சதுரகிரி மலை பயண அனுபவங்கள்....
**************
புதன்கிழமை 10.3.2021 காலை 6.30 மணி அளவில் சதுரகிரி மலை அடிவாரத்தில் இருந்து மலையேற்றம் ஆரம்பித்தோம். சதுரகிரி செல்வது இது நான்காவது முறை.
.சூரியன் எட்டிப்பார்க்கமால் சிறிது மேகமூட்டமாக இருந்ததால் நன்கு குளிர்ச்சி நிலவியது.. முதலில் கருப்பண்ணசாமி காவல் தெய்வ கோயிலில் வணங்கி அனுமதி பெற்று விட்டு மேலே நடக்க ஆரம்பிதோம்.
.சிறிது தூரம் சென்றவுடன் இரண்டு சிறிய அருவிகள் சலசலத்து ஓடிக்கொண்டிருந்தன. நிறைய பேர் குளித்து கொண்டு இருந்தார்கள். கால்வாசி தூரம் சென்றவுடன் வழுக்குப்பாறை வந்தது. பெயரை போலவே கொஞ்சம் தடுமாறினாலும் வழுக்கி கீழே கொண்டு சென்று விடும். அதை தாண்டியவுடன் சிறிது தூரத்தில் அத்தி ஊற்று என்ற இடம். இங்கே மழைக்காலங்களில் அதிகம் - நெஞ்சளவு - தண்ணீர் அதி வேகத்தில் செல்லும்.
.அருகில் சங்கிலி பாறை என்ற இடம். மழை காலங்களில் நீரின் வேகத்தை சமாளித்து நடக்க முடியாது என்பதால் பிடித்து நடக்க இங்கே சங்கிலி கட்டி இருப்பார்கள். அதுதான் சங்கிலி பாறை. இப்போது சங்கிலிக்கு பதில் மிக கனமான - கையளவு தடிமன் கொண்ட நைலான் கயிறு வனத்துறையால் கட்டப்பட்டுள்ளது. நாங்கள் மேலே செல்லும்போது முட்டி அளவு தண்ணீர் சென்றது.
.அதை தாண்டி சென்றவுடன் கொஞ்சம் கடினமான செங்குத்தான கரடுமுரடான ஏற்றமான பாதை . கொஞ்சம் சிரமப்பட்டுதான் எற வேண்டும். அதை அடுத்து வருவது கோணதலைவாசல் என்ற இடம். இதற்கு முன்னும் பின்னும் உள்ள இரண்டு கிலோமீட்டர் தூரம் மிக கடின ஏற்றங்கள் கொண்ட பகுதி. புதிதாக வருபவர்கள் மிகவும் சிரமப்படும் பகுதி இதுதான்.
.இதற்கு அடுத்து வருவது கோரக்கர் குகை எனப்படும் பகுதி . இங்கே கோரக்கர் தங்கி இருந்து தவம் செய்த குகை ஒன்றும் உள்ளது. சற்று ஆழத்தில் கீழே சென்று பார்க்க வேண்டும். சற்று தூரத்தில் நாவல் ஊற்று என்ற மிக பழமையான நாவல் மரத்தின் அடியில் ஊரும் ஊற்று . நீரிழிவு நோயை குணமாக்க கூடியது என்பார்கள். நாங்கள் செல்லும்போது நிறைய தண்ணீர் நின்றது.
.பல இடங்கள் முன்னர் சென்றபோது இருந்ததை விட அதிக அடர்த்தி கொண்ட காடுகளாக மாறி இருந்தன. சில இடங்கள் பகலில் கூட இருளாக அடர்த்தியாக இருந்தது.
.அடுத்து இரட்டை லிங்கம், வன காளி கோயில் ஆகியவற்றை தாண்டி சென்றால் பிலாவடி கருப்பு சாமி கோயில். சதுரகிரியின் காவல் தெய்வம். இதை வணங்கி விட்டு நேராக சந்தன மஹாலிங்கம் செல்லும் பாதையில் சென்று தரிசனம். அதற்கடுத்து சுந்தர மகாலிங்கம் பிரதோஷ சிறப்பு தரிசனம்.
.மாலை அன்னதானம் சாப்பிட்டுவிட்டு அங்கே உள்ள மண்டபங்களில் தூங்க சென்றோம். இரவு 8 மணிக்கு திடீரென ஆரம்பித்த மழை கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் விடாமல் கொட்டியது. பேய்மழை என்பார்களே , அப்படி பெய்தது. இரவு கடும் குளிர் . 16°C இருந்தது.
.காலை 4 மணிக்கே எழுந்து தயாராகி 5 மணி அளவில் சுந்தர மஹாலிங்கம் சந்நிதியில் முதல் நபராக முன்வரிசையில் சென்று அமர்ந்துவிட்டோம். 6 மணிக்கு சிவராத்திரி தினத்திற்கான சிறப்பு அபிஷேகங்கள் ஆராதனை முடித்தவுடன் மலை இறங்க ஆரம்பித்தோம்.
.இறங்கும்போது பத்திற்கும் மேற்பட்ட இடங்களில் வழிநெடுக அருவிகள் கொட்டிக்கொண்டு இருந்தன. அதேபோல் சங்கிலி பாறை என்று முன்னர் குறிப்பிட்ட இடத்தில நெஞ்சளவு தண்ணீர் சென்றது . ( காரணம் , இரவு பெய்த பெருமழை ) இதை கடந்து செல்பவர்கள் மிகவும் சிரமம் பட்டர்கள்.. அத்தி ஊற்றில் நெஞ்சளவு அருவி நீரில் சிறப்பான குளியல் .
. நாங்கள் கீழே இறங்கும்போது, கீழேயிருந்து மேலே சிவராத்திரி இரவிற்காக ஏறி கொண்டு இருந்த பக்தர்கள் கிட்டத்தட்ட 50,000 பேர் வரை இருக்கும். மலை பாதையே கண்ணுக்கு தெரியாத அளவில் பெரும் கூட்டம் ஏறி வந்தது. 5 வயது முதல் 80 வயது வரை அனைவரும் ஏறி கொண்டு இருந்தனர். எங்களால் பல இடங்களில் இறங்க முடியாமல் கடும் நெரிசல். இரண்டு மணிநேரம் எங்களுக்கு தாமதமானது.
.கீழிறங்கி வந்தவுடன் மறுபடியும் கருப்பண்ணசாமி காவல் தெய்வ கோயில் சென்று நன்றி சொல்லிவிட்டு திருவாரூர் வந்து சேர்ந்தோம்.
.இறையிடம் இருந்து அழைப்பு வந்தது சென்று வந்தோம். மறுபடியும் அழைப்பு வந்தால் செல்ல வேண்டியதுதான். நன்றி🙏
- ஹீலர் செந்தில் குமார்- அவரின் fb. பதிவு
No comments:
Post a Comment