எண்ணப்பறவை_46
அமுதா குமுதாவிடம் சந்தோஷ உணர்வுகளை பரிமாறி விட்டு திருச்சி கிளம்புகிறார் மறுநாள்.
ஒரு புறம் நல்ல குடும்பங்களில் சம்பந்தம் ஏற்படப் போகிறது என்ற ஆனந்தம் மேலோங்கி இருந்தாலும் ஒரு வித பயம் இருந்து கொண்டே தான் இருந்தது அவருக்கு.
ரயிலில் ஏறிய பின் ஒரு பேப்பரை எடுத்துக் கொண்டு என்னென்னவோ பட்ஜெட்டெல்லாம் போட்டுப் போட்டு பார்க்கிறார். மனம் திருப்தி அடையவில்லை.
'அமுதா விஷயம் குமுதா கல்யாணம் முடிஞ்சு ஒரு வருஷத்துக்கு பின்னாடி தெரிஞ்சுருக்கலாம்.'
'அவாளுக்கு பெரிய மனசு இருக்கலாம். அதுக்காக நம்ம குழந்தைகள் கல்யாணத்த எப்படியோ நடத்திட முடியுமா?'
'இத்தன வருஷமா பெல் கம்பெனில வேல பார்த்துண்டு வரோம். ஒருத்தருக்கு பத்திரிக்கை கொடுத்து ஒருத்தருக்கு கொடுக்காம இருந்தா நன்னாவா இருக்கும்.'
'பவானி அம்மா வைக்கற ஒரே கண்டிஷன் திருச்சிலே கல்யாணம். குமுதா கல்யாணத்த அங்க வெச்சிண்டா அமுதா கல்யாணத்த எங்க வைக்கறது? அமுதா ஆஃபீஸ் காராள்லாம் வரணும்னா மெட்ராஸ்ல வைக்கறதுதான உசிதம்.'
இப்படியெல்லாம் சிந்தனைகள் சென்று கொண்டிருந்த வேளையில் அவரது 'வாலு', அதான் அவருடைய வாலாம்பாளும் சேர்ந்து கொள்கிறாள்.
ஒரு கணம் அமுதா குமுதாவின் அம்மா அவரை உலுக்குகிறாள். கண்ணீர் வெளியே வந்த்து என்னவோ கொஞ்சம்தான். ஆனால் கண்கள் நெஞ்சுக்குள் அனுப்பியது ஒரு நீர்வீழ்ச்சி.
இதயம் முழுவதையும் கண்ணீர் நனைத்து விட்டால் இடமின்றி வெளியேறி அமைதியை கொடுத்து விடும். அந்த நிலை வரவேண்டுமென்றால் பழைய நாட்களை அசைபோட வேண்டும். அவ்வப்போது உடல் குலுங்கும். ஏற்றுத்தான் ஆகவேண்டும்.
என்ன செய்ய? இறைவன் ஆட்டிப் படைத்தே ஆறுதலைத் தருகிறான் தேறுதலுக்கு வகை செய்கிறான்.
'ஏன்னா, ரெண்டு பொண்களும் பெரியவாளாயிட்டா ஞாபகம் இருக்கோன்னோ?'
'எனக்கென்ன கவலை? அதான் நீ இருக்கியே. வரன்கள கொண்டு வர்ரது தான் என் பொறுப்பு. மீதி எல்லாம் என்னோட வாலு சொல்ல சொல்ல சொல்ல செஞ்சுடுவேனாக்கும்.'
'போதும் போதும். வாலு வாலுன்னு கூட்டுண்டே என் வாலப் புடிச்சிண்டே அலையாதீங்கோ.'
'வாலு, உத்தேசமா எவ்வளவு வேணும் கல்யாணத்துக்கு?'
'ரெண்டு குழந்தைகளும் சமத்து. நன்னா படிச்சிருக்கா. அவா கல்யாணத்த நன்னா ஜாம் ஜாம்னு பண்ணனும்னா. நல்ல வரன்களா கெடச்சோண்ண முன்ன பின்ன செலவானாலும் ஒப்பேத்தணும்.'
'அட, இங்க பாருடா. வாலு பயங்கர பட்ஜெட்டோட இருக்கா.'
'ஜன்மத்துல ஒரு தடவ நடக்கிற சந்தோஷம் ஆயுசு பூரா ஞாபகத்துல இருக்கும்.'
'வாலு, நம்ம கல்யாணத்த அப்படித்தான் அடிக்கடி நெனச்சிண்டிருக்கியோ?'
'போதுமே நம்ம கல்யாணத்த எதுக்கு இப்ப இழுக்கறேள். எங்கப்பா குருக்கள். அஞ்சு பொண்ணு ரெண்டு பையன். ஏதோ வரன் எப்படியோ கல்யாணம்னு இருந்தா. நீங்களா வந்து எங்கப்பா கிட்ட வந்து மாட்டினேள். மடக்கி போட்டுட்டார். நீங்களும் எதுவும் கேட்கல, அவருக்கும் ஒண்ணும் கொடுக்கற சக்திலே இல்ல.'
'எங்காத்துல அத கொடு இத கொடுன்னு கேட்டிருந்தா இந்த வாலு கெடச்சிருப்பாளா?'
'அசடு வழிஞ்சது போதும். பொண்கள் கல்யாணத்தப் பத்தி பேசுவேள்னா நம்ம கல்யாணத்த பத்தி பேசிண்டிருக்கேளே?'
'சரி, சொல்லு. நானோ முழு சம்பளத்தையும் உன் கிட்ட கொடுத்துண்டு வரேன். கொழந்தைகளோட கொழந்தையா உனக்கு ஒரு இன்னொரு கொழந்த. நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து பட்ஜட் போடுவோம். முதல்ல குமுதா கல்யாணம். கொஞ்சம் ரெண்டு வருஷம் மூச்சு விட்டுண்டு அப்புறம் அமுதா கல்யாணம். அப்பத்தானே ரெண்டு கல்யாணத்தையும் என்னோட வாலு நெனைக்கற மாதிரி ஜாம் ஜாம்னு....'
பாழாய்ப் போன அந்த நாள் இப்போது ஞாபகம் வருகிறது. மயிர்கூச்சலோடு ஆரம்பித்த சோகம் உடல் நடுக்கத்தை கொடுத்து இரு உள்ளங் கைகளையும் கண்களை மூட வைக்கிறது. சக பயணிகளுக்கு தெரிந்து விடக் கூடாதே தான் கலங்கிக் கொண்டிருக்கிறோம் என்று.
'என்னென்னவோ சொல்லிக் கொண்டே வந்தாள் அன்னிக்கு. எல்லாம் புரிஞ்ச மாதிரி மண்டைய மண்டைய ஆட்டினேன். அவ தன்னோட கணக்கையும் முடிச்சிண்டு போயிட்டா. அவளோட கணக்கும் அத்தோட போச்சு.'
'சார், பெர்த்த தூக்கிடலாமா. ரொம்ப யோசனையா இருந்தேளேன்னு டிஸ்டர்ப் பண்ணல இத்தன நேரம்.'
'சாரி சார்.'
பெர்த்தை போட்டவுடன் மேலே ஏறி படுத்துக் கொண்டார் அவர்.
கணபதி சுந்தரமும் வாஷ் பேசின் போய் முகத்தை நன்கு அலம்பிக் கொண்டு வேட்டித் தலைப்பால் துடைத்துக் கொண்டு வந்து கீழ் பெர்த்தில் படுக்கிறார்.
செங்கல்பட்டில் வாங்கிக் குடித்த டீ சற்று அவரை ஆஸ்வாஸப் படுத்துகிறது.
'நாளைக்கு திருச்சி போனோண்ண விசுவிடம் டீடெய்லா பேசணும். அவன் பொண்ணுக்கு இப்பத்தானே கல்யாணம் ஆச்சு. அவன் சொல்ற கணக்கு நமக்கு சௌகர்யமா இருக்கும்.'
ரொம்ப நேரம் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தவரை ஜன்னல் காற்று தூங்க வைக்கிறது.
தொடரும்.....
No comments:
Post a Comment