Monday, October 25, 2021

இப்படித்தான்_ஒருதடவை

இப்படித்தான்_ஒருதடவை 

நான் அப்போ திருச்சி நேஷனல் ஹைஸ்கூல்ல 📚 'ஆறா'ப்பு  படிச்சிட்டிருந்தேன் (படிச்சேன்னு சொல்றத விட போய்ட்டு வந்துட்டு இருந்தேன்றது தான், சரி) !!!

காலைல ஸ்கூல் போறதுக்கு ரெடியானப்போ அம்மா வழக்கம் போல சுடச் சுட இட்லி மொளகாப் பொடி நெய் போட்டு கெஞ்சி கூத்தாடி சாப்பிடச் சொல்லி  குடுத்தாங்க. அதுல ஒரு 6 இட்லிய 'பிகு' பண்ணிக்கிட்டே உள்ள தள்ளினேன் (அந்த வயசுல வீட்டு இட்லி 6 சாப்டறதுல்லாம் இட்லி  மாக்கான்களால தான் முடியும்) அதுக்கப்பறம், பையன் தெம்பா 🌃 படிக்கணும்ன்னு, அம்மா, ஒரு டம்ளர் நுரை ததும்ப ஹார்லிக்ஸ் போட்டுக்  குடுத்தாங்க !!! அப்ப எல்லாம்  ஹார்லிக்ஸ் 'ர்'ரொம்ப வசதியானவங்க சாப்பிடற பானம்...  (அப்றமாத் தான் அது நோயாளிங்க சாப்பிடற பானம் ஆயிடிச்சி) 

கையோட, மத்தியானம் சாப்பாட்டுக்கு ஒரு பச்சைக் கலர் ரெண்டடுக்கு டிஃபன் கேரியர்ல, வெங்காய சாம்பார், நெய் ஊத்தி சாதம் 👸 பிசஞ்சி, தொட்டுக்க முட்டைக் கோஸ் கூட்டும்👸  போட்டுக் குடுத்தாங்க !!!

ஸ்கூலுக்கு போயி, அங்க டிஎம்ஆர் அப்டின்ற வாத்தியார் எதோ பாடம் எல்லாம் நடத்துனாரு. நமக்கோ மைண்ட் ஃபுல்லா முட்டைக் கோஸ் கூட்டுதான் !!!

மத்தியான லஞ்ச் பெல் 🍰 அடிச்சாங்களோ இல்லியோ, அப்டியே நம்ம டிஃபன் பாக்ஸ் தொறந்து 'எடுத்தது கண்டனன் இற்றது கேட்டனன்' அப்டீன்ற மாதிரி பாசிப் பருப்பு போட்டு செஞ்ச முட்டைக் கோஸ் கூட்டக் காலி பண்ணேன் !!! அப்போ என் கூட படிச்ச  Ravindran Natarajan  , ஒரு மந்திர வார்த்தையைச் சொன்னான். அது, 'இன்று அன்னதான சமாஜ கல்யாணத்ல பாதுஷா போட்றாங்க'ன்றது தான் !!!

எனக்கு பாதுஷா மேல இருக்கற காதல் சொல்லில் அடங்காது !!!

இமயமலை மேல் போர்த்திய பனி வெள்ளை கம்பளம் போல, வடை போன்ற வஸ்து மேல், வெண்மையான காய்ந்த 'ஜீரா' அமிர்தம் !!!

அப்பல்லாம் எங்க ஸ்கூல் மெயின் எனட்ரன்ஸ் ஆண்டார் வீதிப் பக்கமா இருக்கும் !!! அங்க தான் பெர்ரிய்ய மீச வச்ச ஒருத்தரு  பச்சாம் பேட்டை எலந்தப் பழம் விப்பாரு !!! அந்த என்ட்ரன்ஸ்ல இருந்து ஒரு பத்தடில தான், அந்தக் காலக் கட்டத்ல பிரபலமான 'அன்னதான சமாஜம்' அப்டீன்ற கல்யாண மண்டபம் இருந்தது. அப்பல்லாம் ரொம்ப வசதியானவங்க வீட்டுக் கல்யாணந் தான் அந்த மண்டபத்ல நடக்கும் !!! இப்ப மாதிரி திரும்புன பக்கம் எல்லாம் கல்யாண மண்டபங்கள் கிடையாது. ஊருக்கு ரெண்டோ மூணோ தான் இருக்கும் !!!

மத்தியானம் லஞ்ச் முடிஞ்சாவுட்டு எலந்தப் பழம் வாங்க வெளிய வந்தப்ப தான் பாதுஷா நினைவு வந்தது. சரின்னு அந்த அன்னதான சமாஜம் பக்கமா 'சும்மா'த் தான் போனேன். ஆனா, காலு என்னை அறியாம யார் வீட்டுக் கல்யாணத்துக்கோ அழையா விருந்தாளியா இழுத்து வுட்டுடிச்சி. சரி வந்ததோ வந்துட்டோம்ன்னு மாடில சாப்பாட்டு செக்‌ஷனுக்குப் போனேன். அடுத்த பந்தி ஆரம்பம் !!! உக்காந்துட்டேன். அப்பதான் எனக்கு, 'பாதுஷா 👨 ஆசை வெட்கமறியாது' அப்படீன்ற ஒரு உண்மை தெரிஞ்சது !!!

இலைல எல்லா வகை உணவும்  பரிமாறினாங்க. ஆனா, மகாபாரதத்துல, அம்பு எறிய,  கிளியோட கண்ணு மட்டும் தெரிஞ்ச அர்ச்சுனன் மாதிரி எனக்கு பாதுஷா வருகை தான் குறியா இருந்துச்சி.  அதுக்காக சும்மா இல்லாம, வந்த அப்பளம், வடை எல்லாத்தையும் (வெட்கமே இல்லாம) உள்ள தள்ளினேன் !!! ரெண்டு வடைய நொட்டாங்கைல வேற வாங்கி வச்சேன் !!!

அப்ப பாத்து நம்ம  ரங்கநாதன் மாமா பந்திய சுத்திப் பாத்துட்டு வந்துட்டிருந்தாரு. அவரு தான் மெயின்  சமையல் காண்ட்ராக்டர். அப்பாவோட நெருங்கிய தோஸ்த். ஸ்கூல் யூனிஃபார்மோட உக்காந்திருந்த  என்ன பாத்துட்டாரு. எனக்கு சப்தநாடியும் அடங்கிரிச்சி. ஆனா, அவரு, 'என்னடா, தனியா வந்திருக்க ?' அப்டீன்னு கேட்டுட்டு எதுவும் தெரியாத மாதிரி நவுந்துட்டாரு. அப்றமா வந்தார்  நம்ம ஹீரோ, பாதுஷா !!! இலைல ஒண்ணு போட்டாங்க. வெக்கமே இல்லாம நொட்டாங்கைய நீட்டி அதுல ஒண்ணு வாங்கி வச்சிக்கிட்டேன், தம்பிக்கும் இருக்கட்டுமேன்னு !!!

வெளிய வர்றப்ப ரெங்கநாதன் மாமா இன்னும் ரெண்டு பாதுஷா குடுத்தாரு.... நானும் நல்ல எண்ணத்ல தான் குடுத்தாருன்னு நம்ம்ப்பி வாங்கிட்டு ஸ்கூலுக்குப் போனேன். வகுப்புல கவனம் இல்ல பாதுஷால தான் இருந்திச்சி. தம்பிக்குன்னு வாங்கின பாதுஷாவோட, மாமா குடுத்ததையும் சேத்து அங்கயே  பாதுஷா கதைய முடிச்சேன். 

சாயந்தரமா ஸ்கூல் விட்டு வீட்டுக்கு வந்தேன். வயிறு ஒரு மாதிரி 'கடமுடா'ன்னு இருந்திச்சி. அளவுக்கு அதிகமான பாதுஷா வேலைய காமிக்க  ஆரம்பிச்சிடிச்சி !!! 

அப்ப எங்க அப்பா என்னைய ஒரு மாதிரியா பாத்துக்கிட்டே, 'மத்தியானம் எங்கடா போன' அப்டீன்னு கேட்டாரு. நானும் நேர்மையா ஸ்கூலுக்குப் போனதச் சொன்னேன். ஆனா, அத அவரு நம்புனா மாதிரி தெரியல்ல. அதனால எனக்குப் புரிஞ்சிடிச்சி, இன்னிக்கு அவரு வழக்கம் போல என்னைய வச்சி பொங்கல் கொண்டாடப் போறாருன்னு !!! வடிவேலு சொல்றா மாதிரி, 'தானா வர்றத, அவரு வேற வலிய பிதுக்கி' விட்டுட்டாரு.  அதுக்குக் காரணம், எனக்கு ரெண்டு பாதுஷா எக்ஸ்ட்ரா  குடுத்த எட்டப்பன் ரெங்கநாதன் மாமா தான். பயபுள்ள பாதுஷாவும் குடுத்து அப்பாட்ட போட்டும் குடுத்துறிச்சி !!! 

அப்ப அம்மாவும் கூட சேந்து, 'இன்னும் ரெண்டு போடுங்க, பீனிய பில்லன்ன' அப்டீன்னாங்க கோவத்ல. அவங்க வேணா வலிக்காம ரெண்டு அடி அடிப்பாங்களே தவிர, வேற யாரு அடிச்சாலும் தாங்க மாட்டாங்க. அன்னிக்கு அவங்களுக்கும் கோவம் !!! வீட்ல சாப்பிடச் சொல்லி கெஞ்சினாலும் சாப்பிடாம, யாரு வீட்டு கல்யாணத்லயோ போயி சாப்பிட்டு வந்த, கோவம் !!! அதனால அம்மா பேர்லயும்,  வழக்கத்த விட அப்பா ரெண்டடி  கூடவே போட்டாரு !!!

இதுக்கெல்லாம் காரணம் அந்த எலந்தப் பழம்தான்றதால, காசி/கயால எதாவது பழம் இலை விடணும்ன்னு சொன்ன உடனே வந்த கோவத்ல அந்த  எலந்தப் பழத்த வுட்டுட்டேன் !!! (பாதுஷாவ டாக்டர் விடச் சொல்லிட்டார்)

நேத்திக்கு ஒரு 'சேடிஸ்ட்' சொந்தக்காரன் எங்க வீட்டுக்கு வரும் போது பாதுஷா வாங்கிட்டு வந்துருக்கான் !!!

இப்பக் கூட, எங்க வீட்டுக் கல்யாணத்ல சாப்பிட பந்தில  ஒக்காந்தாலும், பின்னம் பக்கம் வலிக்கறா மாதிரியே இருக்கும் !!!

.அட சொக்கநாதா !!!

S g shankar

No comments:

Post a Comment