எண்ணப்பறவை_47
'வாடா வா. எல்லாம் நல்லபடியா போச்சோண்ணோ?'
'நல்லபடியா நடந்தது விசு. நீ வந்திருக்கலாம். எனக்கு இன்னும் தெம்பா இருந்திருக்கும்.'
'நான்தான் சொன்னேனே. ஆத்துல கொஞ்சம் வேல இருந்தது. ஆஃபீஸ் வரயோண்ணோ. நம்மாத்துலேயே டிஃபன் சாப்டலாம் இன்னிக்கு. ரெண்டு பேரும் ஒண்ணா கிளம்பலாம். குளிச்சிட்டு பூஜை பண்ணிட்டு வா ஆத்துக்கு.'
'அடியே செல்லம். GS வந்திருக்கான் பாரு. நம்மாத்துல டிஃபன் சாப்ட சொல்லியிருக்கேன்.'
'வாங்கோ அண்ணா. பொண்ணு கல்யாணம் பக்கத்துல வந்துடுத்து போல இருக்கே. ரொம்ப சந்தோஷம்.'
'எல்லாம் உங்க ரெண்டு பேர் ஆசீர்வாதம் தான் கொழந்தைகளுக்கு.'
'நல்ல குழந்தைகள். நல்ல மனசு உங்களுக்கும் வாலாம்பாளுக்கும். பகவான் கை விட்டுடுவாரா என்ன? எல்லாம் நல்ல படியா இருக்கும். டிஃபன் ரெடி பண்றேன். நீங்களும் ரெடியாயிட்டு வாங்கோ. சாப்டுண்டே பேசலாம்.'
விஸ்வநாதன் செல்லம்மாள் தம்பதியினரின் க்வாட்டர்ஸ் தாண்டிதான் அவர் ஆத்துக்கு போகணும். இவருடைய வாலுவும் அவருடைய செல்லமும் அப்படி ஒரு நட்பு. வாலு போனபோது செல்லம் கதறியது இன்னும் சொல்லி மாளாது.
ஆத்துக்கு வருகிறார். கொஞ்சம் பிரயாண களைப்பைப் போக்க பதினைந்து நிமிஷ கோழித் தூக்கம். பிறகு குளித்து விட்டு சாமி அலமாரியை துடைத்து வழியில் வாங்கிண்டு வந்த மல்லிகைப்பூ சரத்தை உதிர்த்து ஒவ்வொரு சாமி படத்தின் தலையிலும் வைக்கிறார், மந்திர முணுமுணுப்புடன்.
விசு ஆத்துக்கு வரும்போது எட்டரை. ஒன்பதரைக்கு இருவரும் கிளம்ப வேண்டும்.
ராமன் குமுதாவை பெண் பார்த்த தின நிகழ்வுகள் மற்றும் மறுநாள் அவர்களிடம் சென்று பேசியதையும் இருவருக்கும் கணபதி சுந்தரம் கூறுகிறார்.
'ஆஹா... நாங்க ரெண்டு பேரும் ரொம்ப மிஸ் பண்ணிட்டோம் போல இருக்கே. குமுதாக்கு ஏத்த ராமன் போல இருக்கே!'
'அப்புறம்...... இன்னொரு சமாச்சாரம். அமுதாவுக்கும் ஒரு பையன பார்த்தாச்சு.'
'அட அட அட... இது எப்போ? எப்படி கிடச்சுது வரன்? என்ன பண்றான் பையன்? நல்ல குடும்பமா? எந்த ஊர்க்காரா?...'
ஆர்வமிகுதியால் கேள்விகளை அடுக்கிக் கொண்டே போனாள்.
காதல் கத்திரிக்காயைத் தவிர வரனைப் பற்றிய விவரங்களை கூறுகிறாள்.
'குமுதாவ பொண் பார்க்க வந்தவரோட தங்கைக்கு ரொம்ப வேண்டியப் பட்டவாளாம். ரொம்ப கம்பெல் பண்ணி அழச்சிண்டு போனா அவளும் அவ ஆத்துக்காரரும். அவாத்து மாமியும் நல்லவளா தெரியரா.'
'அப்புறம் என்ன GS. ஒரே சத்திரத்துல ரெண்டு மோளத்தையும் கொட்டிட்டா போச்சு.'
'நீ ஈஸியா சொல்லிட்ட விசு. இருக்கற பணம் காசு பாத்திரம் பண்டம் எல்லாமே குமுதா கல்யாணத்துக்கு தான் சரியா இருக்கும். ஆசை இருக்கு தாசில் பண்ண, அதிர்ஷ்டம் இருக்கு கழுத மேய்க்கன்னு வசனம் சொல்லுவாளே. அந்த நிலையில நான் இருக்கேன்.'
'புரியறது. அப்ப என்னதான் செய்யப்போற. இந்த காலத்துல குழந்தைகளுக்கு நல்ல வரன்களா கெடைக்கும் போதே முடிச்சுடணும். ரெண்டு மாப்பிள்ளையாத்துலேயும் தான் டிமாண்ட் ஒண்ணும் பெரிசா வைக்கலையே. ஏதோ சமாளிச்சு ஓட்டேண்டா.'
'குமுதா கல்யாணத்த முடிச்சிட்டு ரெண்டு வருஷம் கழிச்சி அமுதாக்கு பண்ணலாம்னு எண்ணின்டிருந்தேன். இப்ப என்னடான்னா .... ஒரே குழப்பமா இருக்கு.'
'ஆமாம். உனக்கு வேற கடன் கிடன் வாங்கறது பிடிக்காது. பெரும்படி சமாச்சாரம் இது. சரி சாயந்திரமா ரெண்டு பேருமா ஒக்காந்து ஏதாவது யோஜன பண்ணுவோம்.'
'ஏன் மாமா? வாலாம்பா குழந்தகள் கல்யாணத்துக்கு வாங்கி வெச்ச பாத்திரமெல்லாம் இருக்கு இல்லையா?'
'ம்ம்ம்... மச்சுல எல்லாத்தையும் போட்டு வெச்சிருக்கேன். என்ன இருக்கு ஏது இருக்கு எந்த லக்ஷணத்துல இருக்குன்னு கூட தெரியாது. அவளே போயிட்டா.. எனக்கு அதுல ஆர்வம் இல்லாம போயிடுத்து மாமி.'
'நீங்க ஒண்ணு செய்யுங்கோ. சாயந்திரம் ஆஃபிஸ் விட்டு வந்தோண்ண எல்லாத்தையும் இறக்கி வையுங்கோ. எங்காத்து படவாவ அனுப்பறேன் உதவிக்கு. எதெல்லாம் புதுசு பண்ணலாம்னு பார்க்கலாம். எனக்கென்னவோ வாலாம்பா நிறைய வாங்கி சேமிச்சிண்டு வந்தா... நன்னா தெரியும்.'
'நீங்க பாத்திரங்கள சொல்றேள். அதுக்கும் மேல எவ்வளவோ இருக்கே. அதுக்கெல்லாம் எங்க மாமி நான் போவேன் சொல்லுங்கோ?'
'நல்ல வரன்கள கொடுத்த பகவானுக்கு நடத்தி வைக்கத் தெரியாதா என்ன? இப்பவே சோர்ந்து போகாதீங்கோ. கணக்கு போட்டு பார்க்கலாம். சரிப்பட்டு வரலைனா அவா கிட்ட நிச்சயதார்த்தம் மாதிரி பண்ணிண்டு டைம் வாங்கிக்கலாம்.'
'ஏண்டி செல்லம். உனக்கு ஏதாவது இருக்கா. அவனோ ஒரு கல்யாணத்துக்கே அவன் கிட்ட இருக்கற பணம் பத்தாதுன்னு சொல்றான். நீ என்னவோ பாத்ரம் புதுசு பண்ணினா கல்யாணம் பண்ணிடலாம்னு தெம்பு கொடுத்துண்டிருக்க.'
'ஏய், விடுடா. உன் ஆம்படையா ஏதோ எங்காத்து மேல இருக்கற அக்கறையில சொல்றா. அதுக்கு போய் மாமிய கிண்டல் பண்ணிண்டு.'
'சரிடா GS. என் பொண்ணு கல்யாண கணக்குகள் எல்லாத்தையும் ஒரு நாப்பது பக்க நோட்டுல எழுதி வெச்சிருக்கேன். அதையும் வெச்சிண்டு மூணு பேருமா பேசுவோம். எப்படி சமாளிக்கலாம்னு பார்ப்போம்.'
'சிக்கனம் சிக்கனம்னு குழந்தைகளோட சந்தோஷங்கள கொறச்சிடக் கூடாது. அதையும் பார்க்க வேண்டியிருக்கு. வாலுவும் குழந்தைகள் கல்யாணத்த அப்படி பண்ணனும் இப்படி பண்ணனும்னு கோட்டை கட்டிண்டிருந்தா. அதுக்கும் கொறை வந்துடக் கூடாது. நாமெல்லாம் பரம ஏழையில்லையே. கௌரவத்த காப்பாத்திண்டு காலத்த ஓட்டற மிடில் க்லாஸ் இல்லையா!'
கணபதி சுந்தரத்தின் தோள் மீது கை போடுகிறார் விஸ்வநாதன்.
'அமைதியா இருடா. டைம் ஆச்சு பாரு. ஆபீஸ் போயிட்டு சாயந்திரம் பேசிக்கலாம். எல்லாம் உன் நல்ல மனசுப் படியே நடக்கும்டா. நானெல்லாம் எதுக்கு இருக்கேன்.'
'ஆமாம். இப்படித்தான் நான் உன் பொண்ணு கல்யாணத்தும்போது சொன்னேன். துரும்ப கூட கிள்ளி போடல.'
'ஏண்டா, அப்ப எந்த நிலையில இருந்த நீ. மாமிய பறிகொடுத்துட்டு ... வேணாம். எதுக்கு அதெல்லாம் இப்ப. பட்ஜெட் போன்றோம். ரெண்டு கல்யாணத்த ஜாம் ஜாம்னு முடிக்கறோம்.'
கிளம்புகிறார்கள் அலுவலகத்திற்கு.
தொடரும்....
No comments:
Post a Comment