Friday, March 11, 2022

சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தான் ஆண்டி

 சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தான் ஆண்டி*

(பழமொழி -2)

இன்று காலை நண்பரொருவர் என் நிலைமையை ‘சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுத்த நிலைமை’ ஆகிவிட்டதா? என்று வேடிக்கையாக விமர்சித்தார்.

அட! இப்பழமொழியைப் பற்றியே எழுதினால் என்ன? என்று தோன்றியது. இதோ தொடங்குகிறேன்.

இது அனைவரும் நன்கறிந்த பழமொழி. புழக்கத்தில் இருப்பதுதான். பலரும் நன்கறிந்த ஒன்று என்பதால் இதற்கு விளக்கம் என்று நேரிடையாக அளிக்காமல் ஒரு வித்தியாசமாக அணுகப்போகிறேன். என் எழுத்துப் பயணத்தில் ஒரு புது வகை முயற்சி. நண்பர்கள் அனைவரும் ரசித்து வரவேற்பீர்கள் என நம்புகிறேன்.

ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து இரவு 7.15 க்கு புறப்பட்டு விட்டது. நான் இருந்த பெட்டியில் இன்னும் நான்கு பேர் தான் இருந்தனர். ஏதேதோ ஊர்வம்பு பேச ஆரம்பித்தோம். பேச்சு வாக்கில் என்கூட இருந்தவர்களில் 3 பேர் தமிழன்பர்கள் எனத் தெரியவந்தது. நான்காமவர் ஏதோ பள்ளி தலைமை ஆசிரியர். அவர் எங்களிடம் இருந்து சற்று ஒதுங்கியே இருந்தார். தலைமை ஆசிரியர் என்பதாலோ என்னவோ!

வண்டி 7.45 க்கு தாம்பரத்தை அடைந்தது. எனக்கோ ஊர்வம்பில் நாட்டமில்லை.

‘நாம் எல்லோரும் தமிழ்ப் பிரியர்கள் தானே? ஏதாவது ஒரு பழமொழியை எடுத்து அலசலாமே? பொழுது மகிழ்ச்சிகரமாக கழியும்’ என்றேன்.

தலைமை ஆசிரியரைத்தவிர மற்ற மூவரும் இணங்கினர்.

நான் கொடுத்த யோசனை என்பதால் என்னையே ஆரம்பிக்குமாறு கூறினர்.

வெளியே ரயில் நிலைய பெஞ்சில் அமர்ந்து கொண்டு ஒரு காவி கட்டிய பிச்சைக்காரன் பீடி பிடித்துக்கொண்டிருந்தான். அவனைப் பார்த்ததும் சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தான் ஆண்டி என்னும் பழமொழி நினைவுக்கு வந்தது. சொன்னேன்.

இதற்கு நான் உணர்ந்த பொருள்

“தானே வலியச்சென்று வம்பை விலைக்கு வாங்கி அதனால் துன்பப்படுவது”

(Inviting trouble on oneself, unnecessarily, unwittingly’.) என்றேன்.

நான் 6ஆம் வகுப்பில் இருந்தபோது எங்கள் ஆசிரியர் இப்பழமொழியை உபயோகித்தார். அதற்கான பொருளாக நான் மேலே கூறியதைச் சொன்னாரே தவிர அதற்கும் ஆண்டி, மற்றும் சங்குக்கு என்ன சம்பந்தம் என்று அவரால் சரியாக சொல்ல இயலவில்லை. வீடு வந்ததும் என்தாயை அணுகி விளக்கம் கேட்டேன். என் தாயைப் போல் பழமொழியை கையாண்ட இன்னொருவரை நான் கண்டதில்லை. எந்த ஒரு சூழ்நிலைக்கும் ஏற்றவாறு உபயோகிப்பார். அவரை கவனித்தே நான் கற்ற பழமொழிகள் ஏராளம்.

அவர் சொன்ன கதை:

ஒரு ஆண்டி ஒரு இரவு தங்குவதற்காக தர்ம சத்திரம் சென்றான். அவனுக்கு சுவரோரமாக ஒரு இருட்டு மூலையில் தான் படுக்க இடம் கிடைத்தது. அங்கு துண்டை விரித்துப் படுக்கையில் ஒரு வெண் சங்கு இருட்டில் கிடைப்பதைக் கண்டான். ஏதோ முன்னம் தங்கிய ஆண்டி யாரோ மறந்து விட்டிருக்க வேண்டும். உடனே அந்த சங்கை எடுத்து ‘எப்படி ஊதுகிறது?’ என்று பார்க்க நம் ஆண்டிக்கு ஆசை. அதை வெளிப்புறம் தூசி தட்டி ஊத வாயில் வைத்ததுதான் தாமதம். அதனுள் பலநாட்களாக பதுங்கி இருந்த கருந்தேள் அவன் உதட்டில் கொட்டி விட்டது. சங்கைத் தூக்கி எரிந்து விட்டு வலி தாங்காமல் ஆண்டி கத்திக்கொண்டே துள்ளிக் குதிக்க ஆரம்பித்தான். ‘குய்யோ, முறையோ’ என்று கூக்குரலிட்டான். சத்திரத்தில் குறுக்கும் நெடுக்கும் ஓடினான். இதனால் சத்திரத்தில் இருந்தோர் அனைவர் தூக்கமும் கெட்டது. நடந்தது எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டு படுத்திருந்த இன்னொருவன் “சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தான்யா ஆண்டி“ என்று தத்துவம் உரைத்துக்கொண்டே அங்கு இருக்கப் பிடிக்காமல் துண்டை உதறி தோளில் போட்டுகொண்டு கிளம்பினான். அவன் தன் ஊர் போய் எல்லோரிடமும் இந்த தத்துவத்தைப் பரப்ப அதுவே பழமொழியாக மாறி நம் வரை வந்து விட்டது’ என்று சொல்லி என் கதையை முடித்தேன்.

‘நல்ல கதை தான். நான் சொல்லப்போவது இன்னும் அருமையாக இருக்கும் கேளுங்கள்’ என்ற பீடிகையோடு அடுத்தவர் தன் கதையை ஆரம்பித்தார்.

ஒரு ஆண்டி ஓரிரவு சத்திரத்தில் தங்கப் போனான். அவனுக்கு பிச்சை எடுத்து வாழும் ஆண்டிப் பிழைப்பே பிடிக்கவில்லை. தானும் ஏதாவது தொழில் செய்து வாழ்க்கையில் முன்னேற ஆசை. ஆயினும் அவனுக்கு தெரிந்த ஒரே தொழிலே சங்கு ஊதுவது தான். இழவு வீட்டில் கூப்பிட்டு அனுப்புவார்கள். போய் சங்கு ஊதுவான். அவனைப் பொறுத்தவரை ‘சங்கு ஊதுதல்’ ஒரு காரியம் முடிந்து விட்டது என்பதற்கான அறிவுப்பு. ஊதி ஊதி அலுத்து விட்டது. என்ன செய்வான்?

அன்று எதேச்சையாக இரு திருடர்கள் அவன் இருந்த சத்திரத்தில் தங்கிஇருந்தனர். அவர்கள் அந்த ஊர் பண்ணையார் வீட்டில் அன்று இரவு ஆடுகள் திருட திட்டம் போட்டிருந்தனர். மூன்றாவது திருடன் வரவேண்டியவன் அது வரை வரவில்லை. அவன்தான் இவர்கள் திருடிய ஆடுகளை வேலியின் இப்புறமிருந்து வாங்க வேண்டும். ‘என்ன செய்வது?’ என்று அவர்கள் பேசிக்கொண்டிருந்ததைக் கேட்ட ஆண்டிக்கு ஒரே மகிழ்ச்சி. தான் மூன்றாவது ஆளாக வருவதாகவும் அவர்கள் சொற்படி கேட்பதாகவும் வாக்களித்தான். திருடர்களுக்கு தயக்கம் தான். இருப்பினும் இருப்பினும் ஆண்டியின் உற்சாகம் கண்டு அவனையும் அழைத்துக்கொண்டு கிளம்பினர். முதலாமவன் ஒரு ஆட்டைத் திருடி ஆண்டியிடம் கொடுக்கையில் ஆண்டி அதன் காலைப் பிடித்து வாங்கப்போனான். ‘காலைப் பிடித்தால் ஆடு கத்தும். காவலர்கள் எழுந்து விடுவார்கள். அதன் கழுத்தைப் பிடித்து, தொண்டையை கத்த முடியாமல் அழுத்தி வாங்க வேண்டும்’ எனும் பொருள் பட ‘ஆண்டி, சங்கைப் பிடி’ என்று மெதுவாக கிசு கிசுத்தான். சங்கு என்பது தொண்டைப்பகுதியையும் குறிக்கும். அது நமது ஆண்டிக்குத் தெரியாததால் திருடன் வேலை முடிந்தது என சங்கு ஊதச் சொல்கிறான் என நினைத்து இடையில் இருந்த சங்கை எடுத்து ஒரு பிடி பிடித்தான். பழக்க தோஷம். வலிமையாக ஊதினான். சங்கோசை எங்கும் கேட்டது. சங்கு சத்தம் கேட்டு காவலர் எழுந்து திருடர்களை கையும் களவுமாகப் பிடித்தனர். வேலிக்கு அப்புறம் இருந்த ஆண்டி ‘தப்பித் ’தோம்’, பிழைத் ‘தோம்’, ஓம் ஓம் நமசிவாய” என்று ஓடி விட்டான்.

இப்பழமொழி மூலம் நான் உணர்வது

“முன்பின் பழக்கம் இல்லாதவர்களைக் கூட்டாக வைத்துக் கொண்டால் காரியத்தையே கெடுத்து விடுவார்கள்” என்பதே என்று சொல்லி முடித்தார்.

நீங்கள் சொன்ன கதையெல்லாம் நன்றாக இருந்தது. நேரம் போனதே தெரியவில்லை. எனக்கு அவ்வளவு அழகாக கதை சொல்லத் தெரியாது. ஆயினும், நான் சொல்லப் போவதே இப் பழமொழி தோன்றக் காரணமாயிற்று என்று மூன்றாமவர் தன் கதையை ஆரம்பித்தார்.

’வடவரையை மத்தாக்கி வாசுகியை நாணாக்கி’ பாற்கடலை தேவாசுரர்கள் கடைந்த கதை. ஆண்டி எனும் பெயர் சிவனையும் குறிக்கும். அவர்தான் பிக்ஷாண்டி ஆயிற்றே? வாசுகி கக்கிய நஞ்சை எடுத்து விழுங்க முற்பட்டுப் பார்வதி சிவனின் சங்கைப் பிடிக்க அவர் தன் கழுத்து ஊதி (வீங்கி) நீலகண்டனாகிச் சும்மா கிடந்த தன் சங்கைக் கெடுத்துக் கொண்டார்.

இதைக்கொண்டே தொன்று தொட்டு இப்பழமொழி வழங்கி வருகிறது என்று அவர் கதையை சுருக்கமாக முடித்தார்.

நான்காமவர், “நான் சொல்லப் போவதும் ஒரு புராணக் கதையே. அதைக் கேட்டபின் நீங்கள் அனைவரும் ஒரு மனதாக நான் சொல்லும் கதையே இப்பழமொழிக்கான காரணம் என்று ஒத்துக்கொள்வீர்கள்” என்ற முன்னூட்டத்துடன் கதை சொல்ல ஆரம்பித்தார்.

திரிசங்கு என்ற மன்னனுக்கு தன் பூத உடலுடன் சொர்க்கம் செல்ல வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. அதனால் தன்னுடைய குருவான வசிஷ்டரிடம் தன் கருத்தை சொன்னான். அவர் அப்படி எந்த மனிதனாலும் சொர்க்கம் செல்ல முடியாது என்று மறுத்து விட்டார். அதனால் கோபம் கொண்ட மன்னன் ”யார் என்னை தன் பூத உடலுடன் சொர்க்கம் செல்ல வழி செய்கிறாரோ அவரே இனி என்னுடைய குருவாவார்” என்று கூறவும், வசிஷ்டருக்கு கோபித்து ’நீ பெரு நோயுள்ளவனாக மாறுவாய்’ என சாபமிட்டார். அதனால் திரிசங்குவிற்கு உடல் களை இழந்தது. நாட்டை விட்டு காட்டிற்கு சென்றான்.

காட்டில் விஸ்வாமித்திரரைக் கண்டு வணங்கி தன் கதையைச் சொன்னான். ஏற்கனவே விஸ்வாமித்திரருக்கும் வசிஷ்டருக்கும் போட்டி யார் சிறந்தவர் என்பதில்.

விஸ்வாமித்திரர் விடுவாரா இந்த வாய்ப்பை? திரிசங்குவைத் தன் தவ வலிமையினால் சொர்கத்திற்கு அனுப்பினார்.

சொர்க்கத்தை அடைந்த திரிசங்குவை உள்ளே நுழைய விடாமல் தடுத்து இந்திரன் காலால் எட்டி உதைத்து கீழே தள்ள, திரிசங்கு கீழே விழும் போது விஸ்வாமித்திரரை அழைத்தான். அவர் அவனை அங்கேயே நிற்க செய்து தன் தவ வலிமையால் அந்தரத்தில் ஒரு சொர்க்கத்தையே உண்டாக்கினார். அதுவே திரிசங்கு சொர்க்கம் ஆகும். இப்படிச் செய்ததால் விஸ்வாமித்திரர் தன் தவ வலிமை அனைத்தும் இழக்கும்படி ஆயிற்று. அதனால் மீண்டும் தவம் செய்ய சென்றார்.

சும்மா இருந்த திரிசங்கை நான் உனக்கு உதவுவேன் என்று தன் தவ வலிமையை கொடுத்தான் ஆண்டி (விஸ்வாமித்திரர்).

“நாம் உணர்ச்சிவசப்படுவதால் நிறைய இழப்புகளை சந்திக்கிறோம். ஆகவே நிதானமாக யோசித்து செய்தால் வெற்றி பெறலாம்” என்பதே இப்பழமொழியின் கருத்து என்று சொல்லி அவர் தரப்பு வாதத்தை முன்வைத்தார்

ஒவ்வொருவரும் சற்று மாறிய கருத்துக்கள் எடுத்துரைத்தமையால் வேறு வழியின்றி அந்த தலைமை ஆசிரியரிடம் “நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” எனக் கேட்டோம்.

“இதில் நினைக்க என்ன இருக்கிறது. பழமொழி தான் மிக்க தெளிவாக இருக்கிறதே? ஒரு ஆண்டி வேலை வெட்டி இல்லாமல் இருந்தான். நேரம் காலம் இன்றி புகை ஊதி (பிடித்து) அவன் சங்கை (தொண்டயைக்) கெடுத்துக் கொண்டான். தொண்டை புற்றுநோய் வந்தது. பேச முடியவில்லை. அதைப் பார்த்த மருத்துவர் “சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தான் ஆண்டி” என்றார். ‘ஆண்டி சும்மா இல்லாமல், சும்மா இருந்த தன் சங்கை புகை ஊதி ஊதி கெடுத்துக் கொண்டான். அவ்வளவே. நேரமாகிறதே, விளக்கை அணைத்து விட்டுப் படுக்கலாமா?” என்று ஒரு முற்றுப் புள்ளி வைத்தார்.

இனி பேசிப் பயனில்லை என்று நாங்கள் எல்லோரும் படுக்கையை விரித்தோம்.


இப்போழுது இந்த உரையாடல்களைத் தொடர்ந்த நீங்கள் தான் நடுவர். முடிவை உங்களுக்கே விட்டு விடுகிறேன்.

🙏🤪

No comments:

Post a Comment