எண்ணப்பறவை_32
'வாங்கோ.. வாங்கோ... என்ன அதிசயம்! நிஜமாத்தான் எங்காத்துக்கு வந்திருக்கேளா?'
இப்படி ஒரு வரவேற்பு பவானியிடமிருந்து கிடைத்தது சுந்தரி மாமிக்கும் ப்ரியாவுக்கும்.
'பரவாயில்லையே பவானி. இந்த கிழத்த கூட ஞாபகம் வெச்சிண்டிருக்கியா?'
'முதல்ல நீங்களா கிழம்? அதுக்கு அப்புறம் சண்டை போடறேன் உங்க கூட. உங்களை நாங்க மறக்க முடியுமா? அப்பேர்ப்பட்ட துக்கத்துலேயும் நாங்க கல்யாணமாகி உங்க கிட்ட நமஸ்காரம் பண்ண வந்தபோது எங்கள உபசரித்த விதம் எப்பேர்ப்பட்டது. யாராலேயுமே முடியாது. அன்னிலேந்து நீங்க எனக்கு ஒரு அம்மா. உங்க புள்ள எனக்கு ஒரு சகோதரன்.'
ப்ரியா அசந்தே விட்டாள்.
'பை தி பை நீங்க யாருன்னு தெரிஞ்சிக்கலாமா?'
'பவானி, இவ பேரு ப்ரியா. எங்காத்துக்கு பக்கத்துல இருக்கா. அமுதாவோட வேல பார்க்கறவ... ஒன்னுட்ட போய் அமுதாங்கறேன் பாரு.'
'எனக்கா தெரியாது? ஐஜி ஆஃபீஸ்ல வேல பார்க்கறவ தானே. எல்லாம் எங்காத்துக்காரர் சொல்லிட்டார் உங்க புள்ளையாண்டானோட ஹீரோயின பத்தி. ஞாயித்துக் குழமை இங்க வந்து உமாவ பார்த்துட்டு .....'
'இரு.இரு.இரு. இது என்ன புது கதை உமான்னு.'
மூவரும் சிரிக்கிறார்கள். உமா கதையை பவானி சொல்ல பதிலுக்கு அமுதா ஆத்துக்கு கதையை சுந்தரி மாமி சொல்ல, பாஸ்புக் கதையை ப்ரியா இடையில் எடுத்து விட ஸ்வாரஸ்யங்கள் கூடிக் கொண்டிருந்தது அவர்கள் பேச்சில்.
'ஏண்டி ப்ரியா அமுக்கு. இந்த பாஸ்புக் கதைய வெச்சுதான் அமுதாவுக்கும் அரவிந்துக்கும் தான் முடிச்சு போடணும்னு ஒத்த காலுல வழி நெடுக நச்சரிச்சிண்டு வந்தியா.'
'அம்மா, ஒண்ணு செய்யுங்கோளேன். மூணு பேரையும் கட்டி வெச்சுடுங்கோளேன் உங்க புள்ளைக்கு.'
'இப்படி வேற எனக்கு எதிரா சதி பண்ணிண்டு இருக்கேளாக்கும். அவனுக்கு ஒண்ண கட்டி வைக்கவே இந்த பாடு பட வேண்டியிருக்கு. இதுல மூணாக்கும்.'
'மேடம். நீங்க கொஞ்சம் எடுத்து சொல்லுங்கோ மாமி கிட்ட. எப்படியாவது அமுதாவ முடிக்க சொல்லுங்கோ.'
'ஏண்டி நான் வேண்டாம்னா சொல்றேன். அவ அப்பா பேசினத கேட்டியோன்னோ. எந்த பொறுப்பான அப்பாவும் பெரிய பொண்ணு இருக்கும்போது சின்ன பொண்ண கல்யாணம் பண்ணிக் கொடுக்க சம்மதிக்க மாட்டா டி.'
'நிச்சயமாவது பண்ணிக்கலாமே அம்மா. அக்கா கல்யாணம் முடிஞ்சோண்ண பண்ணி கொடுக்கலாமே.'
'பவானி, நீயும் அவள மாதிரியே பேசறியே. ஒரு கல்யாணம் நடத்திட்டு அங்கேயும் இங்கேயும் வாங்கின கடன்கள அடச்சுட்டு மூச்சு விடறதுக்கே மூணு வருஷம் ஆகும். நல்லவேள சின்னவளுக்கு உத்யோகம் இருக்கு. அப்பாவும் பொண்ணும் சேர்ந்து கடன அடைக்கலாம் சித்த முன்னாடியே. அதுவரைக்கும் என் பையன பிரம்மச்சாரியாவே இருக்க சொல்றேளா ரெண்டு பேரும். அதுக்கு நான் தயாரா இல்லம்மா.'
'சரி. ஒரு வேள உங்க பையனும் அமுதாவும் அங்கேயும் இங்கேயும் சுத்திண்டு ஒருத்தருக்கொருத்தர் லவ் பண்ணிண்டு இருந்திருந்தா என்ன பண்ணிருப்பேள் மாமி.'
'ப்ரியா, ஏதோ பேசணுமேன்னு பேசாத. அப்படி இருந்தா நாலு பேரோட படையெடுத்து போய் அவ அப்பாகிட்ட சம்மதம் கேட்க வேண்டியது தான். சம்மதிக்கலைனா கட்டிண்ட புடவையோட ஆத்துக்கு அழச்சிண்டு வந்துடுவேனாக்கும். மன்னார்குடிக் காரிடி நான்.'
'அம்மா, எங்காத்துக்கு பக்கத்துல தானே அவா இருக்கா. நா வேணா...'
'ஏண்டி, எனக்கே பெப்பேன்னுட்டார். அவர் நிலைல அவர் சொல்றது ரைட்டாத் தானே இருக்கு. என் பையன் வேற வடக்கு மேற்குனு உத்யோகத்துக்கு போகப் போறேன்னு அடம் பிடிக்கறான். இவன நம்பி நிச்சயம் பண்ணிட்டு ஒரு வருஷம் ரெண்டு வருஷமெல்லாம் காத்துண்டிருக்க முடியாது. இப்பவே அவனுக்கு உப்பு குதுராட்டம் வயசாகறது.'
'அம்மா, நீங்க சொல்றதும் சரியாத்தான் படறது. இப்ப பேசிட்டு வந்திருக்கேள். அவாளுக்குள்ள பேசும்போது ஏதாவது மாத்தம் வரலாமே, யார் கண்டா?'
'நான் கொஞ்சம் அவசரப் பட்டுட்டேன். அந்த பொண்ணுங்க ரெண்டு பேரும் இருக்கரச்சே அந்த பிராமணன் கிட்ட போய் பேசியிருக்கணும்.'
'நான் ரெண்டு நாள் கழிச்சி போகலாம்னு சொன்னேனா இல்லையா மாமி. இப்ப போய் இப்படி சொல்றேளே.'
'சரிதான் ப்ரியா. என்னோட அவசரம். அந்த பிராமணன் வேற ரெண்டு மூணு நாளுல திருச்சி கிளம்பிடுவார்னு எங்காத்துக்கு பிரஹஸ்பதி சொன்னான். அவர் அங்க போயிட்டா ஒரு கோடி திருச்சிக்கு போக வேண்டியிருக்குமேன்னு தான் உன்ன அவசரப் படுத்தினேன். தப்புதான்.'
'அம்மா, ப்ராப்தம்னு ஒண்ணு இருந்தா எல்லாருக்கும் புடிச்ச அமுதாவோடையே நடந்துடும். இல்லையாம்மா?'
'நாம என்ன செய்ய முடியும் இதுல சொல்லு. அமுதாவோ குமுதாவோ, என் பையனுக்கு ஒரு பொண்ண முடிக்கணும். என் கவலையெல்லாம் அதுதான். நீ ஏதோ சொன்னியே, உமா, உங்க சொந்தக்கார பொண்ணு. அந்த வரனையும் விடவேண்டாம். எதுக்கும் கைவசம் இருக்கட்டும்.'
'மேடம், மாமி பேச்ச கேட்காதீங்கோ. எப்படியாவது அமுதா அப்பாகிட்ட நீங்க போய் பேசி அமுதாவையே அரவிந்துக்கு முடிச்சிடுங்கோ.'
சுந்தரி மாமிக்கு தெரியாமல் பவானி கண்ணடித்து சமிக்ஞை செய்தாள். புன்சிரிப்பு ப்ரியாவிடமிருந்து.
'இதெல்லாம் இருக்கட்டும். அது என்ன அடிக்கடி மேடம் மேடம்னு. பவானி வா போன்னே கூப்பிடலாம் ப்ரியா என்னை.'
'அம்மா, எங்க ரெண்டு பேர் கல்யாண ஆல்பம். இத ரெண்டு பேரும் பார்த்துண்டு இருங்கோ. குழந்தை முழிச்சிண்டுடுவான். அதுக்குள்ள நீங்க சாப்பிட ஏற்பாடு பண்றேன்.'
'நானும் வரேன் மேடம். சாரி, பவானி. உங்களுக்கு ஹெல்ப் பண்ண.'
தொடரும்...
No comments:
Post a Comment