Wednesday, March 2, 2022

திருவேட்டக்குடி சுந்தரேஸ்வரர்

 இன்றைய கோபுரம் தரிசனம் கோடி புண்ணியம் பாவ விமோசனம்மிகவும் பழமையான தலம் திருவடி பணிந்து கோடி ஜென்ம வினைகள் தீர வேண்டிய நின்றேன்

 தர்மத்தின் வழி நடப்பவர்களுக்கு என்றும் ஸ்வாமி துணை நிற்பார் 🙏

சோழ நாடு தென்கரைத் தலங்கள்

112. திருவேட்டக்குடி

சிவஸ்தலம் பெயர்
திருவேட்டக்குடி
இறைவன் பெயர்
திருமேனி அழகர், சுந்தரேஸ்வரர்
இறைவி பெயர்
சௌந்தரநாயகி, சாந்தநாயகி
தேவாரப் பாடல்கள்
சம்பந்தர்
வண்டிரைக்கும் மலர்க்கொன்றை

எப்படிப் போவது

புதுச்சேரி மாவட்டத்தின் ஒரு பகுதியான காரைக்கால் வட்டத்தில் இத்தலம் இருக்கிறது. காரைக்காலில் இருந்து சுமார் 8 கி.மி. தொலைவில் இத்தலம் உள்ளது. காரைக்காலில் இருந்து தரங்கம்பாடி செல்லும் சாலை வழியில் வரிச்சக்குடி என்ற ஊர் வரும். அங்கிருந்து வலதுபுறம் கிழக்கே செல்லும் கிளைச்சாலையில் சுமார் 2 கி.மி. சென்றால் இத்தலத்தை அடையலாம்.

ஆலய முகவரி

அருள்மிகுதிருமேனி அழகர் திருக்கோவில்
திருவேட்டக்குடி
திருவேட்டக்குடி அஞ்சல்
காரைக்கால் வட்டம்
புதுச்சேரி மாவட்டம்
PIN - 609609
தொடர்பு : 9894051753 , 04368 - 265693

இவ்வாலயம் தினந்தோறும் காலை 6 மணி முதல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8-30 மணி வரையும் திறந்திருக்கும்.

தல வரலாறு

கோயில் அமைந்துள்ள பகுதி 'கோயில் மேடு ' என்றழைக்கப்படுகிறது.

 அருச்சுனன் வந்து தவஞ்செய்ய, இறைவன் வேட வடிவத்தில் வெளிப்பட்டு அருள் செய்ததாகப் புராண வரலாறு சொல்கிறது.

இத்தலத்தில் உமாதேவி மீனவர் குலத்தில் வந்து அவதரித்ததாகப் புராண வரலாறு கூறுகிறது.

தலப்பெயர்க் காரணம்: பாண்டவர்கள் வனவாசம் செய்த போது அர்ச்சுனன் தீர்த்த யாத்திரை மேற்கொண்டான். அவ்வாறு தீர்த்த யாத்திரை செய்த போது பல தலங்களில் சிவபெருமானை ஆராதித்தான். அப்படி வழிபட்ட தலங்களில் இத்தலமும் ஒன்று. அருச்சுனன் தவம் செய்த சமயம் இறைவன் வேட வடிவத்தில் வெளிப்பட்டு அர்ச்சுனனுக்கு அருள் செய்ததாக புராண வரலாறு சொல்கிறது. இறைவன் வேட வடிவத்தில் தோன்றியதால் இத்தலம் திருவேட்டக்குடி என்று பெயர் பெற்றது.

கோவில் அமைப்பு: கிழக்கு நோக்கிய ராஜகோபுரம் ஐந்து நிலைகளுடன் நம்மை வரவேற்கிறது. கோபுரத்தில் சிற்பங்கள் அதிகமாக காணப்படுகின்றன. கோபுர வாயில் கடந்து உள்ளே சென்றவுடன் ஒரு விசாலமான மண்டபம். அதில செப்புக் கவசமிட்ட கொடிமரம், முன்னால் கொடிமர விநாயகர், பலிபீடம், நந்தி மண்டபம் ஆகியவற்றைக் காணலாம். வெளிப் பிரகாரம் வலம் வரும் போது தென்மேற்குச் சுற்றில் சுந்தர விநாயகர் சந்நிதியும், மேற்குச் சுற்றில் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி சந்நிதியும் உள்ளன. வடக்குப் பிரகாரத்தில் புன்னை வனநாதர் சந்நிதி, மகாலட்சுமி சந்நிதி ஆகியவை உள்ளன. சம்பந்தருக்கும் சனி சந்நிதி உள்ளது.

கருவறை பிரகாரத்தில் நால்வர், பைரவர், சூரியன், சந்திரன் ஆகியோரின் சந்நிதிகளும், கோஷ்ட மூர்த்திகளாக தட்சினாமூர்த்தி, துர்க்கை ஆகியோரும் உள்ளனர். சிவன் மீனவர், வேடன் என இரண்டு வடிவங்களில் வந்து அருள் செய்த தலம் இது. கருவறையில் மூலவர் திருமேனி அழகர் என்கிற சுந்தரேஸ்வரர் லிங்க வடிவில் சதுர பீடத்துடன் ருத்ராட்ச பந்தலின் கீழ் கிழக்கு நோக்கி அருட்காட்சி தருகிறார். உயரமான பாணத்துடன் தீபாராதனை ஒளி திருமேனியில் தெளிவாகத் தெரிகின்றபடி காட்சி அளிக்கிறார். சிவனிடம் பாசுபத அஸ்திரம் பெற்ற அர்ஜுனர், கையில் சூலம், வில்லை வைத்துக்கொண்டு ருத்ராட்ச மாலை அணிந்தபடி உற்சவராக இருக்கிறார். விழாக்காலங்களில் இவருக்கும் பூஜைகள் நடக்கிறது.

அம்பாள் தனி சந்நிதியில் தெற்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சி அளிக்கிறாள். சாந்தமான கோலத்தில் இருப்பதால் இவளை "சாந்தநாயகி" என அழைக்கின்றனர். உற்சவத் திருமேனிகளில் வேடனாக வந்த தலமூர்த்தி, வேடுவச்சியாக வந்த அம்பாள் ஆகிய வேடரூபர், வேடநாயகி திருமேனிகள் சிறப்பானைவை. வேடரூபர் கையில் வில்லேந்திக் கம்பீரமாகக் காட்சி தருகிறார். இங்கு முருகனும் கையில் வில்லுடன் காட்சியளிக்கிறார். இவர் நான்கு கரங்களுடன் வள்ளி, தெய்வானையுடன் இருக்கிறார். ஒரே தலத்தில் சிவன், முருகன் இருவரையும் வில்லுடன் தரிசனம் செய்வது அபூர்வம்.

கடலாடு விழா: மாசிமக தினத்தன்று திருமேனியழகரான சுவாமி வேட மூர்த்தியாகக் காட்சி தந்து கடல் நீராடும் வைபவம் கடலாடு விழா என்ற பெயரில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இத்தலத்தில் உமாதேவி மீனவர் குலத்தில் மீனவப் பெண்ணாக வந்து அவதரித்தாக புராண வரலாறு கூறுவதால், இந்த கடலாடு விழாவை திருவேட்டக்குடி தலத்திற்கு அருகிலுள்ள கடலோர ஊர்களில் வாழும் மீனவர்கள் ஏற்று நடத்துகிறார்கள். மாசிமகத்தில் கோயிலுக்கு எதிரில் உள்ள தேவதீர்த்தத்தில் நீராடுவது சிறப்பானதாகச் சொல்லப்படுகிறது.

சிறப்புகள்

வேடனாக வந்த தலமூர்த்தி, வேடுவச்சியாக வந்த அம்பாள் ஆகிய (வேடரூபர், வேடநாயகி) திருமேனிகள் சிறப்பானவை; வேடரூபர், கையில் வில்லேந்திக் கம்பீரமாக காட்சித் தருகிறார்.

ஆண்டுதோறும் மாசி மகத்தன்று திருமேனியழகரான சுவாம வேடமூர்த்தியாகக் காட்சி தந்து கடல் நீராடுகிறார்; இது "கடலாடுவிழா" என்று சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

இத்தலத்தில் உமாதேவி மீனவர் குலத்தில் வந்து அவதரித்ததாகப் புராண வரலாறு கூறுவதால் இக்'கடலாடு விழா 'வை கடலோர ஊர்களில் வாழும் மீனவர்கள் ஏற்று நடத்துகிறார்கள்.

மாசிமகத்தில் இக்கோயில் தீர்த்தத்தில் நீராடுவது சிறப்பானதாகச் சொல்லப்படுகிறது.

தேவாரப் பாடல் ஒன்று 

 *பாடி மகிழ்வோம்!

 திருவேட்டக்குடி காரைக்காலுக்கு வடகிழக்கில் அமைந்துள்ள தலம்; மயிலாடுதுறைக்கு அருகே உள்ள பொறையார் என்னும் ஊரில் இருந்து காரைக்கால் செல்லும் வழியில் வரிச்சிக்குடி என்னும் இடத்திலிருந்து கிழக்கே  2கிமீ சென்றால் இத்தலத்தை அடையலாம்

தனஞ்செயனுக்கு இறைவன் வேட்டுவக் கோலத்தில் வந்து பாசுபதம் ஈந்த சிறப்பினைப் போற்றுந் தலம் ஆதலின் "வேட்டக்குடி" எனப்பட்டது

இவ்வாலயம் வங்கக் கடற்கரையில் கம்பீரமாக வீற்றிருக்கும் நெய்தல் நிலத்தலமாம்

திருஞானசம்பந்தப் பெருமான் பாடல்பெற்றத் தலமாம்" இவ்வூரில் உள்ள மீனவப் பெருங்குடி மக்கள் மீன்பிடித்து வந்து தொழில் செயயும் அழகை பாய்திமிலர் வலையோடு மீன்வாரிப் பயின்றெங்கும் காசினியிற் கொணர்ந்து அட்டும் கைதல்சூழ் கழிக்கானல் திருவேட்டக்குடி என்று குறித்துப் பாடுகிறார்கள் பிள்ளைப் பெருமானார்

பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையான் என்ற குறளுக்கு ஏற்ப யாவரும் மதிக்கப்பட வேண்டியவர்களே என்பதை வலியுறுத்துவதாய் இப்பதிகத்தின் இரண்டாம் பாடல் அமைகிறது

தண்தமிழ் பத்தும் வல்லார்கள் உண்டு உடுப்பு பெற்று வானவர்களினும் உயர்ந்த இடத்தைப் பெறுவர் என்று பதிகப்பலன் கூறும் வண்டிரைக்கும் என்று துவங்கும் பதிகத்தின் பாடல்கள் இவை

பண்: பஞ்சமம்

பாடல்

வண்டிரைக்கும் மலர்க்கொன்றை விரிசடைமேல் வரியரவம்
கண்டிரைக்கும் பிறைச்சென்னிக் காபாலி கனைகழல்கள்
தொண்டிரைத்துத் தொழுதிறைஞ்சத் துளங்கொளிநீர்ச் சுடர்ப்பவளம்
தெண்டிரைக்கள் கொணர்ந்தெறியுந் திருவேட்டக் குடியாரே.

பாய்திமிலர் வலையோடு மீன்வாரிப் பயின்றெங்கும்
காசினியிற் கொணர்ந்தட்டுங் கைதல்சூழ் கழிக்கானல்
போயிரவிற் பேயோடும் புறங்காட்டிற் புரிந்தழகார்
தீயெரிகை மகிழ்ந்தாருந் திருவேட்டக் குடியாரே.

தோத்திரமா மணலிலிங்கந் தொடங்கியவா னிரையிற்பால்
பாத்திரமா வாட்டுதலும் பரஞ்சோதி பரிந்தருளி
ஆத்தமென மறைநால்வர்க் கறம்புரிநூல் அன்றுரைத்த
தீர்த்தமல்கு சடையாருந் திருவேட்டக் குடியாரே.

பொருள்

வண்டுகள் ஆரவாரிக்கும் கொன்றை மாலையை விரிந்த சடையின்மேல் அணிந்து, வரிகளையுடைய பாம்பைக் கண்டு பயத்தால் ஆரவாரிக்கும் சந்திரனைச் சடையில் சூடியுள்ள சிவ பெருமானின் வீரக்கழல்கள் அணிந்த திருவடிகளைத் தொண்டர்கள் ஆரவாரித்துப் போற்றி வணங்க, விளங்குகின்ற ஒளியையுடைய கடலிலுள்ள சுடர்போல் செந்நிறமான பவளத்தை அலைகள் கொணர்ந்து எறியும் திருவேட்டக்குடி என்னும் திருத்தலத்தில் அவர் வீற்றிருந்தருளுகின்றார்

வலைஞர்கள் பாய்ந்து செல்லும் படகுகளில் , வலையுடன் கடலில் எப்பக்கமும் திரிந்து வலைவீசி மீன்களைப் பிடித்து வாரி தரைக்குக் கொண்டு வந்து குவிக்கும் தாழை சூழ்ந்த கழியுடைய சோலை விளங்க , நள்ளிரவில் பேய்க் கூட்டங்களோடு சுடுகாட்டில் கையில் நெருப்பேந்தி நடனம் ஆடும் சிவபெருமான் திருவேட்டக்குடி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருள்கின்றான்

வழிபாடு செய்வதற்காக மணலில் இலிங்கத்தை அமைத்து , தாம் மேய்க்கும் பசுக்கூட்டங்களின் பாலைப் பாத்திரத்தில் பொருந்தக் கொண்டு , அபிடேகம் செய்து வழிபட்ட சண்டேசுரர்க்கு மேலான சோதிவடிவை அருள்புரிந்தவன் சிவபெருமான் , தனக்கு அன்பர் என்று வேதங்களில் வல்ல சனகாதி முனிவர் நால்வர்க்கும் அன்று அறம் உரைத்தவன் சிவபெருமான் . அப்பெருமான் புனித தீர்த்தமாகிய கங்கையைச் சடையிலே தாங்கித் திருவேட்டக்குடி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றான் .

....சிவ சிவ ஓம் நமசிவாய சிவயநம திருச்சிற்றம்பலம்



No comments:

Post a Comment