Sunday, October 24, 2021

மீள்

 (மீள்!)

ஞாபகம் வருதே!

தூர்தர்ஷனில் முன்பெல்லாம் 'தடங்கலுக்கு வருந்துகிறோம்' என்று ஒரு ஸ்லைடு வருமே ஞாபகம் இருக்கிறதா? கிட்டத்தட்ட அதே அளவிற்கு அடிக்கடி நேரம் கிடைக்கும் போதெல்லாம் என் மனைவி எங்கள் பெண்களிடம் பாராயணம் செய்வது  'கல்யாணமான புதிதில் அண்ணா மன்னியை கூட அழைத்துக்கொண்டு  முதல் முதலாக டெல்லி பயணம் அல்ல , ரிஷிகேஷ், ஹரிதுவார், மதுரா க்ஷேத்ராடனம் , போன பெருமை உங்க அப்பா ஒருவருக்குத்தான் உண்டு'  என்ற இந்த வசனத்தைத் தான். அது ஒருபுறம் இருக்கட்டும். என் அண்ணன் (பெரியப்பா பையன் ) நாராயணனுக்கு எங்கள் டெல்லி விஜயத்தினால் ஏற்பட்ட ஒரு தர்மசங்கடத்தை நீங்களும் கேளுங்களேன்:

"அத்திம்பேர், டெல்லியில் நல்ல ஷூ எல்லாம் சீப்பா கிடைக்குமாம்!" என்று மைத்துனன் பத்மநாபன் சொல்லி முடித்ததும்  அடுத்த வினாடியே 'டன்'  என்றான் நாராயணன். ஒரு வாரம் நாங்கள் ஊரைச்சுற்றி கோவிலுக்கு எல்லாம் போய்விட்டு, சம்பிரதாயப்படி தாஜ்மஹாலை தரிசித்து, மூஞ்சிகளை  தூக்கிக்கொண்டு போட்டோவும் எடுத்துக் கொண்டு, கை கால் ஓய்ந்து  போய், மூணு நாள் தமிழ் சாப்பாட்டிற்காக, பிரதிபலனாக யார் யாரோ கொடுத்த மூட்டைகளை எல்லாம் தலையில் தூக்கிக்கொண்டு, நிஜாமுதீன் ஸ்டேஷனில் வந்து விழுந்த பிறகு தான் தெரிந்தது நாராயணன் ஷூ வாங்க மறந்தது!

குட்டி மண் கோப்பையில் டீ குடித்துக் கொண்டிருக்கும்போது மன்னி, சரியாக வண்டி புறப்பட போகும் 5 நிமிடத்திற்கு முன்னாடி அண்ணாவை கன காரியமாக கேட்டாள். "பத்துவுக்கு என்ன பதில் சொல்லப் போறேள்?" என்று!  மண்சட்டி தீயை குடித்துக்கொண்டே "Indigenous disposable cup!" என்று பதில் சொன்னான்.

நாக்பூரில் வண்டி நிற்கும்போது 'சந்த்ரா' அதாவது ஆரஞ்சு பழம்  மலிவாய் கிடைக்குமே  என்று நாராயணன் கேட்டதற்கு " தம்பி ஷூ கேட்டா என்ன சொல்லுவேள்?"என்று எங்கள் மன்னி எசப்பாட்டு பாடினாள்.

இப்படி எந்த சப்ஜெக்ட்டில் இருந்து எந்த கேள்வி கேட்டாலும் எங்கள் மன்னி "ப்பாடியப்பா ஷூ எங்கே" சென்று எங்கள் அண்ணாவிற்கு ஒரே பதிலையே திருப்பி திருப்பி சொல்லி வந்ததால், பகல் நேரத்திலேயே கண்ணை மூடிக் கொண்டு தூங்குவது போல பாவனை செய்ய வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு ஆளாகி விட்டான்.

சென்ட்ரல் வந்தவுடன், ஏதோ அகதிகள் முகாமில் இருந்து வீட்டுக்கு வந்தது போல, தமிழ் எழுத்துக்களை பார்த்து பரவசமடைந்து ஒருவழியாக அங்கே உள்ள போர்ட்டர்களே வியக்கும் வண்ணம், ராஜஸ்தான் பாரம்பரிய நாட்டியக்காரி போல ஒன்றன் மேல் ஒன்றாக (யார், யார் வீட்டுக்கோ!) தலையில் லக்கேஜ்களை தூக்கிக்கொண்டு, ஒரு வழியாக டாக்ஸியில் வீடு வந்து சேர்ந்தோம்.

இரண்டு மணி நேரம் கூட ஆகியிருக்காது. யாரிடமும் சொல்லாமல் நாராயணன் தனியாக டி நகருக்கு கிளம்பிவிட்டான்.  வரும்போது 1299 ரூபா 95 பைசாவிற்கு அருமையான பேட்டா ஷூ ஒன்று வாங்கி வந்தான். வீட்டிற்கு வந்ததும்  ஸ்டிக்கரை கிழித்தான். ஒரு நியூஸ் பேப்பரில் சுற்றி வைத்தான். 

பத்து என்கிற பத்மநாபனுக்கு  ஒரே சந்தோஷம்! "எவ்வளவு அத்திம்பேர்?" என்று வெகுளியாக கேட்டான். "200 ரூபாய் சொன்னான் 180க்கு வாங்கினேன்" என்றான்.  அவன் விடாமல் "Bata"  என போட்டிருக்கிறதே?" என்று மடக்கினான். "உனக்கு தெரியாதா? அவர்களது டூப்ளிகேட் நமது ஒரிஜினலை விட நன்றாக இருக்கும்" என்று நற்சான்று பத்திரம் கொடுத்தான் நம் நாராயணன்! ஆனால் வாய் ஓயாமல் பத்து நன்றி சொல்லிக்கொண்டே இருந்தான். இதற்குப் பிறகு மன்னி அமைதியாகி விட்டாள் என்பதை நான் உங்களுக்கு சொல்லாமலேயே விளங்கியிருக்கும்.

இரண்டு நாள் கழித்து நாராயணனுக்கு ஒரு போன் வந்தது (அப்போதெல்லாம் லேண்ட்லைன் இருந்தால்கூட பெருமை ஆயிற்றே). பந்தாவாக நாராயணன் "ஹலோ ?"என்றான். மறு முனையில் பத்து, "இந்த முறை டெல்லி போகும்போது இதே மாதிரி ஆறு ஜோடி வாங்கி வாருங்கள்" என்று அன்புக் கட்டளை இட்டான். நிஜமாகவே நாராயணன் அதற்கு பிறகு டெல்லி போகவே இல்லை!


                  *******

No comments:

Post a Comment