“நன்னா லோகத்துக்கு பாடிண்டு க்ஷேமமா இரு...” என்று ஆசி வழங்கினார் மகா பெரியவா
வாழ்க்கையிலும் சரி, சங்கீதத்திலும் சரி என் சரித்திரம் ‘குடிசை’யிலிருந்துதான் ஆரம்பமாச்சு... ஆண்டவன் அருளும், ரசிகர்களின் ஆதரவும் ஓரளவு ‘மாடி’க்கு உயர்த்திச்சு. ஆனா என் மனசு மட்டும், ஒவ்வொரு கலைஞனும், ‘கோபுரமா’ நினைச்சுப் பெருமைப்படத்தக்க ஒரு பெருமைக்காக ஏங்கித் தவிச்சுக் கொண்டிருந்தது. அந்தக் கோபுர நிழல் என் மீது படாதா என்று ஏங்கிக்கொண்டிருந்தேன். சமீபத்தில் அந்தப் பாக்கியம் எனக்குக் கிடைத்தது” என்று சிலிர்ப்போடு அந்தச் சம்பவத்தை ஆனந்த விகடனுக்கு சுமார் 50 வருடங்களுக்கு முன் அளித்த ஒரு பேட்டியின் போது நினைவுகூர்ந்தவர், இசை மேதை மறைந்த மதுரை சோமு. இவருக்கு இது நூற்றாண்டு வருடமும் கூட (1919-2019) ஒரு மே மாதம் காஞ்சிபுரத்திலிருந்து ஒரு நண்பர் மதுரைக்கு வந்து சோமுவை காஞ்சிபுரம் அழைத்துச் சென்றார். இவர் போன போது, புதுப் பெரியவர் பூஜை செய்துகொண்டிருந்தார். சோமு, மெய் உருகப் பாடினார். பாடி முடித்ததும் பெரிய சால்வை அவருக்குக் கிடைத்தது. ஒரு பெரிய சான்றிதழும், ‘கந்தர்வ கானமணி’ என்ற பட்டமும் மடத்தின் சார்பில் கொடுத்தார்கள்.
பின்னர், மகா பெரியவா தரிசனத்துக்குச் சோமுவை அழைத்துப் போனார்கள்.
தென்னந்தோப்பில், கயிற்றுக் கட்டிலில் படுத்தபடி பண்டிதர் களுடன் பேசிக் கொண்டிருந்தார் மகாபெரியவா.
அங்கே பாடவேண்டும் என்கிற நீண்ட நாள் கனவுடன் நின்று கொண்டிருந்தார் சோமு.
“நன்னா லோகத்துக்கு பாடிண்டு க்ஷேமமா இரு...” என்று ஆசி வழங்கினார் மகா பெரியவா.
“ஒரு பதம் பாடு...” என்று உத்தரவும் பிறந்தது.
மதுரை சோமு பதம் பாடி விட்டுத் தொடர்ந்து ஒரு திருக்குறளும் பாடினார்.
“அன்னிக்கு எனக்கு ஜன்மம் சாபல்யம் அடைஞ்சுட்ட மாதிரி ஓர் உணர்ச்சி. தெய்வ சந்நிதானாத்துல பாடிட்டோம்கற மன நிறைவு. அந்த நிறைவோட அன்னிக்கு வண்ணாரப் பேட்டைல ராத்திரி 12 மணியிலிருந்து காலை 5 மணிவரை பாடினேன். அன்றைய பாட்டு ஏதோ தெய்விகப் பாட்டாவே எனக்குப் பட்டுது...” என்று சொல்லி பூரித்திருக்கிறார் மதுரை சோமு.
ஜய ஜய சங்கர
ஹர ஹர சங்கர.
No comments:
Post a Comment