Wednesday, March 2, 2022

திரிபலா சூரணம்

 அருமருந்தான திரிபலா சூரணம்; 

யார், எப்படி பயன்படுத்த வேண்டும்?

சித்த மருத்துவத்தில் அதிகம் பயன்படுத்தப்படுவது திரிபலா சூரணம். ஆனால், அந்த மருந்தை தகுந்த சித்த மருத்துவர் பரிந்துரையின்றிதான் பலரும் எடுத்துக்கொள்கிறார்கள். அது தவறு. திரிபலா சூரணத்தை எப்படிப் பயன்படுத்த வேண்டும், அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தினால் என்ன ஆகும் என்பதைத் தெளிவுபடுத்துகிறார், மதுரையைச் சேர்ந்த சித்த மருத்துவர் ப.செல்வ சண்முகம்.

``திரிபலா சூரணம் சித்த மருத்துவத்தில் முக்கியமான ஒரு மருந்து. நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் ஆகிய மூன்றும் சேர்ந்த கலவை இது. மூன்றுமே காய்களில் வந்தாலும் முற்றிய கனிகளைத்தான் இந்தச் சூரணம் தயாரிக்கப் பயன்படுத்துகிறோம். மூன்றையும் தனித்தனியாக நன்றாகக் காயவைத்து விதைகளையும் நரம்புகளையும் நீக்கிவிட்டு பொடியாக்கி சமஅளவு கலந்து வைத்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொன்றும் மூன்றில் ஒரு பங்கு இருக்க வேண்டும்.

திரிபலாவின் நன்மைகள்

பொதுவாக, இது அனைவராலும் பயன்படுத்தப்படும் பொருளாக இருக்கிறது. சாதாரண வாய்ப்புண்ணிலிருந்து, வயிற்றுப்புண், குடல்புண் போன்ற பல பிரச்னைகளுக்கும் இது பயனுள்ளதாக இருக்கிறது. மேலும், இந்தக் காலத்தில் இதை சர்க்கரை நோய்க்கும், மலச்சிக்கலுக்கும்தான் அதிகம் பயன்படுத்துகிறார்கள். உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன், மூட்டு வலி ஆகியவை வராமல் தடுக்க ஆரோக்கியமானவர்களும் இதைத் தினமும் எடுத்துக்கொள்ளலாம். கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் இந்த மூன்றிலும் உடம்புக்குத் தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்து இருப்பதால் அனைவரும் பயன்படுத்தலாம்.

ரத்தக்குழாய் சுருங்கி விரியக்கூடிய தன்மையை மேம்படுத்தி ரத்தத்தை சீர்படுத்தவும், மாரடைப்பைத் தடுப்பதற்கும் பயனுள்ளதாக இருக்கும். இரும்புச்சத்து, கால்சியம் சத்து, நுண்தாது உப்புகள் ஆகியவை திரிபலா சூரணத்தில் கலந்து இருப்பதால் ஆரோக்கியமான உடல் இயக்கத்துக்குத் தேவையான சத்துகள் கிடைக்கின்றன. வயோதிகத்தைத் தள்ளிப்போடுவதற்கும் திரிபலாவில் உள்ள சத்துகள் உதவியாக இருக்கும். திரிபலா சூரணத்தை பல்பொடியாகவும் பயன்படுத்தலாம். நவீன பற்பசைகள் கெமிக்கல் நிறைந்தவையாகவே இருக்கின்றன.

இதற்கு மாற்றாக திரிபலா சூரணத்தில் ஒரு டீஸ்பூன் கிராம்பு மற்றும் ஒரு டீஸ்பூன் கல் உப்பை பொடித்துக் கலந்து பல்பொடியாகப் பயன்படுத்திக்கொள்ளலாம். இந்தக் கலவையை வெந்நீரில் போட்டு கொதிக்க வைத்து வாய் கொப்பளித்தால் வாய் துர்நாற்றம், பல் ஈறுகளில் ரத்தக்கசிவு போன்றவை தடுக்கப்பட்டு பல் மற்றும் ஈறுகள் உறுதியாக இருக்கவும் உதவும்.

திரிபலாவில் தாவர வேதிப்பொருள் இருப்பதால் ரத்தப்போக்கை நிறுத்தக்கூடிய தன்மை உண்டு. அதாவது, வெட்டுக்காயம், மூலநோய் போன்ற நோய்களால் ஏற்படும் ரத்தப்போக்கை இதன் மூலம் குணப்படுத்தலாம். மேலும், பெண்களின் மாதவிடாய் காலத்தில் அதிக உதிரப்போக்கு இருந்தால் அதைக் கட்டுப்படுத்துவதற்கும் இதைப் பயன்படுத்தலாம்.

ஒரு வயதுக்கு மேலான குழந்தைகள் முதல் அனைவரும் திரிபலா சூரணத்தைப் பயன்படுத்தலாம். கர்ப்பிணிகள் முறையான மருத்துவ ஆலோசனையுடன் இதைப் பயன்படுத்தலாம். வயதானவர்கள் அவர்களின் வயதுக்கும் தேவைக்கும் தகுந்தாற்போல் கால் தேக்கரண்டி முதல் ஒரு தேக்கரண்டி வரை எடுத்துக்கொள்ளலாம். மலச்சிக்கல் உள்ளவர்கள் ஒரு தேக்கரண்டி சாப்பிடலாம். சர்க்கரை நோய் உள்ளவர்கள் இதைத் தொடர்ந்து எடுத்துக்கொள்ளும்போது நாளொன்றுக்கு அரை தேக்கரண்டி எடுத்துக்கொள்ளலாம்.

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதை மனதில் வைத்துக்கொண்டு இதை அளவோடு சாப்பிட வேண்டும். அதிகமாக எடுத்துக்கொண்டால் வயிற்றுப்போக்கு, குமட்டல், வாந்தி போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. ஒரு கிராம் முதல் இரண்டு கிராம் வரை எடுத்துக்கொண்டால் பக்கவிளைவுகள் வருவதற்கு வாய்ப்பு இல்லை.

No comments:

Post a Comment