எண்ணப்பறவை_30
வீட்டின் வாசலில் நின்று கொண்டு ரோடில் போகிறவர்களையும் வருபவர்களையும் பார்த்துக் கொண்டிருந்தாள் சுந்தரி மாமி. அரவிந்தை ஆஃபீஸ் கிளம்பியவுடன் வீட்டு வேலைகளையும் முடித்து விட்டு சற்று வாசலில் நின்று கொண்டு வேடிக்கை பார்ப்பது அவ்வப்போது நடப்பதுதான்.
அரவிந்த் சங்கோஜப் பட்டுக்கொண்டு வளைந்து நெளிந்து பாதி முழுங்கி பாதி சொல்லி அவன் கூத்தடித்ததை நினைத்து மனதுக்குள் சிரித்துக் கொண்டிருந்தாள்.
'நான் என்ன சிங்கமா கரடியா? தைரியமா சொல்ல மாட்டானா? ஆஃபீஸ் போற சமயத்தில் ஏதோ அள்ளி தெளிச்சிட்டு போயிட்டான். குமுதாங்கறான், அமுதாங்கறான், திருச்சிக்காராங்கறான். ஒண்ணும் புரியல எனக்கு. சாயந்திரம் வரட்டும் அவன். பச்சைக் குழந்தைக்கு சூட்டுக்கோல காமிச்சு கேட்கறமாதிரி உண்மைய வரவழிக்கணும் போல இருக்கே!! என்ன புள்ள இவன். நானோ சொல்லிட்டேன், எவள வேணா இழுத்துண்டு வாடா, கல்யாணம் பண்ணி வெக்கறேன்னு. அப்புறம் என்ன கூச்சம் வேண்டி கிடக்கு?'
சுந்தரி மாமி நின்று கொண்டிருக்கும் போது ப்ரியா ரோடிலே நடந்து போய் கொண்டிருந்தாள்.
'என்ன ப்ரியா? சௌக்யமா? ஆஃபீஸுக்கு போகலயா இன்னிக்கு?'
'இல்லை மாமி. ஆத்துக்காரருக்கு சித்த ஒடம்பு சரியில்ல. அதான் இன்னிக்கும் நாளைக்கும் லீவு சொல்லிட்டேன்.'
'இப்ப பரவாயில்லையா?'
'ம்ம்ம்.. நேத்திக்கு ரோடு கடைல எத்தயோ சாப்பிட்டிருக்கார். நேத்திலேந்து வாமிட்டிங். இப்ப கொஞ்சம் பரவாயில்ல. நேத்திக்கே ராமகிருஷ்ணன் டாக்டர் மருந்து கொடுத்துட்டார். என்ன, சின்னதா ஒண்ணு வந்தாலும் ஊரையே கூப்பிட்டுடுவார். ஊறுகா மாதிரி நான் பக்கத்திலேயே இருக்கணும். அது இருக்கட்டும். பையனுக்கு ஏதாவது வரன் பார்க்கறேளா?'
'அட ஏண்டி நீ ஒண்ணு. திருவாழத்தான் இப்பத்தான் ஒத்துண்டான் கல்யாணம் பண்ணிக்க. எனக்கு ஜாதகத்துல நம்பிக்கையே போச்சு. ஆனா கேட்கறவாளுக்கு மட்டும் அவன் ஜாதகத்த கொடுத்துண்டிருக்கேன். ப்ரியா, உனக்கு தெரிஞ்ச நல்ல வரனா இருந்தா சொல்லேன்.'
'எங்க ஆஃபீஸ்லேயே ஒத்தி இருக்கா. நல்ல பொண்ணு. உங்க பையனுக்கு ஏத்த மாதிரி ரொம்ப அழகாவும் இருப்பா. ஆனா அவ அக்காக்கு கல்யாணம் ஆனாத்தான் இவ பண்ணிப்பா. அமுதான்னு பேரு.'
'அமுதாவா... என்னடி சொல்ற? அவ உங்க ஆஃபீஸா? சித்த உள்ள வரியா? ரெண்டு நிமிஷம் ஒன்னோட பேசணும்.'
உள்ளே வந்த ப்ரியாவிடம் அரவிந்த் அமுதா வீட்டிற்கு சென்ற விவரங்களை அவள் புரிந்து கொண்ட அளவில் சொன்னாள்.
ப்ரியாவிற்கு ஒரு தயக்கம் அரவிந்த் அமுதாவை பார்க்க வந்ததையும் அதற்குப் பிறகு அவளுக்கும் ப்ரியாவிற்கும் நடந்த சம்பாஷணைகளை சொல்லலாமா என்ற தயக்கம் தான் அது. சிறிது யோசனைக்குப் பிறகு அதை அடக்கிக் கொண்டாள்.
'நான் ஆஃபீஸ் ஜாயின் பண்ணினோன்ன அவ கிட்டயே கேட்டு சொல்லட்டுமா என்ன ஏதுன்னு. ரெண்டு நாள் பொறுத்துக்கோங்கோ.'
'இல்ல டி. எனக்கு இவன் சொன்னதுலேந்து இருப்பே கொள்ளல. உனக்கு சௌகர்யப் பட்டா இன்னிக்கே அவாத்துக்கு போய் அவ அப்பாகிட்ட பேசினா என்னன்னு தோணறது. இவன் வேற குஜராத்து அது இதுன்னு என்ன பயமுறுத்திண்டு இருக்கான். வர முடியுமா ஒன்னால? எனக்காக வர மாட்டியா? உனக்கு அவாம் தெரியுமோன்னோ?'
மீண்டும் தயக்கம். ஒருவேளை அமுதா தன்னை தப்பாக நினைத்துக் கொண்டால்?
'நீங்களே கேட்கிறேள். மறுக்க முடியல. இருந்தாலும் அவர் உடம்பு சரியாயிடுத்துன்னா பிரச்சனை இல்லை.'
'சரி. என்னவோ இவன் கல்யாணப் பேச்சு மாத்திரம் தட்டிண்டே போறது. நான் ஒருத்தியா இருந்துண்டு கஷ்டப் படறேன் ஹெல்ப்புக்கு ஆளில்லாம. நல்ல விஷயம் பேசும்போது அமங்கலியா நான் மாத்திரம் தனியா போகறதுக்கும் கஷ்டமா இருக்கு.'
அந்த ஸென்டிமெண்டல் வார்த்தைகளில் சற்று என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் சஞ்சலப் பட்டுக் கொண்டிருந்தாள்.
'சரி மாமி. நாளைக்கு வேணா போகலாமா? கார்த்தாலையே போவோம். அவர் கிட்டேயும் கேட்டுக்கறேன்.'
'ஒனக்குத்தான் ரொம்ப தொந்தரவு கொடுக்கறேன்.'
'அதெல்லாம் ஒண்ணுமில்லை மாமி. மனுஷாளுக்கு மனுஷா இது கூட செய்யலைனா எப்படி.'
'ரொம்ப த்தேங்க்ஸ் ப்ரியா. ஸர்ப்ரைஸா இருக்கட்டும் நாம போறது. என் பையன் கிட்ட கூட சொல்லப் போறதில்ல இன்னிக்கு ராத்திரி. பேசி முடிச்சிட்டுதான் இவன் கிட்ட சொல்லப் போறேன். உங்க ஆஃபீஸ்ல வேல பார்க்கற அந்த பொண்ணு ரொம்ப அழகோ?'
'ஆமாம் மாமி. நல்ல களை. நல்ல லக்ஷணம். ஆஃபீஸ்ல நல்ல பேரு அவளுக்கு. நல்ல ஜோவியல் டைப். சிரிக்க சிரிக்க பேசுவா. பத்திரிக்கைகள்ல கதையெல்லாம் எழுதறா.'
'ஓ. அப்படியா? இப்படித்தான் இந்த காலத்துல இருக்கணும் பொண் குழந்தைகள். நீ அவளப் பத்தி ரெண்டு வார்த்தை சொன்னதுலேந்து அவள உடனே பார்க்கணும்னு தோணறது.'
'மாமி. சிக்கல் ஒண்ணே ஒண்ணு தான். அவ அக்காக்கு கல்யாணம் பண்ணாம பண்ணிப்பாளான்னு தெரியாது.'
'பேசி பார்க்கலாமே. அவ அக்கா இவள மாதிரியே இருந்தா அவள கூட பார்க்கலாமே?'
'உங்க பையனுக்கு அமுதாவத் தானே பிடிச்சிருக்கு?'
'லவ்வு கிவ்வு ஒண்ணுமில்லைங்கறான். பிடி குடுத்து பேசல என் கிட்ட. அவளத்தான் பிடிச்சிருக்குன்னா பளிச்சுனு சொல்லியிருப்பான் இல்லையா?'
'இன்னிக்கு ராத்திரி க்ளியரா நீங்களே கேட்டுடுங்களேன்.'
'இல்லடி அம்மா. என் கஷ்டம் உனக்கு புரியாது. இப்பத்தான் கல்யாணத்துக்கு சரின்னு சொல்லியிருக்கான். முதல்ல அவாளோட அப்பாகிட்ட பேசிப் பார்ப்போம். அப்புறம் இவன் கிட்ட வந்து சொல்லுவோம். அவன் தீர்மானம் பண்ணிக்கட்டும். அதான் லவ்வெல்லாம் இல்லைனு சத்தியம் பண்றானே?'
'அந்த பொண்ணும் அந்த மாதிரி லவ்வு அது இதுன்னு போற பொண்ணு இல்ல. ஆனா ஏன் மாமி, ஏன் அவசரப் படறேள்? அதான் புரியல எனக்கு. பொண்ணாத்துக் காரா வந்து உங்க கிட்ட ரெண்டு மூணு நாளுல பேசற மாதிரி ஏற்பாடு பண்றேனே. நம்மாத்து பழக்கம் அவாதான வரணும் முன்னாடி.'
'என்ன பெரிய ஃபார்மாலிட்டி வேண்டிகிடக்கு? கேஷுவலா அவாத்துக்கு போய் பேசப்போறோம். அவா மனசுல என்ன இருக்குன்னு தெரிஞ்சிண்டு வரப்போறோம். அவ அப்பா வேற லீவு முடிஞ்சு வாரக் கடைசியில திருச்சிக்கு போறார்னு சொன்னான். அவர் இங்கும்போதே பேசிட்டு வந்துடலாம் இல்லையா? ஈஸ்வரன் அந்த பொண்ணுதான் அரவிக்குன்னா அத யாராலேயும் மாத்த முடியாது.'
'சரி மாமி. சாயந்திரம் வந்து சொல்றேன் நாளைக்கு எப்ப போகறதுன்னு.'
'உனக்கு அவாம் தெரியுமோன்னோ.'
'நன்னா தெரியும் மாமி. அயோத்யா மண்டபம் பக்கத்துல தான் இருக்கு. போன வருஷம் நம்மாத்து கொலுவுக்கு கூட கூப்பிட போயிருக்கேன்.'
'நல்லதா போச்சு. முடிஞ்சா அப்படியே அரவியோட வேலை பார்க்கிறவன் ஒருத்தன் இருக்கான் அவாத்துக்கு பக்கத்திலேயே. அவாத்துக்கும் போய் அவனோட ஆத்துக்காரியையும் பார்த்துட்டு வந்துடலாம். அவாளோட கைக் குழந்தையையும் பார்க்கவே இல்ல இதுநாள் வரைக்கும்.'
'சரி மாமி. நான் வரட்டா?'
தொடரும்....
No comments:
Post a Comment