சூப்பரான பச்சைப்பயிறு சாதம் செய்வது எப்படி? குக்கரில் 3 விசில் வெச்சா போதும். ஊட்டச்சத்து நிறைந்த மதிய சாப்பாடு ரெடி.
பச்சைப்பயிறு வைத்து குழம்பு தான் பெரும்பாலும் நாம் எல்லோரும் வைப்போம் அல்லவா. ஆனால், கொஞ்சம் வித்தியாசமாக பச்சை பயிரை வைத்து ஒரு வெரைட்டி ரைஸ் எப்படி செய்வது என்பதைப்பற்றித் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். குக்கரில் எல்லா பொருட்களையும் சேர்த்து 3 விசில் வைத்தால் போதும். மதிய சாப்பாடு சட்டுனு ரெடியாயிடும். வாங்க இந்த சிம்பிளான ஆரோக்கியமான ரெசிப்பியை பார்க்கலாம்.
முதலில் 1 கப் அளவு சாப்பாட்டு அரிசி, 1/2 கப் பச்சை பயிறு நமக்கு தேவைப்படும். எந்த கப்பில் அரிசியை அளக்கிறீர்களோ, அதே கப்பில் பச்சைப் பயறையும் அளந்து எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த இரண்டு பொருட்களையும் ஒன்றாக சேர்த்து ஒரு அகலமான பவுலில் போட்டு தண்ணீர் ஊற்றி அரை மணி நேரம் ஊறவைத்து விடுங்கள். ஊறிய இந்த பொருட்களை 3 முறை நன்றாகக் கழுவி தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இது அப்படியே இருக்கட்டும்.
அடுத்தபடியாக அடுப்பில் ஒரு குக்கரை வைத்துக் கொள்ளுங்கள். அதில் எண்ணெய் – 4 ஸ்பூன் ஊற்றிக் கொள்ளவேண்டும். எண்ணெய் காய்ந்ததும், கடுகு – 1/2 ஸ்பூன், சீரகம் – 1/2 ஸ்பூன், பச்சை மிளகாய் – 2 கீனியது, கறிவேப்பிலை – 2 கொத்து, பூண்டு பொடியாக நறுக்கியது – 6 பல், இவைகளை சேர்த்து நன்றாக வதக்கி விட வேண்டும்.
அடுத்தப்படியாக நீளவாக்கில் வெட்டி பெரிய வெங்காயம் – 1 சேர்த்து வெங்காயத்தை பொன் நிறம் வரும் வரை வதக்கி, பொடியாக நறுக்கிய – 2 தக்காளி பழங்களை சேர்த்து, மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன், உப்பு தேவையான அளவு, போட்டு தக்காளி குழையும் வரை வதக்கிக் கொள்ள வேண்டும். தக்காளி வதங்கி வந்ததும் சாம்பார் பொடி-2 ஸ்பூன் சேர்த்து மீண்டும் 2 நிமிடங்கள் நன்றாக வதக்கி, 3 கப் அளவு தண்ணீரை குக்கரில் உள்ள மசாலா பொருட்களோடு சேர்த்து நன்றாக கொதிக்க விடுங்கள்.
எந்த கப்பில் அரிசி அளந்தீர்களோ அதே கப்பில் தண்ணீர் எடுத்து ஊற்றிக் கொள்ள வேண்டும். தண்ணீர் நன்றாக கொதி வந்த உடன் ஊற வைத்து கழுவி தயாராக வைத்திருக்கும் அரிசியையும் பருப்பையும் குக்கரில் போட்டு நன்றாக கலந்து விட்டு மேலே பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழைகளைத் தூவி விசில் போட்டு, 3 விசில் வைத்தால் போதும். சூப்பரான ஆரோக்கியமான பச்சைப்பயிறு சாதம் தயார்.
உங்க வீட்ல அரிசி வேகுவதற்கு எவ்வளவு விசில் விடுவீர்களோ அந்த அளவிற்கு விசில் வைத்துக்கொண்டால் போதும். சாதாரணமாக சாப்பாடு குக்கரில் வைக்கும் அளவிலேயே இந்த ரெசிபியை செய்தால் நல்ல ருசி கிடைக்கும். உங்களுக்கும் இந்த குறிப்பு பிடிச்சி இருந்தா உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க. வாரத்துல ஒருநாள் தாராளமா செய்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் ரெசிபி இது.
No comments:
Post a Comment