Friday, March 11, 2022

எண்ணப்பறவை_48

 எண்ணப்பறவை_48

ஐஜி ஆஃபீஸ்.  மாலை ஐந்து மணி.  ட்யூட்டி முடிய அரை மணி நேரம்.  ப்ரியாவும் அமுதாவும் அமுதாவின் ஸீட்டில் பேசிக் கொண்டிருந்தார்கள்.

சட்டென்று ப்ரியா அமுதாவின் தோளைத் தட்டுகிறாள்.  எதற்கு என்று கேட்பதற்குள் அரவிந்தும் அனந்த கிருஷ்ணனும் எதிரே. ப்ரியா சிரிக்கிறாள்.

அமுதாவும் ஒரு வித படபடப்புடன் சிரிக்கிறாள்.

'ஓ.  ப்ரியா மேடம்.  நீங்களும் இங்கதான் இருக்கீங்களா?  சார் சௌக்யமா?'

'ஃபைன் அரவிந்த்.  நேத்திக்குதான் சொன்னா அமுதா விவரமா எல்லாத்தையும்.  ரொம்ப சந்தோஷம்.  என் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.  வாங்க சார், உட்காருங்க இந்த ரெண்டு ச்சேர்ல.  கவர்ண்மென்ட் நாற்காலிங்க.  கை உடஞ்சு கால் ஒடஞ்சு இருக்கும்.  ஜாக்ரதையா உட்காரணும்.'

'இப்படியாங்க அரவிந்த பயமுறுத்தறது.  சொல்லாம கொள்ளாம வந்ததுக்கு கைய கால ஒடச்சி அனுப்பற ப்ளானோட இருக்கீங்க போல இருக்கு.'

கல கலப்பின் சுருதிப் பெட்டியை அனந்த கிருஷ்ணன் துவக்கினான்.

'அன்னிக்கு உங்காத்துக்கு வந்தேன்.  பவானி மேடம் நல்லா இருக்காங்களா?'

'அவளுக்கு என்ன கொறச்சல்?  நல்லா இருக்கா.'

அமுதாவின் மனதில் பல பட்டாம்பூச்சிகள் பட படத்துக் கொண்டிருந்தன.  'ஏன் இப்படி திடு திப்புனு?  என்ன பண்றது இப்போ?'

'அமுதா.  பயப்படாதீங்க.  அரவிந்த் உங்கள பார்த்து கொஞ்சம் பேசணும்னு ஆசைப் பட்டான்.  நேந்திலேந்தே நச்சரிப்பு.  உங்களுக்கு ஆட்சேபணை இல்லேன்னா ஆஃபீஸ் விட்டோண்ண எதுத்தாப்புல இருக்கற உழைப்பாளர் சிலைக்கு பக்கத்துல உள்ள பீச் லான்ல கொஞ்சம் உட்கார்ந்து பேசலாம்.'

'என்ன விஷயம்?'

'பயப்படாதீங்கோ.  ஒரு பத்து நிமிஷம்.  அவ்வளவுதான்.'

'ஏய், போடி.  ஏதோ தனியா பேசணும்னு சொல்றாரோன்னோ?  பயமா இருந்தா நானும் வரட்டுமா?'

'வா.  ப்ரியா.  பட படங்கறது.  நீயும் வர்ரதா இருந்தா வர்ரேன்.'

'சார்.  சித்த பட படப்பா இருக்கான்னு நெனைக்கறேன்.  ஒரு பத்து நிமிஷம்.  நானும் என் ஸீட்டுக்கு போய் ரெடியாயிட்டு வரேன்.'

போனவளால் சும்மா இருக்க முடியுமா?  கண்ணில் பட்ட நாலு பேரிடம், 'அமுதாவ கட்டிக்கப் போறவன் வந்திருக்கான் பாரு.  நாளைக்கு மீதி பேசிக்கலாம்.  நான் சொன்னதா சொல்லாம நைஸா பார்த்துட்டு வாங்க'.

மாப்பிள்ளை தரிசனத்திற்காக அமுதா ஸீட்டுக்கு வந்து, 'என்ன அமுதா, வீட்டுக்கு கிளம்பியாச்சா இல்லாட்டி பீச் சினிமா ப்ரொக்ராமா?'

'நேர வீடுதான்.'

நமுட்டுச் சிரிப்போடு நகர்ந்தார்கள் அமுதாவின் அசட்டுச் சிரிப்பை பெற்றுக் கொண்டு.

நால்வரும் பீச் லானில் அமர்ந்தார்கள்.  பீச்சுக் காற்றின் அசைவில் அரவிந்திடமிருந்து வந்த அந்த மைல்டான ஸென்ட் வாசம் ஓரளவிற்கு வந்தது.

அரவிந்தே ஆரம்பிக்கிறான்.

'சாரி.  உங்கள தொந்தரவு செஞ்சதுக்கு.  உங்க அப்பா சொல்லியிருப்பார்னு நெனைக்கிறேன்.  நீங்க எங்க அம்மாவ பார்க்கறதுக்கு முன்னாடி கொஞ்சம் உங்க கிட்ட பேசணும்னு தோணித்து. அதான்.'

இரு முழங்கால்களையும் மடக்கி ஒரு சேர கழுத்துப் பக்கத்தில் வைத்துக் கொண்டு தரையையே பார்த்துக் கொண்டிருந்த அமுதா எதுவும் பேச முடியாமல் தவித்துக் கொண்டிருந்தாள்.

'அமுதா.  கொஞ்சம் ஃப்ரீயா இருங்கோ.  நல்ல பையன்.  பயப்படாதீங்க.  ப்ரியா மேடம், நாம ரெண்டு பேர் வேணா பத்தடி தள்ளி போகலாமா?'

அவர்கள் கண் பார்வையில் சற்றுத் தள்ளிப் போனதும் அமுதாவின் வெட்கம் ஏறி கன்னம் சிவந்து பட படப்பு அதிகரித்து.....

'நான் சம்மதம் சொல்லிட்டேன்.  உங்களுக்கும் சரிதானே?'

மௌனம்.  ஆனால் கால் கட்டைவிரல் பூமியில் அரை வட்டம் அடித்து சம்மதம் சொன்னது.  புரிந்து கொண்டான்.

'அன்னிக்கு உங்காத்துக்கு வந்தபோதே சொன்னேன் இல்லையா?  எனக்கு புது வேலை கெடச்சிருக்கு.  நேத்திக்கு ஆர்டர் வந்துடுத்து.  மூணு மாசம் அமுல் கம்பெனி மெட்ராஸ் ஆஃபீஸ்ல வேலை.  அதுக்கப்பறம் குஜராத் போகணும்.  என்னோட அம்மா உடனே கல்யாணம் நான் பண்ணிக்கணும்னு ஒத்த கால்ல நிக்கறா.  குஜராத் போகும்போது உங்களையும் அழச்சிண்டு போகணும்னு சொல்றா.  உங்களுக்கோ கவர்மெண்ட் உத்யோகம்.  அதான் உங்க மனசுல இருக்கறதையும் சொல்லிட்டா அதுக்கேத்த மாதிரி....'

'புது வேலைய ஏத்துக்காம இப்ப இருக்கற வேலையிலேயே இருக்கலாமே?  நானும் வேலைய விட வேண்டிய அவசியம் இருக்காதே?  உங்க அம்மாவுக்கும் புது இடம் அது இதுன்னு கவலை இல்லாம இருக்கலாமே.'

'நானும் நீங்க சொல்ற ஆங்கிள்ல யோசிச்சேன்.  வாய்ப்பு கிடைக்கும் போது பயன் படுத்திக்கணும்னு நான் நெனைக்கிறேன்.  இப்ப நான் வாங்கற சம்பளத்த விட மூணு மடங்கு புது உத்யோகத்துல.  தவிர, நல்ல ஸ்கோப் உள்ள உத்யோகம் மாதிரி தெரியறது.  கிட்டத் தட்ட கவர்மெண்ட் உத்யோகம் மாதிரிதான்.  அதனால எனக்கு புது வேலைய ஏத்துக்கணும்னு தோணறது.  எனக்கு நீங்க வேலை பார்க்கணுங்கற அவசியம் இல்ல.  சமாளிச்சுடலாம் என் சம்பளத்துலேயே.  நீங்க கவலைப் பட வேண்டாம்.'

'நீங்க சொல்லறது புரியறது.  நீங்க இவ்வளவு தூரம் ஓபனா உங்க நிலைமையை சொல்லும்போது, நானும் கொஞ்சம் ஃப்ரேங்கா பேசலாம்னு நெனைக்கிறேன்.'

'சொல்லுங்கோ.  தாரளமா.  மனசு விட்டு பேசினாதானே புரிஞ்சுக்க முடியும்.'

'எங்க அப்பாவுக்கு என்னோட அக்காவுக்கு கல்யாணம் பண்ணிட்டு ரெண்டு வருஷம் கழிச்சுதான் எனக்கு கல்யாணம் பண்ணனும்னு தீர்மானிச்சிருந்தார்.  ஆனா தெய்வ சங்கல்ப்பமா நீங்க வந்ததால ரெண்டு கல்யாணத்தையும் ஒண்ணா பண்ண முயற்சி செய்யறார்.  எவ்வளவு தூரம் சாத்தியம்னு தெரியல.  அப்படியே கடன ஒடன வாங்கி ரெண்டையும் முடிச்சாலும் அப்பாவோட சுமையை நான் ஓரளவு ஏத்துண்டுதான் ஆகணும்னு எனக்கு தோணறது.  அது வரைக்கும் நான் வேலைக்கு போயே ஆகணும்.  நான் உங்க அம்மாவ பார்க்கும்போது இதையெல்லாம் சொல்லணும்னு தான் நெனச்சிண்டிருந்தேன்.  நல்ல வேளை உங்களோட இதப் பத்தி பேச சந்தர்ப்பம் கெடச்சது.'

'நாங்க தான் கல்யாணத்த படாடோபமா நடத்த வேண்டாம்.  எதுவும் வேண்டாம்.  ஸிம்பிளா நடத்தினா போதும்னு சொல்லிட்டோமே.'

'தப்பா நெனைக்காதீங்கோ.  உங்களுக்கு பரந்த மனப்பான்மை இருக்கலாம்.  அதுக்காக எங்க அப்பாக்கு தன் குழந்தைகளுக்கு இப்படி பண்ணனும் அப்படி பண்ணனும்னு ஆசை இருக்க கூடாதா என்ன?  அவர் பட்ஜெட் என்ன ஏதுன்னெல்லாம் எனக்கு தெரியாது.  ஆனா எது எப்படியானாலும் எங்க அப்பாவுக்கு கல்யாணத்துக்கு அப்புறம் நான் சப்போர்ட் பண்ணியே ஆகணும் ஃபினான்ஷியலாவும்.'

'இதுக்கெல்லாம் எங்க அம்மா சம்மதிப்பாளா?'

'அத நீங்கதான் சொல்லணும்.  எங்க அம்மா செத்துப் போனதுக்கப்பறம் எங்க அப்பாவுக்கு எங்களை விட்டா யார் இருக்கா சொல்லுங்கோ பார்ப்போம்?'

'நீங்க சொல்றதை பார்த்தா, நம்ம கல்யாணத்துக்கு நீங்க சம்மதம் கொடுக்கறதுக்கே கண்டிஷன்ஸ் போடுவேள் போல இருக்கே?  நான் ஏதோ உங்களுக்கும் என்னை பிடிச்சிருக்கும்.  கல்யாணம் சீக்கிரம் பண்ணிண்டு குஜராத் போகலாம்னு நெனச்சிண்டிருந்தேன்.'

'சார், ஒண்ணு ப்ளெயினா சொல்லட்டுமா?  உங்கள என்னிக்கு அபிராமி அக்கா bபேங்குல பார்த்தேனோ அன்னிக்கே உங்கள பிடிச்சிடுத்துங்கறது உண்மை.  ஆனாலும் கல்யாணம்னு வரும்போது பரஸ்பரம் ஒவ்வொருத்தரும் நிலைமைய ஒருத்தர் புரிஞ்சிண்டு சம்மதிக்கறதுதான் நல்லது.  உங்களுக்கு உங்க அம்மா எப்படி முக்கியமோ அதே மாதிரி எங்க அப்பாவோட கஷ்டங்களையும் நாங்க அனுசரிச்சு போகணும் இல்லையா?'

'அப்ப நான் புது வேலையை ஏத்துக்க கூடாதுன்னு நெனைக்கறேளா?'

'நான் அப்படி சொல்லலையே.  ஒரு ஸஜஷன் சொன்னேன்.  அவ்வளவுதான்.  உங்களுடைய ப்ராஸ்பெக்ட் உங்களுக்கு முக்கியமா இருக்கலாம்.  அது உங்களுக்குத் தானே தெரியும்?'

அவள் பேசப் பேச அரவிந்தின் முகமும் மனமும் வாடிக் கொண்டுதான் இருந்தது.  ஒரு கணம் மேற் கொண்டு பேசிக் கொண்டிருந்தால் திருமணம் தடை பட்டு விடுமோ என்று கூட அச்சம் கொண்டிருந்தான்.

இருந்தாலும் பேச வந்தாகி விட்டது.  மனதில் எழும் கேள்விகளையும் சந்தேகங்களையும் கேட்டு விடலாமே என்றும் தோன்றியது அவனுக்கு.

'நீங்க என் கிட்ட பேசறத பார்த்தா, நீங்க உங்க வேலைய விட்டுட்டு என் கூட குஜராத் வருவேளாங்கற சந்தேகமே வர்ரதே?'

'கல்யாணத்துக்கு அப்பறம் என் அப்பாவோட கடன் சுமை இறங்கர வரைக்குமாவது நான் வேலைக்கு போய்தான் ஆகணும்.  உங்க சம்பளத்துல அத கேட்கறதுல ஞாயமும் இல்ல, ஏன், சாத்தியம் கூட இருக்குமான்னு தெரியல.  சாரி, ஐ அம் bப்ளண்ட்.'

அவள் வெளிப்படையா bபோல்டாக இப்படி பேசுவாள் என்று எதிர் பார்க்காத நிலையில் அவனுக்கு குழப்பமே மிஞ்சியது.

'என்னடா, கிளம்பலாமா?  பேசி முடிச்சாச்சா? லேட் ஆகறது பார்.  இந்த மேடமும் தாம்பரம் ஒரு கோடி போகணும் பார்.'

'சரி ஏக்கேண்ணா.  கிளம்பலாம்.  எனக்காக நீங்க வந்து ரெண்டு வார்த்தை பேசினதுக்கு ரொம்ப த்தேங்க்ஸ்.  நீங்க சொன்னதையெல்லாம் அம்மா கிட்ட பேசறேன்.  பார்க்கலாம்.  பை.'

கிளம்பினார்கள்.  இருவருக்கும் சம்பாஷணைகள் உறுத்திக் கொண்டு தான் இருந்தன.


தொடரும்....

No comments:

Post a Comment