எண்ணப்பறவை_31
மறுநாள் ப்ரியாவும் சுந்தரி மாமியும் அமுதா வீட்டுக்கு வரும்போது மணி பனிரெண்டை தொட்டுவிட்டது.
விடுமுறை நாள் இல்லாததால் அமுதாவும் குமுதாவும் அலுவலகங்கள் சென்றிருந்தனர்.
'அமுதா.. அமுதா'
ப்ரியா கதவைத் தட்டும்போதே அமுதா ஆஃபீஸ் சென்றிருப்பாள் என்று தெரிந்தும் அமுதாவின் பெயரை அழைத்து தான் அமுதாவிற்கு தெரிந்தவள் என்பதை மறைமுகமாக உள்ளிருப்பவர்களுக்கு உணர்த்தினாள்.
ஒரு யுவதியையும் சற்று வயதான தோற்றத்தில் இருந்த சுந்தரியையும் பார்த்தார் கணபதி சுந்தரம் கதவைத் திறக்கும்போதே.
'அமுதா ஆஃபீஸ் போயிருக்காளே.'
'தெரியும் மாமா. நாங்க உங்களைப் பார்க்கத்தான் வந்தோம்.'
'என்னையா?' என்பது மனதிலும் 'வாங்கோ வாங்கோ, தாராளமா வாங்கோ' என்பது அழைப்பிலும் இருந்தது.
கட்டிலின் இருபக்க ஓரங்களில் ப்ரியாவும் சுந்தரி மாமியும் அமர, மோடாவில் அவர் உட்கார்ந்தார்.
'பொண்கள் ரெண்டு பேருமே ஆஃபிஸ் போயிருக்கா. உங்களுக்கு எதுவும் தர முடியாததுக்கு மன்னிச்சுக்கணும்.'
'அதனால என்ன மாமா. தூத்தம் கொடுங்கோ போதும். நாங்களும் திடுதிப்புனு தான வந்திருக்கோம்.'
சுந்தரி மாமி வழியில் வாங்கி வந்த ஒரு கிலோ பச்சை திராட்சையை ப்ரியா கையால் கொடுக்க சொல்கிறாள்.
'இதெல்லாம் எதுக்கு?' என்பதும் 'பரவாயில்லை மாமா, வாங்கிக்கோங்கோ' என்பதும் பரஸ்பர பேச்சுக்களுக்கு துவக்கமாகின.
'அப்புறம் நீங்க ரெண்டு பேரும் யாருன்னே சொல்லலியே?'
'மாமா, என் பேர் ப்ரியா. அமுதாவோட ஒர்க் பண்றேன். இந்த மாமி பேர் சுந்தரி.'
'ஓ. நீங்க தான் அந்த ப்ரியாவா. அமுதா சொல்லியிருக்கா உங்கள பத்தி. நீங்க ஆஃபீஸ் போகலையா இன்னிக்கு.'
'இன்னிக்கு லீவ் போட்டிருக்கேன் மாமா'.
இவர்கள் இருவரும் இப்படி பேசிக் கொண்டிருக்கும் போதே சுவற்றில் ஆணியில் தொங்கிக் கொண்டிருந்த ஒரு ஃப்ரேம் போட்ட படத்தை சுந்தரி பார்ப்பதை கணபதி சுந்தரம் பார்த்துவிட்டார்.
உடனே அதை ஆணியிலிருந்து கழற்றி சுந்தரியிடம் கொடுத்தார். பட்டுப்பாவாடை சகிதம் அமுதாவும் குமுதாவும் நின்று கொண்டிருக்கும் படம், வரிசையில் நிற்பதைப் போல. அமுதாவின் தோளைப் பிடித்துக் கொண்டு குமுதா.
'இவாதான் என் பொண்கள் குமுதா அமுதா. என் ஆத்துக்காரி போனதுக்கப்பறம் இவாதான் எனக்கு எல்லாமே.'
அவருடைய உத்யோகம், ஆத்துக்காரி சோகம் அது இதுன்னு சற்று நேரம் போய்க் கொண்டிருந்தது. வந்த விஷயத்தை எப்படி ஆரம்பிப்பது என்று இருவருக்கும் யோசனை. ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
'நான் பாருங்கோ பேசிண்டே இருக்கேன் நீங்க எதுக்காக வந்திருக்கேன்னு கேட்காமயே.'
'பரவாயில்ல மாமா. ஏதோ மனசு விட்டு பேசிண்டிருந்தேள். நிறுத்த வேண்டாமேன்னு தான்..'
'சரி மாமா, நேரடியா விஷயத்துக்கு வரேன். இந்த மாமி பேர் சுந்தரின்னு சொன்னேனில்லையா. இவாளுக்கு கல்யாணம் பண்ண தோதா ஒரு பையன் இருக்கார். நம்மாத்து பொண்ண பார்க்கலாமேன்னு நான்தான் இவாள அழச்சிண்டு வந்தேன். மீதியெல்லாம் அந்த மாமியே பேசுவா உங்க கிட்ட.'
'சொன்னாளில்லையா என் பேரு சுந்தரி. ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி ஒரு விபத்துல எங்க ஆத்துக்காரரும் என் பொண்ணும் தவறிட்டா...'
மாமி மேற்கொண்டு தொடர்வதற்குள் கணபதி சுந்தரம் குறுக்கிட்டார்.
'அப்போ நீங்க அரவிந்தோட அம்மான்னு சொல்லுங்கோ. ரெண்டு நாள் முன்னாடி நம்மாத்துக்கு வந்திருந்தார். தங்கமான பையன். ரொம்ப நாழி அவனோட பேசிண்டிருந்தேன். எக்ஸெலண்ட் bபாய்.'
அவர் சொல்லும் தோரணையிலிருந்தே அரவிந்த் நல்லதொரு இம்ப்ரெஷனை பதித்திருக்கிறான் என்பது புரிந்தது சுந்தரிக்கு.
'அவனும் சொன்னான் இங்க வந்ததை பத்தி. உங்கள பத்தியும் ஒங்க பொண்களப் பத்தியும் சொன்னான். சுத்தி வளச்சு பேசல. என் பையனுக்கு கிட்டத்தட்ட முப்பது வயசாகிறது. கல்யாணத்துக்கு வரன் தேடிண்டிருக்கேன். உங்காத்துல சம்மந்தம் பண்ண அவனுக்கு பிடித்தமிருக்குமோன்னு எனக்கு ஒரு சந்தேகம். அதான் உங்கள பார்த்துட்டு உங்க அபிப்ராயத்தையும் தெரிஞ்சிண்டு போகலாமேன்னு வந்தேன். ப்ரியாவுக்கும் தெரிஞ்ச இடம்னு சொன்னா. அதான் அவளையும் அழச்சிண்டு வந்தேன்.'
சுந்தரி மாமி இருவரில் யாரை பெண் கேட்டு வந்திருக்கிறார்கள் என்று தெரியாத நிலையில் சற்று குழப்பம். இருந்தாலும் குமுதாவுக்காக பேச மனதில் தீர்மானிக்கிறார்.
'மாமி, நான் இப்ப என் மூத்த பொண் குமுதாவுக்கு வரன் தேடிண்டிருக்கேன். ஜாதகம் தரேன். பாருங்கோ. பொருந்திருந்துதுன்னா மேல் கொண்டு பேசலாம்.'
எப்படி அமுதாவை கேட்பது என்று ப்ரியா யோசித்து கொண்டிருந்தாள். கொஞ்சம் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு கேட்க ஆரம்பித்தாள்.
'மாமா, எனக்கென்னவோ அரவிந்த் நம்ம அமுதாவுக்கு பொருத்தமா இருப்பாரோன்னு தோணறது.'
அவள் அப்படி ஆரம்பிப்பாள் என்று சுந்தரி மாமி எதிர்பார்க்கவில்லை. அவளைப் பொருத்த மட்டில் இருவரில் ஒருவர் என்பதே விருப்பமாக இருந்தது.
'இல்லம்மா. குமுதாவுக்கு கல்யாணம் நடத்தாம அமுதா கல்யாணத்த யோசிக்கறதா எனக்கு ஐடியாவே இல்ல. அவளுக்கு முன்னாடி பண்ணினா எனக்கு சில சிக்கல்லாம் வரும். ஏன் அக்காக்கு கல்யாணம் ஆகாம இவளுக்கு ஆச்சு; ஏதாவது குறையிருக்குமா குமுதாகிட்டன்னு கூட வரன் ஆத்துல யோசிப்பா. இதெல்லாம் எதுக்கு அனாவசியமா நாமளே தேடிண்டு.'
'இல்ல மாமா. என் மனசுல பட்டத சொன்னேன். வித்யாசமா நெனச்சுக்காதீங்கோ. ரெண்டு பேர் ஜாதகங்களையும் வாங்கிண்டு போனா எது பொருத்தமா இருக்குமோ, அத அரவிந்துக்கு முடிக்கலாமேன்னு கூட யோசிக்கலாமே.'
'எனக்கு அதுல உடன்பாடு இல்ல. ஆச்சு குமுதாக்கு இருபத்தேழு முடியப்போறது. ஏற்கனவே லேட்டு. அவ அம்மா ஸடன்னா இறந்து போனதால ஏதோ தள்ளிப் போயிடுத்து.'
'ப்ரியா, மாமா சொல்றதுலேயும் அர்த்தம் இருக்கு. நாம ஆசப் படறோங்கறதுக்காக அவரை கம்பெல் பண்ணக் கூடாது. சார், உங்க கிட்ட சொல்றதுக்கென்ன. என் புள்ளையாண்டானுக்கு உங்க ரெண்டாவது பொண்ணு பொருத்தமா இருப்பான்னு வழி நெடுக ப்ரியா பேசிண்டு வந்தா. அவளோட ஃப்ரெண்டோன்னோ? அதான் அஞ்ஞானத்துல சொல்றா. நீங்க சொல்றதுதான் சரி.'
'குமுதா ஜாதகத்த தரட்டுமா மாமி. ஆனா இப்பவே சொல்லிட்டேன், செவ்வாய் தோஷ ஜாதகம்னு ஜோஸ்யாள்லாம் சொல்றா.'
'சார், எனக்கு ஜாதகம் தோஷம் இதுலெல்லாம் நம்பிக்கையே சுத்தமா போயிடுத்து. எங்க ஆத்துக்காரர் எண்பது வயசுக்கு மேல தீர்க்க ஆயுஸோட இருப்பான்னு எல்லா ஜோஸ்யாளும் சொன்னா. என்ன ஆச்சு? என் பொண்ணு தீர்க்க சுமங்கலியா புக்காத்துல அமோகமா வாழுவான்னு சொன்னா. நடந்துதோ? பகவான் என்ன நெனைக்கிறாரோ அதுதான் நடக்கும். ஜாதகம் எல்லாம் நான் வாங்கிக்க போறதில்ல. வேணும்னா பூ கட்டி பார்த்துட்டு நீங்களே சொல்லுங்கோ. மேற்கொண்டு பேசி நல்ல முடிவு எடுப்போம்.'
சுந்தரி மாமி இப்படி சொன்னவுடன் அவருக்கு ஒரு சந்தோஷம் மனதில். காரணம் அரவிந்தை பார்த்ததிலிருந்தே குமுதாவுக்கு பார்க்கலாம் என்ற எண்ணம் மேலோங்கியிருந்தது. செவ்வாய் தோஷம் என்று சொல்லியும் அதை பொருட்படுத்தாது அரவிந்த் அம்மா பேசியது சற்று நிம்மதியையும் தந்தது.
'சரி மாமி. சாயந்திரம் அவா ரெண்டு பேரும் ஆஃபீஸ்லேந்து வரட்டும். அவா கிட்ட பேசிட்டு சின்ன பொண்ண அழச்சிண்டு உங்காத்துக்கு வரேன் நாளைக்கே.'
'என் பையன் உங்க கிட்ட சொல்லியிருப்பானே. அவனுக்கு வடக்க ஏதோ புது வேலை கிடைக்கப் போறது. அதனால உங்க பொண்ணு வேலைய விடும்படியா இருக்கும்.'
'அவளே பொழுது போகலைன்னு தான் சொற்ப சம்பளத்துக்கு போயிண்டிருக்கா. சின்னதுன்னாலும் கொஞ்சம் யோசிக்கணும். அரசாங்க வேலையாச்சே. பெரியவ வேலைய விடறதுல்ல பிரச்சனை இருக்காது.'
சிறிது நேரம் பூர்வீகம் மற்றும் சொந்தங்கள் பற்றிய பேச்சுக்கள் பேசிவிட்டு ப்ரியாவும் சுந்தரி மாமியும் கிளம்பினார்கள்.
தொடரும்....
No comments:
Post a Comment