இந்த ஸ்வீட் செய்ய அடுப்பை கூட பற்ற வைக்க வேண்டாம். உங்க வீட்ல இந்த 3 பொருள் இருக்கா? 10 நிமிடத்தில் சூப்பர் ஸ்வீட் ரெடி.
சின்ன வயசுல பக்கத்துல பெட்டி கடையில எல்லாம் கிடைக்கும் ஸ்வீட் தான் இது. பொட்டுக்கடலை கேக் ரெசிபி எப்படி செய்வது என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். உங்க வீட்டில் இருக்கக்கூடிய சுலபமாக கிடைக்கக்கூடிய பொருட்களை வைத்து அசத்தலான இந்த ஸ்வீட் ரெசிபியை எப்படி செய்வது தெரிஞ்சுக்கலாம் வாங்க. நிச்சயமா இந்த ஸ்வீட்ட செஞ்சு சாப்பிடும்போது சின்ன வயசுல நாம சாப்பிட்ட அந்த ஸ்வீட் போலவே இருக்குதுல்ல அப்படின்னு உங்களுக்கு தோணும்.
இந்த ஸ்பீட் செய்து காற்று புகாத ஒரு டப்பாவில் போட்டு வைத்துக் கொண்டால் 1 மாதம் வரை கூட கெட்டுப்போகாது. சரி சரி அந்த சூப்பர் ரெசிபியை நேரத்தைக் கடத்தாமல் இப்போதே பார்க்கலாம் வாங்க.
இந்த ஸ்வீட் செய்வதற்கு பொட்டுக்கடலை – 1 கப், ஏலக்காய் – 4, சர்க்கரை – 3/4 கப், நெய் – 1/4 கப், இந்த பொருட்கள் மட்டுமே நமக்குத் தேவைப்படும். முதலில் மிக்ஸி ஜாரில் பொட்டுக்கடலையையும் சர்க்கரையையும் ஏலக்காயையும் போட்டு நைசாக அரைத்துக் கொள்ளவேண்டும். அரைத்த இந்த மாவை இரண்டு முறை நன்றாக சலித்து எடுத்துக் கொள்ளுங்கள். குருனை நறநறவென கட்டாயமாக இருக்க கூடாது. மாவு நறநறவென இருந்தால் ஸ்வீட் ரெசிபி நறநறப்பாக வந்துவிடும். பொட்டுகடலை எந்த கப்பில் அளக்கிறீர்களோ அதே கப்பில் சர்க்கரையையும் அளந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
அரைத்த சலித்த இந்தப் பொடியை ஒரு அகலமான பவுலில் போட்டு 1/4 கப் அளவு நெய்யை இதோடு சேர்த்து உங்கள் கையை கொண்டு நன்றாக பிசைந்து கொண்டே இருக்க வேண்டும். ஐந்திலிருந்து ஏழு நிமிடங்கள் அழுத்தம் கொடுத்து பிசைந்தால் போதும். மாவு நன்றாக ஒட்டி பிடித்து பால்கோவா, குலோப் ஜாமுன் மாவு போல நமக்கு கிடைக்கும். அந்த மாவை சிறிய சிறிய உருண்டைகளாக பிடித்து கையில் கேக் போல தட்டி அப்படியே சுவைத்தாலும் இதன் ருசி சூப்பராக தான் இருக்கும்.
உங்களுடைய வீட்டில் பால்பேடா அச்சு இருந்தால் அதில் இந்த பொட்டுக்கடலை மாவை வைத்து பேடா போல ஷேப்பில் மாற்றியும் செய்து கொள்ளலாம். அது நம்முடைய விருப்பம் தான். எல்லார் வீட்டிலும் பால்பேடா அச்சு கட்டாயமாக இருக்காது. சிறிய சிறிய அளவு மூடியில் இந்த மாவை வட்ட வடிவத்தில் வெட்டி, கத்தியை வைத்து நான்கு கோடு போட்டு கூட குழந்தைகளுக்கு அழகாக கொடுக்கலாம். அது நம்முடைய விருப்பம் தான்.
ஆக மொத்தத்தில் எந்த வடிவத்தில் சாப்பிட்டாலும் இந்த ஸ்வீட்டின் சுவை கட்டாயமாக மாறப்போவது கிடையாது. உங்கள் குழந்தைகளுக்கும் ஆரோக்கியமான இந்த ரெசிபியை செஞ்சு கொடுத்து பாருங்க. நிச்சயமா வீட்ல இருக்கிறவங்க எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க.
No comments:
Post a Comment