Wednesday, March 2, 2022

எண்ணப்பறவை_29

எண்ணப்பறவை_29

'ஏக்கேண்ணா, உங்களோடு கொஞ்சம் பேசணும்.'

'நானே பேசணும்னு நெனச்சிண்டு இருந்தேன்.  நேத்திக்கு நீ போனதுக்கப்பறம் பவானி அந்த மாமாவ வெளுத்து வாங்கிட்டா.  சாரிடா, நாங்க ரெண்டு பேரும் அந்த மாமா அப்படி பேசுவார்னு எதிர்பார்க்கல.  அப்புறம் பவானி சொல்லி புரிய வெச்சதுக்கப்பறம் ஃபீல் பண்ணினார்.'

'அத விடுங்கோண்ணா.  நான் சொல்லப் போறது வில் பி வெரி இன்டெரஸ்டிங்.'

ஆச்சர்யம் அனந்த கிருஷ்ணனுக்கு அரவிந்த் அப்படி சொல்லும்போதே.

'என்னடா, அம்மா ஏதாவது பொண்ணு பார்த்து உனக்கும் பிடிச்சு போச்சா?'

'அது இல்லண்ணா.  இது வேற.'

'அப்ப டீ ப்ரேக்குல பேசலாம்.  கொஞ்சம் IT ஆஃபீஸ் வரைக்கும் போயிட்டு வந்துடறேன் அதுக்குள்ள.  ரொம்ப நாளா கம்பெனிக்கு ஒரு ரீஃபண்ட் வராம இழுத்தடிக்கறான்.  என்ன ஏதுன்னு பார்த்துட்டு வந்துடறேன்.'

மதியம் மொபரீஸ் ரோடு டீ ஸ்டால்.  இருவரும் கிளம்பும்போதே, 'என்ன ஜாக் அண்ட் ஜில் கிளம்பியாச்சா ஒண்ணா வெளியே' என்ற சக ஊழியரின் வயத்தெரிச்சல் வாழ்த்தைக் கேட்டுக் கொண்டே கிளம்பினார்கள்.

'அந்த அழகேசன் பயலுக்கு நாம ஒண்ணா கிளம்பினாலே உடம்பு முழுக்க எரியும்.'

'நீங்க ஏண்ணா இதெல்லாம் பெரிசா எடுத்துண்டு.  விடுங்கோ.  உங்க மூடு கெட்டுதுன்னா நான் சொல்றதை சரியா காதுல வாங்க முடியாது உங்களால.'

'அதுவும் சரிதான்.  நீ சொல்லு சொல்ல வந்ததை.'

சொன்னான் அவனுடைய அமுதா வீட்டு விஜயம் பற்றி.

'எலே படவா.  எங்கேயோ மச்சமிருக்குடா உனக்கு.  இல்லாட்டி அந்த ஐஜி ஆஃபீஸ்ல டாவ் அடிச்ச பொண்ணையே மறுபடியும் பார்ப்பியா?'

'அட நீங்க ஒண்ணுண்ணா.   டாவ்வெல்லாம் இல்ல. எனக்கு அந்த பொண்ணோட குடும்பத்த ரொம்ப பிடிச்சிருக்கு.  அதுவும் அந்த அமுதாவோட அப்பா ரொம்ப நல்ல டைப்பா இருக்கார்.'

'இத பார்றா.  மாப்பிள்ளை மெச்சிய மாமனார்...'

'ஏக்கேண்ணா, கிண்டல் பண்ணாதீங்கோண்ணா.  அவாத்து மனுஷாள பிடிச்சிருக்குன்னு சொல்ல வந்தேன்.'

'பேசாம அந்த பொண்ணுங்க ரெண்டுல ஒண்ண முடிச்சுடுவோமா.  எங்காத்துக்கு பக்கம்தானே அவா இருக்கா.  இன்னிக்கே நானும் பவானியும் போய் பேசி முடிச்சுட்டா போச்சு.'

'அண்ணா அவசரப் படாதீங்கோ.  அம்மாவும் அவாள பார்க்கட்டும்.  அப்புறம் நீங்க போய் பேசலாம்.  ஆனா அம்மா கிட்ட எப்படி சொல்றதுன்னு தான் ஒரே குழப்பமா இருக்கு.'

'அதுவும் சரிதான்.  அத உடு.  அந்த ரெண்டு தேவதைகள்ல எந்த தேவதை ஐயாக்கு பிடிச்சிருக்கு.'

'எனக்கென்னவோ பெரியவளுக்கு பண்ணாம சின்னவளுக்கு ஒத்துப்பார் அந்த மாமான்னு தோணல.  அதுவும் நான் குஜராத் பக்கம் போனா சின்னவ கவர்மெண்ட் வேலைய விட்டுட்டு என்னோட வருவாளான்னும் தெரியல.  ஆயிரத்தெட்டு யோசிக்க வேண்டியிருக்கு இதுல.'

'அப்ப பெரியவளையே பார்க்கலாம்னு சொல்றியா?'

'நல்ல சம்மந்தமா எனக்கு படறது.  எனக்கு சின்னவள பிடிச்சிருக்கு.  ஆனா அந்த மாமா ஒத்துக்கணுமே.  அந்த பொண்ணு வேலைய விட சம்மதிப்பாளா?  அதுவும் ஸ்டேட் கவர்மெண்ட் வேலையாச்சே.'

'சிக்கல்தான்.  இந்த காலத்துல அரசாங்க வேலை கிடைக்கறதே கஷ்டமா இருக்கு.  சின்னவ மேல உனக்கு க்ரஷ் ஒண்ணுமில்லையே.  அப்படின்னா பெரிய பொண்ணையே பார்க்கலாமேடா.'

'க்ரஷ்ஷெல்லாம் இல்லண்ணா.  பெரியவ சாத்வீகமா தெரியரா.  கர்நாடிக் ம்யூஸிக் கத்துண்டிருக்கான்னு அவ அப்பா சொன்னா.   சின்ன பொண்ணு எல்லார் கிட்டேயும் என்ன மாதிரி கல கலன்னு பழகுவா மாதிரி தெரியறது.  கதையெல்லாம் எழுதுவாளாம்.'

'சும்மா வழ வழா கொழ கொழான்னு எல்லார்கிட்டேயும் பேசற மாதிரி என் கிட்ட பேசாத.  வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு, சாரி, துண்டும் ஒண்ணுன்னு பேசு.  அமுதாவா குமுதாவா?  கதையா கர்நாடிக் ம்யூஸிக்கா?'

'உங்க அபிப்ராயம் என்ன ஏக்கேண்ணா?'

'லூஸாடா நீ.  பொண்ணுங்கள பார்த்தவன் நீ.  கல்யாணம் பண்ணிக்கப் போறவன் நீ.  இதுல நான் என்ன சொல்ல முடியும்?'

'அதாண்ணா, தீர்மானிக்க முடியல என்னால.  எது எப்படியோ, திரும்ப சொல்றேன்.  நல்ல சம்மந்தமா மனசுக்கு படறது.  அம்மா இல்லாத குடும்பம்.  ரெஸ்பான்ஸிபிள் கேர்ள்ஸ்.  நல்ல அப்பா.  நிச்சயம் அம்மாவுக்கும் பிடிக்கும் அவாத்தன்னு நெனைக்கிறேன்.'

'அப்ப அம்மாகிட்ட இன்னிக்கே பேசு இத பத்தி.'

'கூச்சமா இருக்குண்ணா.'

'போடா ஃபூல்.  நீ என்ன தப்பு தண்டா பண்ணிட்டா அம்மாகிட்ட பேசப் போற.  தைரியமா பேசு.  ஆனா எந்த பொண்ணு உனக்கு பிடிச்சிருக்குன்னு முன்னாடியே சொல்லு.  அப்பத்தான் அம்மாவுக்கு அதுக்கு ஏத்தமாதிரி அவா கிட்ட பேச முடியும்.  வேணும்னா, நானும் பவானியும் அம்மாவோட போறோம்.'

'வேணா இப்படி செஞ்சா என்ன?  நீங்க அவாத்துப் பக்கம்தான இருக்கேள்.  என் ஜாதகமோ உங்க கிட்ட இருக்கு.  அத எடுத்துண்டு போய் அந்த மாமா கிட்ட கொடுத்துட்டு ஒரு ஃபீலர் விட்டு பாருங்களேன்.'

'ஏய்.  திருட்டு ராஸ்கல்.  ரொம்ப தேறிட்டடா நீ.  அமுக்கமா இருந்துண்டு எப்படியெல்லாம் யோசிக்கற.  எனிவே, நீ சொல்றது கூட நாட் எ bபேட் ஐடியா.  ஆனா, நீயோ குஜராத் கஞ்சிய கொட்டிண்டு அலையற.  சுபஸ்ய சீக்கிரம்னு சொல்லுவா.  முதல்ல நீ உங்க அம்மாகிட்ட பேசு.  நாமளா ஏதோ பண்ணப் போய் நாளைக்கு உங்க அம்மாவுக்கு இதெல்லாம் தெரிஞ்சா மனசுக்கு கஷ்ட படுவா.  நானும் இதப்பத்தி பவானி கிட்ட பேசறேன்.  அந்த ராட்சஸி ஸ்பெஷலா ஏதாவது யோசிப்பா.'

'ஏண்ணா, மன்னி உங்களுக்கு ராட்சஸியா?  சொல்றேன் மன்னிகிட்ட.'

'அவ கிட்ட சொன்னா அந்த அசட்டு பிராமணனுக்கு வேற வேலையில்லன்னு சொல்லப் போறா.  இதெல்லாம் தம்பதிகளுக்குள்ள சகஜம் தம்பி.  உனக்கு ஒரு குமுதாவோ அமுதாவோ வந்துட்டா இதெல்லாம் புரிஞ்சிடப் போவுது.'

'ஏக்கேண்ணா, மன்னி கிட்ட நீங்க இதப் பத்தி பேசும்போது நான் சாரி கேட்டதா சொல்லுங்கோ.'

'எதுக்கு சாரி'

'மன்னியோட சொந்தக்கார மாமா பேசிண்டிருக்கும் போது நான் ஒரு பதிலும் சொல்லாம அப்ரப்ட்டா கிளம்பியிருக்க கூடாது.'

'ஒம் மேல என்னப்பா தப்பு இருக்கு.  அதைப் பத்தியெல்லாம் நெனச்சு கவலைப் படாத.  அதெல்லாம் எங்க வீட்டு வில்லி சமாளிச்சுட்டா.  அதான் சொன்னேனே.'

'இந்த அமூல் அப்பாய்ண்ட்மெண்ட் ஆர்டர் வேற டிலே ஆயிண்டே இருக்கண்ணா.  ஒரே குழப்பமா இருக்கு.'

'நான்தான் சொன்னேனே ஏற்கனவே.  ஊப்பர்வாலா உனக்கு கண்ணாலம் கட்டிப் பார்க்கணும்னு நெனச்சுட்டான்.  மத்ததெல்லாம் லேட்டாத்தான் ஆகும்.'

'சரிண்ணா.  நான் அம்மா கிட்ட பேசறேன்.  எனி ஹெல்ப்புன்னா நீங்கதான் வந்து அம்மாகிட்ட பேசணும்.  கிளம்பலாமா?'

'அப்ப அந்த உமா ஜாதகத்தை ட்ராப் பண்ணிட சொல்லட்டுமா பவானிகிட்ட'.

'மோர் ஆர் லெஸ் அப்படித்தான் தோணறது.  இருந்தாலும் அவா கிட்ட டைரக்ட்டா சொல்ல வேண்டாம்.  அவா வருந்தப் படப் போறா.'

'உங்க அம்மா எப்ப கல்யாண பேச்சை மும்மரமா ஆரம்பிச்சாளோ என்னவோ, பயலுக்கு நாளுக்கு நாள் ச்சாய்ஸ் ஏறிண்டே போறது.  எல்லாத்துக்கும் மச்சம் இருக்கணும் மச்சி.'

சிரிக்கிறார்கள்.

தொடரும்...

No comments:

Post a Comment