(தெரிந்து கொள்ளலாமா?..)
தர்ம சாஸ்திரம்பகுதி −17
(ஆசிரியர் − திரு. V. ராஜகோபால கனபாடிகள்..)
231. ஒரு குழந்தையின் ஜனனம் நிகழும்போது, அந்தக் குழந்தையின் தகப்பனார், அவருடைய சகோதரர்கள், தந்தை வழி பாட்டன்பாட்டி, குழந்தையின் மூத்த சகோதரர்கள் ஆகியோர் எந்தக் கோவிலுக்குள்ளும் பத்து தினங்களுக்கு நுழையக் கூடாது.
232. கோயில்களில் த்வஜஸ்தம்பத்தின் முன்னர் மட்டுமே நமஸ்கரிக்க வேண்டும். மற்ற இடங்களில் நமஸ்காரம் செய்யக் கூடாது.
233. கோயில்களில் தெய்வத்தைத் தவிர வேறு எவரையும் வணங்கக் கூடாது.
234. திருமணமான ஆண்கள், கோயிலில் பஞ்சகச்சம் அணியாமல் பூஜை செய்யக் கூடாது.
235. சிவன் கோயிலை விட்டு வெளியேறுமுன், கோயிலின் நுழைவாசல் அருகே சிறிது நேரம் அமர்ந்துவிட்டே வெளியேற வேண்டும்.
236. மாலை சுவாமி சந்நிதியில் விளக்கேற்றிய பிறகு, பசுஞ்சாணி, வரட்டி போன்றவற்றை வாங்கவோ, விற்கவோ கூடாது.
237. ப்ரதமை திதியில் ஒரு வித்தையைக் கற்க ஆரம்பிப்பதையோ, ஒரு தொழில் தொடங்குவதையோ செய்யக் கூடாது.
238. தலைமுடி திருத்துதல், முகச்சவரம் போன்றவற்றை சூரிய உதயத்திற்கு முன்பும், மதியம் ஒரு மணிக்குப் பின்பும் செய்யக் கூடாது.
239. புது வீடு கட்ட ஆரம்பிப்பதையோ, பழைய வீட்டைப் புதுப்பிப்பதையோ, சனி, செவ்வாய்க் கிழமைகளில் செய்யக் கூடாது.
240. வீடு கட்ட ஆரம்பிப்பதையும், க்ருஹப் பிரவேசத்தையும் அக்னி நட்சத்திர காலத்தில் (28 நாட்கள்) செய்யக் கூடாது.
241. திருமணமான பெண்ணை, நம் வீட்டிலிருந்து புகுந்த வீட்டிற்கு செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் அனுப்பி வைக்கக் கூடாது.
242. மரண யோகத்தில் அனைத்து சுபகாரியங்களையும் விலக்க வேண்டும்.
243. இறந்த வீட்டிற்கு, துக்கம் விசாரிக்க, இறந்ததிலிருந்து வருகின்ற ஒன்பதாம் நாள் செல்லக் கூடாது.
244. ருத்ர ஏகாதசிக்குரிய ஜப ஹோமங்களை மாலை, இரவு நேரங்களில் செய்யக் கூடாது.
245. மஹாளயபக்ஷம் பதினைந்து நாட்களிலும் சுபகாரியங்களை விலக்க வேண்டும்.
246. வளர்பிறை சதுர்த்தி அன்று சந்திரனைப் பார்க்கக் கூடாது.
247. சபரி மலைக்கு விரதம் இருந்து செல்பவர்களை, அவர்களது பெயரிட்டு அழைக்கக் கூடாது.
அவர்களை "ஸ்வாமி" அல்லது "ஐயப்ப ஸ்வாமி" என்றே அழைக்க வேண்டும்..
248. சாவி, பூட்டு ஆகியவற்றை நேரடியாக ஒருவர் கையில் கொடுக்கவும் கூடாது. ஒருவரிடமிருந்து நேரடியாக வாங்கவும் கூடாது. (இரும்பை நேரடியாக வாங்குவதும், கொடுப்பதும் அமைதியின்மையை உண்டாக்கும்.)
249. வீட்டு வாயிற்படிக்கு உட்பக்கம் நின்றுகொண்டு, வாயிற்படிக்கு வெளியே இருப்பவரிடம் எதையும் கொடுக்கக்கூடாது. அவர்களை வீட்டுக்கு உள்ளே வரவழைத்தோ அல்லது நாம் வாயிற்படியைத் தாண்டியோ சென்றுதான் கொடுக்க வேண்டும்.
250. இடது கையால் எந்தப் பொருளையும் யாருக்கும் கொடுக்கக் கூடாது.
(வளரும்..)
No comments:
Post a Comment