்து போறோம். வலப்பக்கத் தூண்களில் இருக்கும்  சிற்பங்களையும், சிலவற்றின் சம்பவக் கதைகளையும் இவருக்கு சொல்லிண்டே  வந்ததில்  அலுப்பு தெரியலை. அடடான்னு  எதையாவது சுட்டிக் காட்டினா..  அதுக்கான கதையைச் சொல்றேன். . . ஏற்கெனவே நூறு தடவை சொன்ன கதைகளாத்தான் இருக்கும். ஆனால்  இவர் இந்தக் காதில்கேட்டு நேரா அந்தக் காதுவழியா வெளியே விட்டுடுவார்…போன தடவை ரொம்ப லேட்டா வந்து ஏகாந்த சேவை சேவிச்சோ ம். 

குறிப்புகள்

7. ஆனந்த மலை:

ஒரு முரை ஆதிசேஷனுக்கும், வாயு பகவானுக்கும் இடையே போட்டி ஏற்பட்டது. அதன் நடுவராக மகாவிஷ்ணு இருந்தார். அந்த போட்டியின் முடிவில் இருவரின் பலமும் சமமானது என தீர்ப்பளித்தார்.

இதனால் ஆதிசேஷனும், வாயுபகவானும் மகிழ்ச்சியால் மிகவும் ஆனந்தமடைந்தனர். இதனால் இந்த மலைக்கு ‘ஆனந்த மலை’ என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.

நீலாத்ரி

நீலப்பெருவரையை மேவும் நெடுமாலை,
மூலப்பொருளை, முழுமையினை- கோலத்
துளப மணிமார்பின் தூயோனை, நெஞ்சில்
உளனை ஒருவனையே நம்பு..



No comments:

Post a Comment