Friday, March 11, 2022

எண்ணப்பறவை_45

எண்ணப்பறவை_45

எழுதியது பாஸ்கர் சத்யா 

தாம்பரத்தில் சுந்தரி மாமியாத்துக்கு கைக் குழந்தையோடு மூவரும் வரும்போது மணி ஆறு.

'மாமி, எப்படி இருக்கேள்?'

'வா..வா... வா.... என்ன அதிசயமா நம்மாத்துக்கு.  வா அனந்து.  வாங்கோ நீங்களும்.'

'எல்லாம் நல்ல விஷயமாத்தான் வந்திருக்கோம்.  ஏன்னா, அரவிந்துக்கு சொன்னேளோன்னோ சீக்கிரம் வரச் சொல்லி.'

'சொல்லிட்டேண்டி.  வந்துடுவான்.'

'என்ன பலமான ஏற்பாடு போல தெரியறதே?'

'ஆமாம் மாமி.  ஒரு வாரத்துக்குள்ள என்னென்னவோ நடந்துடுத்து.  எல்லாம் நல்ல விஷயம்தான்.  முதல்ல என்ன மன்னிக்கணும் நீங்க.'

'என்ன பீடிகையெல்லாம் பலமா இருக்கே.  நீ என்ன தப்பு பண்ணினே, நான் உன்ன மன்னிக்கறதுக்கு.'

குமுதாவைப் பெண் பார்த்த விவரங்களை கூறுகிறாள் விவரமாக.  நேரம் மிக மிக குறைவாக இருந்ததால் அழைக்க முடியாமல் போனதற்கு மன்னிக்கவும் என்று முடிக்கிறாள்.

'மாமா, ரொம்ப சந்தோஷம்.  நீங்க ரொம்ப கொடுத்து வெச்சிருக்கேள்.  பவானி மாதிரி ஒரு நாத்தனார் உங்க பொண்ணுக்கு கிடைக்க.'

'நீங்க சொன்னேள் இல்லையா, என் பொண்கள கன்ஸல்ட் பண்ணிட்டு உங்க கிட்ட பேச சொன்னேள் இல்லையா.  அதுக்குள்ள இப்படியெல்லாம் நடந்ததால உங்க கிட்ட வந்து பேச முடியல.'

'பிராப்தம்னு ஒண்ணு வந்துடுத்துன்னா யாராலையும் தடுக்க முடியாது.'

'சரி மாமி.  விஷயத்துக்கு வருவோம்.  நம்மள்லாம் அன்னிக்கு ஆசைப் பட்ட மாதிரி, மாமாவோட ரெண்டாவதுபொண்ண அரவிந்துக்கு முடிக்கலாம்னு அவரையும் அழச்சிண்டு வந்துருக்கோம்.'

'உன் கிட்ட சொல்றதுக்கு என்ன பவானி.  இந்த ஒரு வாரத்துல இங்கேயும் என்னென்னவோ நடந்துடுத்து.'

'என்ன மாமி?  அரவிந்துக்கு ஏதாவது வரன் நிச்சயமாயிடுத்தா?'

'கிட்டத்தட்ட அப்படித்தான்னு வெச்சுக்கோயேன்.  இப்பத்தான் அவன் வந்துடுவானே.  அவனையே கேட்டுக்கோயேன்.'

அனைவர் முகமும் சற்று நேரத்தில் வாடிப் போனது.  எவ்வளவோ பேசிக் கொண்டு வந்த விஷயங்கள் முற்றுப் புள்ளி  கண்டு சோகத்தை தாங்கி கொண்டிருந்தது.

அடுத்து என்ன பேசுவது என்று யோசித்துக் கொண்டிருந்த போது அரவிந்த் உள்ளே நுழைகிறான்.

'ஏக்கேண்ணா... மன்னி.  வந்து ரொம்ப நாழியாச்சா.  ஒரு ட்ரெயின விட்டுட்டேன்.  அதான்.  சார், உங்கள கவனிக்கல.  சாரி.  உங்க டாட்டர் நன்னா இருக்காங்களா?'

'ஏக்கேண்ணா, நீங்க ஃபோன் பண்ணி நீங்க எங்காத்துக்கு வரப்போறேள்னு சொன்னோண்ண ஒண்ணுமே புரியல.  என்ன விஷயம்னு கேட்டும் ஸஸ்பென்ஸ்னு முடிச்சேளா, பயங்கர எக்ஸைட்மென்ட்.'

'ஒண்ணுமில்ல அரவிந்த், பவானியோட அண்ணாவுக்கு இந்த மாமாவோட முதல் பொண் குமுதாவ நிச்சயம் பண்ணலாம்னு உத்தேசிச்சிருக்கோம்.  அத நேரா உங்க ரெண்டு பேரையும் பார்த்து சொல்லிட்டு போகலாம்னு வந்தோம்.'

'ரொம்ப சந்தோஷம் மாமா.  உங்க டாட்டர் ரொம்ப அதிர்ஷ்டம் பண்ணியிருக்காங்க.'

'அது சரி அரவிந்த்.  உனக்கும் ஏதோ பொண்ண ஃபிக்ஸ் பண்ணப்போறதா சொன்னாளே உங்க அம்மா?  கங்க்ராட்ஸ்.'

'போங்கோ ஏக்கேண்ணா, விளையாடாதீங்கோ.  உங்களுக்கு தெரியாமையா?  அம்மா..  என்னம்மா இதெல்லாம்?'

'நான் முழுசா சொல்றதுக்குள்ள நீ வந்துட்ட.  இப்ப நீ சொல்றையா நான் சொல்லட்டுமா?'

'நான் இந்த விளையாட்டுக்கே வரல.  நீயே சொல்லு.'

'ஒண்ணுமில்ல பவானி.  உன் தம்பி, அதான் என் புள்ள, மாம்பலத்துக்கு போயிட்டு வந்ததுலேந்து ராத்திரி கனவுல அமுதா அமுதான்னு பொலம்பறான்.  அப்புறம் அவன சமாதானப் படுத்தி கண்ணெல்லாம் தொடச்சி விட்டு அவளையே நிச்சயம் பண்றேன்னு சத்தியம் பண்ணியிருக்கேன் அவன்கிட்ட.'

சுந்தரி மாமி அப்படி சொன்னவுடன் வீடு இடியும் அளவுக்கு கொல்லென்று சிரிப்பு எல்லோரிடத்திடமிருந்தும் க்கோரஸாக.

'மாமி, உங்கள என்ன பண்ணா தேவல.  அமுதாவோட அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக் வரதுக்குள்ளேயாவது உண்மைய சொன்னேளே.  ரொம்ப மோசம் மாமி நீங்க.  எனக்கு அழுகையே வந்துடுத்து.  கஷ்டப் பட்டு அடக்கிண்டிருந்தேன்.'

'மன்னி, அம்மா எக்ஸ்ட்ரா ஃபிட்டிங் சேர்த்து சொல்றா.  மாமாவோட ரெண்டாவது பொண்ணையே பார்க்கலாம்னு மாத்திரம் தான் சொன்னேன்.  சாரி மாமா, நீங்க என்ன தப்பா நினைக்கப் போறேள்.'

'மன்னி, முதல்ல உங்க அண்ணா கல்யாணத்த பத்தி பேசுங்கோ.'

பவானி எல்லாவற்றையும் மீண்டும் அரவிந்திடம் சொல்லிக் கொண்டிருந்த போது சுந்தரி மாமியின் இடுப்பில் அவளின் குழந்தை ஏறி ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தான்.

பிறகு அமுதா பக்கம் பேச்சுக்கள் திரும்பின.  கணபதி சுந்திரமும் தன் நிலைமையையும் கோடிட்டுக் கொண்டிருந்தார்.

'மாமா, எப்ப என் பொண் அபர்ணாவ பறிகொடுத்தேனோ அன்னிலேந்து அரவிந்துக்கு வரப் போறவதான் என் பொண்ணுன்னு நெனச்சிண்டே தான் ஆறுதல் படுத்திப்பேன்.  எனக்கு என்னோட அப்பா எங்க கல்யாணத்தப்போ பட்ட கஷ்டம் எல்லாம் இன்னும் மறக்க முடியல.  ஒரு கவலையும் படாதீங்கோ.  எல்லாம் உங்க சக்திக்கு ஏத்த மாதிரி பண்ணினா போதும்.'

'நீங்க இவ்வளவு ஃப்ரேங்கா சொன்னாலும் எனக்குன்னு ஒரு கடமை இருக்கு இல்லையா.  பொன் வைக்கற இடத்துல பூவையாவது வைக்க வேண்டாமா நான்.  ஆத்துக்கு போய் ஓரளவு பட்ஜெட் போட்டு பார்த்துட்டு அடுத்த வாரம் ரெண்டு குடும்பத்துலேயும் வந்து பேசறேன்.  அதுக்கு முன்னாடி நீங்களும் உங்க புள்ளையும் உங்க மனுஷாள அழச்சிண்டு எங்காத்துக்கு வந்து அமுதாவ பாருங்கோ.  நீங்க வந்த போது ரெண்டு குழந்தைகளும் ஆத்துல இல்லையோன்னோ?'

'அதான் அவன் பார்த்துட்டானே. எதுக்கு இந்த ஃபார்மாலிடி எல்லாம்.'

'நன்னா இருக்கே மாமி.  பெரியவாளா வந்து குழந்தைய ஆசீர்வாதம் பண்ணினாதானே நன்னா இருக்கும்.'

'வீணா எதுக்கு பஜ்ஜியும் சொஜ்ஜியும் இழுத்து விட்டுண்டு.  வேணும்னா ஒண்ணு செய்யலாம்.  அமுதாவோட வேல பார்க்கறாளே ப்ரியா.  அவாத்துக்கு வர சொல்லுங்கோ அமுதாவ.  இங்கதான் பக்கத்துல இருக்கா ப்ரியா.  அங்க வந்து பார்த்துண்டா போச்சு.'

'மாமி, உங்க கிட்ட ஒண்ணு சொல்லணும்.  உங்க தூரத்து உறவு ருக்மணி மாமியாத்துல தான் என் பொண்கள் ஜாகை.'

'யாரு.  ருக்மணியா!!  அவ கோடம்பாக்கத்துல தான இருக்கா.'

'இல்ல மாமி.  அந்த மாமியே சொன்னா உங்கள தெரியும்னு.  நீங்க வந்தேள்னா அவாளையும் பார்க்கலாம்.'

'மாமா, நல்ல அதிர்ஷ்டக் காரர் தான் நீங்க.  எல்லா நல்ல மனுஷாளும் உங்களுக்கு கெடச்சுடரா எப்படியோ?'

'சரியா சொன்ன பவானி.  நல்ல மனசும் செயலும் இருந்தாலே பகவானோட அனுக்ரஹம் கெடச்சிடும்.  கொழந்தைகள நன்னா சமர்த்தா வளர்த்திருக்கார்.  ஒரு கொறையும் வராது அவருக்கு.'

'மாமி, லேட்டாகறது.  மாமனார் மாமியார தனியா விட்டுட்டு வந்திருக்கோம்.  நாங்க கிளம்பறோம்.'

'திடுதிப்புனு எல்லாரும் வந்திருக்கேள்.  என்னால சித்த நாழில ரவா உப்மாதான் இப்ப பண்ண முடியும்.  கொஞ்சம் வெயிட் பண்ணுங்கோளேன்.  பத்து பதினஞ்சு நிமிஷத்துல ரெடி பண்ணிடறேன்.'

அவசர டிஷ் அதுதானே!


தொடரும்.....

No comments:

Post a Comment