Monday, October 25, 2021

காதல்

 காதல்?

சென்னையிலிருந்து திருச்சி செல்லும் ரயிலில் ஏறிய ராகவனும், உஷாவும் 

தங்கள் பெட்டியை கீழே பத்திரப்படுத்தி விட்டு தங்கள் இருக்கையில் அமர்ந்தவாறு தங்களை அமைதி படுத்தி கொண்டபின் , ராகவன் உஷாவிடம் கேட்டார், " இந்த கல்யாணத்துக்கு போயே தீருவேன்னு ரொம்ப பிடிவாதம் பிடிச்சயாமே? உன் பொண்ணுக்கு கொஞ்சம் கோபம் தான் . மூஞ்சியை தூக்கி வச்சுக்கிட்டு இருந்தாளே ! 

உன் மருமகளும் முழு மனசு இல்லாததான் என்னை அனுப்பினா! " என்றார்.

ராகவன் தன் பிள்ளை வீட்டில் சென்னை அண்ணா நகரிலும், உஷா பெண்ணின் வீட்டில் தாம்பரத்திலும் இரண்டு வருஷமாக பிரிந்து இருக்கிறார்கள்.

குழந்தையை பார்த்து கொள்ள மகளுக்கு அம்மா வேண்டும். ஸ்கூல் விட்டு வரும் தங்கள் பிள்ளையை தாங்கள் ஆபிஸிலிருந்து வரும் வரை பார்த்து கொள்ள மகனுக்கு அப்பா வேண்டும். 

இருவரும் சென்னை என்று பெயர்தான். அண்ணனும், தங்கையும் ஒருவர் வீட்டுக்கு இன்னொருவர் வருவது மாதத்தில் ஒரீரு தடவைகள் தான். அந்த 

அரை நாளில் வேலைதான் அதிகம் இருக்கும். ராகவனும்,உஷாவும் பேசி கொள்ள கூட சந்தர்ப்பம் இருக்காது. 

ராகவனின் கேள்விக்கு ஒரு மர்ம புன்னகையை பதிலாக அளித்த உஷா 

" அவ கிடக்கறா! நான் வேணும்னுதான் இந்த கல்யாணத்த சாக்கா வச்சு ப்ளான் பண்ணேன்.ஒரு நாலு நாள் லீவு பாட்டி, தாத்தா போஸ்டுக்கு. அடுத்த ஜூன் மாசம் குழந்தையை ப்ரீ கேஜி சேர்த்த உடனே வேற ஏதாவது ஏற்பாடு செஞ்சுக்க சொல்லிட்டு நான் கிளம்பிட போறேன்.

நம்ப ஊருக்கே போயிடலாம்.இல்லாட்டி ரெண்டு பேரும் ஒரே இடத்தில் தான் இருப்போம்னு சொல்லிடலாம்.அவங்க ஏதாவது முடிவுக்கு வரட்டும் " என்றாள்  தீர்மானமாக. 

மனைவியை ஆதுரத்துடன் பார்த்த ராகவன் " ரொம்ப இளைச்சுட்ட மாதிரி இருக்க. ரொம்ப வேலையா? " என்றார்.

" நீங்களும் தான் இளைச்சுட்டீங்க." 

நாள் முழுக்க எனக்கு குழந்தையாவது துணைக்கு இருக்கு. உங்களுக்கு பேசக்கூட ஆள் கிடையாது. " 

" சரி , நீ கொஞ்சம் ரெஸ்ட் எடு.படுத்துக்கோ" என்றவரிடம் , கொஞ்ச நேரம் உங்க மடில தலையை வச்சுக்கவா என்று கேட்டபடி அவர் மடியில் தலையை வைத்து , புடவையை சுற்றி போர்த்தி கொண்டு கண்களை மூடினாள் .

ராகவனுக்கு ஏனோ தங்கள் திருமண நாளும்,குழந்தைகள் பிறப்பதற்கு முன் தாங்கள் இருவர் மட்டும் போய் வந்த பயணங்களும் நினைவுக்கு வந்தது.

ரொம்ப வருடங்களுக்கு பிறகு மனைவியின் நெற்றியை அன்புடன் வருடினார் .

No comments:

Post a Comment