Thursday, October 28, 2021

இட்ஸ் மை டியூட்டி

 #சிறுகதை...

முன் குறிப்பு: 

1)இதய பலஹீனம் உள்ளவர்கள் கண்டிப்பாக படிக்கவும்...

2)ஆங்கில உரையாடல்கள் அனைத்தும் தமிழில் எழுதப்பட்டு உள்ளன.

... ... ... ....

அந்த ஹைடெக் அறை அரை இருட்டில் இருந்தது..

"சொல்லுங்க"என்றவர் ஷோபாவில் சாய்ந்து இருக்க... எதிர் ஷோபாவில் அமர்ந்து இருந்தவர்...

"இது முடியுமா உன்னால்?..டூ டேஞ்சரஸ் யாசர்"

என்றார்.

மெல்லிய புன்னகையுடன்.

"செய்யறது தப்பான வேலையா இருந்தாலும் தப்பில்லாம செஞ்சா தான் உயிரோடவே இருக்க முடியுங்கறது எனக்கு நல்லாவே தெரியும் ஸார்"

"குட்...நீகொல்ல வேண்டியது கொரிய அதிபரை... சாதாரண விஷயமல்ல.பீ கேஃர்புல் யாசர்"

"காரணம் தெரிஞ்சிக்கலாமா?"

"பொதுவா நாங்க யாருக்கும் ரீஸன் சொல்றதில்லை.பட்..நீ என்னோட நீண்ட கால நண்பன்.பல காரியங்களை எங்களுக்காக செஞ்சி இருக்கற வெல் விஷர்..

கொஞ்சம் வளர்ந்ததாலே இப்ப எங்களையே எதிர்த்து.. அந்த கொரியன்... அவங்களுக்கு ஒரு பாடம் கத்து தரணும்.

இந்த ரெண்டு நாடும் ஒன்னா சேர்ந்தா எங்கள் பிசினஸ் ரொம்ப அடிபடும்... இந்த கொலையினால இந்த ரெண்டு நாடுகளுக்கு மத்தியில் பகைமை உண்டாகும்.. ரெண்டு பேர் கிட்டயும் எங்களுக்கு  ஆயுத வியாபாரம் நடக்கும்.எதிரியும் காலியாவான்.. எங்கள் வியாபாரமும் நடக்கும்..ஒரே கல்லில் இரண்டு மாங்காய்."

சொல்லி சிரித்தார்.

"எங்களுக்கு இதில் என்ன லாபம்?"

"200 மில்லியன் டாலர் பணமும் உங்க கொரில்லா போராட்டத்துக்கு தேவையான ஆயுதங்களும் கிடைக்கும்".

"தேங்க்ஸ் ஸார்" என்று எழ,

"ப்ராஜெக்ட் முடி.எங்க ஆளுங்க காண்டாக்ட் பண்ணுவாங்க."

"டெபினிட்லி ஸார்"

யாசர் வெளியே செல்ல..

அரை இருட்டில் இருந்த அந்த அறை முழு இருட்டில் நுழைந்தது.

... ... .... ...

கடல் அலைகளின் ஓசை காதில் லேசாக விழுந்து கொண்டிருந்தது..

அழகிய கடற்கரை கிராமமாகிய மாமல்லபுரத்தின் அந்த நவீன சொகுசு ஓட்டலில் இந்திய மற்றும் கொரிய நாட்டு உயர் போலீஸ் அதிகாரிகள் குழுமி இருந்தனர்.

அந்த சொகுசு ஓட்டலின் அத்தனை இடங்களையும் அங்குலம் அங்குலமாக

சோதனை இட்டனர்.

எல்லா இடங்களிலும் கேமராக்கள் பொருத்தப்பட்டன.

ஓட்டல் தலைமை நிர்வாகி இடம், "இந்த செகண்டில் இருந்து ஓட்டல் எங்கள் கண்ட்ரோல்ல தான் இருக்கும்..யாரா இருந்தாலும் எங்கள் பெர்மிஷன் இல்லாம வரவோ போகவோ கூடாது.சந்தேகப்படும்படியா சின்ன விஷயம் இருந்தா கூட உடனே எங்களுக்கு தகவல் கொடுங்க.. உங்க ஒத்துழைப்பு எங்களுக்கு ரொம்ப ரொம்ப அவசியம்"..

"நம்ம பிஎம்.. கொரிய அதிபர் சந்திப்பு எங்கள் ஹோட்டலில் நடக்கிறது எங்களுக்கு பெருமையான விஷயம்.கண்டிப்பா நாங்க முழு ஒத்துழைப்பு தருகிறோம் ஸார்"

"குட்" என்று சொன்னவாறே.. பிரதமரின் பாதுகாப்பு அதிகாரி ரத்தோர்.. கொரிய அதிகாரிகள் உடன் பேச்சை தொடர்ந்தார்.

"ஈவ்னிங் இந்த ஓப்பன் லானில் இருவரும் நடந்து கொண்டே பேச்சு வார்த்தை நடத்துகிறார்கள்."

அப்போது பக்கத்தில் இருந்த மரத்தில் இருந்து புறாக்களும் கிளிகளும் மெல்ல பறந்து அடுத்த மரத்திற்கு சென்றன.

"லவ்லி"

"யெஸ்.. இயற்கை அழகோடு சேர்ந்த பேச்சு வார்த்தை ஆக இருக்கணும்னு தான் இந்த ஓப்பன் லான் வாக்கிங் செலக்ட் பண்ணி இருக்கு."

"குட்.. திறந்த வெளியில் பேச்சு வார்த்தை நடக்கறதாலே லான் வெளியில் இருந்து எப்படி பாதுகாப்பு?"

"DRDO(Defence R&D organization) சீஃப் கிட்ட பேசி இருக்கோம்... பேச்சு வார்த்தை நடக்கறதுக்கு முதல் நாள் முதலே  இந்த இடத்தோட ஒரு கிமீ  ரேடியஸ்ல எந்த ஏர்கிராப்ட் வந்தாலும் அதை டீ ஆக்டிவேட் பண்ண...வர்றதை பார்க்க ஸ்பெஷல் அரேஞ்ச் மென்ட் செஞ்சி தர்றேன்னு சொல்லி இருக்கார்..அதை ஹோட்டல் ரிஷப்ஷன்ல இருந்தே மானிட்டர்ல பார்த்துக்கலாம்"

"ஓகே.. குட் அரேன்ஜ்மென்ட்ஸ்.. ஆனாலும் நாம் ரொம்ப ஜாக்கிரதையாக இருக்கணும்"

"டெபினிட்லி ஸார்" என்றார் ரத்தோர்.

.... ... .... ....

சென்னையின் புறநகர் பகுதியில் ஒரு சிறு பங்களாவில்...

"கிஷோர்.உன்னுடைய வேலையை முடிச்சிட்டையா?" என்று கேட்ட யாசர் தான் முதல் அத்தியாயத்தில் நாம் சந்தித்த நபர்.

"முடிஞ்சது பாஸ்.. உங்ககிட்ட ட்ரையல் கூட காட்டினேனே."

"அதோட வயத்துல நீ செஞ்ச பாமை வச்சி ஆபரேட் பண்ணனுதுக்கு அப்புறம் எப்படி அது பறக்குது?.. எதாவது பிரச்சினை?"

"நோ பாஸ்... மிகச் சிறிய எடை... ஆனால் வெடிச்சா வயத்தை கிழிச்சு கிட்டு சிதறும் போது...அதிலே வச்சு இருக்கற சயனைடு, ஆர்சனிக் மற்றும் ஹை எக்ஸ்போலிஸிவ் பவுடர்ஸ் கண்டிப்பா நாலு அஞ்சு அடிக்கு மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.நோ டவுட்"

"ரமேஷ்.. உன் போர்ஷன் என்ன பொசிஷன்?"

"எல்லாம் முடிஞ்சது..

பல தடவை ட்ரையல் செக் பண்ணியாச்சு..

ஒரு பெட் (pet) ட்ரைனரா என் பங்கு இருநூறு சதவீதம் சரியா நடக்க நான் கேரண்டி"...

"ஓகே.. நான் பார்க்கிறேன்..காட்டு ரமேஷ்"

ரமேஷ் ஒரு பூனையை கையில் எடுத்தான்.. ஒரு கண் ஒரு மாதிரி தெரிந்தது.. ஒரு நிமிஷம் என்று சொல்லி வெளியே போனான் கையில் பூனையுடன்...

சில நிமிடங்களில் திரும்பி வந்தான்...

கம்ப்யூட்டரை ஆன் செய்தான்... பூனை பங்களாவிற்கு வெளியே தெருமுனையில் நிற்பது  X புள்ளி ஆக கம்ப்யூட்டரில் தெரிந்தது... அந்த தெருவின் படம் உள்படமாக தெரிந்தது.

"இதோ... கம்ப்யூட்டரில் தெரியற X குறி தான் பூனை.. நான் அதுல வச்சிருக்கிற GPRS கருவி மூலமா தெரியும்.உள்படத்துல நாம் பாக்கறது பூனையோட கண்ணை எடுத்துட்டு ஆபரேஷன் செய்து வச்சிருக்கிற காமெரா காட்டற படம்.

இதோ இப்ப நான் இந்த மைக்கை ஆன் பண்ணி.. பூனைக்கு ஆர்டர் போடறேன் பாருங்க...."ரோஸி.. வலதுபக்கம் திரும்பி நேரா வா"...

கம்ப்யூட்டரில் X குறி வலதுபுறம் திரும்பி நேராக வர...பூனை கண் காமெராவில் பங்களா முகப்பு தெரிய..

"ரோஸி.. எண்டர்..டர்ன் லெஃப்ட்"

கம்ப்யூட்டரில் அதே போல் தெரிய...

"பூனை காதுக்கு உள்ளே வச்சிருக்கிற ரிஸீவர் மூலமா என்னோட கமெண்ட்ஸ் அதுக்கு கேட்கும்.. நான் எங்கே இருந்து ஆர்டர் கொடுத்தாலும் அது செய்யும்... நாம் நம்ம திட்ட நேரத்துக்கு இருபது நிமிடம் முன்னால அந்த சொகுசு ஹோட்டலுக்கு அரை கிமீ தள்ளி இருக்கற இடத்தில் இதை விட்டுட்டா போதும்..அதை அந்த ஹோட்டல் உள்ள இதைக் கொண்டு போய் வானத்தில் இருந்து சிக்னலை வாங்கி மானிட்டருக்கு கொண்டு வர்ற வயரை இது மூலமா கட் பண்ணிடுவேன்.. அந்த ஓப்பன் லான்ல வான் வெளி செக்யூரிட்டி கட் ஆயிடும்.."

"நெக்ஸ்ட்?"

"கிஷோர் டைனமைட் வச்சி இருக்கற புறா... அந்த லான்ல இருக்கற மரத்துக்கு போயிடும்...

என்னோட கமெண்ட் மூலமா.. சரியான சந்தர்ப்பத்தில அந்த புறாவை கொரிய அதிபரை பார்த்து போகச் சொல்லி கமெண்ட் கொடுப்பேன்..அதை அவரோட தோளில் உட்கார்ற மாதிரி பழக்கி இருக்கேன்.

அது அவர் தோளை நெருங்கும் போது...எங்கூடவே இருக்கற கிஷோர் ரிமோட் மூலம் அந்த டைனமைட்டை வெடிக்க வைக்கணும்..

ரோஸி..சிக்னலை கட் பண்ணி... செக்யூரிட்டீஸ் அலர்ட் ஆகி அதை சரி பண்றதுக்குள்ள...ஸே..ஒரு நிமிஷம்.. இரண்டு நிமிஷத்துல புறா அந்த லானுக்கு உள்ள போகணும்... கொரிய அதிபர் கிட்ட போய் தோள்ல உட்காரணும்"

"ரமேஷ்..லான்ல செக்யூரிட்டிஸ், இந்திய பிஎம் னு நிறைய பேர் இருப்பார்களே.. எப்படி புறா சரியா கொரிய அதிபரை பார்த்து போகும்?"

"இப்பவே காட்டறேன்"

என்று கூறி பக்கத்தில் இருந்த மற்றொரு கம்ப்யூட்டரை ஆன் செய்ய.. பக்கத்து அறையில் அந்த மைனமைட் வயிற்றில் சுமந்து இருந்த புறா தெரிந்தது..மைக்கை ஆன் செய்து,

"விவேக்...கோ யுவர் செகண்ட் டெஸ்டினேஷன்"

ரமேஷ் கமெண்ட் கொடுக்க.. அந்த விவேக் புறா பறந்து..

அந்த ரூமில் இருந்த இந்திய பிஎம், துப்பாக்கி ஏந்திய செக்யூரிட்டி தவிர்த்து சரியாக கொரிய அதிபர் கட் அவுட் தோளில் அமர்ந்தது.

ரோஸி எப்படி நாம் சொல்றதை கேட்குமோ அதே போல் விவேக்கும் கேட்கும்."

யாசர் ரமேஷை அணைத்து " குட் ஜாப்"

என்றான்.

.... .... .... ....

தொலைக்காட்சி அனைத்திலும் இந்திய பிரதமர்- கொரிய அதிபர் சந்திப்பே பிரதானமாக ஓடிக் கொண்டிருந்தது..

தலைவர்கள் வாக்கிங் பேச்சு வார்த்தைக்கு பின்னர் நேரலை தொடரும் என்று செய்திகள் சொல்லின.

ரத்தோர் உச்ச பட்ச டென்ஷனில் இருந்தார்.. உளவுத்துறை வேறு எச்சரிக்கை செய்து இருந்தது.

இரு தலைவர்களும் புல்வெளியில் அமர்ந்து பிஸ்கட் சாப்பிட்டார்கள்.

மெதுவாக எழுந்து நடந்தவாறே....

சொகுசு ஹோட்டலின் உள்ளே பூனை நுழைந்ததை அங்கு நின்று கொண்டு இருந்த செக்யூரிட்டி அலட்சியம் செய்ய...

ரோஸி தன் இலக்கை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தது.

புறா அந்த ஓப்பன் லானுக்கு சற்று தொலைவில் உள்ள மரத்தில் அமர்ந்து இருந்தது.

"ரோஸி... அந்த கருப்பு ஒயர் தான்.. கடித்து துப்பு"

ரமேஷின் குரல் ரோஸியின் காதில் ஒலிக்க...ரோஸி வேக வேகமாக தன் கூரிய பற்களால் அந்த ஒயரை துண்டாக்க...

திடீரென கம்ப்யூட்டர் மானிட்டரில் படம் தெரியாமல் பார்த்து கொண்டு இருந்தவர்கள் பதற...

 " விவேக்...கோ யுவர் ஃபர்ஸ்ட் டெஸ்டினேஷன்"என்ற ரமேஷின் கமெண்ட் குரல் கேட்டு அந்த புறா பறந்து அந்த லானுக்குள் இருந்த மரத்தில் அமர்ந்தது.

தலைவர்கள் இருவரும் நடந்து அந்த மரத்தின் கீழ் வந்து நின்று கொண்டு இருந்தார்கள்...

"விவேக்..கோ யுவர் செகண்ட் டெஸ்டினேஷன்"

ரமேஷ் கமெண்ட் கொடுக்க...

அந்த புறா சரியாக கொரிய அதிபரை நோக்கி பறக்க...

கிஷோர் கையில் ரிமோட் உடன் ரமேஷ் அருகில் இருக்க..

அந்த புறா பறந்து சென்று... கொரிய அதிபர் தோளில் அமர முயல...

கிஷோர் கையில் இருந்த ரிமோட்டை அழுத்த...

அந்த புறாவின் வயிற்றில் இருந்த டைனமைட் வெடித்து சிதற..

.... .... .... ....

Breaking news என்று அனைத்து தொலைக்காட்சி சேனல்களும் மாமல்லபுரத்தின் அந்த சொகுசு ஹோட்டலை லைவ்வாக காட்டிக் கொண்டு இருக்க...

"இந்திய- கொரிய கூட்டு ஒப்பந்தம் குறித்து இரு நாட்டு தலைவர்களும் இணைந்து பேட்டி கொடுத்துக் கொண்டு இருந்தார்கள்.

.... .... .... .....

"நீங்கள் அருமையாக ஒரு பெரிய விபத்தை தவிர்த்தீர்கள் ரத்தோர்.. பிளான் B படி இரு நாட்டு தலைவர்களையும் அறையில் பேச்சு வார்த்தை நடத்த சொல்லி ...லானில் வெளிப்பார்வைக்கு ஹோலோகிராம் மூலமா இருவரும் நடக்கற மாதிரி..பேசற மாதிரி ஏற்பாடுகள் செஞ்சி.. வாவ்"என்று பாராட்டிய கொரிய பாதுகாப்பு அதிகாரிக்கு "இட்ஸ் மை டியூட்டி" என்றார் ரத்தோர் புன்னகையுடன்.

No comments:

Post a Comment