Thursday, October 28, 2021

போட்டியில் பரிசு கிடைக்கவில்லை - சுஜாதா

 சிறுகதைப் போட்டியில் பரிசு கிடைக்கவில்லை - சுஜாதா

1960'களில் குமுதம் சிறுகதைப் போட்டி ஒன்று நடத்துகிறது. சுஜாதாவும் கதை எழுதி அனுப்புகிறார். பரிசு கிடைக்கவில்லை.

இனி சுஜாதா வார்த்தைகளில் :

"ஒரு அற்புதமான கதை எழுதி அனுப்பினேன் (எனக்கு மட்டும் அற்புதம்). அது போர்ட்டுக்குக் கூட வரவில்லை. 

முதல் பரிசு பெற்ற கதையைப் படித்து 'இந்த அடாசுக்கு கொடுத்திருக்கிறார்களே, என் காவியத்தை நிராகரித்துவிட்டார்களே' என்று பத்திரிக்கை உலகத்தின் மீது ஹோல்சேலாக வெறுப்பு ஏற்பட்டு ஆத்திரத்தில் ரயில் பாதையைக் கடந்து......... 

...........எதிரே இருந்த பங்க் கடைக்குச் சென்று முடிவெட்டிக்கொண்டு வந்தேன்" 

......எதையும் நகைச்சுவையுடன் சொல்வதுதான் சுஜாதாவின் சிறப்பு. 

==============================

ஸ்ரீரங்கம் to சிவாஜி - ரஞ்சன் எழுதிய புத்தகத்திலிருந்து சில சுவையான வரிகள்:

சென்னையில் அருணா இன் ஓட்டல். குளிர்விக்கப்பட்ட அறை ஒன்றில் சூடான விவாதம் நடந்து கொண்டிருக்கிறது, எந்திரன் என்று வெளியான 'ரோபோ' வின் கதை விவாதம். 

சினிமா மொழியில் டிஸ்கஷன். சுஜாதா, ஷங்கர், இளம் இயக்குனர்கள் சிலர் என விவாதம் களை கட்டிக் கொண்டிருக்க, மதிய உணவு இடைவேளை. ஓட்டலின் மெனு அட்டையைப் பார்க்கிறார் சுஜாதா.

'ஒரு மாறுதலுக்கு இத்தாலிய உணவான பீட்ஸா சாப்பிடுவோமே' என்கிறார். பீட்ஸா ஆர்டர் செய்யப்படுகிறது. சில நிமிடங்களில் சுடச்சுட பீட்ஸா வர, சுவைக்க முயல்கிறார்கள். முடியவில்லை. 

யாருக்கும் பீட்ஸா பிடிக்கவில்லை. மசாலா காரம் இல்லாமல் இத்தாலிய ஸ்டைலில் சப்பென்று இருக்கிறது பீட்ஸா.

'ஏம்பா, பீட்ஸாவை இப்படித் தயார் பண்ணா தமிழ்நாட்டுல விக்க முடியாது. கொஞ்சம் மசாலாலாம் போட்டு இண்டியன் ஸ்டைல்ல பீட்ஸா செஞ்சா எல்லோரும் சாப்பிடுவாங்க' என்கிறார் சுஜாதா. 

பதினைந்து வருடங்களுக்கு முன் நடந்த சம்பவம் இது. இன்று சென்னை ஓட்டல்களில் இந்திய மசாலா கலந்த பீட்ஸாக்கள் தான் பிரபலம். ஒரிஜினல் இத்தாலியன் பீட்ஸாக்களை ஒளித்து வைத்து விட்டார்கள்.

இது சுஜாதாவின் தனித் திறன்களில் ஒன்று. எதிர்காலத்தில் எப்படி உலகம் மாறும் என்பதை அவரால் யூகிக்க முடிந்தது, பீட்ஸா உட்பட.

No comments:

Post a Comment