கறுப்புச் சக்தி - சுஜாதா
தூர்தர்ஷன் பதின்மூன்று தமிழ்ச் சிறுகதைகளைத் தேர்ந்தெடுத்துப் பிரபல டைரக்டர்களிடம் கொடுத்து குறும்படங்களாகப் பண்ணிக்கொடுக்கும்படி சொல்லியிருக்கிறது. டைரக்டர் வஸந்த், சா. கந்தசாமியின் சிறுகதையையும், சுஹாசினி, கி. ராஜநாராயணன் கதையையும் செய்துமுடித்திருக்கிறார்கள்.
பாலுமகேந்திரா என் ‘நகரம்’ கதையை எடுத்துக்கொடுக்கச் சம்மதித்திருக்கிறார். டெல்லியிலிருந்து நிதி வரக் காத்திருக்கிறார்.
வஸந்த் தன் குறும்படத்தை நண்பர்களுக்குப் போட்டுக் காட்டினார். நல்லகூட்டம். டாக் (Tag) சென்டர் அரங்கம் நிரம்பியிருந்தது. கந்தசாமியைப் பற்றிய ஓர் அறிமுகத்துடன் ‘தக்கையின் மீது நான்குகண்கள்’ தொடங்கியது. படிக்கச் சுவாரஸ்யமாக இருக்கும் சிறுகதையைப் பார்க்கவும்
சுவாரஸ்யமாகச் செய்வது எவ்வளவு கஷ்டம் என்பதை வஸந்த்தின் முயற்சி நிரூபித்தது. சப்-டைட்டில் போட்டு நாடெங்கும் காட்டும் தூர்தர்ஷனின் இந்தத் திட்டம் பாராட்டுக்குரியதே!
சிங்கப்பூர் வானொலியின் ஒலி எஃப்.எம். நிலையத்திலிருந்து போன் செய்து, சென்ற ஆண்டின் சிறந்த அறிவியல் கண்டுபிடிப்பு எது என்பதை அரை நிமிஷத்தில் சொல்ல முடியுமா என்று கேட்டார்கள். இயல்பாக இவ்வகை திடீர் பேட்டிகளுக்கெல்லாம் நான் சம்மதிப்பதில்லை. ஆனால், அறிவியல் என்பதாலும், சிங்கப்பூர்வானொலியின் இந்தச்செயலைப் பாராட்ட வேண்டும் என்பதாலும் அரைமணி கழித்து போன் செய்யச் சொன்னேன். அதற்குள் தயார் செய்து கொண்டு நான் நிகழ்த்திய ஒரு நிமிட உரை இது...‘‘சென்ற ஆண்டின் மிகச் சிறந்த அறிவியல் கண்டுபிடிப்பு என்று பலவிஷயங்களைச் சொல்லலாம். மரபணுவுக்கும் மனநோய்க்கும் உள்ள தொடர்பைக் கண்டறிந்திருக்கிறார்கள்.
Global warming பற்றிப் புதிய செய்திகள் சேகரித்திருக்கிறார்கள். எம்ப்ரியானிக் ஸ்டெம்ஸெல்ஸைப் (Embryonic Stemcells) பிரிப்பது, வெளிச்சத்தைப் புதிய வழியில் வளைக்க வல்ல பொருள்கள், நம்முடைய ‘ஒய்’ க்ரோமோசோமில் ('Y' Chromosome) டூப்ளிகேட் ஜீன்கள் (Genes) இருப்பது, கான்சருக்குப் புதிய மருந்து வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டிருப்பது... இதையெல்லாம் விட Dark Energy என்கிற கரியசக்தி பிரபஞ்ச விண்வெளியில் காலக்ஸிகளும் நட்சத்திரங்களும் ஈர்ப்பு விசையையும் மீறி Big Bang-க்குப்பின் விரிவடைவதன் காரணத்தை அறிந்ததுதான் இவ்வாண்டின் மிகப் பெரிய அறிவியல் கண்டுபிடிப்பு!’’‘பிக்பாங்’ என்ற கருத்து ஐன்ஸ்டைனின் சார்பியல் தத்துவத்தில் (Theory of Relativity) இருந்து கிளைத்தெழுந்தது.
வெகு தூரத்து நட்சத்திரங்களிலிருந்து வரும் வெளிச்சத்தின் நிறமாலை சிவப்பு நோக்கி சற்று நகர்ந்திருப்பதை ரெட்ஷிப்ட் (Red Shift) என்பார்கள். அதிலிருந்து மறைமுகமாகப் பிரபஞ்சத்தில் எல்லா நட்சத்திரங்களும் கேலக்ஸிகளும் ஒன்றிலிருந்து ஒன்று விலகிச் செல்கின்றன என்று அறிந்தார்கள்.
சுமார் 1500 கோடி ஆண்டுகளுக்கு முன் மிகச் சிறிதாக, மிக அடர்த்தியாக இருந்த பிரபஞ்சம் வெடித்துச் சிதறியது. அப்போதுதான் காலமும் தூரமும் பிறந்தது. (அதற்கு முன்பி ரபஞ்சமே இல்லாதிருந்தது என்பதை உங்களுக்குப் புரியவைப்பது கஷ்டம்).
இன்னும் சிதறல் முடியவில்லை என்பதுதான் தற்போது ஒப்புக்கொள்ளப்பட்ட சித்தாந்தம். இதன் அடையாளமாக பிரபஞ்சவெளியில் எங்கே நோக்கினும் பரவியிருக்கும் சீரான, லேசான உஷ்ணத்தை 1965-ல் ஆர்னோபென்ஸியாஸ் ராபர்ட்வில்ஸ்டன் கண்டுபிடித்து நோபல் பரிசு பெற்றார்கள்.
இந்தக் கருத்து நிலைத்தது. சாதாரணமாக மேட்டர் (Matter) என்னும் பருப்பொருள் ஒன்றையன்று ஈர்க்கவேண்டும். அப்படி இல்லாமல் பருப்பொருள்கள் ஒன்றிலிருந்து ஒன்று விலகிச் செல்கின்றன என்றால் ஈர்ப்புசக்தியை மீறும் மறைமுகசக்தி பிரபஞ்சவெளியில் இருக்கவேண்டும்.
இதைத்தான் டார்க் எனர்ஜி (Dark Energy) என்கிறார்கள். பிரபஞ்சம் யாரோ ஊதும் மகா பலூன். இன்னமும் ஊதல் நிற்கவில்லை. பலூனை ஊதுவது இந்த டார்க் எனர்ஜி.
பசி என்பதற்கு வயிற்றுத்தீ என்று ஓர் அன்பர் எழுதியிருந்தார். மற்றபடி பசிக்கு வேறு வார்த்தை எதுவும் மென்னஞ்சலிலோ, மின்னஞ்சலிலோ வரவில்லை. புத்தாண்டுக்கு நட்சத்திர ஓட்டல்களில் விதவிதமாக விருந்து படைப்பதாக நகரெங்கிலும் விளம்பரங்களைப் பார்த்தேன். இ.சி.ஆர். ரோடு முழுவதிலும் விருந்தோவிருந்து. விருந்து என்ற சொல் தமிழில் சங்ககாலத்திலிருந்தே உறவினர், நண்பர்களுக்கு அளிக்கும் விசேஷ உணவுக்கான வார்த்தையாகப் பயன்பட்டுவருகிறது.
‘மாலை நனிவிருந்துஅயர்மார்’ என்று குறுந்தொகையில் வருகிறது. தொல்காப்பியர் ஏழு இடங்களில் இச்சொல்லைப் பற்றிக் கூறுகிறார். உண்மையில் உயர்திணையாக இருந்தாலும் 'விருந்து வந்தது' என அஃறிணையைப் போலச் சொல்லலாம் என்கிறார். ‘விருந்துகண்டு ஒளிக்கும் திருந்தா வாழ்க்கை’ என்று விருந்தாளி வந்தால் ஒளியவேண்டிய வாழ்க்கையை நொந்து புறநானூறு கூறுகிறது.விருந்து என்பதற்கு புதுசாக புனையப்பட்டது என்றும் தொல்காப்பியம் அர்த்தம் கூறுகிறது.‘‘விருந்தேதானே புதுவது புனைந்தயாப்பின் மேற்றே.’’
இதன்படி இன்று எழுதப்படும் புதுக்கவிதையெல்லாம் விருந்துதான்.'இறந்து போன முன்னோர்கள், தெய்வம், விருந்தினர், உறவினர், தன் குடும்பம் ஆகிய ஐந்து பக்கத்தாரையும் பேணுவது இல்லறம் செய்பவனின் முக்கிய கடமையாகும்' என்கிறார் வள்ளுவர்.
‘‘தென்புலத்தார்தெய்வம்விருந்தொக்கல்தான்என்றாங்கு, ஐம்புலத்தாறு ஓம்பல்தலை’’.‘அறவோர்க்கு அளித்தலும், அந்தணர் ஓம்பலும், துறவோர்க்கு எதிர்தலும், தொல்லோர் சிறப்பின் விருந்தெதிர்க்கோடலும் இழந்த என்னை’ என்னும் போது விருந்தினரை எதிர்கண்டு வரவேற்றுப் பாரமரிப்பதைப் பெரிசாகக் கருதுகிறது சிலப்பதிகாரம்.அடுத்த தடவை விருந்துண்ணச் செல்லும் போது இந்தப் பழைமையான தமிழ்வார்த்தையின் சிறப்பை, சங்ககாலத்திலிருந்து விருந்துண்பதைக் கொஞ்சம் யோசித்துவிட்டுப் ளேட்டை நிரப்புங்கள்.
புதுவருஷத்தில் எனக்கு தேதி கிழிக்கும் காலண்டர்களும் அகலமான டயரிகளும் அனுப்பிய அத்தனை அன்பர்களுக்கும் நன்றி.
தேதி கிழிக்கும் காலண்டர் எனக்கு கொட்டை எழுத்தில் 11.1.2004 ஜனவரி ஞாயிறு என்னும் செய்திக்கு மட்டும்தான் பயன்.
மற்றபடி தேய்பிறை, சதுர்த்தி, மகம் சங்கடஹர சதுர்த்தி, விஷ்ணு ஆலயங்களில் ‘கூடாரவல்லி’ உற்சவம், நல்லநேரம், சுபகிரக ஓரைகள், சந்திராஷ்டமம், குளிகை என்று எறும்பு எழுத்துகளில் எழுதி இருப்பதெல்லாம் எனக்கு ஒருபயனும் இல்லை.
போன வருஷம் முதல்தேதி போல் இந்த வருஷமும் டயரி எழுதியே தீருவது என்று தீர்மானிப்பேன். புதுசான டயரியை வாசனையோடு பிரித்தவுடன் இத்தனை அருமையான, வழவழப்பான விஸ்தாரமான வெள்ளைப்பக்கத்தில், 'இன்று குழாய் அடைத்துக்கொண்டு பிளம்பர் வந்து ரிப்பேர் செய்தார்’ போன்ற லோகாயதமான விஷயங்களை எதற்கு எழுதவேண்டும் என்று வாளாவிருந்து விடுவேன்.
டயரி எழுதுவது ஒரு கற்பழிப்பு போல இருக்கும். டயரி எழுதப்படாமல் தூங்கும். முதல் மாசத்தில் ஆப்தர்கள் யாராவது வந்தால் அவர்களிடம் கொடுத்துவிடுவேன்.
சந்தோஷமாக வாங்கிக்கொண்டு போவார்கள். ஒரு மாதம் கழித்து,
‘‘என்னசார், டயரி எழுதறீங்களா?’’.
"எழுத விருப்பம்தாங்க! என்ன எழுதறது... எழுத்தாளர் நீங்கசொல்லுங்களேன்.’’
‘‘ஏதாவது எழுதுங்களேன்... போர்வெல் அடைச்சுட்டு ரிப்பேர் செய்தது, மெட்ராஸ்ல தூத்தல் போட்டது... ஏதாவது.’’‘‘
"காயிதத்தைப் பார்த்தா மனசு வரலங்க.’’
மேலே குறிப்பிட்ட ‘கூடாரவல்லி’ கூடாரை வெல்லும் என்னும் திருப்பாவை 27--ம் பாசுரத்தின் மரூஉ. கோவிந்தனைப் பாடிப்பறை கொள்வதால் பெறும் சன்மானங்களை ஆண்டாள் பட்டியலிடுகிறார்.
சூடகம், தோள்வளை, தோடு, செவிப்பூ, பாடகம் போன்ற அணிகலன்களை அணிந்து ஆடையுடுத்து பால்சோற்றில் ‘மூடநெய் பெய்து முழங்கை வழி வார’ உண்போம்' என்கிறார்.
இதனால், இந்தத்தினத்தில் ஐயங்கார் வீடுகளில் அக்காரஅடிசில் ஒரு கட்டாயம். நெய்யில் மிதந்தால் இன்னும் உத்தமம்!
No comments:
Post a Comment