படக்கதை
By Rajineel Neelakant
தடக் தடக் தடக் தடக் என்று ரயில் ஓடிக்கொண்டிருந்தது.
நான் அந்த வயோதிக தம்பதிகளை கவனித்துக் கொண்டே வந்தேன். ஃபர்ஸ்ட் கிளாஸ் கூபே. அவர்கள் இருவரும் மற்றும் நான் மட்டுமே.
வந்ததிலிருந்து இரண்டு ஸ்டேஷன் தாண்டி ஆகியும் அந்த அம்மாள் அந்த தாத்தாவின் மடியில் தலை வைத்து படுத்திருந்தவர் எழுந்திருக்கவே இல்லை.
போர்த்திய போர்வையும் அசையவும் இல்லை. எனக்கு பாவமாக இருந்தது.
"ஐயரே அந்த அம்மாவுக்கு ஏதாவது உடம்பு சரியில்லையா"
ஆமாம் கொஞ்சம் ஜுரம்தான்.
அடடா ஜுரம் என்றால் ஏதாவது மருந்து மாத்திரை வாங்கி வரட்டுமா அடுத்த ஸ்டேஷனில்.?
இல்லை இல்லை உண்மையில் ஜுரம் இல்லை. நான் உங்ககிட்ட சொல்றதுக்கு என்ன. அவங்களுக்கு கொஞ்சம் மனநிலை சரியில்லை. தூக்க மாத்திரை கொடுத்து தூங்க வைத்து இருக்கேன். நான் கொஞ்சம் அசைந்தாலும் எழுந்திடு வாங்க .அவங்க எழுந்தாங்கன்னா ஓடும் ரயிலில் இருந்து கீழே குதிக்கிற அளவுக்கு ஆபத்தானவங்க. அதனால அவங்களை எப்படியாச்சும் கொண்டுபோய் சென்னையில என் பையன் கிட்ட சேர்ந்துட்டேன்னா அப்புறம் நான் கவலை இல்லாமல் இருக்கலாம்.
ஆனா இப்பத்தான் வண்டி ஸ்ரீரங்கம் தாண்டி இருக்கு. விடிகாலையில் சென்னை போற வரைக்கும் இப்படியே உட்கார்ந்து இருப்பீங்களா?
என்ன செய்வது நான் வாங்கி வந்த வரம் அப்படி .
கொஞ்ச நேரம் கழித்து நான் ஒரு புத்தகத்தை எடுத்து வைத்துக் கொண்டு அவர்களையே கவனித்துக் கொண்டு வந்தேன். தாத்தா சிறிது கண் அயர்வது போல தெரிந்தது. நானும் அவர்கள் வைத்திருந்த பெட்டி மற்றும் சாமான்களை கண்களால் நோட்டமிட்டேன்.
ஒரு டிரங்குப் பெட்டி செருப்பு ஒரு பை வேறு ஒன்றையும் காணோம்.
மெல்ல அந்த பெட்டியை காலால் நகர்த்தினேன். கிரீச் என்று சத்தமிட்டது. அடடா தாத்தா முழித்துக்கொண்டு விடுவாரோ என்று பயந்தபடியே காலால் அந்த பெட்டியை திறந்தேன்.பழைய காலத்து ட்ரங்குப்பெட்டி அழுத்தமாக மூடி இருந்தது. அந்த பெட்டியை திறந்து பார்த்தேன் அது காலியாக இருந்தது காலி பெட்டியை எடுத்துக்கொண்டு இவர்கள் சென்னை போகிறார்கள் அட ராமா சரியான கிறுக்கு ஆளுங்களா இருப்பார்களோ.
கொஞ்ச நேரம் கழித்து அந்த பையையும் மெல்ல திறந்து பார்த்தேன். அதிலும் எதுவும் தேறவில்லை. நல்ல வேளை தாத்தாவும் நல்ல தூக்கம் தான்.உட்கார்ந்த வாக்கில் தூங்குகிறது ஆச்சரியம். எதுவும் பேறாத போது நாமும் தூங்குவதுதான் நல்லது என்று நானும் கண்ணயர்ந்து விட்டேன்.
விடியற்காலை.
வண்டி எக்மோர் ஸ்டேஷன் வந்து அடைந்தது. அவர்கள் இருவரும் மெல்ல எழுந்து ரயிலை விட்டு இறங்கினார்கள். அந்த அம்மாள் போர்த்திய போர்வையை விடவே இல்லை. அதை இறுகப் பற்றிக் கொண்டு அந்த தாத்தாவையும் ஒரு கையால் பிடித்துக் கொண்டு இறங்க முடியாமல் ஏதோ சுமையோடு இறங்குவது போல மெல்ல இறங்கினார்
அந்தப் பெட்டியை நான் வேணா எடுத்து தரேன் என்று நான் சொன்னதும் உங்களுக்கு ரொம்ப புண்ணியமா போகட்டும் தயவு செய்து இந்த பெட்டியையும் பையையும் மெல்ல இறக்கி கொடுங்க என்றார் தாத்தா.
எடுத்துக் கொடுத்ததும் அந்தப் பெரியவர் ஒரு கையில் பெட்டியுடனும் இன்னொரு கையால் அந்த அம்மாளையும் பிடித்துச் செல்லும் காட்சியைப் பார்த்து சேச்சே இவர்களிடமிருந்து சாமானை எடுக்க நினைத்தேனே என்று நினைத்துக்கொண்டு நான் நின்றபோது
"சார் குட் மார்னிங் சார்" என்று சல்யூட் அடித்தபடி கான்ஸ்டபிள் என் எதிரே வந்து நின்றார். "ஏதாவது சிக்கித்தா சார்"
" என்னப்பா ஒன்றும் இல்லை .அவங்க பெட்டி பை எல்லாத்தையும் செக் பண்ணிட்டேன். ஒண்ணும் கிடைக்கல. அவங்களப் பாத்தா பார்த்தா பாவமா இருந்தது. அந்த அம்மா பாவம் ஒரு பைத்தியம் போல திருச்சியில் படுத்தவங்க இப்பத்தான் எழுந்தாங்க.
தூக்க மாத்திரை போட்டுட்டு படுத்தாங்க போல."
" என்ன சார் தங்கம் கடத்தி வந்து இருப்பாங்க ன்னு சொல்லிட்டு உங்களை கண்கொத்தி பாம்பாய் பார்க்க சொல்லி அனுப்பினா அவங்ககிட்ட ஒண்ணுமே இல்லைன்னு சொல்றீங்க அப்ப நமக்கு வந்த தகவல் பொய்யா" ?
அப்படித்தான் தோன்றது என்ன செய்வது?
இன்ஸ்பெக்டர் போன் பண்ணி இருக்காரு. பேசுங்க.
ஹலோ சார் நான் நல்ல பாத்துட்டேன் அவங்க பெட்டி பை எதுலயுமே ஒண்ணுமே இல்ல ஆமா சார் அவங்க கையில எடுத்துட்டு போனது பெட்டியும் பையும் தான் சார் வேற ஒண்ணும் இல்ல அந்த அம்மா போத்தின போர்வையை எடுக்கவே இல்ல"
என்னது போர்வையா!?
நல்லா நீ ஏமாந்து போனே அந்த போர்வையில்தான் அவங்க தங்கத்தை வைத்து தைத்து கடத்திட்டு போறாங்க.
சா....ர். என்ன சொல்றீங்க நான் கத்திய போது அவர்கள் பெஞ்ச் மேல் வைத்து விட்டு சென்று இருந்த காலிப் பெட்டியும் பையும் என்னைப் பார்த்து கெக்கே கெக்கே என்று சிரித்தது போல இருந்தது .
By Rajeswari Neelakantan.
Thanks to Govindaraj Lakshminarayanan
No comments:
Post a Comment